ரகசிய தீவு
அத்தியாயம் 67
அடுத்தடுத்த அச்சாணியம்
தனக்கு முன்பாக நின்றவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்தான்மதிமாறன் .வள நாட்டின் ஒற்றனுக்கு இங்கே என்ன வேலை? என்றது அவனது மனம். சிகப்பு முகமூடிக்கும் தனக்கும் இங்கே பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் எதிரி நாடான வளநாடு இந்த பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து ஆதாயம் அடையப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
அதுவரை அவனை அறைகுறையாக தழுவிக் கொண்டிருந்த தூக்கம் இப்போது பறந்தோடி போயிருந்தது. தன் கையிலிருந்த ஓலையை பிரித்து அதில் இருந்ததை மனதிற்குள் படிக்க ஆரம்பித்தான் அவன்.
"அன்புள்ள பார்த்திபனுக்கு !
உன்னுடைய நலம் விரும்பி எழுதும் கடிதம். இந்த கடிதத்தை வழக்கமாக கொண்டு வரும் நபரே எடுத்து வருவான். மதிமாறனுக்கு வர வேண்டிய ஆயுதங்கள் உன் வசம் வரப் போவதாக போன கடிதத்தில் கூறி இருந்தாய். அதை கேட்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தன் கையை வைத்து தன் கண்ணையே குத்துவது போன்ற சந்தர்ப்பம் உனக்கு கிடைத்தி ருக்கிறது. அதை தவற விடக் கூடாது. அவர்களின் ஆயுதத்தை கொண்டே அவர்களை வீழ்த்த வேண்டும்.
உன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் வள நாட்டின் உதவி உண்டு. உன்னிடம் ஆயுதங்கள் வந்து சேர்ந்த பிறகு அவற்றை கையாள போதுமான ஆட்கள் இல்லையே என்று நீ கவலைப்பட வேண்டாம். வள நாட்டின் போர் வீரர்கள் மாறு வேடங்களில்வெவ்வேறு நாடுகளில் ஏற்கனவே காத்து கிடக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு நாட்டு கப்பல்களில் கடல் வணிகர்கள் என்ற போர்வையில் ரகசிய தீவிற்கு வந்து சேருவார்கள். அவர்களை உன் படையில் இணைத்து கொண்டு உன்னுடைய ஆட்களாக மாற்றி கொண்டு விடு.
அவர்கள் உனக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். இந்த போரில் கண்டிப்பாக நீ தான் வெற்றி பெறுவாய். அப்படி வெற்றி பெற்றால் வள நாட்டின் மீதான சுங்க வரிகளை நீக்க வேண்டும். அதற்கும் நீ ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டாய். இருந்தாலும் அதை நினைவூட்டுவது எனது கடமை.
இந்த கடிதம் உன் கைக்கு கிடைத்தவுடன் படித்து முடித்துவிட்டு அக்னிக்கு இரையாக்கி விடு. இது வேறு யாராவது கைக்கு கிடைத்தாலும் பாதகமில்லை. இதில் வள நாட்டின் அரச முத்திரை இல்லை. அதனால் இது ஒரு அனாமதேய கடிதமாகவே நினைக்கப்படும். இந்த ஆட்சி மாற்ற விவகாரத்தில் வளநாடு தலையிடுவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் அதற்கான எந்த ஆதாரங்களும் இதில் இல்லை.
வெற்றிக்கு பிறகு நாம் மீண்டும் சந்திப்போம்!
இப்படிக்கு
உன் நலம் விரும்பி.
இப்படியாக ஓலை முடிவடைந்திருந்தது.
மதிமாறனின் முகம் கன்றி சிவந்தது.
சிகப்பு முகமூடியின் பெயரை பார்த்திபன் என்று கடிதம் எழுதியவன் குறிப்பிட்டிருக்கிறான். அதுதான் அவனது உண்மையான பெயர் என்று மதிமாறன், கருணாகரன் ஆகிய இரண்டு பேருக்குத்தான் தெரியும். மூன்றாவதாக ஒரு நபர் அந்த பெயரை குறிப்பிட்டிருக்கிறான் என்றால் அவனுக்கு சிகப்பு முகமூடியை அடையாளம் தெரிந்தி ருக்கிறது.
வெற்றிக்கு பிறகு நாம் மீண்டும் சந்திப்போம் என்ற வரிகள் அவனை உறுத்தியது.
அப்படியானால் வள நாட்டை சார்ந்த தன்னை வெளிகாட்டி கொள்ள விரும்பாத நபரும் பார்த்திபனும் ஏற்கனவே ஒரு முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.
யார் அந்த மர்ம ஆசாமி .? எங்கே சந்தித்தார்கள்? என்ன பேசினார்கள்?
இந்த ஓலையை ஆதாரமாக வைத்து கொண்டு வளநாட்டின் மீது குற்றம் சுமத்தக் கூட முடியாது. இந்த கடிதத்தை எழுதியவன் புத்திசாலி. தன்னுடைய அடையாளத்தை அவன் தன்னுடைய எழுத்தில் மறந்தும் கூட வெளிக்காட்ட வே இல்லை.
"இந்த ஓலையை இவனிடமிருந்து தான் கைப்பற்றினீர்களா?"
"ஆமாம். தீவிற்கு புதிய வனாக இருக்கிறான். இதற்கு முன்பு இவனை இங்கே யாரும் பார்த்ததில்லை"
"இவனது ஊர், பெயர்?"
" எதுவும் தெரியவில்லை. எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுக்கிறான். பதில் சொல்லும் நிலையிலும் அவன் இல்லை."
"இவனது போதை தெளிந்தால் தான் இவனை விசாரிக்க முடியும்.இவனிடமிருந்து ஆயுதங்கள் எதையாவது கைப்பற்றினீர்களா?"
"ஆமாம். கைப்பற்றினோம். மதுக்கடையில் இவன் ஆயுதங்களை வைத்து தான் அழிக் சாட்டியம் செய்து கொண்டிருந்தான். நம் வீரர்கள் இவனை மடக்கி பிடித்த போது தப்பி செல்ல முயன்றான். நம் வீரர்கள் பெரும்பாடுபட்டு இவனை பிடித்தார்கள். அதன் பிறகு நம் வீரர்களின் பலத்தை பார்த்து பயந்து பெட்டி பாம்பாகி விட்டான். அவன் அருந்திய மதுவின் வீரியம் அதிகமானாதால் மயங்கி விட்டான்"
"இந்த மோதிரம்?"
"இவனுடைய மடியில் ஓளித்து வைத்திருந்தான். கையில் மோதிரத்தை போடாமல் ஏன் ஓளித்து வைத்திருக்கிறான் என்ற சந்தேகத்தில் தேடிய போது தான் இந்த ஓலை கிடைத்தது. இதை படித்து பார்த்த பின்புதான் இவன் ஒற்றன் என்று உறுதி செய்து கொண்டேன்"
"நல்ல காரியம் செய்தாய். இங்கே இவ்வளவு அமளி துமளி நடக்கிறது. எங்கே போய் தொலைந்தான் அந்த கருணாகரன் ? இந்த விசயங்களை அவனல்லவா கையாள வேண்டும்?"
"அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தான் உறங்கி கொண்டிருந்த உங்களை எழுப்பினேன். என்னை மன்னித்து விடுங்கள்"
"சரி. பரவாயில்லை. இவனை இந்த ஒற்றனை சிறையில் அடைத்து வையுங்கள். அவனது போதை தெளியட்டும். பிறகு விசாரித்து உண்மைகளை அறிவோம்"
"உத்தரவு" என்ற வீரர்கள் ஒற்றனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
"கவனம் . தப்பி சென்று விட போகிறான்"
" அவனால் நடக்க கூட முடியவில்லை பிரபு. அவன் எங்கே ஓடப்போகிறான்? இவ்வளவு காவலை மீறி?" அவர்கள் அவனை இழுத்து சென்றனர்.
முதலில் தீப்பிடித்து எரிந்த வில்லவனின் மாளிகையில் இறந்த உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது எதிரி நாட்டு உளவாளி புரட்சி காரனுக்கு உதவ ஓலையுடன் உள்ளே நுழைந்திருக்கிறான். தன்னை சுற்றி நடக்கும் எல்லா செயல்களும் அச்சாண்யமாகவே நடப்பதை நினைத்து குழம்பிக் கொண்டிருந்தான்மதிமாறன். அவனுக்கு ஒற்றனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் நினைவிருந்தது. எங்கே என்பது தான் உடனே அவனது நினைவுக் கு வரவில்லை. மண்டையை உடைத்து கொண்டு யோசிக்க தொடங்கினான் அவன்.
வெளியே மது அருந்தி மயங்கிய நிலையில் இருந்த ஒற்றனை இரண்டு பேர் தோளில் கை போட்டு இழுத்து சென்று கொண்டிருந்தனர்.
" பயல் எருமை மாட்டைப் போல் கனக்கிறான். பிரபு எளிதாக இவனை சிறையில் அடையுங்கள் என்று சொல்லிவிட்டார். இவனை சிறைக்கு கொண்டு செல்வதற்குள் நம் கதி அதோகதியாகிவிடும் போலிருக்கிறது."
" ஆமாம். நீ சொல்வது உண்மைதான். சுய நினைவு இல்லாமல் மயங்கிய நிலையில் இருக்கும் இவனை எப்படி குதிரையில் ஏற்றி செல்வது? வழியில் எங்காவது விழுந்து தொலைந்து விடுவானே? என் குதிரை சண்டித்தனம் செய்யக் கூடியது. என்னை தவிர வேறு யாரையும் ஏற அனுமதிக்காது"
"அதைத்தான் நானும் யோசிக்கிறேன். பேசாமல் நாம் இவனை வண்டியில் கொண்டு போய் விட்டால் என்ன?"
"நல்ல யோசனை. நாம் அதைத்தான் செய்தாக வேண்டும். நமக்கு வேறு வழியில்லை"
"அப்படியானால் நீ இவனை கவனமாகப் பார்த்து கொள். நான் போய் ஒரு வண்டியை ஏற்பாடு செய்து அழைத்து வருகிறேன்" என்றான் ஒருவன்..
" இவனை பார்த்து கொள்ள நான் ஒருவன் போதும். நீ போய் வண்டியை கொண்டு வா. நடக்கவும் திராணியற்ற இவன் எங்கே போய் விடப் போகிறான்?" என்றான் மற்றொருவன்.
"கவனமாக இரு. இதோ விரைவில் நான் வண்டியுடன் வருகிறேன்" என்றவன் வண்டியை தேடிக் கொண்டு கிளம்பினான்.
மற்றொருவனின் தோளின் மீது கையைப் போட்டிருந்த ஒற்றன் தன் முழு உடல் பலத்தையும் சேர்த்து அவன் மீது சாய்ந்தான். அவனை தாங்கி பிடித்தவன் அவனது உடல் பளுவை தாங்க முடியாமல் கீழே படுக்க வைத்தான்.
கீழே மண்ணில் ஒரு முறை புரண்டவன் நின்று கொண்டிருந்தவனின் இடுப்பில் இருந்த வாளை மின்னல் வேகத்தில் பறித்தான். அதே வேகத்தில் அவனுக்கு அருகே இருந்த குதிரையின் மீது தாவி ஏறியவன் அதன் விலாவில் உதைத்து அதை கிளப்பினான். அவனது மின்னல் வேக நடவடிக்கைகளை எதிர்பாராதவன் திகைத்து போய் நின்றான்.
அங்கே இருப்பவர்கள் அவனை தடுக்கும் முன்பாக அவன் யாரிடமும் அகப்படாமல் குதிரையோடு வெளியேறியிருந்தான்.
கண் இமைக்கும் நேரத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
" வண்டியோடு நீ வந்தாக வேண்டும். இது அரச உத்தரவு .இதற்கு உடன்பட மறுத்தால் நீ தண்டனைக்குள்ளாவாய் " என்று ஒரு அப்பாவி வண்டிக்காரனை மிரட்டி கொண்டிருந்தான் இன்னொருவன்.
அவனது முதுகை தட்டியது ஒரு கை. அவன் திரும்பி பார்த்தான். " வண்டி தேவையில்லை நண்பனே! உன் குதிரையை எடுத்து கொண்டு விட்டேன். அந்த வண்டிகாரனை மிரட்டுவதை நிறுத்து. யாராவது உன் குதிரையை யார் களவாடியது என்று கேட்டால் கள்வர் பு ரத்தின் கள்வன் ஆதித்தன் களவாடிவிட்டான் என்று சொல்" என்ற ஆதித்தன் குதிரையை தட்டி விட்டான். அசுவ சாஸ்திரம் கற்று வைத்திருந்த ஆதித்தனின் கட்டளைக்கு கீழ்படிந்து விரைந்தது புரவி .
காவலன் வாயை பிளந்தபடி நின்று கொண்டிருந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக