அத்தியாயம் 69
நீலனுக்கு மாற்று
ஆதி நீலனின் கப்பலில் கண் விழித்தான். அவன் எங்கே இருக்கிறான் என்று அவனுக்கு தெரியவில்லை. கடைசியாக இரண்டு பேர் அவனை கடத்தி வந்தது மட்டும் அவனுக்கு நினைவிருந்தது. கடைசியாக அவனுக்கு தலையில் விழுந்த அடியால் அவனது தலை வலித்து கொண்டிருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்து கொண்ட ஆதி தன்னுடைய தலையை ஓரு முறை தடவிக் கொண்டான். அவன் இருந்த அறை மெதுவாக ஆடிக்கொண்டிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அது அவனுக்கு புதிதாக இருந்தது. அறை வெளிச்சமின்றி இருட்டாக இருந்தது. இது எந்த இடமாக இருக்கும் என்று நினைத்து குழம்பிய ஆதி அடிமேல் அடி வைத்து அறையை விட்டு வெளியே வந்தான்.
அறைக்கு வெளியே நீண்ட தாழ்வாரத்தில் நடந்தவன் கடைசியாக ஒரு ஏணிப்படியை வந்தடைந்தான். அதன் மேல் ஏறி மேலே வந்தான். கடல் அலைகளின் இரைச்சலும், சத்தமும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின.மேல் தளத்தில் ஆங்காங்கே தீப்பந்தங்கள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. அடர்ந்த இருட்டின் நடுவே நட்சத்திரங்களும், நிலவும் ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே கண்ணில் பட்ட மனிதர்கள் இவனை பொருட்படுத்தாமல் கடந்து சென்று கொண்டிருந்தனர்.
கண்கள் வெளிச்சத்திற்கு பழக்கமான பின்புதான் ஆதிக்கு தான் இருப்பது கப்பல் என்று புரிந்தது. தன்னை கடத்தி வந்தவர்கள் ஏதோ ஒரு கப்பலில் தன்னை அடிமையாக விற்று விட்டார்கள் என்று அவனுக்கு புரிந்தது.கும்மிருட்டு, உடல் நடுக்கும் குளிர். நடுக்கடல். இங்கிருந்து எப்படி தப்பி செல்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
யோசித்து கொண்டிருந்தவனின் தோளில் ஆதுரமாக விழுந்தது ஓருகை .ஆதி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். அவனது பின்புறமாக நின்று கொண்டிருந்த நீலன் அவனைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.
"எழுந்து விட்டாயா தம்பி? உன் பெயரை நான் மறந்து விட்டேன். உன் மாமன் ஏதோ ஒரு பெயரை கூறினான். அந்த பெயர் என் நினைவில் நிற்கவில்லை.சரி போகட்டும். உன் பெயர் என்ன?" என்றான் நீலன்.
தன் எதிரே நிற்பவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் திகைத்தான் ஆதி.தன்னை கடத்தி வந்தவர்கள் இவனுடைய கூட்டாளிகளாகக் கூட இருக்கலாம் என்று நினைத்தவன் இவனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
தன்னைப் பற்றிய எந்த விசயங்களையும் இவனிடம் சொல்ல கூடாது என்று நினைத்தவன் தான் நெடு நாட்களாக நடித்து வந்த வாய் பேச முடியாதவனாகவே இவனிடமும் நடித்து விட வேண்டியதுதான் என்று நினைத்தவன் அவனது கேள்விக்கு பதில் சொல்வது போல் "பே பே" என்றான்.
ஏற்கனவே வாய் பேச முடியாதவனாக பல ஆண்டுகள் நடித்த அவனது அனுபவம் இப்போது அவனுக்கு கைகொடுத்தது. அவனது அனுபவ நடிப்பில் ஏமாந்து விட்டான் நீலன்.அவனது பார்வையில் இரக்கமும், கருணையும் பொங்கி பிரவகித்தன.
"அந்த ஆண்டவன் கருணையே இல்லாதவன் தம்பி .உனது பேச்சு திறனை பறித்து கொண்டு விட்டானே ? இந்த மாதிரி நேரங்களில் தான் எனக்கு கடவுள் மீது கட்டு கடங்காத கோபம் ஏற்பட்டு விடுகிறது. அது கிடக்கட்டும். உனக்கு நல்லதாக ஒரு பெயரை வைத்தாக வேண்டும். பெயர் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய அடையாளம் அல்லவா? உனக்கு என்ன பெயர் வைப்பது என்று நான் யோசிக்கிறேன். இத்தனை வருடங்களாக ஒரு மனிதன் பெயர் இல்லாமல் இருந்திருக்க முடியுமா? நன்றாக யோசித்து பார்தம்பி . உன்னுடைய பழைய பெயர்றினைவுக் கு வரும்." என்றான் நீலன் பரிதாபம் நிறைந்த குரலில்.
அவன் கர்ண கொடுரமான ஏதாவது பெயரை வைத்து விடுவானோ என்று பயந்து போன ஆதி தன்னுடைய பெயரை முழுதாக உச்சரித்தான்.
"ஓ! உன் பெயர் ஆதியா? மிகவும் நல்ல பெயர் .இங்கே பார் ஆதி. இது என்னுடைய கப்பல். நான் இதன் தலைவன். உன் மாமன் உன்னை இங்கே வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறான். இந்த புது இடத்தை நினைத்து நீ பயப்பட வேண்டாம். பாதுகாப்பான இடத்தில் தான் நீ இருக்கிறாய். இங்கே இருப்பவர்களில் சரிபாதி பேர் உன்னை போல் புதியவர்கள். உன் பயமும் தயக்கமும் விலக வேண்டுமானால் நீ இந்த கப்பலை ஓரு முறை சுற்றி பார்க்க வேண்டும். போய் சுற்றி பார்த்து விட்டு வா" என்றான் நீலன்.
இனியும் இந்த கிழவன் நம்மை கேள்விகள் கேட்டு துன்புறுத்த மாட்டான் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆதி கப்பலை சுற்றி பார்க்க அங்கிருந்து கிளம்பினான்.
அதே நேரம் கப்பலுக்கு வெளியே இருந்து சில கூச்சல்கள் கேட்க ஆரம்பித்தது. அதில் ஒரு குரல் கருணாகரனுடையது. இடுகாட்டிலிருந்த மார்க்கதரிசியின் புதையலை சிறு படகுகளில் ஏற்றி கொண்டு வந்திருந்தான் அவன். தனக்கு பழக்கமான குரலை கேட்டு கப்பலின் மேல் தளத்திலிருந்து தீவட்டியோடு எட்டி பார்த்தான் நீலன்.கருணாகரனை பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது.
"வந்து விட்டாயா நண்பா! இதோ கயிற்று ஏணியை மேலே அனுப்புகிறேன். ஒத்தாசைக்கு என் ஆட்களையும் அனுப்பி வைக்கிறேன்." என்று கத்திய நீலன் தன்னுடைய ஆட்களை அழைத்தான். அடுத்த சில மணி நேரங்களில் பெரும் போராட்டங்களுக்கு பிறகு அவனது கப்பலில் பொக்கிசங்கள் ஏற்றப்பட்டது. அவற்றை கப்பலின் மேல் தளத்தில் சமமான எடையில் இறக்கி வைத்தான் நீலன்.
" எப்படியோ பெரும்பாடுபட்டு புதையல்களை கப்பலுக்கு கொண்டு வந்து விட்டேன். இனியும் தாமதம் கூடாது. கப்பல் கிளம்பட்டும், " என்றான் கருணாகரன்
"நங்கூரத்தை வெளியே இழுங்கள்" என்று உத்தரவிட்டான் நீலன்.அவனது ஆணை நிறைவேற்றப்பட்டது. நீலன் சுக்கானை இயக்கத் தொடங்கினான். கப்பல் நகரத் தொடங்கியது.
"இப்போது கப்பல் வள நாட்டை நோக்கித் தானே போகிறது? " என்றான் கருணாகரன்.
"இல்லை. கப்பல் இறுதியாகத் தான் அங்கே செல்லும். முதலில் கப்பல் கல்லறை தீவிற்கு செல்லும். பிறகு மோகினி தீவிற்கு. அங்கே பணயக் கைதியாக இருக்கும் என் நண்பன் பைராகியை மீட்டாக வேண்டும். எனக்காக அவன் அங்கே பணயக் கைதியாக இருக்கிறான்"
"கல்லறைதீவில் எதற்காக கப்பலை நிறுத்துகிறாய்? அங்கே தான் யாரும் இல்லையே?"
"எனக்கு அங்கே தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது. அதை தீர்த்தாக வேண்டும்" என்றான் இறுகிய முகத்துடன் நீலன்.
"எனக்கு புதையலில் வர வேண்டிய பங்கை நீ மோகினி தீவில் கொடுத்தாக வேண்டும்" என்றான் நீலன் அமைதியாக .
கருணாகரனின் தலையில் இடி இறங்கியது. இப்படி நீலன் நடுவழியில் பங்கை கேட்டு குடைச்சல் கொடுப்பான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.
" மோகினி தீவிலேயே பங்கு வேண்டுமா?" என்றான் கருணாகரன் சந்தேகம் நிறைந்த குரலில்.
"ஆம். மோகினி தீவின் தலைவன் மகேந்திரனுக்கு அந்த புதையலின் பங்கை கொடுத்தால் தான் அவன் பைராகியை விடுவிப்பான். இந்த மொத்த புதையலின் மதிப்பை விட பைராகியின் மதிப்பு அதிகம் " என்றான் நீலன்.
" உன் விருப்பப் படியே நீ உன் பங்கை வாங்கி கொள்ளலாம்" என்றான் வேண்டா வெறுப்பாக அவன்.
கல்லறைதீவிலேயே நீலனின் கதையை முடித்துவிட வேண்டியதுதான் என்று நினைத்த கருணாகரன் நஞ்சுண்டன் எங்கே இருக்கிறான் என்று தேட ஆரம்பித்தான். நீலனின் கதையை முடித்துவிட்டு அந்த இடத்தில் நஞ்சுண்டனை நியமித்து விடலாம் என்று திட்டமிட்டான் அவன்.
கப்பலில் இருந்த ஒவ்வொரு அறையாக திறந்து நஞ்சுண்டனை தேட ஆரம்பித்தான் அவன். ஓரு அறையை திறந்த போது அதில் நஞ்சுண்டன் நாற்காலியில் கட்டப்பட்டு வாய் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதை பார்த்தான்.அப்பாடா!ஆள் அகப்பட்டு விட்டான் என்ற மகிழ்ச்சியில் அவனது கட்டுகளை அவிழ்க்க முயன்றான் கருணாகரன்.
"நில். அவனை தொடாதே" என்று எச்சரித்தது ஒரு குரல். அது யவனனுடையது. நஞ்சுண்டனை பாதுகாக்க அவனை நியமித்திருந்தான் நீலன்.அவன் அந்த அறையில் இருப்பதை கருணாகரன் கவனிக்கவில்லை.
"இங்கே நீலனை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. உடனே வெளியேறு" என்று அவனை எச்சரித்தான் யவனன்.
"நான் கப்பலை சுற்றி பார்க்க வந்தேன்.நான் இங்கு வந்ததை நீலனிடம் சொல்லி விடாதே" என்றவன் விரைவில் திரும்ப வருகிறேன் என்று கண்களால் சாடை காட்டி விட்டு வெளியேறினான்.
ஏமாற்றத்துடன் வெளியே வந்த கருணாகரனை பார்த்து விட்டான் ஆதி "கொலைகார பாவி. நீ இங்கேதான் இருக்கிறாயா?" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.
இருட்டில் மறைந்து கொண்டான் ஆதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக