வெள்ளி, 16 டிசம்பர், 2022

ரகசிய தீவு

Zரகசிய தீவு

அத்தியாயம் 72

சகுனியும், சாணக்கியனும்

ஆதித்தனின் பெயரை கேட்டதும் சிறிது நேரம் அயர்ந்து நின்றான் மதி மாறன் . அவனை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தான்மதிமாறன். அவன் கையில் எடுத்த எந்த காரியத்திலும் இதுவரை தோல்வியடைந்ததில்லை. அவன் காலடி வைத்த இடத்தில் எல்லாம் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவன் இங்கே காலடி எடுத்து வைத்திருக்கிறான்.

ஏற்கனவே பார்த்திபனுக்கு வளநாட்டின் உதவி கிடைத்திருக்கிறது. ஆயுதங்களும் போதுமான அளவு கையிருப்பு இருக்கின்றன. இவை போதாதென்று இவனுக்கு உதவி செய்ய எங்கிருந்தோ இந்த கள்வன் வேறு வந்து சேர்ந்து விட்டான். எந்த உதவியும் இல்லாமல் தான் தனித்து விடப்பட்டு இருப்பதாக மதிமாறனுக்கு தோன்றியது. அவனுக்கு இப்போது இருக்கும் ஒரே துணை ரத்னாவதி மட்டும் தான். வேறு வழியின்றி அவளுடைய ஆலோசனைகளை கேட்க தயாரானான் அவன்.

" ரத்னா வதி! நிலைமை நமக்கு சாதகமாக இல்லை. கலகத் தலைவனின் வலிமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நம் தரப்பு பலவீனமாக இருப்பது போல் தெரிகிறது. இப்போது நாம் என்ன செய்வது?" என்றான் மதி மாறன் ரத்னாவதியை பார்த்து.

அவளது இதழ்களில் ஒரு குறுநகை பூத்தது. இதுவரை அவளை பள்ளியறை பாவையாக நினைத்து காம களியாட்டங்களில் ஈடுபட்டு வந்த மதிமாறன் இப்போது அவளது மதியுகத்தை உணர்ந்து கொண்டு அவளிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு கீழே இறங்கி வந்து விட்டான்.

இவனை தன் கைப்பிடிக்குள் வைத்து கொண்டால் பொம்மலாட்டபொம்மை போல் அவனை இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கலாம் என்ற மகிழ்ச்சியில் விளைந்த புன்னகை அது.

"அந்த பார்த்திபனுக்கு நமக்கு நிகரான படை பலம் இருக்கிறதா?" என்று ஒரு கேள்வியை வீசினாள்.

"இது வரை அவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. நீலன் கொண்டு வந்த ஆயுதங்கள் அவனுக்கு கிடைத்த பின்பு கற்பனை செய்ய முடியாதபடி அவனது படைபலம் அதிகரித்திருக்கிறது. அவனுக்கு உதவியாக வந்து சேரும் வள நாட்டின் படைபலம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இப்போது கூட்டி கழித்துப் பார்த்தால் நாமும் நம் எதிரியும் சமபலத்தில் இருப்பதாகத் தான் தோன்றுகிறது."

"நம் படை வீரர்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்" என்றாள் நிதானமான குரலில் ரத்னாவதி .

"நம்மோடு இணைய யார் வருவார்கள்? அந்த ஆதித்தன். அவன் மிகப் பெரிய அபாயம் .தான் நிற்கும் பக்கத்தை வெற்றி பெறச் செய்யும் திறமை அவனிடம் உண்டு என்பது அவ ணிக்கே தெரியும். அவன் இப்போது பார்த்திபனின் பக்க துணையாக நிற்கிறான். பிறகு எப்படி தோற்க போகும் நம்மோடு போர் புரிய ஆட்கள் வருவார்கள்?" என்று கேள்விகுறியோடு நிறுத்தினான்மதிமாறன்.

"நீங்கள் சொல்வதும் சரிதான். பணத்திற்காக போர் புரிய கூலி ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நம்மை விட கூலி அதிகம் கிடைத்தால் எதிரிகளுடன் இணைந்து கொள்ளவும் தயங்க மாட்டார்கள். இப்போது நமக்கு ஒரே வழிதான் இருக்கிறது"

"என்ன அது?" என்றான் ஆவலுடன் மதி மாறன் .

"ஒரு மனிதனுக்கு பணம், செல்வம் இவற்றை விட மேலானது விடுதலை.அதற்காக எதை வேண்டுமானாலும் ஓரு மனிதன் செய்வான். அதை வைத்து தான் நாம் நம் படைக்கு ஆட்களை சேர்க்கப் போகிறோம்" என்று குறு நகை புரிந்தாள் ரத்னாவதி

அவளது பேச்சின் அர்த்தம் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அவன். அவளது பேச்சு ஏதோ புதிர் போடுவது போல் அவனுக்கு தோன்றியது.

" ரத்னாவ தி. உன் பேச்சு எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. விடுதலை என்கிறாய். அதை வைத்து ஆட்களை சேர்ப்போம் என்கிறாய். உன் எண்ணத்தை சற்று தெளிவாகத்தான் சொல்வேன்"

" சொல்கிறேன். நம்மிடம் கூடுதல் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை நாம் கவனத்தில் கொள்ளாமல் தோளில் ஆட்டு குட்டியை போட்டு கொண்டு ஆட்டை தேடியது போல் வேறு எங்கோ ஆட்களை தேடிக் கொண்டி ருக்கிறோம்"

"நம்மிடம் எங்கே ஆட்கள் இருக்கிறார்கள்? எதற்காக இப்படி சிந்தை கலங்கிய வளைப் போல் பிதற்றிக் கொண்டிருக்கிறாய்?" என்றான் மதி மாறன் சற்று கோபத்தோடு.

"கோபம் வேண்டாம் கண்ணாளரே! நம் சிறையில் ஏராளமான ஆட்களை நாம் சிறை வைத்திருக்கிறோம். அவர்களுக்கு விடுதலையை பரிசளிப்பதாக பேரம் பேசுங்கள். குற்றங்களை மன்னிப்பதாக கூறுங்கள். பதிலுக்கு அவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை நமக்காக களத்தில் போரிடுவது. அவர்கள் உதவியால் நாம் வென்றால் நல்லது. களத்தில் அவர்கள் மாண்டு போனாலும் நல்லதுதான். வள நாட்டின் படை உதவியோ ஆதித்தனின் ஒத்தாசையோ எதிரிக்கு இருப்பது இவர்களுக்கு தெரியாது. இவர்கள் வெளி உலகைப் பார்த்தே பல வருடமாகி இருக்கும். இவர்களுக்கு விடுதலை மட்டும் தான் ஓரே குறிக்கோளாக இருக்கும்."

மதிமாறன் ரத்னாவதியின் ஆலோசனையை கேட்டு அதிர்ந்து போய் நின்றான். அவனது முகத்தில் மகிழ்ச்சி பரவியது. இப்படி ஒரு யோசனை அவளுக்கு மட்டும் எப்படி தோன்றியது என்று நினைத்து வியந்தவன் அவளை கட்டி தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

"உன்னை சாதாரண பெண்ணாக நினைத்து விட்டேன் ரத்னா. நீ சகுனியையும், சாணக்கியனையும் சம விகிதத்தில் கலந்து செய்த கலவை"

" எல்லாம் வாழ்க்கை தந்த அனுபவ பாடம் " என்று சிரித்தாள் ரத்னாவதி .

"இதோ "இப்போதே சிறைசாலைக்கு செல்கிறேன். என் நிபந்தனைக்கு ஒப்பு கொள்கிறவர்களை நான் படையில் சேர்க்கிறேன். என் நிபந்தனைக்கு ஒப்புகொள்ளாதவர்களை ...."

"கொன்று விடுங்கள். சிறையில் உண்ட உணவுக்கு கூட விசுவாசம் அற்றவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன்? அந்த உணவை ஓரு நாய் உண்டிருந்தால் கூட நமக்காக நன்றியோடு வாலையாவது ஆட்டியிருக்கும் "

"நீ சொல்வது உண்மை. சிறைவாசிகளின் உயிர் அவர்கள் எடுக்கும் முடிவில் இருக்கிறது" என்ற மதிமாறன் சிறைசாலையை நோக்கி கிளம்பினான்.

சிறைசாலையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவனது நிபந்தனைக்கு கைதிகளிடையே ஏகபோக ஆதரவு நிலவியது. ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் தனது திட்டத்தை ஏற்று கொண்டதை நினைத்து மனம் மகிழ்ந்தான் அவன்.

சரியான சந்தர்ப்பத்தில் படையிலிருந்து தப்பி ஓட அவர்களில் சிலர் திட்டமிட்டிருந்தது பாவம் அவனுக்கு தெரியாது.

ரத்னாவதியின் திட்டம் சரியாக வேலை செய்து விட்டது என்று நினைத்த மதிமாறன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் ஆயுதங்களை கொடுத்து தன்னுடைய படையில் சேர்க்க உத்தரவிட்டான்.

அதே நேரம் பார்த்திபன் பதைபதைப்புடன் ஆதித்தனின் வருகைக்காக காத்திருந்தான். வள நாட்டின் ஒற்றனாக நடிக்க ஆதித்தன் கிளம்பி சென்றதில் பார்த்திபனுக்கு துளிக் கூட விருப்பம் இல்லை.

கண்டிப்பாக மதிமாறன் ஒற் றனை சிறையில் அடைக்கவோ சிரச்சேதம் செய்யவோ உத்தரவிடுவான். சிறையில் அடைக்கப்பட்டால் கூட ஆதித்தனை எப்படியாவது மீட்டு விடலாம். ஆனால் அவனது உயிர் பறிபோய்விட்டால்?

ஆதித்தனின் உயிரை பணயம் வைத்து அரசதிகாரத்தை பெற அவன் விரும்பவேயில்லை. அவனுக்கு கடைசியாக வந்த தகவல் ஆதித்தன் கைது செய்யப்பட்டு மதிமாறனின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டான் என்பது தான். அதற்கு பிறகு என்ன நடந்ததென்று அவனுக்கு தெரியவில்லை.

சற்று தூரத்தில் சாத்தன் பார்த்திபனின் ஆட்களுக்கு மூன்று ஆட்கள் ஆட்டத்தை ஆட பயிற்சி தந்து கொண்டிருந்தான். மீதி ஆட்கள் பொம்மைகள் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அவற்றை பார்த்தபடி யோசனையில் மூழ்கி கிடந்த பார்த்திபன் தன் அருகே ஒரு புரவி வந்து நிற்பதை காண தவறி விட்டான். வந்து நின்ற குதிரையில் இருந்தவன் ஆதித்தன்.

குதிரையிலிருந்து குதித்து இறங்கிய ஆதித்தன் அவனது தோளில் தட்டினான். ஆதித்தனைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது.

"ஆழ்ந்த யோசனையில் மூழ்கி விட்டாயோ?"

" எல்லாம் உன்னை நினைத்துத் தான் "

"கவலைப்ப்டாதே! எனக்கு எந்த ஆபத்தும் நேர வில்லை. பத்திரமாக திரும்பி வந்து விட்டேன்"

"போன காரியம்?"

"வெற்றிதான்.என் வரவு அவனுக்கு இனி தொந்தரவு தான் "

"மதி மாறனை வீழ்த்தி நாம் ரகசிய தீவை கைப்பற்றி விட்டால் மலைநாடு சும்மா இருக்கும் என்றா நினைக்கிறாய்?"

" இழந்த பகுதியை மீட்க கட்டாயம் படை எடுத்து வருவார்கள்."

"அப்போது என்ன செய்வது?"

"போர் நடக்கும். நாம் வெல்வோம்.மதிமாறன் மீண்டும் ஆளுநராவான்."

" என்ன சொல்கிறாய் நீ?"

"மதி மாறனை பொம்மையாக்கி பின்னால் இருந்து நீ அரசாட்சி செய். அவனை சிறையில் அடைத்து வை.மலை நாட்டிற்கு அனுப்பும் மாத கடிதங்களில் கையெழுத்திடுவது மட்டும் தான் அவன் செய்ய போகும் ஓரே வேலை"

" திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது"

"அதற்கு மதிமாறன் உயிரோடு பிடிபட வேண்டுமே?" என்றான் ஆதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக