புதன், 21 டிசம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 75

புதிதாக ஒரு சிக்கல்

வள நாட்டின் நான்கு உளவாளிகள் ஓரே கப்பலில் மார்க்கதரிசியின் புதையலை நீலனிடமிருந்து மீட்க பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். தன்னை பின் தொடரும் அபாயத்தை பற்றி சிறிதும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் நீலன்.

மறுநாள் காலை .

சூரியன் கிழக்கே உதித்துக் கொண்டிருந்தான். கப்பலின் மேல் தளத்தில் துயில் களைந்து எழுந்து வந்த நீலன்நின்று கொண்டிருந்தான். அவன் பார்வை படும் தொலைவில் மங்கலாக தென்பட்டு கொண்டிருந்தது மோகினி தீவு.
அங்கே தான் பைராகி மகேந்திரனிடம் நீலனுக்கு பதிலாக பணயக் கைதியாக இருக்கிறான். அவனை எப்படியாவது மீட்டாக வேண்டும்.

மோகினி தீவிற்கு தேவையான உணவுப் பொருள்களை கொடுத்தால் தான் மகேந்திரன் பைராகியை விடுவிப்பான். அவசரமாக கிளம்பி வந்ததில் கப்பலில் போதுமான உணவுப் பொருள்களை ஏற்ற மறந்து விட்டிருந்தான் நீலன்.பொக்கிசங்களில் சிறு பகுதியை கொடுத்து பைராகியை மீட்க திட்டமிட்டிருந்தான் அவன். அதற்கு மகேந்திரன் சம்மதிப்பானா என்று தான் அவனுக்கு தெரியவில்லை. பைராகி போன்ற ஒரு அறிவாளிக் காக அவன் மொத்த பொக்கிசத்தையும் இழக்க தயாராக இருந்தான். அவனை மீட்ட பின்பு ஆதித்தனுக்காக அவன் காத்திருக்க வேண்டும். ஆதித்தன் மோகினி தீவிற்குள் நுழைந்து விட்டால் அடுத்த கணமே மூவரும் இங்கிருந்து கிளம்பி விடலாம்.

அவனது கப்பல் மோகினி தீவின் துறைமுகத்திற்குள் நுழைந்தது. நங்கூரத்தை பாய்ச்சி கப்பலைநிலை நிறுத்தினான் அவன். அவன் நங்கூரத்தை பாய்ச்சியதை பார்த்த யவனனின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. எப்படியோ நீலனை மீண்டும் மோகினி தீவிற்கு திரும்ப கொண்டு வந்து விட்டோம் என்ற திருப்தி அவனது மனதில் ஏற்பட்டது.

ஆதியை அழைத்து கொண்டு யவனனுடன் கப்பலிலிருந்து இறங்கினான் நீலன்.துறைமுகத்தில் யவனன் மீண்டும் கால் வைத்த செய்தி நெருப்பாக தீவு முழுக்க பரவ ஆரம்பித்தது. அவனை பார்த்து வணங்கியவர்களை பார்த்து தலையசைத்து மரியாதையை ஏற்றுக் கொண்டான் அவன். தன்னுடைய வீரர்களை அழைத்தவன் நீலனின் கப்பலை கவனமாக பார்த்து கொள்ளும் படி உத்தரவிட்டான். தன்னுடைய வீரர்களிடம் இரண்டு குதிரைகளை கடன் வாங்கி கொண்டவன் அதில் ஓன்றை நீலனிடம் கொடுத்தான்.

ஆதியும் நீலனும் அதில் ஏறிக் கொள்ள மகேந்திரனின் மாளிகையை நோக்கி அவர்களின் பயணம் தொடங்கியது.

வேறு ஏதோ வேலையில் மூழ்கியிருந்த மகேந்திரன் யவனனின் வருகையால் மகிழ்ச்சியடைந்தான். அவனை ஓடி வந்து கட்டியணைத்து கொண்டவன் "போன காரியம் ஜெயம்தானே?" என்றான்.

"இல்லை. நீலனை திரும்ப இங்கே அழைத்து வருவதே எனக்கு பெரும்பாடாகி விட்டது. அவனது கோமாளி தனம் எல்லை மீறி சென்று விட்டதால் எழுந்த சிக்கல். நாம் எதிர்பார்த்தபடி உணவு பொருள்களை இவன் கொண்டு வரவில்லை" என்று அருகில் இருந்த நீலனின் மீது புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்தான்.

"அதுவும் நல்லதுதான்.நாம் செய்த ஒப்பந்தபடி இவன் உணவு பொருள்களை கொடுத்தால் இவனது நண்பனை இவனிடம் திரும்ப ஒப்படைப்பதாக பேசினோம்.இவன் ஒப்பந்தபடி நடக்காததால் இவனிடம் நாம் பைராகியை ஒப்படைக்க தேவையில்லை" என்றான் மகேந்திரன்.

நீலனுக்கு கோபம் தலைக்கேறியது. "மகேந்திரா! உணவு பொருள்களுக்கு ஈடாக எவ்வளவு செல்வம் வேண்டுமோ கேள் .தருகிறேன். என் நண்பனை என்னிடம் ஒப்படைத்துவிடு"

"உன் நண்பனை நான் முதலில் சாதாரண ஆசாமி என்று தவறாக எடை போட்டு விட்டேன். அவன் இங்கே வந்த முதல் நாளிலிருந்து தன்னுடைய வேலையை துவக்கி விட்டான். வெவ்வேறு விதமாக மடக்கும் கட்டில், நாற்காலிகள் , அலமாரிகள் என்று மற்றவர்கள் கற்பனை செய்ய முடியாதவற்றையெல்லாம் அவன் செய்து குவிக்க தொடங்கி விட்டான். அப்படியான விசித்திரமான பொருட்களை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இரவு நேரத்தில் தன்னுடைய தொலைநோக்கி மூலமாக வானத்தை அதில் நகரும் கோள்களை அவன் கவனித்து கொண்டிருக்கிறான். எப்போது உறங்குகிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. புதிது புதிதாக எதை எதையோ செய்து கொண்டே இருக்கிறான். இவ்வளவு மதியுகம் கொண்ட மனிதனை இழக்க நான் தயாராயில்லை. உன்னுடைய அற்ப பொருள் அவனுடைய கால் தூசுக்கு இணையாகாது." என்றான் மகேந்திரன்.

"அது தான் என் நண்பனின் சிறப்பு. சிறிது நாட்கள் பழகிய நீயே அவனை விட முடியாது என்று சொல்லும் போது நீண்ட நாள் நண்பனான நான் மட்டும் அவனை உன்னிடம் விட்டு விடுவேன் என்று நினைத்தாயோ? " என்றான் நீலன்.

"அவன் தருவதாகச் சொல்வது மார்க்கதரிசியின் தங்க புதையல் அதை இழப்பது அவ்வளவு நல்லதல்ல " என்று எடுத்து கொடுத்தான் யவனன்.

"நீ முழு புதையலையே கையளித்தாலும் பைராகியை நான் உன்னிடம் ஒப்படைக்க மாட்டேன்"

"வேறு எதை கொடுத்தால் அவனை என்னிடம் ஒப்படைப்பாய்.?"

"எனத கொடுத்தாலும் அவனை திரும்ப உன்னிடம் தரமாட்டேன்"

"ஒப் பந்தப்படி உணவு பொருள்களை கொடுத்தாலுமா?"

"அவை எனக்கு இப்போது தேவைப்படவில்லை"

"வேறு எங்கிருந்து உணவு பொருட்கள் உனக்கு கிடைத்தது?"

"அதை உன்னிடம் சொல்ல முடியாது" என்றான் மகேந்திரன்.

"அதை நான் சொல்கிறேன்" என்றபடி அறைக்குள் நுழைந்தான் பைராகி .

"வா நண்பா! நீ எதற்காக இங்கே வந்தாய்?" என்றான் மகேந்திரன் அதிர்ச்சியுடன் .

" என் நீண்ட நாள் நண்பனை காண வந்தேன். வாநீலா. எப்போது வந்தாய்? எப்படி இருக்கிறாய்?" என்று நீலனை நலம் விசாரித்தான் பைராகி .

"நலம் தான் நண்பா. இங்கே நடப்பவற்றை?"

"நான் கேட்டு கொண்டு தான் இருந்தேன்.மகேந்திரா. அன்புக்குறியவனே! என் மீது கொண்ட அன்பால் நீ அநீதியின் பக்கம் நிற்கிறாய். வேண்டாம். தெரிந்தே தவறு செய்யாதே. நீலன் தர வேண்டிய உணவு பொருட்களை நான் எப்போதோ உனக்கு தந்து விட்டேன். உண்மையை மறைத்து வீணாக தவறு செய்யாதே" என்றான் பைராகி .
மகேந்திரன் தலை குனிந்து நின்றான்.

"என்னை மன்னித்து விடு நண்பா " என்றான் அவன்.

நீலனுக்கு எதுவும் புரியவில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் பைராகியால் எப்படி உணவு பொருள்களை மகேந்திரனுக்கு கொடுத்திருக்க முடியும்? வெகு வேகமாக விளையக்கூடிய தானிய வகைகளை கண்டுபிடித்து விட்டிருப்பானோ பைராகி? என்று விடை தெரியாத பல கேள்விகள் அவன் மனதில் அலை அலையாக எழ ஆரம்பித்தன.

" என்ன உணவு பொருள்களை நீ கொடுத்தாயா? எப்படி நண்பா ? " என்றான் நீலன் ஆச்சரியத்துடன் .

"அதற்கு உலக விசயம் தெரிந்திருக்க வேண்டும் நண்பா.மேற்குலக நாடுகளில் இப்போது ஒரு மலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் பெயர் துலிப் மலர்கள் இந்த மலர் செடிக்காக எவ்வளவு பணத்தையும், பொருளையும் கொட்டி கொடுக்க மேற்குலக சீமான்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு மலர் செடிக்காக ஓரு அரண்மனையே கை மாறி இருக்கிறதென்றால் பாரேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் அந்த மலர் செடிகளில் ஓன்றை நான் வளர்த்து வந்திருக்கிறேன். அதனுடைய அருமை எனக்கு தெரியவில்லை. இங்கிருந்து கழு கில் கிளம்பிய ஆதித்தன் அதிலிருந்த என் உடமை பொருள்களை துறைமுகத்திலேயே வைத்து விட்டு போய் விட்டான். இந்த பக்கம் உணவு பொருள்களை ஏற்றி வந்த மேற்குலக கப்பல் ஒன்று இளைப்பாற இங்கே வந்தது.

அதன் வெள்ளை மாலுமியின் கண்களில் நான் வளர்த்த அந்த மலர் செடிபட்டு விட்டது. அவன் நல்லவன். பொய் சொல்ல தெரியாதவன். இந்த செடியின் அருமையை அவன் தான் எடுத்து கூறினான். அந்த ஒரு மலர் செடிக்காக தன்னுடைய கப்பலில் இருக்கும் மொத்த உணவு பொருள்களையும் தருவதாகப் பேரம் பேசினான். நான் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டேன். அவன் கப்பலில் இருந்த உணவு பொருள்களை மகேந்திரனிடம் கொடுத்து விட்டு அந்த மலர் செடியை எடுத்து சென்று விட்டான். நாம் நன்றி சொல்வதாக இருந்தால் ஆதித்தனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் தான் அந்த மலர் செடியை துறைமுகத்தில் இறக்கி வைத்தவன். உங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை நான் எப்போதே நிறைவேற்றி விட்டேன். உடனே கிளம்பி ரகசிய தீவிற்கு வரலாம் என்று தான் நினைத்தேன்.மகேந்திரன் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் அங்கே அனுப்ப மாட்டேன் என்று மறுத்து விட்டான்" என்றான் பைராகி .

"என்னை மன்னித்து விடு நீலா! பைராகியை பிரிய மனமில்லாமல் உன்னிடம் குதர்க்கமாக நடந்து கொண்டு விட்டேன்" என்றான் மகேந்திரன் வெட்கத்துடன் .

"நண்பர்களுக்குள் எதற்காக மன்னிப்பு . நீ எங்களில் ஒருவன்" என்று அவன் தோளைத் தட்டி சகஜ நிலைக்கு கொண்டு வந்தான் நீலன்.

நிலைமை சுமூகமாக முடிந்தது.

தர்மபாலனின் கப்பல் மோகினி தீவின் துறைமுகத்தை வந்தடைந்தது.

"கடல்தான் என் களம்.அங்கே அவனை கவனித்து கொள்கிறேன்" என்று பல்லை கடித்தான் தர்மபாலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக