ரகசிய தீவு
அத்தியாயம் 73
தனி தீவில் சதிகாரன்.
மதி மாறனை வீழ்த்தி விட்டு அரசு அதிகாரத்தை பார்த்திபன் கைப்பற்றினால் இழந்த அதிகாரத்தை மீட்க மலை நாடு ரகசிய தீவின் மீது படையெடுக்கும். கண் கொத்தி பாம்பாக ரகசிய தீவில் நடப்பவற்றை கவனித்து கொண்டிருக்கும் வள நாடும் கூட ரகசிய தீவை கைப்பற்ற நேரடியாக முயற்சி செய்ய கூடும். இல்லை பார்த்திபனுக்கு மலை நாட்டிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அவனை கைப்பாவையாக்கிதங்கள் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கலாம்.
எதிர்காலத்தில் நடக்க போகும் இந்த இரண்டையும் யூகித்த ஆதித்தன் இப்போது இருப்பது போல் மதிமாறனே இந்த தீவை ஆட்சி செய்வது போல் வெளி உலகிற்கு காட்டி விட்டால் இரண்டு நாடுகளும் அமைதியாகிவிடும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான். அதனால் அவனது மூளை வேறு விதமாக சிந்தித்தது.நடக்க இருக்கும் போரில் மதிமாறனை உயிரோடு சிறை பிடித்து விட்டால் அவனே ராஜ பிரதிநிதியாக இருப்பதைப் போல் வெளியே காட்டி விடலாம்.
வெளியுலக தொடர்புகளுக்கு அவனை பயன்படுத்தி கொண்டு நாட்டின் நிர்வாகத்தை பார்த்திபனே கவனித்து கொள்ள வேண்டியதுதான்.மதிமாறன் சிறையில் அடைபட்டு கிடப்பதுமலை நாட்டுக்கு தெரியாமல் பார்த்துகொண்டால் போதும். ஆதித்தன் தன்னுடைய மனதில் உதித்த திட்டத்தை பார்த்திபனிடம் விவரமாக எடுத்து கூறினான். அவனது யோசனையை கேட்ட பார்த்திபன் அயர்ந்து போய் நின்றான்.
இந்த கள்வன் இன்று நடக்கப் போகிறவைகளை மட்டுமல்லாது எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் சேர்த்தேசிந்திக்கிறான் என்று மனதில் வியப்புடன் நினைத்து கொண்டான்.
"நாம் மதி மாறனை சிறையில் வைத்திருப்பதும் அவனை பொம்மையாகப் பயன்படுத்துவதும் தயாநிதிக்கு தெரிந்து விட்டால் நம்முடைய நிலைமை என்னாவது?உண்மையை நீண்ட நாட்கள் மூடி வைக்க முடியாது நண்பா " என்றான் பார்த்திபன்.
"கவலைப்படாதே. ரகசிய தீவின் உரிமையாளரான தயாநிதி என்னுடைய நண்பன் நீலனுக்கு நெருங்கிய கூட்டாளி . நீலனின் வார்த்தைகளை அவன்தட்ட வேமாட்டான். அவன் மூலமாக மதிமாறனின் அட்டூழியங்களைப் பற்றியும் நீ அவனது நண்பன் மலையமானின் இளைய மகன் என்பதையும் அவனுக்கு எடுத்து கூறுவேன். தன் நண்பனின் மகன் நீ தான் என்பது தெரிந்தால் மலையமான் தன் முடிவை மாற்றிக் கொள்வான். இதுவரை உன்னை எதிரியாக நினைத்து கொண்டிருந்தவன் இப்போது வேறு மாதிரியாக நினைக் க ஆரம்பிப்பான்"
"அவரை நான் மாமா என்று தான் அழைத்து வந்திருக்கிறேன். அவரும் என்னை மாப்பிள்ளை என்று தான் அழைத்து வந்திருக்கிறார். நான் உயிரோடு இருப்பது தெரிந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். உங்களின் சந்திப்பு சுமூகமாக முடிந்து இந்த பிரச்சனை தீர்ந்துவிட்டால் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் கவலை"
" நீ எதற்காக கவலைப்படுகிறாய்?"
"நான் சந்திரவதனாவை காதலித்து கொண்டிருக்கிறேன். அவளையே மணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறேன். என் மாமா தயாநிதியின் மகள் சிறு வயதிலேயே தொலைந்து விட்டாள். அவளை தேடிக் கண்டு பிடித்து எனக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால்? சந்திரவதனாவின் நிலை? எங்கள் காதலின் முடிவு?" என்றான் கலக்கத்துடன் பார்த்திபன்.
"அந்த தொலைந்து போன தயாநிதியின் பெண் இன்னும் கிடைக்க வில்லையா?"
"இல்லை. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று கூட நிச்சயமாக தெரியவில்லை. அவள் இந்த பூமி பந்தின் ஏதொ வொரு மூலையில் உயிரோடு இருப்பதாக மாமா நம்புகிறார்.
"பிறகு அவளை நாம் எப்படித் தான் அடையாளம் கண்டு கொள்வது?"
"அவளது கழுத்தில் இருக்கும் ஒரு ஆபரணம். அது தயாநிதியின் பரம்பரை சொத்து .அதை வைத்து தான் அவளை அடையாளம் காண முடியும் "
"இது என்ன புது வகையான சிக்கல்? நான் முதலில் தயாநிதியினை என் நண்பனுடன் சேர்ந்து சந்தித்து உனக்கு வரப்போகும் முதல் அபாயத்தை நீக்குகிறேன். இந்த விசயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம்." என்றான் ஆதித்தன் V
"அதற்கும் வழியில்லை. நீலன் உங்களை விட்டு விட்டு முத்தழகி யோடு கிளம்பி விட்டான்.அவன் வெகுதூரம் சென்றிருப்பான். அவனை உங்களால் பிடிக்கவே முடியாது"
"அவனைப் பற்றி தப்பு கணக்கு போட்டு விட்டாய். அவன் மோகினி தீவிற்கு சென்று பைராகியை மகேந்திரனிடமிருந்து மீட்காமல் போக மாட்டான். என் நண்பன் பைராகியோடு ஒரு முறை பழகியவர்களால் அவ்வளவு எளிதில் பிரிய முடியாது. அங்கே நீலன் நான் வரும் வரை காத்திருப்பான். அந்த இடைவெளியில் நான் அங்கே சென்று விடுவேன்."
"அப்படியானால் இந்த போரில் நான் வென்று விட்டால் வழக்கம் போல் என்னிடம் சொல்லி கொள்ளாமல் கிளம்பி விடுவீர்களா?" என்றான் ஏக்கத்துடன் பார்த்திபன்.
"பிரிவு ஓன்று தான் என்றும் நிரந்தரமானது நண்பா! நாம் சேர்ந்து செயல்பட்ட இனிய நினைவுகள் என்றும் நம் நட்பை நினைவூட்டும் . செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்க இப்போது எதற்கு இந்த பேச்சு ? போ! போய் ஆக வேண்டிய காரியத்தை பார்.நாளைய யுத்தத்திற்கு நாம் தயாராக வேண்டும்" என்றான் ஆதித்தன்.
"ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறாய்" என்ற பார்த்திபன் அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.
அவனை தடுத்து நிறுத்திய ஆதித்தன் "உன்னிடம் கைவசம் எவ்வளவு பொற்காசுகள் இருக்கும் "
"எதற்காக கேட்கிறாய்? செலவிற்கு பணம் ஏதாவது தேவையா?" என்றான் பார்த்திபன்.
"இல்லை. என்னிடம் அதற்கு போதுமான ப்ணம் இருக்கிறது. உன்னிடம் மொத்தமாக எவ்வளவு இருக்கிறது?"
"எண்ண முடியாத அளவிற்கு ஏராளமாகவே இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து என் மக்கள் என் இயக்கத்திற்காக கொடுத்த நன்கொடை அது "
'அது மொத்தமும் எனக்கு வேண்டும் "
"அதை வைத்து என்ன செய்ய போகிறாய்?"
"அதுதான் இந்த யுத்தத்தின் துருப்பு சீட்டு" என்று புரிபடாமல் சிரித்தான் ஆதித்தன்..
அதை வைத்து இவன் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறான் என்று புரியாமல் நின்றான் பார்த்திபன்.
அதே இரவு.
இளந்தென்றல் காற்றும் முழு நிலாவின் ஓளியும் கல்லறை தீவை நிறைத்து கொண்டிருந்தன. அதை ரசிக்கும் மனநிலையில் நஞ்சுண்டன் இல்லை. அலைகளின் ஓவென்ற இரைச்சலுக்கு நடுவே கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தான் அவன்.நிலவின் வெளிச்சத்தில் ஆங்காங்கே நீலனால் வெட்டப்பட்ட மரங்கள் மொட்டையாக நின்றிருப்பது அவனது பார்வைக்கு கிடைத்தது.நீலன் எப்படி அந்த தீவிலிருந்து தப்பி வந்தான் என்று அவனுக்கு இப்போது புரிந்தது.
நீலன் கொண்டு வந்த மூவரும் தரையில் ஆழ்ந்த மயக்கத்தில் கிடந்தனர். அவர்களில் யாராவது ஒருவன் மயக்கம் தெளிந்து கண் விழித்து எழுந்தால் மட்டுமே தான் கை கால் கட்டுகளிலிருந்து விடுதலை பெற முடியும் என்று அவனுக்கு புரிந்தது.
நீலனுக்கு கைகொடுத்த அதிர்ஷ்டம் தனக்கும் கை கொடுத்தால் இங்கிருந்து உயிரோடு தப்பி சென்று விடலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு . நஞ்சுண்டனுக்கு இன்னும் வியப்பை தந்த விசயம் கருணாகரனின் மரணம் தான். அவன் தன்னுடைய உயிருக்கு காப்பானாக இருப்பான் என்று நினைத்தால் அவன் உயிரையே யாரோ காவு வாங்கி விட்டார்கள். அது நீலனாகத் தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.
நீலனுக்கு மாற்றாக தன்னை பயன்படுத்தி கொள்ளும் கருணாகரனின் திட்டம் எப்படியோ நீலனுக்கு தெரிந்திருக்க வேண்டும். கிழவன் கில்லாடித் தனமாக காரியத்தில் முந்தி கொண்டு கருணாகரனை கைலாயம் அனுப்பி வைத்துவிட்டான். இனி யாரும் தன்னை காப்பாற்ற முடியாது. மரணம் நிச்சயம் என்ற முடிவிற்கு வந்து விட்டிருந்தான் நஞ்சுண்டன் .
மயங்கி கிடக்கும் இந்த மூவர் யார் என்று தான் அவனுக்கு புரியவில்லை. ஆனால் நிச்சயம் தன்னைப் போலவே இவர்களும் நீலனுக்கு ஆகாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்தான் அவன்.
அதே நேரம் கடல் அலைகளில் துடுப்பு வலிக்கும் சத்தம் அவன் காதுகளில் விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த சத்தம் நின்றது. பிறகு யாரோ படகிலிருந்து குதித்து இறங்கும் சத்தம் கேட்டது. தீப்பந்த வெளிச்சம் ஒன்று சிறு புள்ளியாக கடல்புரத்தில் தெரிய ஆரம்பித்தது.நஞ்சுண்டன் மூச்சை இறுகப் பிடித்து கொண்டான்.
ஒரு கையில் தீப்பந்தத்தை ஏந்தி கொண்டு இன்னொரு கையில் வாளை ஏந்தியபடி தீவிற்குள் பிரவேசித்தான் தர்மபாலன்.இந்த தீவிற்குள் இந்த இருட்டில் வருவது யாராக இருக்கும் என்று குழம்பிக் கொண்டிருந்தான் நஞ்சுண்டன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக