ரகசிய தீவு
அத்தியாயம் 66
நரகத்திலிருந்து விடுதலை
இடுகாட்டில் முதல் பிணம் சிதிலமான நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அது கருணாகரனால் அனுப்பப்பட்ட ஆட்களில் ஒருவனது பிணம்.காட்டுவாசிகளாக வேடமணிந்து கொண்டிருந்த கடல் கொள்ளையர்களை ஏமாற்றி அவர்களுடைய புதையலை தோண்டி எடுத்து வந்த கருணாகரனின் ஆட்களில் ஒருவனது பிணம் அது.
கருணாகரனை நம்பி அந்த காரியத்தில் இறங்கிய வர்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் .ஏராளமான பொன்னையும் பொருளையும் அள்ளி தருவதாக கருணாகரன் சொன்னதை நம்பி அதற்காக ஆசைப்பட்டு வந்தவர்கள் அவர்கள். அவர்கள் பொன் பொருளின் மகத்துவத்தை உணர்ந்த அளவிற்கு கருணாகரனின் குள்ள நரி புத்தியை அறியாமல் இருந்ததுதான் பரிதாபம். தான் திட்டமிட்டபடியே தன்னுடைய நண்பர்களை போதையில் மதிமயங்க செய்த கருணாகரன் அந்த பொக்கிசங்களை வெற்றிகரமாக எடுத்து வந்து விட்டான்.
அதை எங்கே ஓளித்து வைப்பது என்று யோசித்தவனின் சிந்தனையில் உதித்தது ஒரு குயுக்தியான திட்டம். இந்த தீவில் யாரும் கவனிக்காத யாரும் சந்தேகிக்காத ஓரே இடம் இந்த இடுகாடு தான். தன்னுடைய வலது கையான பூபதியின் உதவியோடு பொக்கிசத்தை கொண்டு வந்த பணிரெண்டு பேர்களையும் கொன்று பரலோகம் அனுப்பி வைத்தான். ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் புதையல் பெட்டிகளை புதைத்து அதன் மீதாக பிணங்களை புதைத்து அடையாளத்திற்காக சமாதியையும் எழுப்பி விட்டான். இப்போது அந்த சமாதிகளை தோண்டி புதையலை எடுக்கும் வேலையை ஆரம்பித்து விட்டான்.
நகரத்தின் சொகுசான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு போன பூபதிக்கு இந்த புதையல்கள் இங்கு வந்து சேர்ந்ததும் போதாத காலம் துவங்கியது. புதையல்களை பத்திரமாக பார்த்து கொள்ள இடுகாட்டின் வெட்டியான் வேலையை அவனுக்கு கொடுத்து விட்டான் கருணாகரன்.
அன்றிலிருந்து பூபதியின் நரக வாழ்க்கை துவங்கியது. அவன் இரவு அங்கேயே தங்க வேண்டியிருந்தது. நள்ளிரவில் கத்தும் கோட்டான்களின் சத்தத்தையும், பிணங்களை தோண்டி தின்ன வரும் நரிகளின் ஓலமும் அவனை மரண பீதிக்கு உள்ளாக்கின. இவை போதாதென்று கருணாகரனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி வேறு அரூபமாக வந்து அவனை பயமுறுத்த தொடங்கின.
தன் பயத்தை மறைத்து கொள்ள பூபதிக்கு மதுவைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. இரவானால் போதும் வயிறு முட்ட குடித்துவிட்டு தன்னுடைய குடிசையில் உருண்டு கொண்டிருப்பான். அப்போது என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியாது.
எப்போது இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அவன் ஏங்கி கொண்டிருந்தான். இந்த நாளை அவன் தனக்கான விடுதலை நாளாக நினைத்து கொண்டிருந்தான்.
தோண்டப்பட்ட குழியில் இருந்த சிதிலமடைந்த பிணம் வெளியே தூக்கி வீசப்பட்டது. அதன் அடியில் நான்கடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட இரும்பு பெட்டி மண் மூடி காணப்பட்டது.
கருணாகரனின் கண்கள் பேராசையால் மின்னின.
"சீக்கிரமாக அந்த பெட்டியை தூக்கி வண்டியில் ஏற்றுங்கள்" என்று தன்னுடைய ஆட்களுக்கு அவன் உத்தரவிட்டான்.
அவனது உத்தரவுக்கு பிறகு காரியங்கள் வேகம் பிடித்தன.
சமாதிகள் விரைவாக தோண்டப்பட்டு பெட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன. அவை வண்டியில் ஏற்றப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் கருணாகரன்.
"இன்றிலிருந்து எனக்கு விடுதலை" என்று சந்தோசமாக கூறினான் பூபதி.
"ஆம். இந்த புதையல்களை வளநாட்டில் ஒப்படைத்து விட்டால் எனக்கும் விடுதலை கிடைத்துவிடும்." என்றான் ஆழ்ந்த யோசனையில் இருந்த கருணாகரன்.
"இந்த ஆட்களை என்ன செய்வது? வழக்கம் போல் கொன்று புதை குழிக்குள் புதைத்து விடுவோமா?" என்றான் பூபதி.
''அதற்கு நமக்கு நேரமில்லை நண்பா.! பாவம் அவர்கள் பிழைத்து போகட்டும். இன்று இரவுக்குள் நாம் இந்த புதையல்களோடு இங்கிருந்து கிளம்பியாக வேண்டும்"
"இந்த விசயம் தெரிந்தால் மதிமாறன் இவற்றை கைப்பற்ற நம்மை பின் தொடர்ந்து வந்து விட மாட்டானா?"
"அப்படி அவன் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் சிகப்பு முகமூடியான பார்த்திபனிடம் ஆயுதங்களை ஒப்படைத்திருக்கிறேன். அவனை எதிர்த்து படைகளை திரட்டவே அவனுக்கு நேரம் சரியாக இருக்கும். நானும் அங்கே இல்லாததால் எல்லா காரியங்களையும் அவன் தான் முன்னின்று செய்தாக வேண்டும். அந்த இடைவெளியில் நாம் தப்பி ஓடிவிடலாம். அவனது பார்வை நம் மீது திரும்பும் முன்பு நாம் வளநாட்டில் இருப்போம்."
"அவர்கள் இருவரையும் மோதவிட்டு விட்டு நாம் வேடிக்கை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப போகிறோம்"
"இந்த யுத்தத்தில் கண்டிப்பாக சிகப்பு முகமூடி தான் வெற்றி பெறுவான்.மதிமாறன் தோற்று விடுவான். தன் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட ரகசிய தீவின் மீதுமலை நாடு படையெடுக்கும். அப்போது வளநாடு பார்த்திபனுக்கு உதவி செய்ய முன் வரும். அப்போது நம் உதவியை பார்த்திபன் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மிகச் சிறிய படைகளை வைத்திருக்கும் அவனால் மலை நாட்டின் பெரும் படைகளை எதிர்த்து வெற்றி பெற முடியாது. அந்த போரில் வள நாட்டின் உதவியோடு பார்த்திபன் வென்று விட்டால் அவனை கைப்பாவையாக்கி வள நாடு ரகசிய தீ வை ஆளத் துவங்கி விடும். நாம் அவனை வைத்து அரசியல் பலன்களை அறுவடை செய்யலாம்"
"நல்ல திட்டம். இது நடைமுறைக்கு வந்து விட்டால்?"
"இந்த தீவும் நம்முடையது தான் " என்று சிரித்தான் கருணாகரன்.
"உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது கருணாகரா. ஒற்றை ஆளாக எத்தனை விசயங்களை சாதித்திக்கிறாய் நீ?"
"புகழ்ச்சி போதும் நண்பனே! வேலையில் கவனமாக இருப்போம். இவற்றை நாம் உடனடியாக கப்பலுக்கு கொண்டு செல்ல வேண்டும்"
பெட்டிகள் வண்டிகளில் ஏற்றப்பட்டன. அனைத்து வண்டிகளும் துறைமுகத்தை நோக்கி விரைந்தன.
அதே நேரம் நீலனின் கப்பலில் ஆயுதங்கள் கை மாறத் தொடங்கியிருந்தன. பாதாள அறையிலிருந்த அனைத்து ஆயுதங்களும் எடுக்கப்பட்ட பின்பு கடைசியாக இருந்த பெட்டியை எடுக்க முயன்றான் வில்லவன்.
"நண்பா. அந்த புது ரக ஆயுதம் எனக்கு தேவை.கருணாகரனின் நினைவாக அதை நான் வைத்திருக்கிறேன். அதை மட்டும் விட்டு விடு" என்றான் நீலன்.
" அதற்கென்ன.? அதை விட்டு வைத்தால் போயிற்று. ஆயுதங்களை பத்திரமாக எங்களிடம் ஒப்படைத்ததற்கு நன்றி. நாங்கள் கிளம்புகிறோம்" என்றான் வில்லவன்.
"தாராளமாக " என்றான் நீலன்.பைத்தியக்காரா ! இந்த ஆயுதங்கள் எந்த வகையிலும் உங்களுக்கு உதவாது. இதற்கு நன்றி வேறு கூறுகிறாயே என்று மனதில் நினைத்து கொண்டான் அவன்.
" என் ஆட்கள் கிளம்பட்டும். நான் வேண்டுமானால் கருணாகரனுக்காக காத்திருந்து அவன் வந்த பிறகு நன்றி சொல்லிவிட்டு கிளம்பட்டுமா?" என்றான் வில்லவன்.
"தேவையில்லை நண்பா. உன்னுடைய நன்றியை நான் அவனுக்கு தெரியப்படுத்துகிறேன். உனக்காக ஆயிரம் வேலைகள் காத்து கிடக்கின்றன. நீ போய் அவற்றை கவனி" என்றான் நீலன்.
"அதுவும் சரிதான். நான் கிளம்புகிறேன். கருணாகரனிடம் என்னுடைய நன்றியை மறக்காமல் சொல்லி விடு" என்றான் வில்லவன்.
அவன் நீலனிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
அதே நேரம் கண் விழித்த ஆதி " நான் எங்கிருக்கிறேன்?" என்று முனகினான்.
யாரோ தன்னை அழைக்கும் சத்தம் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து வந்தான்.
" என்ன விசயம்? எதற்காக என்னை எழுப்பினாய்? அப்படி என்ன தலைபோகிற விசயம்?" என்றான் எரிச்சலுடன் மதி மாறன் .
"தலை போகிற விசயம்தான் பிரபு. நீங்கள் கீழே வந்து பாருங்கள். புரியும் " என்றான் காவல் வீரர்களில் ஒருவன்.
மதிமாறன் கீழே வந்தபோது இரண்டு வீரர்கள் ஒருவனை கைத்தாங்க லாக பிடித்து கொண்டிருந்தனர். நடுவில் நின்றவன் நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டிருந்தான். அந்த தள்ளாட்டத்திற்கு காரணம் அவன் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததுதான் என்பது அவன் மீது வீசிய மதுவாசத்திலிருந்து தெரிந்தது.
"யார் இவன்? இவனை எதற்காக இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்றான் மதிமாறன் குழப்பத்துடன் .
"இவன் குடித்துவிட்டு நம் ஆட்களிடம் வம்பு செய்திருக்கிறான்"
"அதற்காக இவனை இங்கே அழைத்து வருவதா? சிறையில் அடைக்க வேண்டியதுதானே?"
" இதை பார்த்து விட்டு பிறகு நீங்களே அதை முடிவு செய்யுங்கள்"
" என்ன அது?"
மதிமாறனிடம் ஒரு ஓலையும் மோதிரமும் நீட்டப்பட்டது.
"இவன் வள நாட்டின் ஒற்றன்.இவனிடமிருந்து இந்த ஒலையும், மோதிரமும் கிடைத்தது "
மதிமாறன் திகைத்து நின்றான்.
" என்ன சொல்கிறீர்கள்? இவன் வள நாட்டின் ஒற்றனா?"
திகைப்புடன் வெளிவந்தது அவனது குரல் .
"ஓலையை படித்து பாருங்கள்.உங்களுக்கே புரியும் "
படபடக்கும் இதயத்தோடு ஓலையை படிக்க தொடங்கினான்மதிமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக