அத்தியாயம் 64
வட்டம்
வில்லவனின் குரலை அடையாளம் கண்டுகொண்ட ஆதி தன்னை வெளிப்படுத்தி கொள்ள வாய் திறந்து கத்த நினைத்தான்.அந்தோ பரிதாபம்! அதிர்ஷ்டம் அவனுக்கு துணை புரியவில்லை. அவனை கடத்தி வந்த ஆசாமிகள் அவன் கத்தி ஊரை கூட்டி விடக் கூடாது என்று நினைத்து அவன் வாயில் துணியை வைத்து அடைத்திருந்தனர். அதனால் கத்த நினைத்த ஆதியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
வில்லவன் ஆதியை அந்த ஆசாமிகளிடம் ஒப்படைத்து விட்டு கடற்கரையை நோக்கி யவனனுடன் நடக்க துவங்கினான்.
கடத்தி வந்த ஆசாமிகளில் ஒருவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்."நல்ல வேளை. இந்த பயலின் வாயில் துணியை வைத்து அடைத்தோம். இல்லையென்றால் இவன் கத்தி நம்மை சிக்கலில் சிக்க வைத்திருப்பான் " இருவருக்கும் ஆதியின் எஜமானன் வில்லவன் என்று தெரியும். ஆனால் இருட்டில் தங்கள் மீது மோதியது அவன் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
" பயலுக்கு மயக்கம் தெளிந்து விட்டது போல் தெரிகிறது. அவன் தலையில் மீண்டும் ஒரு போடு போட்டு அவனை மயக்கத்தில் ஆழ்த்து. இவனை கிடைத்த விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை ஆளுக்கு பாதியாகப் பிரித்து கொள்வோம்" என்றான் இன்னொருவன்.
ஆதியின் தலையில் ஏதோ ஒரு இடி இறங்கியது போல் இருந்தது. அந்த கார இருட்டு அவனைச் சூழ்ந்தது. மீண்டும் மயங்கி சரிந்தான் அவன். அவர்கள் அவனை தூக்கி கொண்டு நடக்க துவங்கினார்கள்.
கடற்கரையை அடைந்த வில்லவன் அங்கே தன்னுடைய ஆட்கள் படகுகளை தயாராக வைத்திருப்பதை பார்த்தான். அவனது வருகையை பார்த்த ஆட்கள் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
"நண்பர்களே! அனைவரும் தயார் தானே?"
தயாராகத்தான் இருக்கிறோம்." என்றது கோரசாக கும்பல் .
" நல்லது. இது நமக்கு வாழ்வா சாவா போராட்டம். நம்முடைய நீண்ட நாள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதற்கு ஆணி வேரான விசயத்தைத் தான் நாம் இப்போது செய்ய போகிறோம். தொலைதூரத்தில் நிற்கும் கப்பலில் நமக்கு தேவையான ஆயுதங்கள் காத்திருக்கின்றன. அவற்றை கரைக்கு கொண்டு வந்து நம் ஆட்களிடம் வினியோகித்து விட்டால் போதும். பிறகு நடப்பதெல்லாம் நல்லவையே "
"ஆயுதங்களை கொண்டு வர நாங்கள் தயார்."
"அப்படியானால் நாம் முத்தழகி கப்பலை நோக்கி கிளம்புவோம்" என்றான் வில்லவன்.
சிறிய ரக படகுகள் கரையிலிருந்து கிளம்பின. அவற்றில் ஓன்றில் தாவி ஏறிக் கொண்டனர் யவனனும் வில்லவனும்.
அதே நேரம் நீலன் துறைமுகத்தில் நின்ற சாரட் வண்டியிலிருந்து இறங்கி நடந்தான். வண்டியின் உள்ளே கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தான் நஞ்சுண்டன் .
தனக்காக ஆட்களை தேடிக் கொடுத்த வணிக நண்பனின் வணிக தலத்தை நோக்கி நடந்தான் நீலன்.
அவனைப் பார்த்ததும் அவனது வணிக நண்பனின் முகம் மலர்ந்தது.
"வாநீலா! உனக்காகத் தான் நான் காத்து கொண்டிருக்கிறேன். உன் கப்பலுக்கு இதுவரை இருபது ஆட்களை தேர்ந்தெடுத்து கப்பலுக்கு அனுப்பி விட்டேன். அவர்களுக்கான அச்சார தொகை, எனக்கான பணம் போக மீதி இருப்பவை இதோ" என்று நீலன் கொடுத்த பணத்தில் மீதி தொகையை நீட்டினான்.
"அதை நீயே வைத்து கொள் நண்பா.! உன் உதவிக்கு மிகவும் நன்றி.இந்த இருபது பேரில் எத்தனை பேர் கப்பல் வேலையில் அனுபவம் வாய்ந்தவர்கள்?"
" பத்து பேர் பழைய மாலுமிகள். ஐந்து பேர் எதையும் கற்று கொள்ள கூடியவர்கள். ஐந்து பேர் கடலுக்கு புதியவர்கள் "
"பரவாயில்லை. இவர்களை வைத்து நான் சமாளித்து கொள்கிறேன்" என்றான் நீலன்.
அதே நேரம் அவனுக்கு பின்புறமாக வந்து நின்றனர் இருவர் .அவர்களில் ஓருவனது தோளில் மயங்கி கிடந்தான் ஆதி.
"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் வணிக நண்பன்.
"இங்கே கப்பலில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டோம்"
"நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ஆனால் போதுமான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டோமே? இதோ இவர்தான் கப்பல் தலைவர் .இவருக்குத்தான் ஆட்கள் தேவை. நீங்கள் இவரிடம் பேசிப் பாருங்கள்"
நீலன் எதிரே நின்ற இருவரையும் கூர்ந்து பார்த்தான். பிறவி குடிகாரனான அவனால் அவர்களை எளிதாக இனம் கண்டு விட முடிந்தது.
"நீங்கள் இருவருமா கப்பல் வேலைக்கு வரப்போகிறீர்கள்? முன் அனுபவம் இருக்கிறதா?" என்றான் நீலன்.
ஆசாமிகளை பார்த்தால் கடும் உடல் உழைப்புக்கு அந்நியமானவர்கள் என்றது அவனது உள்ளுணர்வு .
"இல்லை தலைவரே ! கப்பலில் வேலைக்கு வரப்போவது நாங்கள் இல்லை. இதோ இந்த சிறுவன் "
"இவனா? மிகவும் சிறியவனாக இருக்கிறானே? இவன் உன்னுடைய மகனா?"
"இல்லை ஐயா! இவன் என்னுடைய மகன் இல்லை. என்னுடைய தங்கையின் மகன்.இவனுடைய தகப்பன் என் தங்கையை கைவிட்டு எங்கோ ஓடி விட்டான். பிரசவத்தில் என் தங்கையும் இறந்து விட்டாள். இவனை நான் தான் வளர்த்து வந்தேன். என் மீது மிகவும் பாசமாக இருப்பான். எனக்கு திருமணமாகி விட்டது. வாழ்க்கை பட்டு வந்த மனைவியோ என்னுடைய அன்பு பூரணமாக அவளுக்கே வேண்டும் என்கிறாள். இடையில் இவன் இருப்பதை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை. அதனால் சரியாக உணவு தராமல் கொடுமை செய்கிறாள்.இவன் ஏதாவது தொழிலை கற்று கொண்டு நாலு காசு சம்பாதித்தால் அந்த பணத்தின் பொருட்டாவது இவனை ஏற்றுக் கொள்வாள் என்று நினைக்கிறேன்" என்றான் அவன்.
பொருத்தமாக பொய் பேசும் தன்னுடைய சகாவை ஆச்சரியமாகப் பார்த்து கொண்டிருந்தான் அவனது நண்பன்
"இந்த சிறுவனின் பெயர் என்ன?" என்றான் நீலன்.
"இவனது பெயர் சிவபாதசேகரன்.சிவா என்று அழைப்போம்"
"இவன் ஏன் மயக்கமாக இருக்கிறான்?"
"சுயநினைவோடு இருந்தால் இவன் எங்களை பிரிய சம்மதிக்க மாட்டான். கத்தி கூப்பாடு போட்டு விடுவான். அதனால் மோரில் மருந்தை கலந்து கொடுத்து மயக்கமாக்கி இருக்கிறேன்"
" நல்லதுதான். தாய் தந்தை இல்லாத இவனை பார்க்கும் போது சின்ன வயதில் என்னையே பார்த்தது போல் இருக்கிறது. இந்த சிறுவனை நான் வேலைக்கு வைத்து கொள்கிறேன். இதோ இதற்கான அச்சாரம் " என்ற நீலன் ஐந்து தங்க நாணயங்களை அவர்களிடம் கொடுத்தான்.
"ஐயா. எங்களின் விலாசம் ... "
"தேவையில்லை. பையனோடு நான் திரும்ப இந்த தீவிற்கு வரும் போது அவனோடு வந்து உங்களை சந்திக்கிறேன்"
"'அதுவும் சரிதான். பையனை உங்களை நம்பி ஒப்படைக்கிறோம். கவனமாக பார்த்து கொள்ளுங்கள்" என்றான் அவன் நீலிக்கண்ணீரோடு .
"அவனைப் பற்றி நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம். இனி அவன் என் பொறுப்பு. அவனை நான் பத்திரமாக பார்த்து கொள்வேன்" என்றான் நீலன்.
"நன்றி ஐயா! நாங்கள் வருகிறோம்" என்ற இருவரும் காசை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
" இவனை விற்று விடலாம் என்று சொன்னாயே ?"
"இவனை விற்று விட்டால் நாளை நம்மை தேடி வந்து கொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. வந்தவரை லாபம் என்று காசை வாங்கி கொண்டு கிளம்புவது தான் லாபம் . நாளை அவன் நம்மை கண்டு பிடித்து விட்டால் கூட குடும்ப வறுமை என்று ஏதாவது ஒரு பொய்யை சொல்லி தப்பி விடலாம். புரிகிறதா?"
"புரிகிறது" என்றான் மற்றொருவன். இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
தரையில் கிடத்தப் பட்டிருந்த ஆதியை தூக்கி கொண்டு தன் நண்பனிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினான் நீலன்.
சாரட் வண்டியின் கதவு திறக்கப்பட்டு உள்ளே படுக்க வைக்கப்பட்டான் ஆதி.
வண்டியின் முன்புறம் ஏறிக் கொண்ட நீலன்" வண்டி துறைமுகத்தை நோக்கி விரையட்டும்" என்று வண்டியொட்டிக்கு உத்தரவு கொடுத்தான். வண்டி அங்கிருந்து கிளம்பியது.
தன் காலடியில் கிடத்தப்பட்டிருந்த ஆதியை பார்த்த நஞ்சுண்டன் திடுக்கிட்டான்.இவன் எப்படி இங்கே வந்தான்? என்று மனதில் எழுந்த கேள்வியை அவனால் வாய் திறந்து கேட்க முடியவில்லை. அவனது தொணதொணப்பை ரசிக்காத நீலன் அவனது வாயை துணியை வைத்து அடைத்திருந்தான்.
இவன் மட்டும் தன்னை நினைவிழக்கச் செய்யாமல் இருந்திருந்தால் தன் திட்டம் நிறைவேறி இருக்கும்.மதிமாறன் தன்னுடைய பேச்சை கேட்டு நீலனை கைதியாக்கியிருப்பான். இதே சாரட் வண்டியில் தான் இருக்கும் இடத்தில் அவன் இருந்திருப்பான்.அவன் இருக்க வேண்டிய இடத்தில் தான் இருந்திருப்போம் என்பதை நினைக்கும் போதே அவனதுரத்த ஓட்டம் ஏறியது.
தன்னுடைய இந்த நிலைமைக்கு இவன் தான் காரணம் என்பதால் ஆதியை கொலை வெறியோடு பார்த்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் . வண்டி கடற்கரையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அதே நேரம் மதிமாறனின் அரண்மனையில் ரத்னாவதி ரகசிய சுரங்க வழிகள் எங்கே இருக்கின்றன என்பதை கட்டிட வரைபடங்களின் மூலம் கண்டுபிடிக்க தொடங்கி இருந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக