வெள்ளி, 2 டிசம்பர், 2022

ரகசிய தீவு61

Aரகசிய தீவு
அத்தியாயம் 61

ரகசியத்தின் ரகசியம்.

"பொய்யை உண்மையாக்க போகிறாயா? அது எப்படி முடியும்? பரிசோதனையில் அது பொய் என்று தெரிந்து விடாதா?" என்றான் பார்த்திபன்.

"அவர்கள் பொய்யை உண்மை என்று நம்புவார்கள். மனித மனம் மிகவும் விசித்திரமானது அது உண்மையை அவ்வளவு எளிதில் ஏற்றுகொள்ளாது. ஏனென்றால் உண்மை எப்போதும் கசக்கும்.ஆனால் பொய் வசீகரமானது. கவர்ச்சிகரமானது. அதனால் மனித மனம் ஈர்க்கப்படுவது இயல்பு. வள நாட்டிலிருந்து உதவி வருவதாக ஒரு பொய்யான தகவலைதீவிற்குள் பரப்பி விடுங்கள். அதை கட்டாயம்மதிமாறன் உண்மை என்றே நம்புவான்"

"அப்படி அவன் நம்பாவிட்டால்?" என்றான் கேள்விக்குறியோடு பார்த்திபன்.

"அவனை நம்ப வைப்போம். வள நாட்டிலிருந்து நமக்கு படை உதவி வருவதாக ஒரு போலியான ஓலையை எழுதுவோம். அதை ஒரு நம்பகமான ஆளிடம் கொடுத்து விடுவோம். அவன் மதி மாறனின் ஆட்களிடம் வம்பிழுத்து வேண்டுமென்றே மாட்டி கொள்ளட்டும். அவனிடம் இருந்து கைப்பற்றப் படும் ஓலை கண்டிப்பாக மதிமாறனிடம் ஒப்படைக்கப்படும். அதிலிருக்கும் பொய் தகவலை படிக்கும் மதிமாறன் கண்டிப்பாக மன உளைச்சல் அடைவான். சிகப்பு முகமூடிக்கு உதவியாக வளநாடு வருகிறது என்ற சேதி அவன் மன உறுதியை குலைத்து விடும்."

" அவன் அந்த ஓலையை நம்ப வேண்டுமானால் அந்த ஓலையில் வள நாட்டின் ராஜ முத்திரை இருக்க வேண்டும்"

"அது அந்த ஓலையில் இருக்காது. நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட விரும்பாதவள நாட்டின் அரச பிரமுகர்களில் ஒருவனின் ரகசிய ஓலை அது. அவன் தன்னை அடையாளம் காட்டி கொள்ள விரும்பவில்லை. ஆனால் சிகப்பு முகமுடியோடு அவனுக்கு கடித தொடர்பு இருப்பது உண்மை என்று பிடிபடும் நம்முடைய ஆள் நைச்சியமாக பேசி அவனை நம்ப செய்ய வேண்டும். அவனது பேச்சு சாமார்த்தியம் தான் இங்கே முக்கியம். அவனது பேச்சை கேட்டு மதிமாறன் மன சலனம் அடைவது தான் இங்கே முக்கியம்."

"அப்படி வாய் சொல்லில் வீரர்கள் நம் கூட்டத்தில் குறைவுதான். அவர்களில் ஒருவனை இதற்காக ஏற்பாடு செய்து விடலாம். ஆனால் வள நாட்டின் ஒற்றர்களுக்கு பிரத்யேகமான முத்திரை மோதிரம் வழங்கப்படுகிறது. அதை வைத்துத்தான் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியும் "

"அந்த பிரத்யேகமான மோதிரத்தை நீ பார்த்திருக்கிறாயா? அதைப் பற்றிய வேறு விசயங்கள் ஏதாவது உனக்கு தெரியுமா?"

"இல்லை. அதைப் பற்றிய எந்த விசயங்களும் எனக்கு தெரியாது. இப்படி ஒரு விசயத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வளநாட்டின் ஒற்றர் படையில் அங்கம் வகிக்கும் ஒற்றர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மலை நாட்டின் அரசனுக்கு கூட அந்த ரகசியம் தெரியாது. ஒரு முறை வள நாட்டின் ஒற்றன் ஒருவன் மலை நாட்டில் பிடிபட்டு விட்டான். அவனிடமிருந்து ஒரு முத்திரை மோதிரம் பிடிபட்டது. தன்னுடைய ஒற்றன் பிடிபட்டது தெரிந்தவுடன் வளநாட்டு அரசன் அந்த முத்திரை மோதிரத்தின் இலட்சினையை மாற்றி விட்டான். பிடிபட்டவனிடம் கிடைத்த மோதிரத்தை வைத்து வளநாட்டின் ஒற்றர்களை பிடித்து விடலாம் என்ற மலை நாட்டின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம்."

"அந்த ரகசிய மோதிரத்தின் இலட்சனை என்னவென்று யாருக்கும் தெரியாது.அப்படி ஒரு மோதிரம் பிடிபடுபவனிடம் இருந்தால் தான் இந்த ஓலைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைக்கும். பிடிபட்டவன் வள நாட்டின் ஒற்றன் என்பதையும் மதிமாறன் நம்புவான். அப்படித்தானே?"

"ஆமாம். அதுதான் நிலைமை. அதை நீ சரியாகப் புரிந்து கொண்டு விட்டாய்" என்றான் பார்த்திபன்

சிறிது நேரம் யோசித்து கொண்டி௹ந்த ஆதித்தன் சட்டென்று தன் விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி பார்த்திபனிடம் நீட்டினான்.

"இதோ. இது தான் அந்த முத்திரை மோதிரம் " என்றான் புன்னகையுடன் ஆதித்தன்.

"இது எப்படி வளநாட்டின் முத்திரை மோதிரமாக இருக்க முடியும்? நீ விரலிலிருந்து கழற்றுவதை நான் என் கண்களால் கண்டேனே?"

"அதை மறந்து விடு. வள நாட்டின் ஒற்றர்களுக்கு வழங்கப்படும் முத்திரை மோதிரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. பிடிபடும் ஒற்றனிடம் இருக்க வேண்டியது ஒரு மோதிரம். அந்த மோதிரம் ஏன் இந்த மோதிரமாக இருக்க கூடாது?. இது உண்மையான முத்திரை மோதிரம் என்று தெரிந்து கொள்ள அவர்களுக்கு நேரமில்லை. இந்த போலி மோதிரமும் பிடிபட்டவனிடம்கிடைக்கும் ஓலையும் அவர்களை ஒலையில் உள்ள விசயம் உண்மை தான் என்பதை நம்ப வைக்கும் "

"உன் திட்டம் புரிகிறது. ஏதோ ஒரு மோதிரத்தை வள நாட்டின்முத்திரை மோதிரம் என்று மதிமாறனை நம்ப வைக்க போகிறாய். அப்படித்தானே?" என்றான் பார்த்திபன்.

"அதேதான். இப்போது என்னுடைய திட்டம் புரிந்து விட்டதா?" என்றான் ஆதித்தன் புன்னகையுடன் .

"நீ கள்வனாக இருப்பதை என்னால் ஏற்க வே முடியவில்லை. உன்னுடைய புத்திசாலித்தனத்திற்கு நீ ஒரு சாம்ராஜ்ஜியத்திற்கே அதிபதியாகி இருக்க வேண்டும்" என்றான் வியப்புடன் பார்த்திபன்

"மக்களின் மனதில் இருக்கும் இடமே எனக்கு போதும். என்னைப் புகழ்வதை நிறுத்திவிட்டு உடனே ஒரு ஓலைக்கும், எழுத்தாணிக்கும் ஏற்பாடு செய் - வள நாட்டின் ஒற்றனாக நடிக்கப்போகிற ஆசாமியை தேர்வு செய்" என்றான் ஆதித்தன்.

சிறிது நேரம் கழித்து

தன் ஆட்களில் இந்த வேலைக்கு ஏற்றவன் யார் என்று யோசித்து கொண்டிருந்தான் பார்த்திபன். ஓலை எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தான் ஆதித்தன்.

அதே நேரம் .!

மதிமாறனின் மாளிகையிலிருந்து வெளியே வந்தனர் கருணாகரனும், நீலனும், நஞ்சுண்டனும்.

"யார் அங்கே ?" என்று கத்தினான் கருணாகரன்.

வந்து நின்ற ஆட்களைப் பார்த்தவன்" முட்டாள்களே! இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீர்கள்? எவ்வளவு முறைதான் உங்களை அழைப்பது?" என்றான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

" மன்னிக்க வேண்டும் தளபதியாரே! சாப்பாட்டு நேரம் .அதுதான் தாமததிற்கான காரணம்" என்றான் வீரர்களில் ஒருவன் வினயமாக.

"ஓ! சாப்பாட்டு நேரமா? சரி உங்களை மன்னிக்கிறேன். போய் உடனே ஒரு சாரட்டு வண்டியை ஏற்பாடு செய்யுங்கள்" என்றான் கருணாகரன் A

"இதோ விரைவில் " என்ற அவனது ஆட்கள் சிட்டாகப் பறந்தனர்.

" என்ன நண்பா! என்னோடு வருகிறாயா? தங்கத்தை எடுத்து வருவோம். அதை நான் ஒளித்து வைத்திருக்கும் இடத்தை பார்த்தால் நீ அசந்து விடுவாய்" என்றான் கருணாகரன் நீலனைப் பார்த்து.

"எனக்கு அதில் அதிகமாக ஈடுபாடு இல்லை நண்பா.! என் மனம் முழுக்க இவனை பழி வாங்க துடியாக துடித்து கொண்டிருக்கிறது. இவனை கொன்றால்தான் என் மனம் அமைதியடையும் " என்றபடிநஞ்சுண்டனை பார்த்து பல்லை கடித்தான் நீலன்.

"அய்யய்யோ! நண்பா அவசரப்பட்டு விடாதே! நான் புதையலோடு வரும் வரையாவது இவனை உயிரோடு விட்டு வை.இவனது உயிருக்கு ஊறு எதையும் செய்து விடாதே" என்றான் கருணாகரன் பதட்டத்துடன் .

"நான் இப்போதே சாகத் தயார். என்னை எப்படி சொல்ல ஆசைப்படுகிறாயோ அப்படியே சொல் " என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நின்றான் நஞ்சுண்டன் .

நீலனின் மனதில் சந்தேகவிதை ஓன்று விழுந்தது. "உன்னையும் இவன் விலைக்கு வாங்கி விட்டானா? இருவரது நடத்தையும் புதிராக இருக்கிறதே?" என்றான் அவன் சந்தேக பார்வையுடன் .

"என்னை சந்தேகிக்காதே நண்பா! புதையல் பெட்டிகளை வளநாட்டில் திறக்கும் போது இரத்தப் பலி கொடுத்தாக வேண்டுமல்லவா? அதற்கு இவனைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தேன்" என்றான் கருணாகரன் பதட்டத்துடன் .

"அதற்கு உன் நாட்டு தேச பக்தர்கள் யாரையாவது தேர்ந்தெடுத்து கொள். இவன் என்னுடைய உடமை, இவனுக்கு எமன் நான். இவனை என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். இவனை அழைத்து கொண்டு உன்னோடு தங்க புதையலை எடுக்க வந்தால் இவன் ஏதாவது தந்திரம் செய்து என்னிடமிருந்து தப்பி சென்று விடுவான். இவனை நான் என் கப்பலுக்கு அழைத்து செல்ல போகிறேன் - இவன் என் கண் எதிரே இருப்பது தான் எனக்கு நிம்மதி " என்றான் நீலன்.

"உன் நோக்கம் புரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடு நண்பா! உன் நோக்கம் போல் செய்" என்றான் கருணாகரன்

" வண்டி வந்து விட்டது. நான் இவனுடன் கிளம்புகிறேன்" என்றான் நீலன் துணியை நஞ்சுண்டனின் வாயில் திணித்தபடி.

"தாராளமாக கிளம்பு நண்பா! என்னுடைய முத்திரை மோதிரத்துடன் ஒருவன் உன்னை சந்திப்பான். அவன் பெயர் வில்லவன். அவன் வசம் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு கப்பலை காலி செய்து வை. மூன்றாம் சாமத்தில் நான் புதையலோடு வந்து சேருகிறேன்" என்றான் கருணாகரன்.

கருணாகரனின் மோதிரத்தை ஒரு முறை பார்த்து கொண்ட நீலன்" உன் விருப்பப் படியே செய்கிறேன்" என்று கூறிவிட்டு நஞ்சுண்டனுடன் வண்டியில் ஏறி கிளம்பினான்.

கருணாகரன் போகும் வண்டியை பார்த்தபடி பெருமூச்சு விட்டான். அவன் தன் குதிரையை அவிழ்த்து கொண்டிருந்த போது வில்லவனும், யவனனும் மாளிகைக்குள் நுழைந்தனர்.

அதே நேரம் மதிமாறன் ரத்னா வதியுடன் தன்னுடையமாளிகைக்கு திரும்ப வந்து கொண்டிருந் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக