அத்தியாயம் 74
உளவாளிகளின் படை
தீவிற்குள் தீ வட்டியுடன் நுழைந்த தர்மபாலன் தன்னுடைய இரண்டு ஆட்கள் மயங்கி கிடப்பதை பார்த்தான். கை கால்கள் கட்டப்பட்டு கிடந்த நஞ்சுண்டனை அவன் அடையாளம் கண்டுகொண்டான். நீலனின் கப்பலில் அவன் துணை மாலுமியாக இருப்பதை அவன் பார்த்திருந்தான். நீலனுக்கு துரோகம் செய்து விட்டு முத்தழகி யோடு அவன் கடலில் காணாமல் போன கதையையும் அவன் மாலுமிகளின் வாய் வழியாக கதையாக கேட்டிருந்தான். தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ளத்தான் நீலன் அவனை கல்லறைதீவில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறான் என்று அவனுக்கு சட்டென்று புரிந்து விட்டது.
மயங்கி கிடந்த தன்னுடைய இரண்டு ஆட்களையும் கூட நீலன் அடையாளம் கண்டு கொண்டிருக்க கூடும் என்று அவன் நினைத்தான். ஒரு கிழவன் அடையாளம் காணுமளவிற்கு தன்னுடைய ஆட்கள் காரியமாற்றியிருப்பதை நினைத்து அவனுக்கு எரிச்சலாக இருந்தது. மயங்கி கிடந்த மூன்றாவது நபரை புரட்டி அவனது முகத்தை பார்த்த தர்மபாலனுக்கு பூபதியை அடையாளம் தெரிந்து விட்டது. இவனும் வள நாட்டின் உளவாளி தானே? இவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்? நீலன் தன்னிச்சையாக இயங்கும் அளவிற்கு கருணாகரன் எப்படி அசட்டையாக இருக்கிறான் என்று அவனுக்கு விளங்கவில்லை.
அவன் முதலில் நஞ்சுண்டனின் கை, கால்களை அவிழ்த்து விட்டான். "சரியான நேரத்தில் என்னை காப்பாற்ற கடவுள் உங்களை அனுப்பி வைத்திருக்கிறார். உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்" என்று கைகூப்பினான் நஞ்சுண்டன் .
" மறக்கவேண்டாம். முதலில் மயங்கி கிடக்கும் இவர்களை எழுப்ப உதவி செய்" என்ற தர்மபாலன் தன் இடுப்பில் இருந்த குடுவையை எடுத்து அதிலிருந்த நீரை அவர்களின் முகத்தில் தெளித்தான். சற்று நேரத்தில் மூன்று பேரும் மயக்கம் தெளிந்து எழுந்து கொண்டனர். மலை நாட்டின் நான்கு உளவாளிகள் ஒரு அணியாகவும் நஞ்சுண்டன் தனியாகவும் இருந்தனர்.
அவர்கள் தங்களுக்குள் உரையாடத் தொடங்கினர். ரகசிய தீவிலிருந்து கப்பல் கிளம்பியதிலிருந்து கல்லறைதீவு வரும் வரை நடந்த அத்தனை சம்பவங்களும் அவர்களது பேச்சில் இடம்பெற்றிருந்தது.
" கருணாகரன், நம்மூவர் . எல்லோரையும் ஏமாற்றி புதையலையும், கப்பலையும் திரும்ப கைப்பற்றி விட்டான் நீலன்.வயதான காலத்தில் அந்த கிழவனை அதிர்ஷ்ட தேவதை அள்ளி அணைக்க ஆயத்தமாகிவிட்டாள். இனி அவன் மலைநாட்டை நோக்கி பயணமாவதை யாராலும் தடுக்க முடியாது"
" அவன் மலை நாட்டிற்கு போவதாக யார் சொன்னது?" என்றான் நஞ்சுண்டன் .
"நீ என்ன சொல்கிறாய்! அவன் புதையலோடு மலைநாட்டை நோக்கித் தானே பயணமாவான்? தாமதம் செய்ய வேறு காரணம் எதுவுமில்லையே?"
" அவன் இப்போது பயணமாவது மோகினி தீவை நோக்கி. அங்கே மகேந்திரனின் பணயப் பொருளாக அவனது நண்பன் பைராகி இருக்கிறான். அவனுடைய இன்னொரு றண்பன் ஆதித்தன் இன்னமும் ரகசிய தீவில் தான் இருக்கிறான். அவன் மோகினி தீவை வந்தடையும் வரை நீலன் அங்கிருந்து கிளம்ப மாட்டான் "
"நீ சொல்வது உண்மையாக இருந்தால் அந்த புதையலை அடைய நமக்கு இன்னமும் பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது"
"நீலனின் எதிரி நான். என்னை உங்களுடன் சேர்த்து கொள்வதே புத்திசாலித்தனம்"
"உன்னை எங்களுடன் சேர்த்து கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆதாயம் இல்லாமல் நீ எதையும் செய்ய மாட்டாயே? அந்த புதையல் எங்கள் நாட்டின் சொத்து .அதிலிருந்து எந்த பங்கையும் எதிர்பார்த்து விடாதே"
"எனக்கு அந்த புதையலில் எந்த பங்கும் வேண்டாம். எனக்கு தேவை நீலனின் மரணம். அதற்கு பிறகு அவனது கப்பல் என்னை வந்தடைய வேண்டும்"
"இது நியாயமான வேண்டுகோள்.அந்த கப்பல் எங்களுக்கு தேவையில்லை. புதையலை மீட்டு வளநாட்டில் ஒப்படைத்த பிறகு அந்த கப்பல் உன்னுடையது " என்று உறுதி கூறினான் தர்மபாலன்.
"இனியும் நாம் இங்கே கால தாமதம் செய்ய வேண்டாம். நாம் கப்பலுக்கு திரும்பலாம். மீதியை அங்கே பேசிக் கொள்ளலாம்" என்றான் பூபதி.கருணாகரனுடன் சேர்ந்து புதையலில் பாதியை களவாட நினைத்த பூபதியின் எண்ணம் ஈடேறவில்லை. இப்படி பாதியில் இறந்து கருணாகரன் தன்னுடைய கனவை குலைப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த ஏமாற்றம் அவனது குரலில் எதிரொலித்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
முத்தழகி கப்பலின் மேல் தளத்தில் நின்றிருந்த ஆதி கல்லறைதீவை உற்று பார்த்து கொண்டிருந்தான். அவன் பின்புறம் வந்து நின்ற நீலன்" இருட்டில் அப்படி எதை பார்த்து கொண்டிருக்கிறாய் ஆதி?" என்றான்.
"அங்கே தொலைதூரத்தில் ஒரு சிறு தீப்பிழம்பு கல்லறை திவினுள் சென்று மறைந்ததை நான் பார்த்தேன். அது தீப்பந்தமாக இருக்கலாம்"
"அதற்கு வாய்ப்பே இல்லை தம்பி" என்றான் நீலன்.
அதே நேரம் கல்லறைதீவில் இருந்த ஐவரும் தீப்பந்தத்துடன் படகில் ஏறி அதனை இயக்கினர்.
"அதோ அங்கே பாருங்கள். அந்த வெளிச்சம் மீண்டும் தீவிற்கு வெளியே வருகிறது " என்று உற்சாகமாக கத்தினான் ஆதி.
பார்வை குறைபாடுள்ள நீலனின் கண்களுக்கு அந்த தீப்பந்த வெளிச்சம் தெரியவில்லை.
" என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே? தூக்க கலக்கத்தில் எதையாவது பார்த்து தீப்பந்தம் என்று நினைத்து விட்டாய் போலிருக்கிறது. இதோ இதைப் பார்" என்ற நீலன் தன் இடுப்பில் இருந்த ஒரு கண்ணாடி குடுவையை எடுத்தான். அந்த கண்ணாடி குடுவை முழுவதும் மின்மினி பூச்சிகளால் நிரப்பப்பட்டு ஓளி பந்தாக பிரகாசித்தது. இடுப்பில் மதுப் புட்டியை சொருகி வைத்து பழக்கப்பட்ட நீலன் தன்னுடைய உயிரை காப்பாற்றிய மது புட்டி தொலைந்து போன பின்பு இந்த புட்டியை அந்த இடத்தில் வைத்திருந்தான்.
"இருட்டான இடங்களில் இதை நான் பயன்படுத்துவது வாடிக்கை. இந்த பூச்சிகள் கடல் மட்டத்தில் பறந்து போனதைத்தான் நீதீப்பந்தமாக கற்பனை செய்திருப்பாய்" என்று தன்னுடைய பார்வை குறைபாட்டை மறைக்க ஒரு காரணத்தை கற்பிக்க தொடங்கினான் அவன்.
அவன் சொன்னதை ஆதியால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. குழப்பத்துடன் தலையை அசைத்தான் அவன்.
" நேரமாகிவிட்டது போய் தூங்கு. நாளை நாம் மோகினி தீவில் சில நண்பர்களை சந்திக்க போகிறோம்" என்று அவனை அனுப்பி வைத்தான் நீலன்.
ஆதி சொன்னது உண்மையா என்று பார்க்க நாலாபுறத்திலும் பார்வையை செலுத்தியவனுக்கு இருட்டு மட்டுமே பதிலாக கிடைத்தது. உதட்டை பிதுக்கி கொண்டு தலையை குலுக்கி கொண்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தான் நீலன்.
அதே இரவு !
ரகசிய தீவில் தன்னுடைய மாளிகையில் முன்னும் பின்னுமாக நடை பயின்று கொண்டிருந்தான்மதிமாறன்.
தீவின் ஒரு புறத்தில் பார்த்திபன் போருக்கு தன்னுடைய படைகளை தயார் செய்து கொண்டிருந்தான். அந்த செய்தி நெருப்பாக பரவி மதிமாறனின் காதுகளில் விழுந்திருந்தது.
இரவு தொடங்கியதிலிருந்து கருணாகரனை ஆட்கள் வைத்து தேடிப் பார்த்து விட்டான். ஆள் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. துறைமுகத்தில் அவனை கடைசியாக பார்த்ததாக தகவல் மட்டும் வந்து சேர்ந்தது.
இனி கருணாகரனை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த மதிமாறன் தான் திறமைசாலிகள் என்று நினைத்த இருவரை தளபதிகளாக நியமித்திருந்தான். அவர்கள் இருவரும் தங்களால் முடிந்த அளவு படைகளை ஒன்றிணைத்து கொண்டிருந்தார்கள். அதுவரை சாதாரண போர் வீரர்களாக இருந்தவர்கள் தளபதிகளாக நியமிக்கபட்டவுடன் வழி நடத்தவும், உதவி செய்யவும் ஆட்கள் இல்லாமல் தட்டு தடுமாறிக் கொண்டிருந்தனர்.
அவர்களை விடவும் மோசமான நிலையில் இருந்தான்மதிமாறன் .இதுவரை உத்தரவிடுவது மட்டும் தான் அவனது வேலை. கருணாகரன் அதை செய்து முடிப்பான். இப்போது முன் அனுபவம் இல்லாதவர்களை பதவியில் அமர்த்தியதால் எல்லா காரியங்களும் தாமதமாக நடந்தேறி கொண்டிருந்தன.
சிறையில் இருந்தவர்களை தன்னுடைய படையில் சேர்த்ததன் மூலம் அவனது படைபலம் சற்று உயர்ந்திருந்தது மட்டும் தான் அவனுக்கு சாதகமாக இருந்தது.
கைதிகளை விடுதலை செய்ததன் மூலம் சிறைசாலை ஆட்களின்றி வெறிச்சோடி கிடந்தது. ரத்னாவதி விரும்பியதும் அதைத்தான். அவளது மனதில் மதிமாறனுக்கு தெரியாமல் ஒரு ரகசிய திட்டம் உருவாகத் தொடங்கி இருந்தது.. இது எதுவும் தெரியாமல் காரியமாற்றி கொண்டிருந்தான்மதிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக