அத்தியாயம் 68
சிலந்தி வலை
வள நாட்டிலிருந்து ஓலையை கொண்டு வரும் ஒற்றனாக நடிக்க யார் யாரையோ தேர்ந்தெடுத்தாலும் அதில் சற்றும் நிறைவு கிடைக்கவில்லை பார்த்திபனுக்கு .தான் தேர்ந்தெடுக்கும் ஆசாமி ஏதாவது குளறுபடி செய்து விட்டால் என்ன செய்வது? தான் போட்டு வைத்திருக்கும் அத்தனை திட்டங்களும் பாழாகி விடுமே என்ற ஐயம் அவன் மனதை உறுத்தியது.
நீண்ட நெடுநேரமாக தகுதியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில் பார்த்திபன் சுணக்கம் காட்டுவதை கவனித்து கொண்டிருந்தான் ஆதித்தன்.
" என்ன நண்பா! வள நாட்டின் ஒற்றனாக நடிக்க உன்னிடம் தகுதியான ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா?" எதற்கு இப்படி தயங்கி கொண்டிருக்கிறாய்?" என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டான் ஆதித்தன்.
இனி இவனிடம் மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட பார்த்திபன் தன்னுடைய மனதில் இருக்கும் ஐயத்தை மனம் விட்டு வெளிப்படையாகவே கூறி விட்டான்.
"நீ சொல்வது சரிதான். இந்த வேடத்தில் நடிக்க போகும் ஆசாமி வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வள நாட்டின் செய்தியடங்கிய போலி ஓலை மதிமாறனிடம் கிடைத்தால் முதலில் அவன் இந்த ஒற்றனைக் கொல்ல உத்தரவிடுவான். இல்லை வளநாட்டிலிருந்து பார்த்திபனுக்கு உதவி செய்யும் அந்த செல்வாக்கு மிக்க ஆசாமியார் என்று தெரிந்து கொள்ள இந்த ஒற்றனை சித்ரவதை செய்வான். இந்த காரியத்தில் இறங்க கூடிய ஆசாமி உயிருக்கு துணிந்தவனாக உயிரே போனாலும் உண்மையை சொல்லாதவனாக இருக்க வேண்டும். உன் ஆட்கள் போர் களத்தில் உயிரை விட தயாராக இருக்கிறார்கள்.இந்த ஒற்று வேலையில் அவர்களுக்கு சாமர்த்தியம் போதாது "
"இப்போது நாம் என்ன செய்வது? நான் அந்த ஒற்றன் வேடத்தில் சென்றால் மதிமாறன் என்னை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடுவான். என் அண்ணனும் நானும் ஒரே தோற்றத்தில் இருப்பது இப்போது பெரும் இடையூறாக இருக்கிறது. எங்களின் உருவத்தை அவ்வளவு எளிதில் அவனால் மறந்து விட முடியாது. அவனுக்கு இருக்கும் ஒரே எதிரி நான் தான் அல்லவா?" என்றான் பார்த்திபன் என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்துடன் .
"இந்தபுரட்சி கூட்டத்தின் தலைவன் நீ! உன்னை இந்த வேலைக்கு அனுப்புவது பூனையிடம் பாலைவலியக் கொண்டு போய் கொடுப்பது போலாகும். நீ அவனிடம் சிறைபட்டுவிட்டால் இந்த புரட்சி பிசுபிசுத்து விடும். உனக்காக உன் உயிரை காப்பாற்றுவதற்காக உன் தோழர்கள் புரட்சியை கைவிடவும் தயாராகி விடுவார்கள்."
"இப்போது என்ன செய்வது? இந்த வேலைக்கு நாம் யாரை அனுப்புவது?"
"வேறு வழியில்லை. இந்த வேலைக்கு நான் தான் போயாக வேண்டும்." என்றான் ஆதித்தன் அமைதியாக .
"நீயா ? " என்றான் அதிர்ச்சியுடன் பார்த்திபன்.
"ஆம். நானே தான். இந்த ஒலை அவனது மன உறுதியை குலைக்கும். வள நாட்டிலிருந்து படை உதவி வருகிறதோ என்ற சந்தேகம் கலந்த பயம் அவனுக்கு உண்டாகும். அதை வலுப்படுத்தும் விதமாக நான் என் அடையாளத்தை வெளிப்படுத்த போகிறேன்.
நான் தான் கள்வர் புரத்து கள்வன் ஆதித்தன் என்பது அவனுக்கு தெரிந்தால் அவன் நிச்சயமாக நிலை குலைந்து விடுவான். அரசு அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு மக்கள் துன்பத்திற்கு உள்ளாகும் போதெல்லாம் அங்கே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நானும் என் அண்ணனும் வருவோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கேயும் அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது மதிமாறனுக்கு தெரிந்தால் போதும். அவன் தன்னுடைய மன உறுதியை முற்றாக இழந்து விடுவான். நாங்கள் இறங்கிய எந்த காரியத்திலும் தோற்றதில்லை என்பது எல்லோரும் அறிந்த விசயம். அந்த பயம் அவனது தைரியத்தை குலைத்து விடும்" என்றான் ஆதித்தன்.
"நீ போய்த்தான் தீர வேண்டுமா? என் நாட்டிற்கு விருந்தாளியாக வந்தவன் நீ. உன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைக்கிறோமே என்று என் மனம் குமுறுகிறது" என்றான் ஆதித்தன்.
"என்னை பற்றி கவலைப்படாதே நண்பா.! எந்த இக்கட்டிலிருந்தும் மீண்டு வரும் வல்லமை எனக்கு இருக்கிறது.வெற்றியோடு திரும்பி வருகிறேன்! "என்ற ஆதித்தன் அவனிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினான்.
அவன் முதலில் சென்றது ஒரு மதுபான விடுதிக்கு . நாற்றம் அடிக்க கூடிய தரம் குறைந்த மதுபுட்டியொன்றை வாங்கி கொண்டவன் அதை உடைகளின் மேல் தெளித்து கொண்டு தன்னை ஒரு மது ப்ரியனாக வெளியே காட்டி கொண்டான்.
தன்னுடைய நடை, உடை, பாவனைகளை ஓரு நிஜ குடிகாரன் போல் மாற்றிக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பினான்.
அடுத்ததாக அவன் குறி வைத்தது மதிமாறனின் மாளிகையை .அவன் மாளிகையை நோக்கி போகும் போதே எதிரில் பாதுகாப்பு படை வீரர்கள் வருவதை பார்த்தான்.
தன் குதிரையை வேண்டுமென்றே அவர்கள் மீது மோத வைத்து ஒரு வம்பு சண்டையை தொடங்கி வைத்தான் ஆதித்தன். அங்கே நடந்த சிறுகைகலப்பில் தன்னிடம் இருந்த ஓலையை வேண்டுமென்றே கீழே நழுவ விட்டான். அவனது தந்திரம் வேலை செய்தது. அந்த ஓலையை எடுத்து படித்த வீரன் ஒருவன் வம்பு செய்து கொண்டிருப்பது ஓரு குடிகாரன் அல்லவள நாட்டின் ஒற்றன் என்பதை எளிதாக இனம் கண்டு கொண்டு விட்டான். அதன் பிறகு காரியங்கள் ஆதித்தன் விரும்பியபடியே நடக்க ஆரம்பித்தன.
வண்டியை தேடிக் கொண்டிருந்த காவலனிடம் தன்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி கொண்ட ஆதித்தன் தன் குதிரையை விரட்டி கொண்டு அங்கிருந்து மறைந்தான்.
தூக்கத்தை தொலைத்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்மதிமாறன்.
"நள்ளிரவில் தூங்காமல் எதைப் பற்றி யோசித்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள் ரத்னாவதி . தூக்கத்திலிருந்து திடிரென்று விழித்து எழுந்தவள் பக்கத்தில் படுத்திருந்த மதி மாறனை காணாமல் திடுக்கிட்டாள். அவன் எங்கே போயிருப்பான் என்று மாளிகை முழுக்கதேடிக் கொண்டிருந்தவள் அவன் முற்றத்தில் குட்டி போட்ட பூனையாக உலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
சத்தம் கேட்டு திரும்பி பார்த்த மதிமாறன் தன்னை அதட்டியது ரத்னாவதியின் குரல்தான் என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"ஓ! நீ தானா? நீ இன்னும் தூங்கவில்லையா?" என்றான் குரலில் வியப்பை காட்டி.
"ஓரு தீச்சொப்பனம் என் கனவை கலைத்து விட்டது. எழுந்து பார்த்தால் உங்களை காணவில்லை. மாளிகை முழுவதும் தேடி இங்கே கண்டடைந்தேன். ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி தூங்காமல் அலைந்து கொண்டி ருக்கிறீர்கள்?" என்றாள் பதட்டமான குரலில் அவள் .
"உனக்காவது கனவில்தான் தீயவை நடக்கின்றன. எனக்கு நிஜ வாழ்விலும் அல்லவா தீயவை நடக்கின்றன" என்றான் மதி மாறன் . அவன் குரலில் சோகமும், கவலையும் மண்டி கிடந்தன.
"எதற்காக இப்படி கலங்குகிறீர்கள்? அப்படி என்ன இப்போது நடந்து விட்டது"
" எது நடக்க கூடாது என்று நான் நினைத்தேனோ அது நடக்க போகிறது ரத்னாவதி .அந்த பார்த்திபனும் அவனது கலககும்பலும் நம்மை எதிர்த்து புரட்சி செய்ய போகிறார்கள். நமக்கு மலை நாட்டிலிருந்து வந்த ஆயுதங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். விட்ட குறை தொட்ட குறையாக வளநாடு வேறு அவர்களுக்கு உதவி செய்ய போகிறது "
"வள நாடு அவர்களுக்கு உதவி செய்ய போவது உங்களுக்கு எப்படி தெரியும்?"
"சற்று நேரத்திற்கு முன் வள நாட்டின் ஒற்றன் ஒருவன் பிடிபட்டு விட்டான். அவனிடம் இருந்து கிடைத்த ஓலை அதைத்தான் சொல்கிறது. நீ வேண்டுமானால் அதை படித்து பாரேன்" என்ற மதிமாறன் தான் ஆதித்தனிடமிருந்து கைபற்றிய ஓலையை அவளிடம் கொடுத்தான்.
அவள் அதை படித்து முடித்தாள். அதே நேரம் உள்ளே ஓடி வந்தான் ஒரு காவலன்.அவன் வண்டியை தேடி கொண்டிருந்த காவலன்.
" என்ன விசயம்? எதற்காக இப்படி ஓடி வருகிறாய்?" என்றான் மதி மாறன் .
"என்னை மன்னித்து விடுங்கள் பிரபு. அந்த ஒற்றன் எங்களிடமிருந்து தப்பி சென்று விட்டான்."
" என்ன சொல்கிறாய் நீ?"
"உண்மையைத்தான் சொல்கிறேன் பிரபு. நாம் நினைப்பதுபோல் அவன் ஒற்றன் இல்லை. கள்வர் புரத்தின் கள்வனாம். பெயர் ஆதித்தன் என்று கூறினான். "
மதிமாறன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
" ஒற்றனை விடவும் அவன் பல மடங்கு ஆபத்தானவன்" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.
"இரைகளை பிடித்து தின்ன வலை கட்டும் சிலந்தி முதலில் தன்னை வலையில் சிக்கிய பூச்சியாக காட்டி கொள்ளும்" என்றாள் ரத்னாவதி!
மதிமாறன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக