ரகசிய தீவு
அத்தியாயம் 79
துருப்பு சீட்டு
தன் மூளையில் இதுவரை தோன்றாத யோசனையை தனக்கு கூறியதன்னுடைய உதவியாளனை ஏற இறங்க ஒரு முறை பார்த்தான் தர்மபாலன்.
"நீ என்ன சொல்ல வருகிறாய்?"
" பாருங்கள் எஜமானே! நீலனின் கப்பல் நம் கண் முன்னால் நிற்கிறது. அதற்குள் மார்க்கதரிசியின் புதையல் இருப்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதை நம்மால் கைப்பற்ற முடியாது. அந்த யவனன் கப்பலுக்கு காவலாக தன்னுடைய ஆட்களை நிறுத்தி வைத்திருக்கிறான். காய் பழமாகும் வரை காத்திருப்பதா இல்லை தடி கொண்டு அடித்து அதை பழமாக்குவதா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கே நம்மால் அந்த புதையலை தொடக்கூட ஏன் மனதால் நினைத்து கூட பார்க்க முடியாது. இதே ஆதித்தன் நம் கைப் பிடியில் பணயக் கைதியாகப் பிடிபட்டிருந்தால் அவனை மீட்க நீலன் கதறிக் கொண்டு வந்திருப்பான். அவனை மீட்க மார்க்கதரிசியின் பொக்கிசங்களையும் இழக்க அவன் துணிந்திருப்பான். மார்க்கதரிசியின் புதையல் என்னும் பெரிய மீனைப் பிடிக்க ஆதித்தன் என்ற சிறு மண்புழு நமக்குத் தேவை. நான் சொன்னதை பற்றி சற்று யோசித்து பாருங்கள்" என்றான்.வினயத்துடன் உதவியாளன்.
"நல்ல யோசனைதான். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அந்த ஆதித்தனை சாதாரணமாக எண்ணி விடாதே! அவனை பிடிக்க நினைப்பது வெறி கொண்ட வேங்கையின் வாயில் விரலை நுழைப்பது போன்றது. அவ்வளவு ஆபத்தானவன் அந்த ஆதித்தன்"
"ஓரு தனி மனிதனை பார்த்து நீங்கள் இப்படி பயப்படுவது எனக்கு வியப்பை தருகிறது."
"இவனிடம் மோதியவர்கள் இருந்ததை இழந்திருக்கிறார்கள். இழந்தவை என்னவென்று நினைக்கிறாய்? ராஜ்ஜியங்கள், அரசுகள். அத்தனையையும் அவன் தனி மனிதனாக நிர்மூலம் செய்திருக்கிறான். அதனால் தான் அவன் மீது கை வைக்க யோசனையாக இருக்கிறது. அவனை பணயக் கைதியாக்கலாம் என்று நினைத்து நாம் அவனிடம் பணயக் கைதியாக மாட்டிக் கொண்டு விட்டால் என்னாவது என்று யோசித்து பார்" என்றான் தர்மபாலன்.
"நான் நினைப்பதுபோல் அவன் சாதாரண ஆள் இல்லை போலிருக்கிறதே?"
"ஆம். அதனால் இந்த பேச்சை, இந்த யோசனையை இத்தோடு விட்டு விடுவோம்.கொக்கு மீனுக்காக காத்திருப்பதைப் போல் நாம் இந்த கப்பல் கிளம்பும் வரை காத்திருப்போம். அதுதான் நமக்கு நல்லது." என்றான் தர்மபாலன்.
அவர்கள் காத்திருக்க துவங்கினார்கள்.
மோகினி தீவில் விருந்து அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாற வைக்கப்பட்டிருந்தன.
யவனன் ஒரு மதுuட்டியை எடுத்து நீலனிடம் நீட்டினான். " இதை குடித்து பார்.என்னுடைய நாட்டிலிருந்து வந்த மதுபானம் இது. சொர்க்கத்திற்கே உன்னை அழைத்து செல்லும் "
யவனன் நீட்டிய புட்டியை கை நீட்டி தடுத்தான் நீலன்." நான்குடிப்பதை விட்டு விட்டேன் நண்பனே! நண்பர்களோடு பழைய விசயங்களை பேசுவதை விட பெரிய சொர்க்கம் வேறு இருக்கிறதா என்ன?"
"நன்றாகச் சொன்னாய். ஆதித்தனும் வந்து விட்டால் நம் பேச்சு கச்சேரி சூடு பிடித்து விடும்" என்றான் பைராகி .
"ஆதித்தன் வந்து விட்டால் நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய் விடுவீர்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்றான் மகேந்திரன்.
"பைராகியை இங்கேயே வைத்து கொண்டு விடலாம் என்று தானே நினைக்கிறாய்?"
"ஆமாம். சரியாகச் சொன்னாய். இப்படி ஒரு திறமைசாலியை விட்டு விட நான் விரும்பவில்லை."
"உலகிற்கே ஒளி தரும் ஆதவனை உன் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்து அழகு பார்க்க நினைப்பது நியாயமா? பைராகி யாருக்கும் சொந்தமான வனல்ல. அவனது கண்டுபிடிப்புகளும், சிந்தனைகளும் உலகுக்கே பொது வானவை. அவனை அவன் போக்கிலேயே விட்டு விடுவது தான் நல்லது " என்றான் நீலன்.
" என்னுடைய தவறு எனக்கு புரிந்து விட்டது நண்பா. என்னை மன்னித்து விடு. உங்களின் நட்பு கிடைத்ததே என்னுடைய பாக்கியம் ஃ
"இன்னும் சில நாட்களில் ஆதித்தன் இங்கே வந்து சேர்ந்து விடுவான். பிறகு நாம் மலை நாட்டிற்கு பயணமாக வேண்டியதுதான்." என்றான் நீலன்.
"அங்கே ரகசிய தீவில் என்ன தான் நடந்திருக்கும், அந்த பார்த்திபன் போரில் வென்றிருப்பானா?"
"ஆதித்தன் அவனுடன் இருக்கும் வரை அவனை தோல்வி அண்டாது. என்னுடைய கவலையெல்லாம் ஒன்றை பற்றித்தான் "
" எதைப் பற்றி "
"அந்த ஆயுதங்கள் .அவை நவீனமானவை.பேரழிவை தரக் கூடியவை. அதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றால் எந்த பலனும் இல்லை. அவற்றைத்தான் நான் பார்த்திபனிடம் கொடுத்து விட்டு வந்தேன். அவற்றை வைத்து யுத்தத்தை ஜெயிப்பது கடினம்தான்."
"அந்த ஆயுதங்கள் பயனற்றவை என்று எதை வைத்து கூறுகிறாய்?"
நீலன் அந்த ஆயுதங்களில்இருந்த குறைபாட்டை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்து கூறினான்.
"நம் நண்பன் திறமைசாலி. அந்த ஆயுதங்களை எப்படி கையாளுவதென்பது அவனுக்கு தெரியும்" என்று புன்னகைத்தான் பைராகி .
"குறைபாடுள்ள அந்த ஆயுதங்களை அவனால் எப்படி பயன்படுத்த முடியும்?"
"நெருப்பில் காய்ச்சினால் உலோகம் விரிவடையும் என்ற அறிவியல் உண்மை ஆதித்தனுக்கு தெரியும். அந்த ஆயுதத்தின் உலோக குண்டுகளை நெருப்பில் காய்ச்சி பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம்."
" இதற்க்குத் தான் பைராகி தேவை என்பது " என்றான் மகேந்திரன்.
நண்பர்கள் சுவையான உணவுகளை உண்ட படி சுவாராஸ்யமாக உரையாடி கொண்டிருந்தனர்.
அதே நேரம் சிறு கப்பலில் ரகசிய தீவிலிருந்து வெவ்வேறு திசைகளில் வெளியேறி கொண்டிருந்தனர் ஆதித்தனும், மதிமாறனும்.
மதிமாறன் தன்னுடைய மாலுமியை துரிதப்படுத்தி கொண்டிருந்தான்.
" கப்பலை வேகமாக செலுத்துங்கள். ஆதித்தன் மலைநாட்டை அடையும் முன்பாக நாம் அங்கே சென்று தயாநிதியை சந்தித்தாக வேண்டும்" என்றான் மதி மாறன் . அவனது பரபரப்பை உள்ளுர ரசித்தபடி நின்று கொண்டிருந்தாள் ரத்னாவதி . திட்டப் படி எல்லாம் நடந்து முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி நிலவியது அவளது முகத்தில்
அவன் அருகே நின்றிருந்த ரத்னா வதியை அணைத்து கொண்ட மதிமாறன் " நீ தான் என்னுடைய துருப்பு சீட்டு ரத்னா அந்த கிழவன் தயாநிதி உன்னை மகள் என்று நம்பி விட்டாள் போதும். ஆதித்தனால் எதுவும் செய்ய முடியாது"
"தவறு. தயாநிதியும், ஆதித்தனும் உங்களை தீண்டாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் என் கழுத்தில் தாலி கட்டி என்னுடைய கணவராக மாற வேண்டும். அப்போதுதான் தயாநிதியின் மருமகனாக நீங்கள் மாற முடியும் "
"சரியாக சொன்னால். மலைநாட்டை சென்றடைந்தவுடன் முதலில் நம் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு நாம் தயாநிதியின் வீட்டிற்கு செல்கிறோம். அங்கே நான் இந்த ஆபரணத்தை அவனிடம் ஒப்படைப்பேன். இந்த ஆபரணம் உன்னிடம் கிடைத்ததாக பொய் கூறுவேன். சந்திரவதனாவின் பெயரில் நீ அவளது வாழ்க்கை சரிதத்தை உன்னுடையதாக கூறு. அந்த கிழவன் நம்பி விடுவான். சிறு வயதில் தொலைந்து போன மகள் திரும்ப கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவளை நான் திருமணம் செய்து கொண்ட நன்றி உணர்ச்சியில் நான் சொல்வது அனைத்தையும் அவன் அப்படியே நம்பி விடுவான். அவன் நம்பும்படியாக நான் கதை சொல்வேன். நான் அவனுக்கு மருமகனாகி விட்டதால் அவன் ரகசிய தீவின் மீது எனக்காகவும் உனக்காகவும் படையெடுக்க உதவி செய்வான். நாம் தற்காலிகமாக இப்போது தோற்றிருக்கலாம். ஆனால் நிரந்தர வெற்றி நம்முடையது. நாம் தயாநிதியின் ரத்த சொந்தமாக மாறிய பின் அந்த ஆதித்தனால் நம்மை எதுவும் செய்ய முடியாது. சிகப்பு முகமூடிக்கு உதவி செய்ததன் மூலம் ஆதித்தனைதேசதுரோகியாக சித்தரித்து அவன் கதையை இங்கேயே முடித்து விடுவேன். நீலன் படாதபாடு பட்டு கொண்டு வந்த மார்க்கதரிசியின் பொக்கிசமும் எனக்கே கிடைத்துவிடும். அதிர்ஷ்ட சக்கரம் இப்போது என் பக்கமாக சுழல்கிறது" என்று கொக்கரித்தான்மதிமாறன்.
தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டும் மதி மாறனைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் மோகினி தீவை நோக்கி கழுகில் விரைந்து கொண்டிருந்தான் ஆதித்தன்.
மோகினி தீவின் துறைமுகத்தில் அவனுக்காக காத்து கொண்டிருந்தான் தர்மபாலன்
பைராகி, நீலன் உட்பட நண்பர்கள் குழுவும் ஆதித்தனின் வருகைக்காக காத்து கிடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக