அத்தியாயம் 71
எதிரிக்கு எதிரி
விடியற்காலை .
சூரியன் மேகக்கூட்டத்தின் நடுவே மெல்ல எழுந்து கொண்டிருந்தான். அவனது கதிர்கள் சன்னல் வழியாக உறங்கி கொண்டிருந்த தர்மபாலனின் முகத்தில் விழுந்தன.வெளிச்சம் பட்டு கூச்சத்தில் கண்களை கசக்கியபடி எழுந்தான் தர்மபாலன்.அவன் சோம்பல் முறித்து கொண்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்தான். கப்பல் முழுவதும் சோம்பல் குடிகொண்டிருந்தது. நள்ளிரவில் மது அருந்தி விட்டு படுத்தவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
கொட்டாவி விட்டபடி முத்தழகி நின்ற இடத்தை பார்த்த தர்மபாலன் திகைத்துப் போய் நின்றான்.முத்தழகி நின்ற இடம் வெறுமையாக இருந்ததை பார்த்ததர்மபாலன் இடி விழுந்த நாகம் போலானான்.
குடித்துவிட்டு படுத்துக் கொண்டிருந்த தன்னுடைய ஆட்களை உதைத்து எழுப்பியவன் "முட்டாள்களே!அங்கே பாருங்கள். நம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நீலன் தன்னுடைய கப்பலை எடுத்து சென்று விட்டான். நாம் இன்னும் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறோம். உடனே கப்பலை கிளப்புங்கள். ஒடுங்கள் !" என்று அனைவரையும் விரட்ட தொடங்கினான்.
அவனது உத்தரவுக்கு இணங்க கப்பலின் நங்கூரம் மேலே இழுக்கப் பட்டது. பாய்மரம் இழுத்து கட்டப்பட்டது. உதவி மாலுமி கப்பலின் சுக்கானை சுறுசுறுப்பாக இயக்கத் தொடங்கினான். கப்பல் துறைமுகத்தில் இருந்து நகரத் தொடங்கியது. தொலைநோக்கியை எடுத்து முத்தழகி கப்பலை கண்காணிக்க தொடங்கினான் தர்மபாலன்.
முத்தழகியில் நடைபெறும் ஓவ்வொரு அசைவையும் வைத்த கண் எடுக்காமல் கண்காணிக்க தொடங்கினான் அவன்.
அதே நேரம் முத்தழகியில்.
சிறிய படகு ஓன்றை கடலில் இறக்க உத்தரவு பிறப்பித்திருந்தான். அவனது குறைபாடு மிக்க கண்களுக்கு கல்லறைதீவு தென்பட தொடங்கியிருந்தது. அவன் அங்கேயே இறந்து போயிருந்தால் அவன் இறந்த இடத்தில் இந்நேரத்திற்கு புல் முளைத்திருக்க வேண்டும். கடவுளின் அருளால் அவன் தப்பி பிழைத்து விட்டான். அங்கே தான் அவன் நஞ்சுண்டனின் கதையை முடித்துவிட திட்டமிட்டிருந்தான். கருணாகரனும் நன்சுண்டனும் குள்ள நரி தனமாக கூட்டணி போட்டு அவனை கவிழ்க்க திட்டமிட்டதை அவனால் நம்பவே முடியவில்லை.
கண்களை மூடினால் கழுத்திற்கு மேலே உள்ள தலை பறிபோய்விடும் அபாய நிலையிலேயே தன்னுடைய நாட்கள் நகர்ந்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான் நல்ல வேளையாக அந்த சிறுவன் தெய்வம் போல் வந்து கருணாகரனிடமிருந்து தன்னை காப்பாற்றி விட்டான். மீதமுள்ள அவனது ஆட்கள் மூவரையும் சமாளித்தாக வேண்டும். இல்லையென்றால் நஞ்சுண்டனுடன் கல்லறை தீவிற்கு சென்றவுடன் அந்த மூவரும் கப்பலை கைப்பற்றி விடக் கூடும்.
பிறகு நீலன் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டியதுதான் என்று நினைத்தவன் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான். அவனையே பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தான் ஆதி.
" எதைப் பற்றி இவ்வளவு நேரம் யோசித்து கொண்டிருக்கிறீர்கள்?"
"நான் நஞ்சுண்டனின் கதையை கல்லறைதீவில் முடித்துவிட தீர்மானம் செய்திருக்கிறேன். நான் அவனை அங்கே அழைத்து செல்லும் போது நீ பார்த்த அந்த மூன்று நபர்கள் இந்த கப்பலை கைப்பற்றி விடுவார்களோ என்று கவலையாக இருக்கிறது."
"எதற்காக கவலைப்படுகிறீர்கள்? அந்த மூன்று பேரையும் நஞ்சுண்டனுக்கு உதவியாக கல்லறைதீவிற்கே அனுப்பி வைத்துவிடுங்கள்" என்றான் ஆதி.
ஆதியை வியப்புடன் பார்த்தான் நீலன் இந்த யோசனை தனக்கு ஏன் தோன்றவில்லை என்று தன்னையே நொந்து கொண்டான் அவன்.
"நல்ல யோசனை.நீ அந்த மூன்று நபர்களை அடையாளம் காட்டு. அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான் நீலன்.
அதே நேரம் அறை கதவு தட்டப்பட்டது.
"யாரது?உள்ளே வாருங்கள்" என்றான் நீலன்.
உள்ளே நுழைந்தான் பூபதி.
"யாரப் பா நீ?" என்றான் நீலன்
"நான் கருணாகரனின் ஆள். காலையிலிருந்து அவனை தேடிக் கொண்டிருக்கிறேன். அவனை காணவில்லை. கப்பல் முழுக்க தேடிப் பார்த்து விட்டேன். ஆள் அகப்படவில்லை. எங்கே அவன்?" என்றான் பூபதி.
ஆதி நீலனுக்கு கண்ணால் சைகை காட்டினான். அந்த மூவரில் ஓருவன் இவன் தான் என்பதை புரிந்து கொண்ட நீலன்" அவனுக்கு நேற்று இரவிலிருந்து உடல் நிலை சரியில்லை. மருந்து கொடுத்து உள்ளே படுக்க வைத்திருக்கிறேன்" என்று உள் அறையை காட்டினான்.
"கருணாகரா! என்னாயிற்று உனக்கு? " என்றபடி அறை கதவை திறந்தான் பூபதி. அதே நேரம் இடியென ஒரு அடி அவன் தலையில் இறங்கியது. அப்படியே மயங்கி சரிந்தான் அவன். அவனை தூக்கி அறையின் மூலையில் போட்டான் நீலன்.
அறையிலிருந்து வெளியேறிய ஆதி" மீதமுள்ள இருவரையும் இங்கே அனுப்பி வைக்கிறேன். இதே உபச்சாரம் அவர்களுக்கும் நடந்தேறட்டும்" என்றான்.
கப்பலின் மேல் தளத்தில் இருவரையும் அடையாளம் கண்டு விட்ட ஆதி இருவரையும் தனித்தனியாக அணுகி கப்பல் தலைவர் உங்களை பார்க்க விரும்புகிறார் " என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
அறையில் தடியோடு தயாராக நின்று கொண்டிருந்தான் நீலன்.கதவை திறந்தவனின் தலையில் இடி இறங்கியது. இருவரையும் தாக்கி நினைவிழக்கச் செய்தான் நீலன்.
நான்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஆதி நான்கு பேரை ஞாபக மறதியாக மூன்று பேர் என்று சொல்லிவிட்டானோ என்று நினைத்த நீலன் கதவை திறந்துவிட்டு விட்டு நுழைந்தவனின் தலையில் தடியை இறக்கினான்.
அவனது தடியை வலியகரம் ஓன்று தடுத்து நிறுத்தியது.
அந்த கரங்கள் யவனனுக்கு சொந்தமானவை.
" வரவேற்பு பலமாக இருக்கிறதே நண்பா " என்றான் யவனன்.
" மன்னித்து விடு நண்பா. சில ஒற்றர்கள் நம் கப்பலில் ஊடுருவி விட்டார்கள். அவர்களை களையெடுத்து கொண்டிருந்தேன்"
"உனக்கு என்னுடைய உதவி ஏதாவது தேவைப்படுகிறதா?" என்றான் யவனன் புன்சிரிப்புடன்.
"ஆமாம். உள் அறையில் சில நண்பர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை சிறிய படகிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் நான் திரும்ப வரும் வரை இந்த கப்பலை நீ பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த சிறுவன் நம்பகமானவன்.இவன் உனக்கு உதவி செய்வான்."
"அந்த நஞ்சுண்டன்?"
" அவனுக்கு உன்னிடமிருந்து நிரந்தரமாக விடுதலை தரப் போகிறேன்" என்று கண்ணடித்தான் நீலன்.
மயங்கி கிடந்த இருவரும், நஞ்சுண்டனும் சிறிய படகில் இறக்கப்பட்டனர். முத்தழகியின் நங்கூரம் இறக்கப்பட்டது. நீலன் சிறிய படகின் துடுப்பை போட்டு அதை கல்லறைதீவை நோக்கி செலுத்தினான்.
நடப்பவற்றையெல்லாம் தொலைநோக்கி மூலமாக கவனித்து கொண்டிருந்தான் தர்மபாலன். நீலனின் நடவடிக்கைகள் அவனுக்கு புதிராக இருந்தன. கருணாகரன் எங்கே போய் தொலைந்தான் என்று மனதிற்குள் குமைந்தான் தர்மபாலன் கடலில் ஏதோ மிதந்து கொண்டிருப்பதை பார்த்தன அவன் கண்கள்.
அது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த கருணாகரனின் பிரேதம். அதைப் பார்த்த தர்மபாலன் அதிர்ச்சியின் உச்சிக்கு போனான். கருணாகரனை அந்த நீலன் தான் கொன்று கடலில் வீசியிருக்க வேண்டும் என்று நினைத்தான் அவன். இதற்கு கண்டிப்பாக பழி வாங்கியாக வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டான் அவன்.
தன்னை எதற்காக மீண்டும் கல்லறை தீவிற்கு திரும்ப கூட்டி வருகிறான் என்று நஞ்சுண்டனுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது. தன்னை பழிக்கு பழி வாங்க நினைக்கும் நீலனின் நோக்கம் அவனுக்கு புரிந்தது.கருணாகரன் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டான் என்பது தான் அவனுக்கு புரியவில்லை. ஓரு வேளை இருவரும் வேறு ஏதாவது உடன்படிக்கையில் சமாதானமாகி தன்னை நட்டாற்றில் விட்டு விட்டார்களோ என்று அவனுக்கு தோன்றியது.
படகில் தன்னுடன் வரும் மூவர் யார்? எதற்காக அவர்களை நீலன் இங்கே தூக்கி வருகிறான் என்று அவனுக்கு புரியவில்லை.
தீவில் அவனை இறக்கி விட்ட நீலன் மற்ற இருவரையும் வந்து தரையில் கிடத்தினான்.
" என்ன பார்க்கிறாய்? இவர்களும் உன் போன்ற துரோகிகள் தான். உனக்கு உதவி செய்ய கருணாகரன் உயிரோடு இல்லை. இவர்கள் அவனது ஆட்கள் .நீங்கள் நால்வரும் இங்கேயே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நான் கட்டுமரம் செய்து தப்ப இங்கே மரங்கள் இருந்தன. அதிர்ஷ்டமும் என் பக்கம் இருந்தது. மரங்கள் பெரிதாகும்வரை எப்படியாவது உயிரை காப்பாற்றி கொண்டால் நீயும் என்னை போல் உயிரோடு தப்பி விடலாம். நான் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் தனிமையில் அவதிப்பட்டேன். ஆனால் நீ அதிர்ஷ்டகாரன். உன் பேச்சு துணைக்கு இந்த இருவர்அகப்பட்டிருக்கிறார்கள். உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உயிரோடு இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்ற நீலன் அங்கிருந்து சிறிய படகில் தன்னுடைய கப்பலை நோக்கி கிளம்பினான்.
அதை தொலைநோக்கியில் பார்த்து கொண்டிருந்தான் தர்மபாலன். நீலன் தனக்கு ஆகாதவர்களை அங்கே இறக்கிவிட்டு விட்டான் என்பதை உணர்ந்தவன் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
"கப்பலை கல்லறைதீவை நோக்கி செலுத்து " என்று உத்தரவிட்டான் தர்மபாலன்.அவனது கப்பல் கல்லறை தீவை நோக்கி திரும்பியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக