வெள்ளி, 23 டிசம்பர், 2022

ரகசிய தீவு 76

Aரகசிய தீவு

அத்தியாயம் 76

தூதன்

பார்த்திபனும், மதிமாறனும் போருக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் துவங்கிய போது பொழுது பளபளவென்று விடிந்திருந்தது.சாத்தனும் அவனிடம் பயிற்சி பெற்ற ஆட்களும் பொம்மை படையை தயார் செய்திருந்தனர். அந்த பொம்மைபடைகளை உள்ளே நிறுத்தி வெளியே உண்மையான வீரர்களை நிறுத்தி விட்டால் உள்ளே நிற்கும் போலி பொம்மைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டன. பெட்டிகளில் இருந்த பீரங்கிகள் ஓன்றிணைக்கப்பட்டு மாட்டு வண்டி சக்கரங்களில் இணைக்கப்பட்டன. அவற்றில் இருந்த வெடிபொருட்களை பயன்படுத்தி ஒரு குண்டை வெடிக்க செய்தான் ஆதித்தன். வெடிமருந்தின் விசையால் 60 அடி தூரத்திற்கு மேல் பயணிக்க வேண்டிய உலோக குண்டு பத்தடி தூரத்திலேயே வேகம் குறைந்து கீழே விழுவதை ஆதித்தனும், பார்த்திபனும் கவலையுடன் பார்த்தனர்.

'இந்த ஆயுதங்கள் தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கும் என்று கூறினாயே? ஆனால் இங்கே நிஜம் தலைகீழாக இருக்கிறதே? பத்தடி தூரத்திற்கு மட்டுமே அந்த உலோக குண்டு பயணிக்கிறது. அதை வைத்து கொண்டு நாம் தாக்குதல் நடத்த முடியாது. எதிரிகளின் இலக்கு அந்த பத்தடிக்குள் இருந்தால் மட்டுமே நாம் தாக்குதல் நடத்துவது சாத்தியம். இந்த கருவியால் நமக்கு எந்த பயனும் இல்லை" என்று ஏமாற்றத்தில் பொறிந்து தள்ளினான் பார்த்திபன். "எதற்காக இப்படி பதட்டம் கொள்கிறாய் பார்த்திபா! நமக்கு பாதகமாக எது நடந்தாலும் அதில் ஏதாவது ஓன்று நமக்கு சாதகமாக இருக்கும். அதை வைத்து நாம் பிரச்சனையை சமாளிக்க கற்று கொள்ள வேண்டும்" என்றான் அமைதியாக ஆதித்தன்

"இதில் நமக்கு சாதகமாக என்ன அம்சம் இருக்கிறதென்று நீ நினைக்கிறாய்?" என்றான் பார்த்திபன் படபடப்புடன். ஆதித்தன் சொல்வது அவனுக்கு புரிந்தாலும் இந்த தருணத்தில் அவனது அறிவுரை பயனற்றது என்று அவன் கருதினான்.

" இதில் நமக்கு இருக்கும் பாதகமான அம்சம் பீரங்கி குழாயை விட அதன் உள்ளே செலுத்தும் குண்டின் சுற்றளவு குறைவாக இருப்பது தான். அதை எப்படி சரி செய்ய முடியும் என்று யோசி.அந்த குறையை நீக்கிவிட்டால் இது பேரழிவை தரும் ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை"

"அந்த குறையை எப்படி நீக்குவது என்று எனக்கு தெரியவில்லை. உனக்கு தெரிந்தால் கூறு. தெரிந்து கொள்கிறேன்."

"அந்த வழியை நான் கண்டுபிடித்து விட்டேன்.குண்டின் சுற்றளவை அதிகரிக்க ஒரே வழிதான் இருக்கிறது. அது இரும்பாலான உலோக குண்டை நெருப்பில் காய்ச்சி பயன்படுத்துவது தான். குண்டை நெருப்பில் காய்ச்சினால் என்னாகும் என்று தானே யோசிக்கிறாய்?"

"ஆம். குண்டை நெருப்பில் காய்ச்சினால் என்னாகும்?"

"இரும்பு குண்டு வெப்பத்தால் விரிவடையும். அப்போது பீரங்கி குழாயில் குண்டு சரியாகப் பொருந்தி கொள்ளும். அப்போது இது பேரழிவான ஆயுதமாக மாறிவிடும்."

"ஆஹா. அற்புதம். இந்த மாதிரியான யோசனைகள் உனக்கு எப்படி தோன்றுகின்றன.?" என்றான் வியப்புடன் பார்த்திபன்.

" எல்லாம் என் நண்பன் பைராகியின் சகவாசம் .நடமாடும் அறிவுக் கருவூலம் அவன். அவன் கதிரவன். அவனிடமிருந்து கடன் பெற்று ஒளிரும் இரு நிலவுகள் நானும் என் சகோதரனும்"

"நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது இந்த போரில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக வந்து விட்டது" என்றான் மகிழ்ச்சியுடன் பார்த்திபன்.

"பொறு. நாம் போருக்கு தயாராகிவிட்டோம். ஆனால் எதிரியான மதிமாறன் போருக்கு தயாராகி விட்டானா என்று நமக்கு தெரியாது. நாம் அவன் மீது போர் தொடுக்கப் போவதை அவனுக்கு அறிவிக்க வேண்டும்"

"தூதனுப்ப வேண்டும் என்கிறாயா?"

"ஆம். கடைசியாக நிலைமையை விளக்கி சொல்லி மதிமாறனிடம் பேசிப் பார்ப்போம். அவன் மனம் திருந்தினால் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் நிகழாது. அவன் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தால் போரைத் தவிர வேறு வழியில்லை"

" அவனிடம் தூதாக போகப் போவது?"

" வேறு யார் ? நான் தான் " என்று சிரித்தான் ஆதித்தன்.

" இப்படி ஆபத்தான காரியங்களில் வலியச் சென்று இறங்குகிறாயே? உனக்கு அச்சமாக இல்லையா?"

" இருக்கத்தான் செய்கிறது. யாரும் செய்ய மறுப்பதை செய்பவன் தானே தீரன்? எனக்கு ஆபத்தோடு விளையாடுவது பிடித்திருக்கிறது" என்ற ஆதித்தன் அருகில் இருந்த குதிரையில் தாவி ஏறினான்.

"நல்ல செய்தியோடு விரைவில் வந்து உன்னை சந்திக்கிறேன். போர் ஏற்பாடுகளை நிறுத்தி விடாதே" என்ற ஆதித்தன் குதிரையில் அங்கிருந்து கிளம்பினான்.

பலத்த காவல்களை தூதன் என்ற பதில் தூள் தூளாக்கியது. ஆதித்தன் மதி மாறனின் மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.

பார்த்திபனிடமிருந்து தூது வருவதான செய்தி காவலர்கள் மூலமாக மதி மாறனுக்கு வந்து சேர்ந்திருந்தது. அவன் ஆதித்தனின் வருகைக்காக தன் மாளிகையின் காத்திருந்தான். திரைமறைவில் இருவரின் பேச்சை கேட்கரத்னாவதி மறைந்து நின்றிருந்தாள்.

ஆதித்தன் மாளிகையின் உள்ளே நுழைந்தான். நாற்காலியில் இறுமாப்பாக அமர்ந்திருந்த மதிமாறன்" யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?" என்றான்.

"நான் பார்த்திபனிடமிருந்து தூது வந்திருக்கிறேன். என் பெயர் ஆதித்தன்"

"ஓ! தப்பி ஓடிய அந்த கள்வன் நீதானா? யார் அங்கே ? இவனை உடனே கைது செய்யுங்கள்"

சில காவலர்கள் உள்ளே ஓடி வந்தார்கள்.

"தூது வந்தவனை கைது செய்வது மரபல்ல. இதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்"

"தூதா? என்னிடமா? என் எதிரி அந்த பார்த்திபன். அவன் எதற்காக உன்னை தூதனுப்பி வைத்திருக்கிறான்? சரணடைய விரும்புகிறானா?" என்ற மதிமாறன் சாடையில் வீரர்களை திரும்பி போகச் சொன்னான்,

"இல்லை. போர் புரிய விரும்புகிறான்?"

"தூதன் என்பதால் உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன். சமூக விரோதி அவன். கள்வன் நீ. இருவரும் சேர்ந்து என் மீது போர் தொடுக்கிறீர்களா? காரணம்?"

"உங்களின் கொடுங்கோல் ஆட்சி. அதிகமான வரி. ஏழைகள் விடும் கண்ணீர். இவை போதாதா உங்களை ஆட்சியிலிருந்து அகற்ற "

"என்னை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு என்ன செய்வதாக உத்தேசம்?"

"பார்த்திபன் இந்த தீவை நிர்வகிப்பான்"

"அதை பார்த்து கொண்டு மலைநாடு சும்மா இருக்கும் என்றா நினைக்கிறாய்?"

| "அது போரின் முடிவை பொறுத்தது. நீங்கள் வென்றாலும் தோற்றாலும் உங்கள் பெயரால் தான் ஆட்சி நடக்கும் "

"வென்றால் நானே ஆட்சி செய்வேன் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். தோற்றாலும் எப்படி நான் ஆட்சி செய்ய முடியும்?"

"உங்களை சிறையில் அடைத்து விட்டு உங்கள் பெயரில் பார்த்திபன் ஆட்சி நடத்துவான் "

"நல்ல திட்டம் தான். இது தயாநிதிக்கு தெரிந்தால் ?"

"பார்த்திபன் தான் மலையமானின் மகன் என்பது அதே தயாநிதிக்கு தெரிந்தால் ? " என்று புன்னகைத்தான் ஆதித்தன்.

"அந்த உண்மை உனக்கு எப்படி தெரியும்?" என்றான் இருண்ட முகத்துடன் மதி மாறன் .

"பார்த்திபனே என்னிடம் இதைப் பற்றி கூறினான்"

"உனக்கு தெரிந்த உண்மை தயாநிதிக்கு தெரியாதே?"

"அந்த உண்மையை சொல்லத் தானே நீலன் மலை நாட்டிற்கு தன் கப்பலில் விரைந்திருக்கிறான்"

" அவனுக்கு இந்த உண்மை?"

"நன்றாக தெரியும். அவன் இப்போது மோகினி தீவில் எனக்காக காத்து கொண்டிருக்கிறான். இருவரும் நேரில் சென்று தயாநிதியை சந்தித்து உண்மையை கூறினால் உன் கதை முடிந்துவிடும்"

"இந்த போரின் முடிவில் யாரும் இங்கிருந்து உயிரோடு போய் விட முடியாது. உண்மை தெரிந்த அனைவருக்கும் இந்த தீவிலேயே சமாதி கட்டுகிறேன். நான் போருக்கு தயார். நாளை காலை என்படைகள் பிசாசு சமவெளியில் உன் படைகளை சந்திக்கும். இனி உன்னிடம் பேச விசயமில்லை. நீ கிளம்பலாம்" என்றான் மதி மாறன் பதட்டத்துடன் .

ஆணிவேரையே அசைத்து விட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பினான் ஆதித்தன்.

இருவரது உரையாடலையும் மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த ரத்னா வதி வெளியே வந்தாள்.

"இவனுக்கு எல்லா ரகசியமும் தெரிந்திருக்கிறது. இவன் மட்டும் நீலனுடன் தயாநிதியை சந்தித்து விட்டால் நம் கதை முடிந்துவிடும்." என்றான் மதி மாறன் .

" இவனது பேச்சில் நமக்கு சாதகமாக ஒரு விசயம் உள்ளது."

"என்ன அது?"

"மோகினி தீவில் நீலன் இவனுக்காக காத்து கொண்டிருக்கிறான்.இவன் இல்லாமல் அவன் கிளம்ப மாட்டான், "என்றாள் ரத்னாவ தி.

"அவன் தனியாக தயாநிதியை சந்தித்தாலும் நமக்கு ஆபத்து தான் "

" அவன் ஆதித்தன் வராமல் மோகினி தீவிலிருந்து கிளம்ப மாட்டான். இங்கிருந்து ஆதித்தன் வெளியேறவே கூடாது.அப்படியே வெளியேறினாலும் ?"

" என்ன சொல்கிறாய் நீ?"

" அவன் உயிரோடு இருக்க கூடாது" என்ற ரத்னாவதியின் உதடுகளில் விசம சிரிப்பு இருந்தது.

மதிமாறன் திகைப்போடு அவளைப் பார்த்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக