வெள்ளி, 2 டிசம்பர், 2022

ரகசியதீவு 62

Aரகசிய தீவு

அத்தியாயம் 62

புரியாத புதிர்

குதிரையிலிருந்து இறங்கிய வில்லவனையும் யவனனையும் பார்க்க கருணாகரன் " வாருங்கள் நண்பர்களே! உங்களுக்காகத் தான் காத்து கொண்டிருக்கிறேன். பார்த்திபன் எங்கே? அவன் உங்களுடன் வரவில்லையா?" என்றான் முகத்தில் வியப்பை காட்டி.

" பாதுகாப்பு காரணங்களுக்காக பார்த்திபனை நான் தான் இங்கே வர வேண்டாம் என்று தடுத்து விட்டேன். முக்கியமான நிகழ்வுகளில் தலைவர் இல்லாமல் இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொள்வது எங்கள் இயக்கத்தின் வழக்கம் " என்றான் வில்லவன்.

" உன் நண்பனை பாதுகாக்க முயற்சி செய்கிறாய். இந்த விசயத்தில் பார்த்திபன் கொடுத்து வைத்தவன். அவனுக்காக உயிரையே கொடுக்க கூடிய நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறான். எனக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை. இங்கே எல்லா காரியங்களையும் நானே செய்ய வேண்டியதாக இருக்கிறது." என்று அலுத்து கொண்டான் கருணாகரன்.

"பார்த்திபன் இங்கே வராமல் இருப்பதற்கு உங்கள் மீதான நம்பிக்கையின்மையும் ஓரு காரணம் என்று நீங்கள் கருதவில்லைதானே?" என்றான் கேள்விக்குறியுடன் வில்லவன்.

நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளி விட்ட கருணாகரன் " வில்லவா! என்னை யார் தான் நம்புவார்கள்? யோகியாக நடித்து பார்த்திபனையே நான் இத்தனை நாட்களாக ஏமாற்றி வந்திருக்கிறேன். என்னை எப்படி நீங்கள் நம்ப முடியும்? பார்த்திபனின் இடத்தில் நான் இருந்தால் அவன் செய்திருப்பதைத் தான் நானும் செய்திருப்பேன். அதனால் அவன் இங்கு வராததை பற்றி யோ என்னை சந்தேகிப்பதைப் பற்றியோ நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை" என்றான் கருணாகரன்.

"முதல் சாமம் தொடங்கி விட்டது. நீங்கள் எனக்கு ஆயுதங்களை தருவதாக கூறியிருநீதீர்கள்.. என் ஆட்கள் அதை கொண்டு செல்ல தயாராக இருக்கிறார்கள்" என்றான் வில்லவன் காரியமே கண்ணாக.

"ஆமாம். நாம் அதைப் பற்றி பேசிக் கொண்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் வாக்களித்தபடி உனக்கு ஆயுதங்களை தர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. துறைமுகத்தில் முத்தழகி என்ற கப்பல் நிலைகொண்டிருக்கிறது. அதன் தலைவன் பெயர் நீலன்.அவன் இப்போது தான் இங்கிருந்து கிளம்பினான். சற்று முன்பாக நீங்கள் இங்கே வந்து சேர்ந்திருந்தால் நான் அவனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பேன். என்னுடைய வேலை சுளுவாக முடிந்திருக்கும் "

"எங்களுக்குள் அறிமுகம் தேவையில்லை" என்றான் யவனன்.அதுவரை இருவரின் உரையாட விலும் தலையிடாமல் ஒதுங்கி நின்ற யவனன் இப்போது தான் வாயை திறந்து பேசினான்.

" மோகினி தீ வை சார்ந்த யவனன் அல்லவா நீ?"

"ஆமாம். நான் உங்கள் தீவிற்கு அந்நியன் .மோகினி தீவில் உங்களை போன்ற அதிகாரி நான். அந்த தீவின் பாதுகாப்பு படையின் தலைவன் நான். நீலன் என்னுடைய நண்பன். எங்களுக்குள் ஏற்கனவே அறிமுகம் உண்டு. அவன் செய்த தவறால் தான் நான் இந்த தீவிற்கு வந்து சேர்ந்தேன்"

"நீலன் உன்னுடைய நண்பனா? அப்படியானால் வேலை எளிதாக முடிந்தது. அறிமுகம் இல்லாத வில்லவனை கூட நீலன் சந்தேகிக்க கூடும். ஆனால் உன்னை சந்தேகிக்க மாட்டான். இதோ என்னுடைய முத்திரை மோதிரம். இதை அவனிடம் காட்டினால் கப்பலில் உள்ள ஆயுதங்களை உன் நண்பன் இந்த வில்லவனிடம் ஒப்படைப்பான்." என்றான் கருணாகரன்.

அதே நேரம் அவனுக்கு முன்பாக வந்து நின்ற காவல் வீரர்களில் ஒருவன் மதிமாறன் மாளிகைக்கு திரும்ப வந்து கொண்டிருப்பதை அறிவித்தான்.

கருணாகரன் உடனடியாக எச்சரிக்கையடைந்தான்.மதிமாறன் இங்கே திரும்ப வரும் போது வில்லவனும் யவனனும் இங்கே இருப்பது ஆபத்து என்று நினைத்தவன் தன்னுடைய முத்திரை மோதிரத்தை அவசர அவசரமாக கழற்றி வில்லவனிடம் கொடுத்தான்.

"உடனே இங்கிருந்து கிளம்புங்கள். இனியும் தாமதம் செய்யாதீர்கள். இரண்டாம் சாமம் முடியும் முன்பாக கப்பலிலிருந்து ஆயுதங்களை எடுத்து சென்று விடுங்கள். எனக்கு கப்பல் காலியாக இருக்க வேண்டும்" என்று பரபரத்தான் கருணாகரன்.
முத்திரை மோதிரத்தை கையில் வாங்கிய வில்லவன்" தங்கள் உதவியை நான் மறக்கவே மாட்டேன். இந்த உதவிக்கு மிகவும் நன்றி" என்றான் உணர்ச்சி வசப்பட்டவனாக.

"உன் நன்றியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எனக்கு நேரமில்லை வில்லவா.மதிமாறன் வரும் முன்பாக இங்கிருந்து கிளம்பி விடு. மறந்தும் அவன் பார்வையில் பட்டு விடாதே" என்று அவனை எச்சர்த்தான் கருணாகரன்.

"போய் வருகிறேன். உங்கள் உதவிக்கும் எச்சரிக்கைக்கும் நன்றி" என்ற வில்லவன் குதிரையில் தாவி ஏறினான். அவனது பார்வையை புரிந்து கொண்டு விட்ட யவனனும் தன்னுடைய குதிரையில் தாவி ஏறினான். இரண்டு குதிரைகளும் சிட்டாகப் பறந்து இருளில் மறைந்தன.

"அப்பாடா" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் கருணாகரன்.

சற்று நேரத்தில் தன்னுடைய படை பரிவாரங்களோடும் ரத்னாவதி யோடும் மாளிகைக்கு திரும்பிய மதிமாறன் கருணாகரன் இன்னமும் மாளிகையில் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டான்.

தன் குதிரையிலிருந்து இறங்கி கருணாகரனை நெருங்கியவன்

" கருணாகரா ! நீ இன்னும் வீட்டிற்கு கிளம்ப வில்லையா?" என்று வியப்புடன் கேட்டான் மதி மாறன் .

"இல்லை. உங்களை பார்த்து விட்டு கிளம்பலாம் என்று காத்திருக்கிறேன்"

"வேறு ஏதாவது முக்கியமான விசயம் பற்றி பேச வேண்டுமா?"

"இல்லை"

"அந்த நீலன்?"

" அவன் ஒரு உல்லாச பேர்வழி. மாலை மயங்கி விட்டால் மது கடைகளை தஞ்சமடைந்து விடுவான்."

"எனக்கு ஒரு முக்கியமான விசயம் பற்றி தளபதியிடம் பேச வேண்டும்" என்றாள் ரத்னாவதி .

" பொதுவான விசயம் என்றால் உங்களின் கேள்விக்கு நான் பதில் சொல்ல தயார். அரசியல் சம்மந்தமான உங்களின் எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றான் கருணாகரன் தயக்கத்துடன் .

"அரசியல் விவகாரங்களில் நான் கேள்வி கேட்க கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா?" என்றாள் ரத்னாவதி ஆற்றாமையுடன் மதி மாறனை பார்த்து.

அவளது அரசியல் வியூகங்களை பார்த்து ஏற்கனவே வியப்பில் வாயடைத்து போயிருந்த மதிமாறன் அவள் ஏதோ சிக்கலான விசயத்தை கேட்க விரும்புவதைப் புரிந்து கொண்டான்.

" கருணாகரா! இனி நான் வேறு ரத்னா வேறு அல்ல. எனக்கு தெரிந்த எல்லா அரசியல் விசயங்களும் அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின் விளைவுகளை ஏற்று கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அவளின் கேள்விக்கு பதிலளித்து அவளது ஐயத்தை தீர்த்து வையும். இது எனது உத்தரவு" என்றான் கண்டிப்பான குரலில்.

இது என்னடா குறுக்கே வந்த சனியன் என்று சலித்து கொண்ட கருணாகரன் அணைய போகிற விளக்கு தான் பிரகாசமாக எரியும். நாளையோடு இவனது அரசாட்சி, அதிகாரம் எல்லாமே குப்பை தொட்டிக்கு போக போகிறது. அதற்குள் நம்முடைய அதிருப்தியை ஏன் வெளிகாட்ட வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவன் "உத்தரவு பிரபு. என்ன கேள்வி கேட்க வேண்டுமோ கேளுங்கள் எனக்கு தெரிந்த உண்மைகளை மறைக்காமல் கூறுகிறேன்" என்றான் வினயமாக.

" நல்லது. என்னிடம் இருப்பது ஒரே ஒரு கேள்வி தான். நீலன் சிறையிலிருந்து எப்படி தப்பினான்?" ரத்னா வதியிடமிருந்து கணீரென்ற குரலில் வந்தது கேள்வி.

தன் மூளைக்கு எட்டாத கேள்வியை கேட்ட ரத்னாவதியை வியப்புடன் பார்த்தான்மதிமாறன்.

"உண்மையை சொல்கிறேன். அவன் எப்படி சிறையிலிருந்து தப்பினான் என்று எனக்கு தெரியவில்லை" என்றான் கருணாகரன் பதட்டத்தை மறைத்தபடி.

"நீங்கள் மறுபடியும் அவனை சந்தித்த போது இந்த கேள்வியை அல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்? ஏன் கேட்கவில்லை. தப்பி சென்ற குற்றவாளியை மீண்டும் ஏன் கைது செய்யவில்லை"

" அவனை விசாரிக்க வேண்டுமென்றோ கைது செய்ய வேண்டுமென்றோ எனக்கு தோன்றவில்லை. அவன் மலை நாட்டின் கடல் ஒற்றர்களில் ஒருவன். ஓரு ஒற்றன் சிறையிலிருந்து தப்பி செல்வது சகஜம் தான். தன்னுடைய தப்பி செல்லும் திறமையை நமக்கு காட்ட கூட அவன் சிறையிலிருந்து தப்பியி ருக்கலாம். பாவம் அவன். சிறையிலிருந்து தப்ப முடிந்தாலும் தீவிலிருந்து தப்பி வெளியேற முடியவில்லை. அவன் மீண்டும் வந்ததால் தான் நஞ்சுண்டன் சிகப்பு முகமூடிக்கு ஆயுதங்களை அள்ளி கொடுத்தது நமக்கு தெரிய வந்தது அவனால் தான் எதிரிகளின் வலிமை ஆயுதங்கள் மூலமாக அதிகரித்திருப்பது நமக்கு தெரிய வந்தது "

"ஆம்.கருணாகரன் சொல்வது உண்மை. நாம் கருணாகரனை சந்தேகிப்பது அறிவீனம் " என்றான் மதி மாறன் .

"எனக்கு நீலன் எப்படி சிறையிலிருந்து தப்பினான் என்பது தெரிய வேண்டும்" என்றாள் ரத்னா வதி உறுதியான குரலில்.

அதே நேரம் உள்ளே வந்த காவலன் ஒருவன் முகமன் கூறி நின்றான்.

" என்ன விசயம்?" என்றான் மதி மாறன் காவலனை பார்த்து.

"உங்கள் உத்தரவுப்படி வில்லவனின் மாளிகை தீ வைத்து கொளுத்தப்பட்டு விட்டது. அந்த மாளிகை இருந்த இடம் சாம்பல் மேடாகி விட்டது"

"நல்லது!" என்றான் மதி மாறன் மகிழ்ச்சியுடன் .

"சாம்பல் மேடுகளில் நன்றாகத் தேடிப் பார்த்து விட்டோம். இறந்து போன மனிதர்களின் வெந்த பிணமோ எலும்பு கூடோ எதுவும் கிடைக்கவில்லை" என்றான் காவலன்.

" என்ன சொல்கிறாய் நீ?'' என்றனர் மதிமாறனும் ரத்னா வதியும் ஏக காலத்தில் .இருவர் தலையிலும் இடி இறங்கியது போலிருந்தது. கருணாகரனுக்கு ஏதோ புரியாத புதிர் இருவரிடமும் மறைந்திருப்பதாக தோன்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக