அத்தியாயம் 70
எத்தனின் மரணம்
கருணாகரனின் வலதுகரமான பூபதி கப்பலை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தான். அங்கே நின்று கொண்டிருந்த ஏராளமான ஆட்களில் இருவரை மட்டும் அவன் எங்கோ பார்த்தது போல் உணர்ந்தான். அந்த முகங்கள் அவனுக்கு பரிச்சயமான முகங்களாக தோன்றின. எங்கே என்று தன்னுடைய மூளையை அவன் கசக்கி கொண்டான்.
அவர்கள் இருவரும் தர்மபாலனால் நீலனின் கப்பலுக்கு வேலை ஆட்களாக அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றர்கள். அவர்களுக்கும் பூபதியை நன்றாக தெரியும். அவர்களும் அதே குழப்பத்தில் தான் இருந்தனர்.கருணாகரன் தன்னுடைய அடையாளங்களை வெகு ரகசியமாக வைத்து கொண்டு வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வேடங்களில் செயல்பட்டு கொண்டிருந்ததால் அவனும் நாட்டின் ஒற்றன் என்பதை அவர்கள் அறிந்தி ருக்கவில்லை.
வள நாட்டின் ஓற்றர்களுக்கான பிரத்யேக சமிக்ஞையை அவர்களுக்கு காட்டி தன்னை வெளிகாட்டி கொண்டான் பூபதி. அவர்களின் பதில் சமிக்ஞையில் திருப்தியடைந்தவன் தனியான இடத்தில் அவர்களை அழைத்து சென்று பேச்சை துவக்கினான்.
"நீங்கள் வள நாட்டின் ஒற்றன் தானே?" என்றான் இருவரில் ஒருவன் பூபதியை பார்த்து.
"ஆம். உங்கள் இருவரையும் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்."
" நாங்களும் உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாங்களும் வள நாட்டின் ஒற்றர்கள் தான் "
" நல்லது. இங்கே எதற்காக வந்திருக்கிறீர்கள்?"
"கப்பல் தலைவன் தர்மபாலன் எங்களை இங்கே வேலையாட்களாக அனுப்பி வைத்திருக்கிறான்."
"நோக்கம் ?"
" கப்பலில் இருக்கும் புதையலுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் வள நாட்டிற்கு கொண்டு சேர்ப்பது "
" என்னுடைய நோக்கமும் அதேதான்.கருணாகரனின் லட்சியமும் அதே தான் "
" கருணாகரனும் வள நாட்டின் ஒற்றனா?"
"இது வரை நீ அறியாத செய்தியா அது "
"ஆம். இது புது செய்தி "
"நாளை காலை கப்பலில் கடும் பூசல் ஏற்படப் போகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டு கப்பலை நம் வசப்படுத்த வேண்டும்"
" நாளை காலை பூசலா? யாருக்கு இடையில் ? எங்களுக்கு எதுவும் புரியவில்லை"
"புரியும் படியாகவே சொல்கிறேன். நாளை காலை நீலன் நஞ்சுண்டனை கொல்ல போகிறான். ஏனென்றால் கருணாகரனுக்கு நஞ்சுண்டன் தேவை.நீலனை கழற்றி விட்டு விட்டு அந்த இடத்தில் நஞ்சுண்டனை நியமிக்க அவன் விரும்புகிறான். அதனால் அவன் நஞ்சுண்டன் கொல்லப்படுவதை விரும்ப மாட்டான். அதை இடையிட்டு தடுப்பான். நீலனின் ஆட்கள் வேலை அனுபவம் இல்லாத புது ஆட்கள் . பணத்திற்காக ஆசைப்பட்டு வேலைக்கு வந்தவர். நம்முடைய மிரட்டலுக்கு எளிதில் பணிந்து விடுவார்கள். நீலனை கொன்று விட்டால் இந்த கப்பல் நம் வசம் வந்துவிடும்.கருணாகரனுக்கு உதவியாக நாம் காரியமாற்ற வேண்டும். நாளைய விடியல் நம்முடையதாக இருக்க வேண்டும்" என்றான் பூபதி.
"நிச்சயம். நீங்கள் நடப்பது நடக்கும் " என்றனர் இருவரும் .
" வாருங்கள். நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியாதவர்களைப் போல் நடந்து கொள்வோம்" என்றான் பூபதி.
அவர்கள் இருளில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சதியில் ஈடுபட்டிருந்த மூவருக்கும் நான்காவதாக ஒரு நபர் அவற்றை கேட்டு கொண்டிருந்தது தெரியாது.
அந்த நான்காவது நபர் ஆதி.கருணாகரனின் கண்ணில் படாமல் மறைந்திருந்த ஆதி தான் மூவரும் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவன். அவனுக்கு நீலனின் பரிதாபமான முகம் நினைவுக் கு வந்தது.
தன்னிடம் அன்பு காட்டிய அந்த ஜீவன் நாளை கொல்லப்படபோகிறான் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை.
இந்த பாவி கருணாகரன் இன்னும் எத்தனை பேரை பலிகொள்ள போகிறானோ என்று குமுறியது அவனது உள்ளம்.
நள்ளிரவு .
கப்பலில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவரவர் கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். நிலவும் வானும் தங்களை ரசிப்பதற்கு யாரும் இல்லாமல் தங்கள் யவனத்தை வீணடித்து கொண்டிருந்தன.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கருணாகரனின் அறை கதவு தட்டப்பட்டது.யார் இந்த நேரத்தில் கதவை தட்டுவது என்ற யோசனையோடு கண்களை கசக்கியபடி எழுந்தான் கருணாகரன்" யார் அது?" என்றான் அவன்.
அவனது கேள்விக்கு எந்த பதிலும் வரவில்லை. அதற்கு பதிலாக கதவு மேலும் பலமாக தட்டப்பட்டது.
கருணாகரன் கடும் எரிச்சலுடன் கதவை திறந்தான். திறந்தவுடன் அவனது நெஞ்சில் ஓரு கத்தி மின்னலாக பாய்ந்தது. அதை கருணாகரன் எதிர்பார்க்கவில்லை. நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கீழே விழுந்தான் அவன். சில நொடி தாமதத்திற்கு பிறகு தீப்பந்தத்துடன் உள்ளே நுழைந்தான் ஆதி. அவனது இன்னொரு கையில் வாள் ஒன்று மின்னியது.
"யார் நீ?" என்றான் கருணாகரன்தீனமான குரலில்.
"என்னை அடையாளம் தெரியவில்லையா? நீ அணைக்க மறந்த நெருப்பின் கடைசி துளி. உன்னை எரிக்க இப்போது வந்திருக்கிறது"
அவனுக்கு இப்போது அடையாளம் விளங்கியது.
"நீ அந்த காட்டுவாசிபயல் தானே?" என்றான் கருணாகரன் வலியோடு.
"ஆம். நீ கொன்றொழித்த இனத்தின் கடைசி மிச்சம் நான்.வாய் பேச முடியாதவனாக நடித்து இத்தனை நாள் என் உயிரை உன்னிடமிருந்து காப்பாற்றி கொண்டேன். அந்த பேசா மடந்தை நடிப்பெல்லாம் உனக்காகத்தான். செத்து ஓழி கயவனே" என்ற ஆதி அவனது நெஞ்சில் வாளைபாய்ச்சினான்.
"வேண்டாம். என்னை கொன்று விடாதே" என்ற கருணாகரனின் கடைசி குரல் காற்றில் கலந்தது.
கருணாகரனின் தலை சாய்ந்தது. எல்லோரையும் ஏமாற்றி கொண்டிருந்த எத்தனின் வாழ்வு ஓரு சிறுவனின் கையால் முடிவுக்கு வந்தது.
கருணாகரன் இறந்து போனதை உறுதி செய்து கொண்ட ஆதி வெளியே செல்ல திரும்பினான். வாயிற் படியில் கைகளை கட்டி கொண்டு நின்றான் நீலன்
ஆதி அவனைப் பார்த்து திடுக்கிட்டான் நீலனை இந்த இடத்தில் அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் வாய் பேச இயலாதவனாக நடிப்பதை மறந்து தன்னிச்சையாக "நீங்களா?" என்றான்.
"பயப்படாதே தம்பி. நள்ளிரவில் எனக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து பார்த்த போது உன்னை காணவில்லை. நீ அறையிலிருந்து வெளியேறுவதை கவனித்து உன்னை பின் தொடர்ந்து வந்தேன். இங்கே நடந்தவற்றை நான் கவனித்து கொண்டு தான் இருந்தேன்.இவன் உனக்கு எதிரியா?" என்றான் நீலன் நிதானமாக .
"ஆம். என் இனத்தை அழித்தவன். இவனைக் கொல்லத்தான் இத்தனை நாட்களாக நான் உயிர் பிழைத்து கிடந்தேன்.என் கடமை முடிந்தது "
" இவனை கொன்றதற்காக வருந்தாதே ! இவன் ஓன்றும் அவ்வளவு நல்லவன் கிடையாது. இவன் பூமியில் வாழத் தகுதி இல்லாதவன். எமனை ஏமாற்றி இத்தனை நாட்களாக உயிர் பிழைத்து கிடந்தவன். உன் கையால் இவனது உயிர்போகவேண்டும் என்பது தான் விதி. எனக்கு வந்த இடையூறை தீர்த்து விட்டாய்"
"நான் இவனை கொல்லாவிட்டால் இவன் உங்களை கொன்று விட்டிருப்பான். உங்கள்இடத்தில் நஞ்சுண்டனை நியமிக்க வேண்டும் என்பது இவனது திட்டம். நான் இவனை கொல்ல அந்த திட்டமும் ஒரு காரணம் "
" நல்லது செய்தாய். அறையில் அடைபட்டு கிடக்கும் அந்த நச்சுப் பாம்பை பிறகு கவனித்து கொள்வோம்.இவன் ஒழிந்தது நல்லது.இவனது உடலை பிடி. கடலில் வீசி விடலாம்."
"இவனது கூட்டாளிகள் இன்னும் மூவர் இருக்கிறார்கள். அவர்கள் இவனை தேடுவார்கள். அவர்களும் இவனுக்கு உடந்தையாக செயல்படுகிறவர்கள் தான் "
"அவர்களை உனக்கு அடையாளம் தெரியுமா?" என்றான் பரபரப்புடன் நீலன்.கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போல் தன் உயிரை பறிக்க எத்தனை பேர் கிளம்பியிருக்கி றார்கள் என்று அவனுக்கு அயர்ச்சியாக இருந்தது.
"அவர்களை எனக்கு அடையாளம் தெரியும். அவர்கள் வள நாட்டின் உளவாளிகளும் கூட " என்ற ஆதி தான் பார்த்த காட்சிகளை விவரித்தான்.
அவன் சொல்வதை கவனமாக கேட்டான் நீலன்.
"கடவுளாகப் பார்த்து உன்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறான். நீ மட்டும் இல்லையென்றால் காலையில் என் உயிர் பறி போயிருக்கும். அந்த சதிகாரர்களை எனக்கு அடையாளம் காட்டு. அவர்களை என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் " என்றான் நீலன்.
"இப்போதாவது உன்னுடைய உண்மையான பெயரை சொல் " என்றான் நீலன்
"ஆதி "
" நல்லது. இவனை தூக்க எனக்கு ஒத்தாசை செய் இவன் உடலை கடலில் வீசி விடுவோம்" என்றான் நீலன்.ஆதி அவனுக்கு உதவி செய்தான். கருணாகரனின் உடலை தோளில் தூக்கி போட்டு கொண்ட நீலன்" உன் உடைகளில் இவனது ரத்தம் பட்டிருக்கிறது பார். போய் உடை மாற்றிக் கொண்டு உறங்கு. நான் விரைவில் வருகிறேன்" என்றான் நீலன்.
ஆதி நீலனின் அறைக்கு திரும்பினான்.
அடுத்த சில நிமிடங்களில் கருணாகரனின் உடல் கடலில் வீசப்பட்டது. பலரை ஏமாற்றிய எத்தனின் மரணம் பரிதாபகரமாக நிகழ்ந்து முடிந்தது.
" எல்லாம் கூடிவரும் நேரத்தில் அதிர்ஷ்டம் அவனை கைவிட்டுவிட்டது" என்று முணுமுணுத்தான் நீலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக