வெள்ளி, 6 ஜனவரி, 2023

ரகசியதீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 82

வழி இல்லாத வழி

நீலன் நஞ்சுண்டனைப் பற்றி எச்சரித்து சொன்ன வார்த்தைகளிலிருந்து புதிதாக ஒரு வழியை கண்டுபிடித்து விட்டிருந்தான் தர்மபாலன்.

நஞ்சுண்டனை கடல் கொள்ளையர் தலைவனாக்கி தன்னை பணயக் கைதியாக மாற்றிக் கொண்டு நீலனின் கப்பலின் மேல் தாக்குதல் நடத்தி மார்க்கதரிசியின் புதையலை அடைய திட்டமிட்டிருந்தது அவனுடைய குள்ள நரிமூளை.

அவனது திட்டத்தை கேட்ட பூபதியும், நஞ்சுண்டனும் உண்மையாகவே வியந்து தான் போயினர்.

"இது ஒரு அற்புதமான திட்டம். இது எப்படி உன்னுடைய மூளையில் உதித்தது என்று தான் எனக்கு தெரியவில்லை" என்றான் பூபதி.

"இது என்னுடைய திட்டமல்ல. அந்த முட்டாள்கிழவன் எனக்கு தற்செயலாக அவன் வாயின் மூலமாக சொல்லிய திட்டம். தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழியை கேட்டிருக்கிறேன். இன்று தான் அதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இப்படி ஒரு திடீர் திருப்பத்தை அவன் சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டான். இனி தான் ஆட்டம் ஆரம்பம். வள நாட்டின் கொடியை இறக்கிவிட்டு கடல் கொள்ளையர்களின் மண்டையோட்டு கொடியை ஏற்றுங்கள்" என்று தன்னுடைய ஆட்களுக்கு உத் தரவிட்டான். சில நிமிடங்களில் வள நாட்டின் கொடி இறக்கப்பட்டு மண்டையோட்டு கொடி ஏற்றப்பட்டது.

"குறைந்த கப்பலின் வேகத்தை மீண்டும் அதிகரியுங்கள். அந்த முட்டாள்கிழவனை நாம் எப்படியாவது பிடித்ததாக வேண்டும்" என்றான் நஞ்சுண்டன்.

"இந்நேரம் அந்த கிழவன் மண்டையோட்டு கொடி ஏற்றப்பட்டதை கவனித்திருப்பான். அவன் உடனே இங்கே என்ன நடந்தது என்று தன்னுடைய தொலை நோக்கியில் கவனிக்க தொடங்கியிருப்பான். என்னை உடனே கப்பலின் கொடி மரத்தில் சும்மா வேனும் கட்டி வையுங்கள்" என்றான் தர்மபாலன்.

அவனது பேச்சு உடனே செயலாக்கப்பட்டது.

அவன் சொன்னது போலவே நீலன் அந்த கொடி மாற்றத்தை கவனித்து விட்டிருந்தான். அவன் தன்னுடைய தொலை நோக்கியில் பார்த்த போது தர்மபாலன் கொடி மரத்தில் கட்டப்பட்டிருந்த காட்சியை பார்த்தான்.

"அந்த துரோகியை நம்ப வேண்டாம் என்று அந்த தர்மபாலனிடம் படித்து படித்து சொன்னேன். அவன் என்னுடைய அதிதி. எனக்கு பாதகமாக நடக்க மாட்டான் என்று அவனுடைய சுயரூபம் தெரியாமல் சிறு பிள்ளை போல் கூறினான். இப்போது நான் கூறியது போலவே நடந்து விட்டது. அந்த துரோகி தர்மபாலனை தன் பிடிக்குள் கொண்டு வந்து விட்டான்"

அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் "தர்மபாலனை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்து விட்டான் சரிதான். ஆனால் கப்பலில் உள்ள மற்றவர்கள் அவனது ஆக்ரமிப்பிற்கு எதிராக எதையும் செய்தது போல் தெரியவில்லையே?" என்றான்.

" பயல் பேசுவதில் கில்லாடி. பேசி பேசியே மற்றவர்களின் மண்டையை கழுவியிருப்பான். அவர்களையும் தன்னுடைய கூட்டாளிகளாக மாற்றி இருப்பான்.புதையலில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆட்களை தன் பக்கம் இழுத்திருப்பான். பாம்புக்கு வாயில் விசம் . இவனுக்கு பேச்சில் விசம் "

"எனக்கென்னவோ இது திட்டமிட்ட நாடகமாக தெரிகிறது. இதில் ஏதோ சதி வேலை இருப்பதாக சந்தேகிக்கிறேன்."

"நீ நினைப்பது போலவும் இருக்கலாம்"

"நாம் அவர்களை முந்தி செல்லாவிட்டால் அவர்களிடம் அகப்பட நேரும்."

"அவர்களை முந்திசெல்வது நமக்கு சாத்தியமில்லை"

"அவர்களை விட நாம் முன்னால் தானே இருக்கிறோம்? பிறகு ஏன் சாத்தியமில்லை என்று சொல்கிறாய்?"

"ஆதித்தா! நீ தரையில் வல்லவனாக இருக்கலாம். இங்கே கடலில் உனக்கு அனுபவம் போதாது. இதை நீ ஒப்புக் கொள்வாய் என்று நினைக்கிறேன்"

"நிச்சயமாக இதை நான் ஒப்புக் கொள்வேன். ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் வல்லவனாக இருப்பது அசாத்தியம். இங்கே நீ தான் அனுபவம் மிக்கவன். நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?"

"ஓரு விசயத்தை நீ கவனிக்க மறந்து விட்டாய். நம் கப்பல் கனமான பொருட்களை சுமந்து செல்வதால் அதன் வேகம் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால் எதிரியின் கப்பலில் எந்த சுமையும் இல்லை. அதனால் அவனது கப்பலின் வேகமும் கூடுதலாக இருக்கும். அதனால் மெதுவாக செல்லும் நம்முடைய கப்பலை தர்மபாலனால் சீக்கிரமாகவே எட்டிப் பிடித்து விட முடியும். நம் பொக்கிசங்களை கொள்ளையடித்து விட்டு நம்மையும் கொன்று விட்டு நம் கப்பலையும் மூழ்கடித்துவிடுவார்கள். பிறகு எப்போதோ அடிக்கும் புயல் மழையில் நம்முடைய கப்பலும் நாமும் நீரில் மூழ்கி அழிந்து விட்டோமென்று வதந்தியை பரப்பி விடுவார்கள். உலகம் அதையும் நம்பி விடும். எதிரிகள் பொக்கிசத்தோடு காணாமல் போய் விடுவார்கள். இது தான் அவர்களின் திட்டமாக இருக்க வேண்டும்"

"நீ சொல்வது போல் நடக்க வே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த திட்டத்தை தகர்க்க வேறு வழி இல்லையா?" என்றான் ஆதித்தன்.

"ஓரே ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதுவும் நாம் பயணிக்க முடியாத வழியாக இருக்கிறது. அங்கே தான் நாம் தப்பும் வழியும் இருக்கிறது"

"ஓரே வழிதான் இருக்கிறது. அதுவும் பயணிக்க முடியாத வழி என்கிறாய். பிறகு அங்கே ஏன் செல்ல வேண்டும்?" என்றான் ஆதித்தன் குழப்பத்துடன் .

"நாம் தப்பிக்க வேண்டும். அதே நேரம் எதிரிகளையும் ஒழிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க இதை விட சிறந்த வழி ஓன்றுமில்லை" என்ற நீலன்" நான் சொல்வதை விட நீயே நடப்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்" என்றபடி சுக்கானை திருப்பி கப்பலின் திசையை மாற்றினான்.

" கப்பலின் திசையை மாற்றுகிறாய். இப்போது நாம் எங்கே போகிறோம்?" என்றான் ஆதித்தன்.

"மண்டையோட்டு கணவாய்க்கு " என்று பதில் தந்தான் நீலன்.

நீலனின் முத்தழகி கப்பல் திடிரென்று தன்னுடைய திசையை மாற்றுவதை கவனித்தான் நஞ்சுண்டன் .

" அவன் தன்னுடைய கப்பலின் திசையை திடிரென்று மாற்றுகிறான். ஏன் என்று புரியவில்லை" என்றான் நஞ்சுண்டன் .

" அவன் போகும் திசையை வைத்து அவன் எங்கே போகிறான் என்று உன்னால் கணிக்க முடியவில்லையா?"

"நான் அவனோடு அந்த கப்பலில் பயணித்திருக்கிறேன். அவன் ஒரு முறை கூட திசை மாறி சென்றதில்லை. அவன் சென்ற திசையில் நான் இதுவரை பயணித்ததில்லை" என்றான் நஞ்சுண்டன் குழப்பத்தோடு.

" அவன் செல்வது மண்டையோட்டு கணவாய்க்கு. அவன் செய்வது முட்டாள்தனமான செயல். கிறுக்கன் கூட இப்படியான செயலில் ஈடுபட மாட்டான் "

"நீலன் கிறுக்கன் அல்லவே!"

"ஆம். அதுதான் என்னை குழப்புகிறது. அவன் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அங்கே கப்பலை கொண்டு செல்கிறான்"

"மண்டையோட்டு கணவாய் .இதுவரை நான் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே?"

"அது கடல் நடுவே இருக்கும் இரண்டு தீவுகளின் மலைப் பகுதிகள் இணைந்த பாலம் போன்ற பகுதி. அந்த பாலமும் அதன் கீழ் உள்ள மலை பகுதியும் ஓரு மனிதனின் மண்டையொட்டை போலவே காட்சியளிக்கும். அதனால் தான் அந்த இடத்திற்கு அப்படி ஒரு பெயர். அதன் வழியாக நம் கப்பலால் பயணிக்க முடியும். ஆனால் நீலனின் கப்பலால் பயணிக்க முடியாது."

"ஏன்?"

"நம் கப்பலின் கொடிமரம் கணவாய் பாலத்தின் கீழே எளிதாக நுழைந்து மறுபுறம் வந்துவிடும். ஆனால் நீலனின் கொடிமரம் பாலத்தினை விட உயரம். அவன் அதில் தன் கப்பலை நுழைத்தால் கொடிமரம் பாலத்தில் மோதி உடைந்து கம்பலின் மீதே விழுந்துவிடும். அந்த முட்டாள் அதைத்தான் செய்ய விரும்புகிறான் போல தெரிகிறது"

"நம் கையில் புதையல் அகப்படாமல் இருக்க அதை ஜல சமாதியாக்க நினைக்கிறானோ?"

" இருக்கலாம். அந்த கிறுக்கன் அதையும் செய்யக் கூடியவன் தான் "

"அப்படியானால் அவன் கப்பலை நாம் முந்தி சென்று பிடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து தொலைப் பான் "

தர்மபாலனின் கப்பல் வேகம் பிடித்தது.

"அவர்கள் நம்மை விரட்டி வருகிறார்கள்" என்றான் ஆதித்தன்.

"வரட்டும் " என்றான் நீலன் அமைதியாக . " கப்பலின் வேகத்தை குறையுங்கள்" என்று ஆணையிட்ட நீலன் ஆதித்தனைப் பார்த்து

"அதோ பார் .அதுதான் மண்டையோட்டு கணவாய் " என்றான் .

அவன் காட்டியதிசையில் பார்த்தான் ஆதித்தன். இரண்டு தீவுகளுக்கு நடுவே பாலம் போல் இரண்டு மலைபகுதிகள் இயற்கையாகவே இணைந்திருந்தன. பாலத்தின் நடுவே இருந்த வெற்றிடம் மனித மண்டையோடு போல் காட்சியளித்தது. அதை பார்த்தவுடனேயே ஆதித்தனுக்கு நீலனின் கப்பலால் அதை கடக்க முடியாது என்பது புரிந்து விட்டது.

"நீ சொன்ன கடக்க முடியாத வழி இதுதானா ?"

"ஆமாம். கப்பலின் கொடி மரத்தின் உயரம் பாலத்தின் மேல் பாகத்தை விட உயரம். இதில் கொடிமரம் தட்டும் என்பதால் ஒரு முறை வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறேன். எனக்கு தடை கல்லாக இருந்ததை வெற்றி படிக்கட்டாக மாற்ற போகிறேன்."

" கப்பலின் கொடி மரத்தின் மேல் பாகத்தை வெட்டி அதன் உயரத்தை குறைக்க போகிறாயா?"

"அது என் மனைவியின் கைகளை வெட்டுவதற்கு சமம். என் உயிரே போனாலும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன், " என்றான் நீலன்.

நீலனின் திட்டம் என்னவென்று புரியாமல் திகைத்தான் ஆதித்தன்.

தர்மபாலனின் கப்பல் முத்தழகியை எட்டி பிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக