ரகசிய தீவு
அத்தியாயம் 83
சூழ்ச்சி வலை
நீலனின் முத்தழகி கப்பல் மலை பாலத்தை நெருங்கி கொண்டிருந்தது. நீலன் தன்னுடைய கப்பலின் வேகத்தை வெகுவாக குறைத்து விட்டிருந்தான். பாலத்தின் மீது கப்பலின் கொடிமரம் மோதி உடைந்து கப்பலின் மீது விழுந்தால் கப்பல் கடலில் மூழ்கி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நீலன் வேகத்தை குறைத்து விட்டிருந்தான். மலை பாலத்திற்கு இருபதடி தொலைவு இருக்கும் போதே நங்கூரத்தை பாய்ச்சி கப்பலைநிலை நிறுத்தி விட்டான் நீலன்.
அவன் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்படுவதை கவனித்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் . "அந்த முட்டாள்கிழவன் வழி தெரியாமல் வகையாக மாட்டிக் கொண்டு விட்டான். கிறுக்கு தனமாக நங்கூரத்தை பாய்ச்சி கப்பலையும் நிலை நிறுத்தி விட்டான். இப்போது மலை பாலத்தை கடந்து செல்ல வழியில்லாமல் திருதிருவென்று விழித்து கொண்டிருக்கிறான். இது தான் சரியான நேரம். நாம் அவன் மீது தாக்குதல் நடத்த " என்று சந்தோஷ மிகுதியில் கூவினான் நஞ்சுண்டன்.
"அவனது திறமையை நீதவறாக கணித்து விட்டாய். அவன் காரணம் இல்லாமல் இந்த வழியாக கப்பலை செலுத்தி வந்திருக்க மாட்டான். இப்படி வழி தெரியாமல் திகைத்து நிற்பது அவனது சுபாவம் அல்ல" என்றான் தர்மபாலன்.
"யானைக்கும் அடி சறுக்கும் என்ற முதுமொழி தமிழில் இருப்பதை மறந்து விட்டாயா? எதிரியின் பலவீனமான தருணத்தில் அவனை வீழ்த்துவது தான் நல்லது " என்றான் நஞ்சுண்டன் .
"எனக்கென்னவோ அவன் மனதில் ஏதோ ஒரு திட்டம் வைத்துக் கொண்டு தான் நம்மை இங்கே அழைத்து வந்திருப்பானோ என்று என் மனதிற்கு தோன்றுகிறது."
" அவனது எந்த திட்டமும் என்னிடம் பலிக்காது. நான் இப்போது நம் கப்பலை வேகமாக செலுத்தி பாலத்தை தாண்டி சென்று திருப்பி கப்பலை நிறுத்தப் போகிறேன். முத்தழகிக்கு நேர் எதிராக நம் கப்பல் மறித்து நிற்க போகிறது.கொடிமரம் தடுப்பதால் அவனால் பாலத்தை தாண்டி முன்னேற முடியாது. இருக்கும் ஒரே வழி வந்த வழியாகவே அவன் திரும்ப செல்வது தான். அவன் தன் கப்பலின் நங்கூரத்தை எடுத்தால் தான் கப்பலை நகர்த்தவே முடியும். அப்படி அவன் நங்கூர சங்கிலியில் கையை வைத்தவுடன் நாம் நம் தாக்குதலை தொடங்கி விட வேண்டும்" என்ற நஞ்சுண்டன் கப்பல் முன்னேறி செல்ல உத்தரவிட்டான்.
அவனது கப்பல் முத்தழகியை நெருங்கிய போது கொடிமரத்தில் கட்டப்பட்டிருந்த தர்மபாலன் நீலனை பார்த்து கத்தினான். "நீலா! நீ இவனை பற்றி எச்சரித்தது உண்மைதான். இந்த துரோகி என் ஆட்களை எப்படியோ பேசி சரிகட்டி அவன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டான். என்னையும் கைதியாக்கி விட்டான். என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும்" என்றான் வஞ்சகமான குரலோடு.
"நன்றாக நடிக்கிறாய் நண்பா. நீ கடலோடியாக வந்ததற்கு பதிலாக நாடகத்தில் நடிக்கப் போயிருக்கலாம்" என்றான் நீலன் எரிச்சலுடன் .
தர்மபாலனின் கப்பல் முத்தழகியை தாண்டி சென்று பாலத்தை கடந்தது.வெற்றிகரமாக பாலத்தை தாண்டிய கப்பல் நேர் எதிராக திரும்பி நின்றது. அதை பார்த்ததும் நீலனின் முகம் மலர்ந்தது.
"பைராகி .எல்லாம் தயாரா?" என்றான் அவன்.
"தயார்" என்ற பைராகி கருணாகரன் பரிசாக கொடுத்த ஒற்றை பீரங்கியை மேல் தளத்திற்கு ஆதியின் உதவியோடு உருட்டி வந்தான்.
" எல்லா பாகங்களையும் சரியாகப் பொருத்தி விட்டேன். தாக்குதல் நடத்த தயாராக உள்ளது இந்த ஆயுதம்" என்றான் பைராகி .
"இதுவெல்லாம் உன் நண்பனின் யோசனை தான். இப்போது இங்கே ஒரு வாண வேடிக்கை நடக்கப் போகிறது. கண்டு களிக்க தயாராக இரு" என்று ஆதித்தனின் முதுகில் தட்டினான் நீலன்.
பைராகி பீரங்கியின் கோணத்தை சரிபார்த்து விட்டு வெடிமருந்தை நிரப்ப ஆரம்பித்தான். ஆதி ஒரு இரும்பு குண்டை அதன் குழாய்களுக்குள் செலுத்தினான்.
ஆதித்தனுக்கு நீலனும், பைராகியும் சேர்ந்து வகுத்த திட்டம் புரிய ஆரம்பித்தது.
வெடிமருந்து திரியை பற்ற வைத்தான் பைராகி . வெடிமருந்தின் விளைவால் சீறிக் கொண்டு கிளம்பிய இரும்பு குண்டு மலை பாலத்தின் நடுப்பகுதியை தகர்த்தது. இரும்பு குண்டோடு தகர்ந்த பாறை துண்டும் சேர்ந்து விசையோடு தர்மபாலனின் கப்பல் மேல் விழுந்தது.
பீரங்கி வெடித்ததால் ஏற்பட்ட பின் விளைவை நங்கூரம் பாய்ச்சியதால் கப்பல் தாங்கி கொண்டது. ஆயுதத்தின் கோணத்தை மாற்றிய பைராகி அடுத்தடுத்த குண்டுகளை வெடித்தான். ஆகாயத்தில் வெடித்து கிளம்பிய உலோக குண்டு புவி ஈர்ப்பு விசையோடு வேகம் பெற்று கப்பலின் மீது விழுந்து அதை சின்னாபின்னமாக்கியது. என்ன நடக்கிறது என்று தெரியும் முன்பாகவே தர்மபாலனின் கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. கப்பல் மூழ்க ஆரம்பித்ததை பார்த்ததர்மபாலன்" முட்டாளே! அவன் திட்டம் போட்டுத் தான் நம்மை இங்கே அழைத்து வந்திருக்கிறான். இதுவொரு சூழ்ச்சி வலை. என்னை எப்படியாவது கட்டுகளிலிருந்து விடுதலை செய்" என்று கதற ஆரம்பித்தான்.
"அதற்கு எனக்கு நேரம் இல்லை நண்பா. என்னை நானே காப்பாற்றி கொள்கிறேன். என்னை மன்னித்து விடு" என்ற நஞ்சுண்டன் கடலில் குதித்தான்.
"முட்டாள் .நான் சொல்வதை கேள்" என்று அலற ஆரம்பித்தான் தர்மபாலன்.
அவனை விடுவிக்க யாரும் முன்வரவில்லை. நஞ்சுண்டனை பின்பற்றி எல்லோரும் கடலில் குதிக்க ஆரம்பித்தனர்.
"அவர்கள் மிகப் பெரிய தவறை செய்து விட்டார்கள்" என்ற நீலன் விசம சிரிப்பு சிரித்தான்.
"முட்டாள்களே! இந்த கடல் பகுதியில் நிறைய சுறா மீன்கள் இருக்கின்றன. வீணாக அவற்றுக்கு பலியாகப் போகிறீர்கள்" என்று கத்திய தர்மபாலன் தன்னை விடுவித்து கொள்ள முடியாமல் அலறியபடி கப்பலோடு ஜல சமாதியடைந்தான்.
கடலில் நீந்த துவங்கிய வர்களை சுறா மீன்கள் சுற்றி வளைக்க துவங்கின.
"நஞ்சுண்டா ! அவற்றிடம் உன் சாமர்த்தியத்தை காட்டி தப்பி பிழைத்து கொள்" என்றான் நீலன்.
"என்னை காப்பாற்று. இல்லை கொன்று விடு. இப்படி மீன்களுக்கு இரையாக்கி விடாதே!" என்று கதற துவங்கினான் நஞ்சுண்டன் .
" உன் துரோகத்தின் பரிசைத்தான் இப்போது கடவுள் கொடுத்திருக்கிறார். வேண்டாம் என்று சொல்லாமல் மனமுவந்து பெற்று கொள்" என்றான் நீலன்.
நஞ்சுண்டனை சுறா ஓன்று கவ்வி கொண்டு நீரில் மூழ்கியது. சில நிமிடங்களில் தர்மபாலனின் கப்பல் இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கி மறைந்தது. ஒருவரும் உயிர் பிழைக்க வழியில்லாமல் சுறா மீன்கள் தங்கள் வேட்டையை நடத்தி முடித்தன.
நங்கூரத்தை மேலே ஏற்ற உத்தரவிட்ட நீலன் பாலத்தில் குண்டுகளால் ஏற்பட்ட இடைவெளியின் வழியே கப்பலின் கொடி மரத்தை நுழைத்து மறுபுறம் கப்பலோடு வெளியேறினான்.
"அப்பாடா! எல்லா பிரச்சனைகளும் முடிந்தன. இனி நம்மை பின் தொடர்ந்து வர யாரும் இல்லை. இனி நிம்மதியாக பயணம் செய்யலாம்" என்றான் நீலன் மகிழ்ச்சியுடன் .
" இப்படி ஓரு யோசனை இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்றான் ஆதித்தன்.
" எல்லாம் பைராகியின் யோசனை தான். புவியியல் அமைப்பை விளக்கி கூறியவுடன் இப்படி ஒரு ஆலோசனையை சொன்னவன் அவன்தான். உன்னிடம் அதை கூற மறந்து விட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடு நண்பா " என்றான் நீலன்.
"நான் வேறு யோசனை வைத்திருந்தேன்"
" என்ன யோசனை? "
"பாலத்தில் இரண்டடி கொடிமரம் தான் முட்டுகிறது. அதே இரண்டு அடிக்கு கப்பலின் மீது கனத்தை அதிகரித்து நீரில் மூழ்க வைத்து மறுபுறம் வெளியேறி விடலாம் என்று நினைத்தேன்"
"அதுவும் நல்ல யோசனைதான். இந்த ஆயுதம் மட்டும் இல்லாவிட்டால் நானும் உன் போல் தான் யோசித்திருப்பேன்" என்றான் பைராகி .
"என்னை தவிர எல்லோரும் புத்திசாலிகள் தான் போலும் " என்று இருவரையும் அணைத்து கொண்டு சிரித்தான் நீலன்.
அதே நேரம் மதிமாறன்மலை நாட்டை சென்றடைந்திருந்தான்.
தன் மாளிகைக்குள் நுழைந்த மதி மாறனை வியப்புடன் பார்த்தான் தயாநிதி
"யாரது?மதி மாறனா? ரகசிய தீவிலிருந்து எப்போது வந்தாய்?" என்றான் தயாநிதி .
"இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக கெட்ட சேதி ஒன்றும், நல்ல செய்தி ஓன்றும் கொண்டு வந்திருக்கிறேன். முதலில் எதை கூறட்டும்?"
"நல்ல செய்தியை முதலில் கூறு"
" தொலைந்து போன உங்கள் மகள் திரும்ப கிடைத்து விட்டாள். அவள் உங்கள் மகள் என்பதற்கான ஆதாரம் இதோ " என்ற மதிமாறன் தயாநிதியின் பரம்பரை நகையை காட்டினான்.
" என்ன?" என்று சந்தோசத்தில் திக்குமுக்காடினான் தயாநிதி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக