வெள்ளி, 2 டிசம்பர், 2022

ரகசிய தீவு63

ரகசிய தீவு

அத்தியாயம் 63

கையருகே நெய்

மதிமாறனும் ரத்னாவதியும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த பார்வையின் பொருள் இருவருக்கு மட்டுமே புரிந்திருந்தது.

"அவள் இறக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றான் மதி மாறன் . தங்கள் இருவரையும் கருணாகரன் கவனத்து கொண்டி ருப்பதை கவனித்தரத்னாவதி மதிமாறனின் கையை பிடித்து அழுத்தி கருணாகரன் அங்கே இருப்பதை நினைவுபடுத்தினாள். சட்டென்று தன்னை சுதாரித்து கொண்ட மதிமாறன் " கருணாகரா! உனக்கு நிறைய வேலைகள் காத்திருக்கும். நீ போய் அவற்றை கவனிக்கலாமே?" என்று அவனை அங்கிருந்து அனுப்புவதில் முனைப்பு காட்ட துவங்கினான்.

கருணாகரன் ரத்னாவதியின் கிடுக்கிபிடியில் சிக்கி தவித்து கொண்டிருந்தான். நீலன் எப்படி சிறையிலிருந்து தப்பி வெளியேறினான் என்ற அவளது கேள்விக்கு பதில் கூற முடியாமல் அவன் தவியாக தவித்து கொண்டிருந்தான். இப்போதைய குழ்நிலையில் தன்னை இன்னமும் அழுத்தம் கொடுத்து விசாரிக்காமல் உடனே இங்கிருந்து வெளியேற்ற மதிமாறன் முயல்கிறான் என்பதை அவன் சட்டென்று புரிந்து கொண்டு விட்டான்.

தான் நழுவிச் செல்ல இது தான் சரியான சமயம் என்று நினைத்தவன் "ஆம். நிறைய வேலைகள் பாதியில் நிற்கின்றன. நான் போய் தான் அவற்றை கவனிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்" என்று மதிமாறனிடமிருந்து விடைபெற்றான் கருணாகரன்.

அவன் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்ட மதிமாறன்" உன்னுடைய திட்டம் அருமையானது. அந்த திட்டத்தின்படி எல்லாமே நடந்து முடிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அந்த பெண் சந்திரவதனா வும்அவளது குழுவினரும் நெருப்பிற்கு இரையாகி இருப்பார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்களின் உடல் கூட கிடைக்கவில்லை என்று வீரர்கள் தகவல் சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சாகவில்லை என்றால் எப்படி அங்கிருந்து தப்பியிருப்பார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றான் மதிமாறன்.

"எனக்கு புரிந்து விட்டது. அவர்கள் எப்படி தப்பிச் சென்றார்கள் என்று " என்றாள் ரத்னாவதி .

தனக்கு தெரியாத ஏதோ ஒரு புது விசயத்தை அவள் கண்டுபிடித்து விட்டாள் என்பதை அவளது குரலின் உற்சாகத்தில் கண்டுபிடித்து விட்டான்மதிமாறன்.

"அவர்கள் எப்படி அங்கிருந்து தப்பி சென்றிருப்பார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்றான் மதி மாறன் .

"நீலன் எப்படி தப்பி சென்றானோ அதே முறையில் தான் இவர்களும் தப்பி சென்றிருக்க வேண்டும்"

"நீலன் எப்படி தப்பிச் சென்றான் என்று சற்று நேரத்திற்கு முன்பு வரை நீ கருணாகரனை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து கொண்டிருந்தாயே? அவன் எப்படி தப்பி சென்றான் என்பது தெரிந்து தான் அவனை வேண்டுமென்றே கேள்வி கேட்டு கொண்டிருந்தாயோ?"

"இல்லை. நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். கருணாகரனை நான் கேள்வி கேட்ட போது நீலன் எப்படி தப்பி சென்றிருப்பான் என்று எனக்கு உண்மையாகவே தெரியாது. இந்த சந்திரவதனா உயிரோடு தப்பிய விவகாரமும் நீலன் சிறையிலிருந்து தப்பிய விவகாரமும் ஒன்று போலவே இருக்கிறது. இதில் சம்மந்தப்பட்ட நபர்கள் தப்பி செல்ல மூன்றாவதாக ஒரு நபர் உதவி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் சிறைக்குள் வைத்து பூட்டப்பட்ட நீலனும், வீட்டில் அடைத்து வைத்து தாழ் போடப்பட்ட சந்திர வதனாவும் தன்னிச்சையாக தப்பி செல்ல இயலாது"

"நீ சொல்வது யோசிக்க வேண்டிய விசயம் தான் "

" இதில் யோசிக்க ஓன்று மே இல்லை. அவர்கள் இருவருமே சுரங்க வழியில் தான் தப்பி சென்றிருக்க வேண்டும்"

"என்னது சுரங்க வழியா?"

"ஆம். சுரங்க வழி தான். சிறையில் இருந்து தப்பி செல்ல ஒரு ரகசிய வழி இருந்திருக்க வேண்டும். அதன் வழியாகத்தான் கரிகாலன், நீலன் இருவரும் தப்பி சென்றிருக்க வேண்டும். அதே போல் வில்லவனின் மாளிகையிலும் ரகசிய வழி ஓன்று இருந்திருக்க வேண்டும்"

மதிமாறன் ரத்னா வதியின் பேச்சை கேட்டு அயர்ந்து போய் நின்றான்.கரிகாலன் எப்படி சிறையிலிருந்து தப்பித்து மாயாவியாக திரிந்தான் என்ற உண்மை அவனுக்கு இப்போது புரிந்தது.

ரத்னாவதியின் கூற்றுப்படி பார்த்தால் மூன்றாவதாக ஒரு நபர் கரிகாலனுக்கும், நீலனுக்கும் உதவி செய்திருக்க வேண்டும். அந்த மூன்றாவது நபர் யார்?தன் மனதில் எழுந்த சந்தேகத்தை வாய் விட்டு அவளிடம் கேட்கவும் செய்தான் அவன்.

ரத்னாவதி அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தாள்.

"கரிகாலனும் நீலனும் அடைக்கப்பட்டிருந்தது ஒரே சிறை அறை என்றால் அங்கே ரகசிய வழி ஒன்று இருப்பதாக அர்த்தம். அந்த விசயம் தெரிந்தவர்கள் யாராக இருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன். மேலும் தெளிவாக சொல்கிறேன். நீலனும், கரிகாலனும் குறிப்பிட்ட ஒரே சிறை அறையில் அடைத்து வைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை யோசித்து பாருங்கள்"

மதிமாறன் அயர்ந்து போய் நின்றான்.கரிகாலனும் நீலனும் குறிப்பிட்ட ஓரே சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. நீலன் தற்செயலாக அந்த அறைக்குள் அடைபட்டதை அவன் அறியவில்லை.

" னகதிகளை சிறையில் வைக்கும் அதிகாரம் கருணாகரனுக்கு மட்டுமே உண்டு" என்றான் மதி மாறன் கோபத்துடன் .

"உள்ளே இருந்தே எல்லா பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைத்தவன் அவனாகத்தான் இருப்பான் என்று நான் நினைக்கிறேன்" என்றாள் ரத்னாவதி .

"அதனால் அவனுக்கு என்ன லாபம்?"

"அது அவனுக்கு மட்டும் தான் தெரியும். இந்த உண்மையை நாம் ரகசியமாக வைத்து கொள்வோம். நம் சந்தேகத்தை நாம் அவனிடம் கேட்க வேண்டாம்"

"அதுவும் சரிதான். அவன் போக்கிலேயே போய் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்" என்றான் மதி மாறன் .

கருணா கரன் இப்படி ஓரு துரோகத்தை தனக்கு செய்திருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவேயில்லை.

அதே நேரம் கருணாகரன் தனக்கு நம்பகமான வீரர்களுடனும் வண்டிகளுடனும் இடுகாட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.

அவனை சுடுகாட்டின் வாசலில் வரவேற்றான் பூபதி.

"பூபதி. என் அருமை நண்பா! இன்று இரவிலிருந்து நமக்கு விடுதலை.இந்த பாதுகாவல் வேலை நம்மை விட்டு தொலைகிறது.இனி நாம் சுதந்திர பறவைகள் " என்று அவனை கட்டியணைத்து கொண்டான் கருணாகரன்.

அவனது உடல் விரைப்பாக இருப்பதை கவனித்த கருணாகரன் " ஏன் சிலை போல் நிற்கிறாய்?" என்றான்.

"நீ கட்டியணைக்கும் போது எங்கே என் முதுகில் கத்தியை பாய்ச்சி விடுவாயோ என்று எனக்கு பயமாக இருக்கிறது" என்ற பூபதியின் உடல் வேர்வையால் நனைந்திருந்தது.

"இன்னுமா என் மீது சந்தேகம்? என்னை நம்பு நண்பா " என்றான் கருணாகரன். வள நாட்டிற்குள் பொக்கிசங்கள் போய் சேர்ந்ததும் இவனது கதையை முடித்துவிட வேண்டியதுதான் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் அவன்.

"எனக்கு வேறு வழி இல்லை. இப்போதைக்கு உன்னை நம்புவதை தவிர வேறு வழியில்லை."

"நம்பு நண்பா! சரி நாம் வேலையை ஆரம்பிக்கலாம்" என்றான் கருணாகரன்.

அவன் சுட்டி காட்டிய சமாதிகளை உடைக்க ஆரம்பித்தனர் அவனது ஆட்கள் .

அதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர் பூபதியும், கருணாகரனும்.

முதல் சாமம் தொடங்கியது.

துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த யவனனும் வில்லவனும் அங்கே பரபரப்பான சூழல் நிலவுவதை கண்டனர்.

என்னவென்று அவர்கள் விசாரித்த போது தான் நீலன் தன்னுடைய கப்பலுக்கு ஆள் சேர்க்கும் விசயம் தெரிந்தது.

ஆங்காங்கே பதுங்கி கிடந்த தன்னுடைய ஆட்களை அழைத்த வில்லவன் " ஏற்பாடுகள் தயாரா?" என்றான்.

" கப்பலிலிருந்து ஆயுதங்களை கொண்டு வர சிறிய படகுகள் தயாராக உள்ளன. நீங்கள் அனுமதி கொடுத்தால் அவை கிளம்பி விடும்"

" நல்லது. கிளம்புங்கள். நானும் வருகிறேன்" என்றான் வில்லவன். அவனும் யவனனும் படகுகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்த போது எதிரே வந்த இருவர் இருளில் கண் தெரியாமல் அவன் மீது மோதினர்.அந்த மோதலில் ஒருவனது தோளில் கிடந்த ஆதி கீழே விழுந்தான்.

அவனை வாரி எடுத்தான் வில்லவன். இருட்டில் அவனுக்கு ஆதியை அடையாளம் தெரியவில்லை.

" மன்னித்து விடுங்கள் ஐயா. பையனுக்கு உடல் நிலை சரியில்லை. அவனை அவசரமாக வைத்தியரிடம் அழைத்து செல்கிறேன். அவசரத்தில் இருட்டில் கண் தெரியாமல் உங்கள் மீது மோதி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்"

"பரவாயில்லை.பார்த்து கவனமாக செல்லுங்கள்." என்ற வில்லவன் ஆதியை அவனிடம் ஒப்படைத்தான். அப்போதுதான் மயக்கம் தெளிந்த ஆதி வில்லவனின் குரலை அடையாளம் தெரிந்து கொண்டான். அவன் வாய் துணியால் அடைக்கப்பட்டிருந்ததால் அவனால் கத்த முடியவில்லை.

அவன் பார்த்து கொண்டி ருக்கும் போதே வில்லவன் அவனை கடந்து இருளில் மறைந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக