திங்கள், 2 ஜனவரி, 2023

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 80

இரண்டாவது நரன்

தனக்கு முன்பாக மலை நாட்டுக்கு செல்ல மதிமாறன் முனைப்பு காட்டுவான் என்று தெரியாத ஆதித்தன் தன்னுடைய சிறிய படகான கழுகில் மோகினி தீவிற்கு விரைந்து வந்து கொண்டிருந்தான்.

அவனது வரவிற்காக துறைமுகத்தில் தர்மபாலனும், தீவினுள் நீலன் உட்பட நண்பர்கள் குழுவும் காத்து கொண்டிருந்தது.தர்மபாலன் ஆதித்தனைமடக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தான்.முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகம் என்பது போல் தனக்கும் கடலில் தான் பலம் அதிகம் என்று தர்மபாலன் நினைத்தான். அதே போல் கடலில் அனுபவம் பெற்ற நீலன் எதிர் தரப்பில் இருப்பதை அவன் மறந்துவிட்டிருந்தான்.

ஆதித்தன் வெகு விரைவிலேயே மோகினி தீவிற்கு வந்து சேர்ந்து விட்டான். எதிரியின் வருகையை பார்த்து தர்மபாலன் மகிழ்ச்சி அடைவது இதுவே முதல் முறை. ஆதித்தன் விரைவாக திரும்பி வந்து விட்டதால் இனி முத்தழகி நீண்ட நேரம் இங்கே நிற்காது. சீக்கிரமாகவே இங்கிருந்து கிளம்பி விடும் என்று தனக்குக்தானே ஆறுதல் கூறிக் கொண்டான் அவன்.

முத்தழகியில் இருந்த பொக்கிசங்களுக்கு பலத்த காவல் போட்டிருந்தான் யவனன். கப்பலில் இருந்து யாரும் இறங்கவோ ஏறவோ அவன் அனுமதி மறுத்துவிட்டிருந்தான். அதனால் வேறு வழியின்றி தர்மபாலன் நாய் எலும்பு துண்டை பார்ப்பது போல் அந்த கப்பலை பார்த்து கொண்டிருந்தான்.

அந்த காத்திருப்பு ஆதித்தனின் வருகையால் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்று அவன் நம்பினான். ஆதித்தன் திரும்பி வந்துவிட்டதை பார்த்த நண்பர்கள் குழு மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியது.

அவனை கட்டி தழுவி தோழர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். ஆதியை அங்கே பார்த்த ஆதித்தன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

"இந்த சிறுவன் எப்படி இங்கே வந்தான்? இவனைத் தானே நஞ்சுண்டன் கடத்தி சென்றான்?" என்றான் ஆதித்தன் கேள்விகுறியோடு.

" நான் அவனிடமிருந்து தப்பி வந்து விட்டேன்" என்ற ஆதி நடந்த விசயங்களை விவரித்தான்.

"அந்த பாவியை நான் கல்லறைதீவில் உயிரோடு சமாதி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அவன் உயிரோடு தப்பி பிழைக்க வேண்டுமானால் அவனுடன் இருக்கும் மூவரை கொன்று தின்றால் தான் முடியும். எனக்கு போட்டியாக இன்னொரு நரனை உருவாக்க வழி செய்து விட்டு வந்திருக்கிறேன்" என்றான் நீலன் பெருமிதமாக .

"இந்த சிறுவனை வில்லவனும் அவனது மனைவியும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவன் இங்கே இருக்கும் விசயம் அவர்களுக்கு தெரியாது"

ஆதியின் முகத்தில் ஏக்கம் படர்ந்தது.

"கவலைப்படாதே தம்பி. நான் ரகசிய தீவிற்கு திரும்ப வரும் போது உன் பெற்றோர்களை நீ சந்திக்கலாம். நீ என் உயிரை காப்பாற்றி இருக்கிறாய். அதை உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன். அதற்கு பிரதியுபகாரமாக உன்னை என் வாரிசாக்குவதென்று முடிவு செய்திருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்னிடம் தொழில் கற்றுக் கொள்ள உனக்கு விருப்பமா?" என்றான் நீலன்.

"எனக்கு விருப்பம் தான் . கடலை முழுதாக அறிய எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றான் ஆதி.

'அதற்கென்ன ?முழுதாக தெரிந்து கொண்டால் போயிற்று .ஓன்றை மட்டும் நினைவில் வைத்து கொள். நான் இறந்தால் என் கப்பலும், என் தலையும் உனக்குத்தான் "

"தலையா?அதை வைத்து என்ன செய்வது?" என்றான் ஆதித்தன்.

" எல்லாம் காரணமாகத் தான் சொல்கிறேன். தலையில்லாத உடலாகத் தான் என்னை புதைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கடைசி ஆசை." என்றான் நீலன் இலக்கில்லாமல் பார்த்தபடி.

அவனது புதிர் பேச்சு அங்கிருந்த வர்களை குழப்பியது.

சிறிது நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது.

சூழ்நிலையை கல கலப்பாக்க விரும்பிய யவனன் "ஆதித்தா! உனக்கொரு விசயம் தெரியுமா? நீலன் மதுவருந்துவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டான். யவன நாட்டிலிருந்து வந்த மதுவை கூட அவன் குடிக்க மறுத்து விட்டான்"

" உண்மையாகவா?" என்றான் ஆதித்தன் வியப்புடன்.

"ஆமாம். அந்த சைத்தானை நான் விட்டு விட்டேன். அதனால் நான் இழந்தவைகள் அதிகம்."

"கண்கெட்ட சூரிய வழிபாடு என்பது போல் வயதான காலத்தில் திருந்தியிருக்கிறாய். பரவாயில்லை. இப்போதாவது திருந்தி னாயே?"

உரையாடலை கவனித்து கொண்டிருந்த பைராகி"நாம் எதிர்பார்த்து காத்திருந்த ஆதித்தனும் வந்து விட்டான். நாம் இங்கிருந்து கிளம்பலாமே?" என்றான்.

அதற்குள்ளாக வா? இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிவிட்டு போகலாமே?" என்றான் மகேந்திரன்.

"மன்னித்து கொள் மகேந்திரா! விலை உயர்ந்த பொருட்களை கப்பலில் வைத்து கொண்டு இங்கே தாமதிப்பது சரியல்ல. நாங்கள் சீக்கிரமாக மலை நாட்டிற்கு சென்று இந்த பொக்கிசங்களை ஒப்படைக்க வேண்டும்" என்றான் நீலன்.

அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு விட்ட மகேந்திரனும் யவனனும் அவர்கள் கிளம்ப சம்மதித்தனர்.

இருவரிடமும் ப்ரியாவிடை பெற்றுக் கொண்டு நண்பர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் துறைமுகத்திற்கு வந்து சேரும் வரை வழித்துணையாக யவனன் வந்தான்.

அவர்கள் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததை தொலைநோக்கி மூலம் பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டன் உற்சாகமானான்.

"தர்மபாலா .! இங்கே வந்து பார். இரைகிளம்பி விட்டது. நாம் அதை பின் தொடரும் நேரம் நெருங்கி விட்டது" என்று கூவினான் அவன்.

தர்மபாலன் விரைந்து வந்து நஞ்சுண்டனிடம் இருந்த தொலைநோக்கி கண்ணாடியை பிடுங்கினான். அதில் கண்ணை வைத்து பார்த்தவன் சந்தோசத்தில் மூழ்கினான்.

நீலனின் கண்களில் தொலைநோக்கியின் எதிரொளி பட்டதை உணர்ந்தவன் கப்பலை கவனித்தான். அது தர்மபாலனுடையது என்று கண்டு கொண்டவன்" இந்த கப்பல் எதை இறக்க அல்லது ஏற்றி செல்ல இங்கே காத்திருக்கிறது?" என்றான் யவனனிடம்.

"அப்படி எந்த வணிக நடவடிக்கைகளிலும் இந்த கப்பல் ஈடுபட்டது போல் தெரியவில்லை. நீங்கள் இங்கே வந்த அன்றுதான் இந்த கப்பலும் இங்கே வந்தது. "

"இது வளநாட்டு மாலுமி தர்மபாலனுக்கு சொந்தமானது. அவன் பொக்கிசங்களை கைப்பற்ற எங்களை பின்தொடர்ந்து வருவது போல் தோன்றுகிறது இப்போது கூட அவன் எங்கள் நடவடிக்கைகளை தொலைநோக்கி மூலம் கண்காணித்து கொண்டிருக்கிறான். என்று நீலன் தன்னுடைய சந்தேகத்தை கூறினான்.

"நான் வேண்டுமானால் அவனை விசாரணை செய்து அவனது பயணத்தை தாமதப்படுத்தவா?" என்றான் யவனன் பரபரப்புடன்

"வேண்டாம் நண்பா! நான் அவனைப் பார்த்து கொள்கிறேன்" என்றான் நீலன்.

யவனனிடம் விடை பெற்றுக் கொண்டு நண்பர்கள் கிளம்பினார்கள்.

அவர்கள் கப்பலுக்கு வந்து சேர்ந்ததும் நங்கூரம் உயர்த்தப்பட்டு கப்பல் அங்கிருந்து கிளம்பியது. ஹேர்குலஸ் கப்பலை இரண்டு முறை வட்டமிட்டு விட்டு யவனனின் தோள்களில் அமர்ந்தது. யவனன் கரையில் கண்ணீர் மல்க நின்றபடி போய் வாருங்கள் நண்பர்களே என்று கையை ஆட்டினான். 

கப்பல் மோகினி தீவிலிருந்து கிளம்பியது.தர்மபாலனின் கப்பலும் அங்கிருந்து கிளம்பியது.

தன் அறைக்கு போய் விட்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்த நீலன் தன்னை தர்மபாலனின் கப்பல் பின்தொடர்கிறதா என்று பார்க்க தொலைநோக்கியை எடுத்து கண்ணில் பொருத்தினான்.

அந்த கப்பலில் இருந்தும் யாரோ தன்னை தொலை நோக்கியில் பார்ப்பதை நீலன்கண்டான். அவனைப் பார்த்து நட்புடன் கை அசைத்தான். அவனும் தொலைநோக்கியை கீழே இறக்கிவிட்டு கையை அசைத்தான். அவன் நஞ்சுண்டன் .

அவனைப் பார்த்ததும் இடி விழுந்த நாகம் போலானான் நீலன். "இவன் எப்படி உயிரோடு இங்கே வந்தான்?" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.இன்னொரு நரன் எப்படி உருவானான் என்பது புரியாமல் குழம்பினான் அவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக