அத்தியாயம் 77
ஆபத்தோடு பயணிப்பவன்
"ஆதித்தன் நம்மைதிசை திருப்ப நினைக்கிறான். போரில் கவனம் செலுத்தாமல் நம் கவனத்தை நீலன் மீது செலுத்துவதற்காக அவன் வேண்டுமென்றே பொய் சொல்லி இருக்கலாம் இல்லையா?" என்றான் மதி மாறன் .
" இருக்கலாம். அவன் சொல்வது உண்மையா பொய்யா என்பதை அறிய ஒரே வழிதான் இருக்கிறது. நீலனின் கப்பலான முத்தழகி மோகினி தீவில் நிலை கொண்டு நின்றிருந்தால் அவன் ஆதித்தனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தால் ஆதித்தன் கூறியது அனைத்தும் உண்மை என்று எடுத்து கொள்ளலாம்." என்றாள் ரத்னாவதி
" ஆனால் அதை தெரிந்து கொள்ள நமக்கு எந்த வழியும் இல்லை. ஒற்றர் படை முதல் கொண்டு அனைவரையும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து விட்டேன். அனைவரும் போரில் கலந்து தயாராக இங்கே இருக்கிறார்கள். அயலகத்தில் நடக்கும் எதையும் நாம் அறிய எந்த வாய்ப்பும் இல்லை." என்றான் மதி மாறன் பரிதாபமாக .
" பாதகமில்லை. இப்போது நம் முழு கவனத்தையும் யுத்தத்தில் செலுத்துவோம். வெற்றி கடினம்தான். ஆனால் அடைய முடியாததில்லை. நம் கவனம் வெற்றியின் மீது இருக்கட்டும். இந்த யுத்தத்தில் நம்முடைய முழு கவனமும் ஆதித்தனின் மீது தான் இருக்க வேண்டும். இந்த யுத்தத்தின் முடிவில் அவன் கொல்லப்பட வேண்டும்"
"பார்த்திபன் ? "
"எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கி விடும். ஆதித்தனின் கதையை முடித்து விட்டாலே இவ்வளவு பெரிய வீரனையே சாய்த்து விட்டார்களே என்று மனச்சோர்வில் சோர்ந்து விடுவான் பார்த்திபன். அதன் பிறகு அவனை வீழ்த்துவது எளிது"
"ஆதித்தன் மோகினி தீவிற்கு சென்று சேரா விட்டால் நீலன் மலைநாட்டை நோக்கி கிளம்பி விடுவான். மலைநாடு செல்லும் நீலன் அங்கே தயாநிதியை சந்தித்து விட்டால் நம்முடைய நாடகம் அம்பலமாகி விடும்"
"உண்மைதான். ஆனால் நாம் இப்போது அவனைப் பற்றி கவலைப்பட போவதில்லை"
"ஏன் அப்படி சொல்கிறாய்?"
" காரணம் இருக்கிறது. நீலன் ஆபத்தை தன் கப்பலில் சுமந்து செல்கிறான். அவன் கப்பலில் இருக்கும் மார்க்கதரிசியின் தங்கம் தான் அவனது முதல் எதிரி .அந்த பொக்கிசம் அந்த கப்பலில் இருக்கும் வரை ஆபத்து அவனை விரட்டிக் கொண்டே தான் இருக்கும். மார்க்கதரிசியின் தங்கம் ரகசிய தீவிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு நீலனின் கப்பலில் பயணமாவது இவ்வளவு நேரத்தில் கடல் பிராந்தியம் முழுவதும் தீயாகப் பரவி இருக்கும். அந்த தங்கத்தை கைப்பற்ற கடல் கொள்ளையர்கள் முயற்சி செய்யலாம் .அந்த புதையல் கைக்கு கிடைத்து விட்டால் பல தலைமுறைகள் உட்கார்ந்து கொண்டே தின்னலாம். அந்த அரிய வாய்ப்பை யாரும் தவற விடமாட்டார்கள். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இந்நேரம் அவனது கப்பலை யாரோ ஒரு கடல் கொள்ளையன் பின் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். நீலன் மோகினி தீ வை விட்டு கிளம்பிய மறுகணமே ஆபத்து அவனை பின் தொடர ஆரம்பித்து விடும். அவனும் அவன் கப்பலும் அதிலிருக்கும் புதையலும் மலை நாட்டிற்கு சென்று சேர்வது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை தான் " என்றாள் ரத்னாவதி நிதானமாக ..
ரத்னாவதியின் பேச்சை கேட்ட மதிமாறன் அயர்ந்து போய் நின்றான். "அற்புதம் ரத்னா வதி! அற்புதம்" என்ற மதிமாறன் சந்தோசமிகுதியில் அவளை கட்டியணைத்து கொண்டான்.
"என்னை படுக்கையறையில் பயன்படுத்தி கொள்ள தெரிந்த உங்களுக்கு அரசியல் களத்தில் பயன்படுத்தி கொள்ளதெரியவில்லையே?" என்றாள் அவள்.
"தவறுதான். என்னை மன்னித்து விடு. இனி எதை செய்வதாக இருந்தாலும் உன்னை கேட்டு விட்டே செய்கிறேன் என் கண்ணே" என்றான் மதி மாறன் .
மறுநாள் காலை!
பிசாசு பள்ளத்தில் மதிமாறனின் படைகள் அணிவகுத்து நின்றிருந்தன.மதிமாறனின் படையில் சொற்பமான பீரங்கிகளே இடம் பிடித்திருந்தன. அவனுக்கு எதிரே இருந்த பார்த்திபனின் படையில் அதிகமான பீரங்கிகள் அணிவகுத்து நின்றிருந்தன. அவனது பிரதானமான பொம்மை படை உண்மையான வீரர்களுக்கு நடுவே ஓளிந்திருந்தது.
சங்கு ஓன்றை ஊதி போரை தொடங்கி வைத்தான் ஆதித்தன். நெருப்பில் காய்ச்சப்பட்ட இரும்பு குண்டுகள் பீரங்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்தன. அவை கீழே விழுந்து வீரர்களுக்கு நடுவே ஓடி பலத்த சேதத்தை விளைவித்தன. குண்டின் நெருப்பு தணலால் நிறைய வீரர்கள் தீக்காயம் பட ஆரம்பித்தனர்.
ஆதித்தன் குதிரையில் தாவி ஏறி எதிரிகளை நோக்கி பாய்ந்தான்.அவனது வாள் காற்றில் நாலாபுறமும் சுழன்றது. அவனது குதிரை விரைந்த திசையில் எல்லாம் பலத்த சேதம் விளைய ஆரம்பித்தது.
பார்த்திபன் தன்னுடைய உண்டி வில் படையினருக்கு உத்தரவு கொடுத்தான். அவர்கள் உண்டி வில்லில் தங்க நாணயங்களை வைத்து வானத்தை நோக்கி வீசினர். திடிரென்று களத்தில் தங்க நாணயமழை பொழிய ஆரம்பித்தது.
பார்த்திபனிடம் சொற்பமாக இருந்த நாணயங்கள் அவற்றின் குணத்தை காட்ட ஆரம்பித்தன. திடிரென்று தங்க மழை பொழிவதை கண்ட மதிமாறனின் வீரர்கள் யுத்தத்தை மறந்து அவற்றை பொறுக்க ஆரம்பித்தனர்.
அதை கண்ட மதிமாறன் அதிர்ச்சியடைந்தான். "முட்டாள்களே! சண்டை செய்யுங்கள். அவற்றை விட அதிக காசுகளை நான் தருகிறேன்" என்று கதற ஆரம்பித்தான்.
அவனுடைய பேச்சை கேட்கத்தான் ஆட்கள் இல்லை. நடந்த சம்பவங்களை கவனித்து கொண்டிருந்தார்கள் சிறையில் இருந்து போர் கைதிகளாக மாறியவர்கள். அவர்களுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. அவர்கள் படையிலிருந்து பிரிந்து பார்த்திபனிடம் சேர்ந்து கொண்டனர்.
இப்படி ஒரு திருப்பத்தை பார்த்திபனும், ஆதித்தனும் எதிர்பார்க்கவேயில்லை. இந்த சம்பவம் மதி மாறனை நிலை குலைய செய்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படையின் ஒரு பிரிவு எதிரிகளுடன் இணைந்து கொண்டதில் மதிமாறனின் மடைகளிடம் குழப்பம் அதிகரித்தது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.
கூச்சல் குழப்பம் அதிகரித்து கொண்டே போனது. புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு தளபதிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆலோசனை கேட்க மதி மாறனை தேட ஆரம்பித்தனர்.
மதிமாறன் தன்னுடைய மன உறுதியை இழந்திருந்தான். எல்லாமே தனக்கு எதிராக நடக்க ஆரம்பித்து விட்டதால் அவன் பயந்து விட்டான். போர் களம் என்பது அவனுக்கு புது அனுபவம். முன் பின்னாக அவன் போரில் பங்கெடுத்தவனும் அல்லன்.
இவர்களிடம் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சிறையிலேயே கழித்து விட வேண்டியது தான் என்று நினைத்தவன் இப்போதைக்கு உயிரை காப்பாற்றி கொண்டு விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டான். கூச்சலும், குழப்பமும் அதிகமாக இருந்த தருணத்தில் தன் படைகளை நட்டாற்றில் விட்டு விட்டு குதிரையை திருப்பிக் கொண்டு மாளிகையை நோக்கி கிளம்பி விட்டான்.
மதி மாறனை களத்தில் காணாததால் படையின் ஊக்கம் குறைய ஆரம்பித்தது. வழி நடத்த தலைவன் இல்லாத படை போர் புரியும் திறனை இழந்து எதிரியிடம் சரணடைய ஆரம்பித்தது.
குறுகிய நேரத்திலேயே யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது.பார்த்திபனும், ஆதித்தனும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்கும் மகிழ்ச்சி பிரவாகம் பெருக ஆரம்பித்தது.
தன்னுடைய மாளிகையை நோக்கி மின்னல் வேகத்தில் குதிரையை செலுத்தி கொண்டிருந்தான்மதிமாறன். இங்கிருந்து எப்படியாவது தப்பி ஓடிவிட வேண்டும். நீலனுக்கு முன்பாக மலைநாட்டை அடைந்து தயாநிதியிடம் ரத்னாவதியை அவனது மகளாக சித்தரிக்க வேண்டும்.
மருமகனாகி விட்ட தனக்காக தயாநிதி உதவி செய்து தான் தீர வேண்டும். எப்படியும் மலைநாட்டு அரசனிடம் பேசி படை உதவி பெற்று தருவான் தயாநிதி . அதை வைத்து மீண்டும் ரகசிய தீ வை தன்னுடைய ஆளுகைக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்டமிட்டது அவனது கோழை மனது.
குதிரையிலிருந்து இறங்கி வந்தவனை பார்த்த ரத்னா வதி "என்னாயிற்று? " என்றாள்.
"நமக்கு பின்னடைவு. சிறை கைதிகள் எதிரிகளுடன் இணைந்து கொண்டு விட்டார்கள். அந்த கலக தலைவன் பொற்காசுகளை விண்ணில் வீசி நம் ஆட்களை வளைத்து விட்டான். நான் வேறு வழியின்றி உயிர் தப்பி ஓடி வந்து விட்டேன். நான் உடனடியாக இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். எதிரிகள் துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முன்பாக நாம் கிளம்பியாக வேண்டும்"
"அதற்கு நீங்கள் முதலில் சிறைக்கு செல்ல வேண்டும்" என்றாள் ரத்னாவதி .
" என்ன உளறுகிறாய்?" என்றான் திடுக்கிட லோடு மதிமாறன்.
"உளறவில்லை. உண்மையை சொல்கிறேன்" என்ற ரத்னாவதியின் உதடுகளில் ஓரு விசமப் புன்னகை பூத்தது.
" எதிரிகள் உன்னையும் விலைக்கு வாங்கி விட்டார்களா?" என்றான் மதிமாறன் அதிர்ச்சியுடன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக