ரகசிய தீவு
அத்தியாயம் 65
புதையல் காத்த பூதம்
ஆதியையும் நஞ்சுண்டனையும் சிறிய படகு ஒன்றில் அழைத்து சென்று கொண்டிருந்தான் நீலன். நஞ்சுண்டனின் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணியை வைத்து அடைத்திருந்தான் அவன். ஆதி இன்னும் மயக்கம் தெளியாத நிலையில் இருந்தான். கூலியாட்கள் இருவர் படகை செலுத்தி கொண்டிருந்தனர். நீலன் வானத்தை உற்றுப் பார்த்தான்.
நிலவு ஒளி வீசுவதை வைத்து முதல் சாமம் தொடங்கி விட்டதை அறிந்து கொண்டான் அவன். இரண்டாம் சாமம் தொடங்குவதற்குள் அவன் ஆயுதங்களை கருணாகரன் சொன்ன நபரிடம் ஒப்படைத்தாக வேண்டும். அவன் பெயர் கூட வில்லவனோ என்னவோ? அவனை அடையாளம் தெரிந்து கொள்ள கருணா கரனின் மோதிரம் தான் ஒரே வழி. அவன் இன்னும் தன்னிடம் வந்து சேரவில்லை.
அவன் வர தாமதமானால் ஆயுதங்களை கடலில் வீசி எறிந்தாவது கப்பலை காலி செய்து விட வேண்டியதுதான் என்று நீலன் நினைத்து கொண்டான்.புதையலோடு தப்பி செல்ல நினைக்கும் கருணாகரனும் இதே முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும். அவனுக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை.
இப்படியான சிந்தனையில் மூழ்கி கிடந்தான் நீலன்.அவன் சிந்தனை வசப்பட்டிருந்ததால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய கப்பலை சுற்றி நடந்து கொண்டிருந்த விசயங்களை கவனிக்க தவறிவிட்டான். ஆனால் இருளுக்கு பழக்கப்பட்டு போன கண்களை கொண்ட நஞ்சுண்டனின் கண்களிலிருந்து அந்த சம்பவங்கள் தென்பட தவறவில்லை. அதை அவன் கட்டப்பட்ட கைகளால் சுட்டி காட்டவும் தவறவில்லை. அவன் சுட்டி காட்டியதிசையில் பார்த்த நீலன் அதிர்ந்து போனான்.
அவனது கப்பலை சுற்றி ஏராளமான சிறு படகுகள் தீப்பந்த வெளிச்சத்தோடு நின்று கொண்டிருந்தன. அந்த படகுகளை பார்த்ததும் ஒரு வேளை அந்த படகுகள் மதிமாறனுடையவையாக இருக்குமோ என்ற அல்ப சந்தோஷத்தில் திளைத்தான் அவன்.
கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்தவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
"அங்கே என்ன கூச்சல்?" என்றான் நீலன் அதிகார தொனியில் .
"முதலில் நீ யார் என்று கூறு. இல்லையென்றால் உன் உயிர் உடலை விட்டு பிரிந்து விடும். என் ஆட்களில் ஒருவன் அம்பால் உன்னை குறி பார்த்து கொண்டிருக்கிறான்" என்று அவனை எச்சரிக்கை செய்தான் வில்லவன்.
"நான் இந்த கப்பலின் தலைவன் நீலன். என்னை மிரட்டும் நீ யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று காற்றில் கேள்வியை வீசினான் நீலன்.
எதிரே இருந்த சிறு படகில் சிறு சலசலப்பு எழுந்தது. "நாம் பார்க்க வேண்டிய ஆசாமி இவன்தான். வில்லை தாழ்த்து நண்பனே" என்று யாரோ உத்தரவிடும் சத்தம் கேட்டது.
சிறிது நேர அமைதிக்கு பிறகு ஒரு கனத்த குரல் காற்றை கிழித்து கொண்டு பேச தொடங்கியது.
" என் பெயர் வில்லவன்.கருணாகரன் என்னை இங்கே அனுப்பி வைத்தான். அவனது முத்திரை மோதிரம் என்னிடம் உள்ளது" என்று பதில் கூறினான் வில்லவன்.
நல்ல வேளை. ஆசாமி நம்மை தேடிக் கொண்டு கப்பலுக்கே வந்து சேர்ந்து விட்டான்.இவனிடம் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டால் நம்முடைய வேலை முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் அவன்.
நெருங்கி வந்த படகில் இருந்த வில்லவன் கருணாகரனின் மோதிரத்தை நீலனிடம் காட்டினான். நீலன் அதை கையில் வாங்கி பார்த்து கொண்டிருந்த போது அவனது படகில் யாரோ குதித்தார்கள்.
"யார் அது?" என்றபடி திரும்பினான் நீலன்.அவனது நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்டிருந்தது ஒரு வாள். அதன் மறு முனையை பிடித்தபடி நின்று கொண்டிருந்தான் யவனனான இப்பாலஸ்.
"இப்பாலஸ். நீயா?" என்றான் வியப்புடன் நீலன்.
"ஆம்! நானே தான்.! இந்த முறை உன்னை தவற விட்டு விடக் கூடாது என்று தான் உன் படகில் நான் ஏறினேன். இனி ஒரு போதும் உன்னை விட்டு விலக மாட்டேன். உன்னை நிழலாக பின் தொடர்வேன்" என்றான் யவனன்.
"இரவில் எப்படியப் பா நிழல் தோன்றும்? இயற்கைக்கு முரணாக இருக்கிறதே உன் பேச்சு .சரிவாளை உறையில் வை.காற்றில் படகு பலமாக ஆடுகிறது. கை நடுக்கத்தில் இந்த கிழவனின் மார்பில் வாளைபாய்ச்சி விடப் போகிறாய். நம்முடைய அடுத்த பயண இலக்கு மோகினி தீவுதான். அங்கே நானும் மகேந்திரனும் எங்கள் கணக்கை தீர்த்து கொள்கிறோம்" என்றான் நீலன்.
யவனன் வாளை தன்னுடைய உறையில் போட்டான்." யார் இந்த ஆசாமி?" என்றான் நஞ்சுண்டனை பார்த்து.
"அவனொரு விசம் நிறைந்த விரியன். தற்போது பல் பிடுங்கப் பட்ட பாம்பாக இருக்கிறான்."
"இந்த சிறுவன் ? "
" என்னுடைய பணியாள் "
இருவர் பேசுவதையும் கேட்டு கொண்டிருந்த வில்லவன்" உங்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டா?" என்றான்.
"நான் அவனை நண்பனாகத்தான் நினைக்கிறேன். அவன் தான் என்னை எதிரியாக நினைக்கிறான்" என்றான் நீலன் முகத்தை பரிதாபமாக வைத்தபடி.
"மகேந்திரனிடம் உன்னை மீண்டும் ஒப்படைக்கும் வரை நீ எனக்கு எதிரி தான். சந்தர்ப்பவசத்தால் நீ சில நாட்கள் என் கண்ணில் இருந்து மறைந்து விட்டாய். இனியும் உன்னை தவறவிட நான் விரும்பவில்லை" என்றான் யவனன்.
" எப்படியோ நாம் இருவரும் நாம் விரும்பிய பொருளை அடைந்து விட்டோம்" என்றான் வில்லவன்.
"சரி. நாம் வந்த வேலையை கவனிப்போம்" என்ற நீலன் கப்பலில் இருந்த ஆட்களுக்கு உரத்த குரலில் உத்தரவிட்டான்.
"நண்பர்களே! நான் நீலன்.இந்த கப்பலின் தலைவன். என்னை தேடி இங்கே வந்திருப்பவர்கள் என்னுடைய நண்பர்கள். அவர்கள் மேலே ஏறி வர கயிற்று ஏணியை கீழே அனுப்புங்கள். நானும் அதில் ஏறித் தான் மேலே வர வேண்டும்."
அவனது குரலை வைத்து அவனை அடையாளம் கண்டுகொண்ட அவனது பழைய நண்பர்கள் உடனே கயிற்று ஏணியை கீழே அனுப்பி வைத்தனர்.
அதில் ஏற முயன்ற வில்லவனை இடை யிட்டு தடுத்தான் நீலன்.
"நீ பிறகு ஏறலாம் நண்பா! முதலில் ஏற வேண்டியவன் ஒருவன் இங்கிருக்கிறான். அவனை முதலில் மேலே அனுப்புவோம். அவன் நீண்ட நேரம் கீழே இருப்பது ஆபத்து." என்றவன் நஞ்சுண்டனை பார்த்து "என்ன பார்க்கிறாய் ? உன்னைப் பற்றித்தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். உன் கைகளும், கால்களும் கட்டப்படாமல் இருந்திருந்தால் நீ இன்னேரம் கடலில் குதித்து தப்பித்து சென்றிருப்பாய். கிளம்புஅப்பனே" என்றான்.
நஞ்சுண்டனுக்கு அவன் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர வேறு வழியில்லை.
நஞ்சுண்டன் கயிற்று ஏணியில் ஏறத் துவங்கினான். அதற்கு முன்னால் அவன் முகத்தை பார்த்த வில்லவன் "இவனா? இவன் தான் கப்பலில் இருக்கும் ஆயுதங்களுக்கு விலை பேசியவன்.இவன் எப்படி உன்னிடம் அகப்பட்டான்?" என்றான் வியப்புடன்
ஆதியை நஞ்சுண்டன் கடத்தி சென்ற போது வில்லவன் அங்கே இல்லை என்பதால் அவன் பணயக் கைதியாக ஆதியை பிடித்து சென்றது அவனுக்கு தெரியவில்லை.. நீலனின் படகில் மயங்கி கிடப்பதும் ஆதி தான் என்பது அவனுக்கு தெரியவில்லை.
"அது ஒரு பெரிய கதை. அதை பிறகு கூறுகிறேன். முதலில் எல்லோரும் கப்பலின் மேல் தளத்தை அடைவோம்" என்றான் நீலன்
அனைவரும் கயிற்று ஏணியில் மேலே ஏறத் தொடங்கினர்.
கடைசியாக நீலன் மட்டும் படகில் தனியாக இருந்தான். தான் அணிந்திருந்த போர்வையை கழற்றி ஆதியின் மீது போர்த்தியவன் அவனை தோளில் தூக்கி போட்டு கொண்டு ஏணியில் ஏறத் தொடங்கினான்.
அவன் மேலே வந்ததும் அவனுடைய ஆட்கள் கயிற்று ஏணியையும் சிறு படகையும் மேலே தூக்கி கொண்டனர். வில்லவனின் ஆட்கள் படகில் காத்து கொண்டிருந்தனர்.
மேலே வந்த நீலன் நஞ்சுண்டனை தனி சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அதன் பிறகு ஆதியை தன்னுடைய அறையில் படுக்க வைத்தான். அதன் பிறகு வெளியே வந்தவன் ஆயுதங்கள் இருந்த பாதாள அறையை கை காட்டினான். " உங்களுக்கு தேவையானது அங்கே இருக்கிறது. எடுத்து கொள்ளுங்கள் "என்றான். வில்லவன் தன் ஆட்களுடன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
அதே நேரம் கருணாகரனின் ஆட்கள் இடுகாட்டிலிருந்த சமாதிகளில் ஒன்றை தோண்ட தொடங்கியிருந்தனர். நான்கடி தூரம் தோண்டியதும் மண்ணுக்கடியிலிருந்து ஒரு எலும்பு கூடு தென்பட்டது.
"தங்க புதையல் இருக்கும் இடம் நெருங்கி விட்டது.விரைவாகத் தோண்டுங்கள்" என்றான் உற்சாகத்துடன் கருணாகரன்.
பூபதி அடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலில் உறைந்து போய் நின்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக