வெள்ளி, 30 டிசம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 78

இரண்டு கப்பல்கள்

தனக்கு எதிராக களத்தில் இத்தனை குழப்பங்கள் நேரும் என்பதையோ தான் போரில் தோற்று ஓடி வருவோம் என்பதையோ மதிமாறன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதை விடவும் மிகப் பெரிய இடியை தந்தது ரத்னாவதியின் சிறைச்சாலைக்கு செல்வோமா என்ற வினோத பேச்சு.

தன்னுடைய பலவீனமான நேரத்தை பயன்படுத்தி கொண்டு தன்னை பழி வாங்க நினைக்கிறாளோ ரத்னாவதி என்ற அவநம்பிக்கையான எண்ணம் அவனுக்குள் எழுந்தது. அதே நேரம் தயாநிதியின் மகளாக அவளை நடிக்க வைப்பதன் மூலம் அவன் அடையப் போகும் சகாயங்களை அவள் மறந்திருக்க மாட்டாள் என்றும் அவனுக்கு தோன்றியது. நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இரண்டு எதிரெதிர் உணர்ச்சிகளுக்கு நடுவே திண்டாடிக் கொண்டிருந்தான் அவன்.

" என்ன அன்பரே ! சிறைசாலைக்கு செல்வோம் என்று சொன்னதும் பயந்து விட்டீர்களா?" என்றாள் ரத்னாவதி மென்மையான சிரிப்புடன்.

"நான் ஏன் பயப்பட வேண்டும்? அங்கே தான் யாருமே இல்லையே?" என்றான் மதி மாறன் தன்னுடைய அவநம்பிக்கையை மறைத்து கொண்டவனாக.

"அங்கே இருந்த கைதிகளை நான் தான் விடுவிக்க சொன்னேன். ஏன் என்று தெரியுமா?"

"நம் படைபலத்தை பெருக்க "

"அது உங்களுக்கு தெரிந்த காரணம். எனக்கு தெரிந்த காரணம் இன்னொன்று இருக்கிறது"

" என்னவென்று சொல். உன்னுடைய புதிர் பேச்சு எனக்கு விளங்கவில்லை" என்றான் மதி மாறன் குழப்பத்துடன் .

"அந்த சிறைச்சாலையில் அடைபட்டிருந்த நீலன் அங்கிருந்து எப்படி தப்பிச் சென்றான் என்று உங்களுக்கு தெரியுமா?"

" அவன் எப்படி தப்பிச் சென்றான் என்று எனக்கு தெரியாது. நீதான் அவன் சுரங்க வழி ஏதாவதொன்றில் தப்பி சென்றிருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தாய்."

"ஆம். அந்த வழியை நான் கண்டுபிடித்து விட்டேன். அந்த வழியில் தான் நாம் இருவரும் இப்போது இந்த தீவிலிருந்து தப்பி செல்ல போகிறோம்"

மதிமாறனின் இருதயம் அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.

" என்ன சொல்கிறாய் ரத்னாவதி? நீ சொல்வது உண்மையா? " என்ற மதிமாறனின் வார்த்தைகளில் வியப்பு மண்டி கிடந்தது.

"இன்னமும் என் மீது சந்தேகமா அன்பரே.? கட்டிட வரைபடங்களை பார்த்து நான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விசயம்தான் அந்த ரகசிய வழி. அந்த சிறைச்சாலை தான் ரகசிய வழியின் தலைவாசல் .அங்கிருந்து புறப்படும் சுரங்கப்பாதை வெவ்வேறு பாதைகளாக பிரிகிறது. அவை நாட்டின் வெவ்வேறு இடங்களில் முடிவடைகிறது. அரண்மனையில் சுரங்கம் இருப்பது தான் வழக்கம். ஆனால் அந்த வழக்கத்திற்கு விரோதமாக இங்கே சிறைச்சாலையிலிருந்து சுரங்கம் ஆரம்பமாகிறது. எதிரிகளை ஏமாற்ற இப்படி ஒரு மாற்றத்தை இங்கே நமக்கு முன்னால் இருந்தவர்கள் செய்திருக்கலாம். அதில் ஒரு வழி கடலுக்கு அருகே சென்று முடிகிறது. அந்த வழியில் தான் நாம் பயணிக்க போகிறோம்"

"நாம் அந்த வழியில் கடலை சென்றடைந்து விடலாம். ஆனால் கப்பல் இல்லாமல் இந்த தீவிலிருந்து எப்படி வெளியேற முடியும்? நாம் போரில் தோற்ற செய்தி இப்போது தீவு முழுக்க பரவி இருக்கும். யார் நமக்கு கப்பலை தந்து உதவுவார்கள்?"

"நான் நேற்று இரவே ஒரு கப்பலை விலைக்கு வாங்கி கடலோரத்தில் யாரும் கவனிக்காத இடத்தில் அதை நிறுத்தி வைத்திருக்கிறேன். அதற்கு நம் ஆட்களையும் காவல் வைத்து விட்டேன். மிகத் திறமையான ஒரு மாலுமியையும் அதில் வேலை செய்ய நியமித்தி ருக்கிறேன். மாளிகையில் இருந்த சொற்ப பொக்கிசங்களையும் கப்பலுக்கு கொண்டு சென்று விட்டேன்."

" நல்லது செய்தாய் ரத்னாவதி . பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அவர்கள் உன் செயல்திறம் அறியாதவர்கள்.வா உடனே இங்கிருந்து கிளம்புவோம்" என்றான் மதி மாறன் .

இருவரும் அங்கிருந்து சிறைச்சாலைக்கு பயணமாகினர். காலியாக இருந்த சிறைசாலையில் அவர்களை தடுக்க யாருமே இல்லை. சிறை கூடத்திற்குள் சென்ற ரத்னாவதி சிறிது நேரதடுமாற்றத்திற்கு பிறகு ரகசிய வழியின் தலைவாயிலைக் கண்டு பிடித்து விட்டாள்.

இருவரும் ஆளுக்கொரு தீவட்டியை தயார் செய்து கொண்டு அந்த சுரங்க வழியில் பயணிக்க தொடங்கினர்.

அவர்களுக்காக ஒரு கப்பல் காத்திருந்தது.

அங்கே போர் களத்தில் !

மதிமாறன் கண்காணாது மறைந்து விட்டதால் வழி நடத்த தலைவன் இல்லாத படை தடுமாற ஆரம்பித்தது. புதிய தளபதிகள் இருவரும் முன் அனுபவம் இல்லாமல் குழப்பமடைய ஆரம்பித்தனர்.

மெல்ல மெல்ல பார்த்திபனின் கை ஓங்க ஆரம்பித்தது. சற்று நேரத்திலேயே மதிமாறனின் படைகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய ஆரம்பித்தன. மிகவும் குறுகிய நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்து விட்டது. நிலவரம் தங்களுக்கு சாதகமாக மாறுவதை கவனித்து கொண்டிருந்த பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆதித்தனை கட்டி கொண்டான்.

"நாம் வென்று விட்டோம் நண்பா." என்றான் சந்தோசமிகுதியில் பார்த்திபன்.

"இனி தான் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனிமேல் நீ பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உன்னுடைய ஓவ்வொரு முடிவிலும், அறிவிப்பிலும் ஆயிரக்கணக்கான மக்களின் தலைவிதி கலந்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே!" என்று அவனது பொறுப்புகளையும், கடமையையும் நினைவுபடுத்தி எச்சரித்தான் ஆதித்தன்.

" உன் அறிவுரையை மறக்கவே மாட்டேன் நண்பா. எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்"

"ஆமாம். படைகளை நிர்கதியாக விட்டு சென்ற மதிமாறன் எங்கே தான் போயிருப்பான்?"

"நிச்சயம் நம்முடைய அதிகாரத்திற்கு வந்து விட்ட இந்த தீவில் இருக்க விரும்ப மாட்டான் "

"உண்மை. அவன் தன் தவறை மறைத்து நியாயப்படுத்த தயாநிதியை சந்திக்க கிளம்பியிருக்க வேண்டும். அவனுக்கு முன்னால் நான் தயாநிதியை சந்தித்தாக வேண்டும். அப்போதுதான் உன் பதவி நீடிக்கும். நான் வாக்கு கொடுத்த படி உன்னை போரில் வெல்ல வைத்து விட்டேன். இத்தோடு என் வேலை முடிந்தது. நான் இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது."

" என்ன சொல்கிறாய் நண்பா! என்னிடம் எதுவும் இல்லாத போது என்னுடன் இருந்தாய். இன்று எல்லாமும் இருக்கும் போது என்னை விட்டு போகிறேன் என்று சொல்கிறாயே? இது நியாயமா?"

"கஷ்டத்தில் இருக்கும் போது உதவுகிறவன் தானே நண்பன். நான் உன் நண்பன் பார்த்தி பா.உ ன் பிரச்சனையை நான் தீர்த்து வைத்து விட்டேன். இனி இங்கே எனக்கு வேலையில்லை. எல்லாவற்றையும் பொறுப்புடன் பார்த்து கொள். நான் இங்கிருந்து கிளம்புகிறேன்"

"உன்னை பிரிய எனக்கு மனமில்லை நண்பா. ஆனால் வேறு வழியில்லை. இறைவன் விரும்பினால் சூழ்நிலைகள் சம்மதித்தால் நாம் விரைவில் சந்திப்போம். ஆமாம் இங்கிருந்து மோகினி தீவிற்கு எப்படி பயணமாகப் போகிறாய்?"

" என்னுடைய கழுகில்தான்."

"அதை இயக்க ஆட்கள் தேவையா?"

"இல்லை. வேண்டாம். நான் பார்த்து கொள்கிறேன்"

ஆதித்தன் பார்த்திபனிடமிருந்து விடைபெற்று கொண்டு கிளம்பினான். கலை கூத்தாடிகள் அவனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

" என்னுடைய பொம்மலாட்டகலை ஒரு போருக்கு பயன்பட முடியும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் உங்களின் மதியுகம் அதை சாத்தியமாக்கிவிட்டது. என் கலை மீதான பெருமிதம் நான் சாகும் வரை என்னை விட்டு போகாது" என்று கைகூப்பி நெக்குருகினான் சாத்தன்.

" எதை எப்படி எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நண்பா கலையின் கற்று கொண்டதன் பெருமை இருக்கிறது" என்ற ஆதித்தன் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று கிளம்பினான்.

தீவின் வெவ்வேறு திசைகளிலிருந்து இரண்டு படகுகள் கிளம்பின. ஓன்றில் மதிமாறனும், ரத்னாவதியும் இருந்தனர். அவர்களின் இலக்கு மலைநாடு. மற்றொரு கப்பலில் இருந்தவன் ஆதித்தன். அவனது இலக்கு மோகினி தீவு.

தர்மபாலன் மோகினி தீவின் துறைமுகத்தில் காத்திருந்தான். அவன் சிந்தனையில் மூழ்கி கிடப்பதை பார்த்த அவனது உதவியாளன் தன் தொண்டையை செருமினான்.

அவனது சத்தம் கேட்டு நிமிர்ந்த தர்மபாலன்" என்ன?" என்றான்.

"நாம் ஏன் மோகினி தீவிற்குள் செல்லாமல் இங்கே காத்து கொண்டிருக்கிறோம்?" என்றான் அவன்.

"நீலனின் வருகைக்காக காத்திருக்கிறோம்"

"ஆதித்தன் வராமல் நீலன் இங்கிருந்து கிளம்ப மாட்டான் "

"அது எனக்குதெரியும் "

"ஆதித்தனை நாம் பணயக் கைதியாக பிடித்து வைத்து கொண்டு நீலனை பொக்கிசங்களை ஒப்படைக்க சொல்லி மிரட்டினால் என்ன?"

தர்மபாலனின்புருவங்கள் முடிச்சிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக