அத்தியாயம் 81
அரச சாசனம்
கல்லறைதீவில்பட்டினி கிடந்து இறந்து விடுவான் என்று நினைத்த நஞ்சுண்டன் இப்போது உயிரோடு கப்பலின் மேல் தளத்தில் நிற்பதோடு இல்லாமல் தன்னை பார்த்து அலட்சியமாக சிரித்து கையை ஆட்டியது கண்டு உருகிய உலோகத்தின் கொதிநிலைக்கு போனான் நீலன்.
"இந்த சாத்தான் இப்போது மீண்டும் உயிர்தெழுந்து வந்து விட்டது. மலைநாட்டை சென்றடையும் வரை கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு இந்த பொக்கிசங்களை பாதுகாக்க வேண்டும் போலிருக்கிறதே?" என்று அவன் மனம் யோசித்தது.
நீலன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை பார்த்த ஆதித்தன்" என்னாயிற்று நண்பா! ஏன் திடிரென்று உன் முகம் கவலையில் ஆழ்ந்து விட்டது. புதிதாக ஏதாவது பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதா?" என்றான்.
"ஆம். அந்த சண்டாளன் நஞ்சுண்டன் கல்லறைதீவிலிருந்து எப்படியோ உயிரோடு தப்பி வந்து விட்டான். அவன் இப்போது தர்மபாலனின் கப்பலில் இருப்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக நஞ்சுண்டன்தீவை விட்டு வெளியேறி தர்மபாலனின் கப்பலில் தஞ்சமடைந்திருக்க முடியாது"
"ஒருவேளை தர்மபாலன் அவனை தீவிலிருந்து மீட்டிருப்பானோ? நஞ்சுண்டனுடன் இருந்தவர்கள் தர்மபாலனின் ஆட்களாக இருப்பார்களோ?"
"அப்படித்தான் இருக்க வேண்டும். நான் அவர்களை கருணாகரனின் ஆட்கள் என்று தவறாக நினைத்து விட்டேன் போலிருக்கிறது."
"அப்படியானால் இந்த கப்பலில் மார்க்கதரிசியின் பொக்கிசங்கள் வருவது அவனுக்கு தெரியும் என்று சொல்"
" அவனுக்கு தெரியாவிட்டாலும் நஞ்சுண்டன் அந்த உண்மையை சொல்லியிருப்பான். அதனால் தான் அவன் நம்மை பின் தொடர்ந்து வந்திருக்கிறான். மோகினி தீவில் எதையும் செய்யாமல் நாம் கிளம்புவதற்காக காத்து கிடந்திருக்கிறான். கடல் அவனது களம் என்பதால் நம்மை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். நாம் இக்கட்டில் சிக்கும் நேரத்தில் நம் மீது தாக்குதல் நடத்தி புதையலை கைப்பற்ற நினைக்கிறான்"
"அப்படியானால் நாம் அவனோடு ஓரு ஓப்பந்தம் செய்து கொண்டால் என்ன?"
" என்ன ஒப்பந்தம்?"
"புதையலின் சிறு பகுதியை அவனுக்கு கொடுத்து அவனை நம்மை பின் தொடராமல் இருக்கச் செய்தால் என்ன?"
" அவன் ருசி கண்ட பூனையாகி விடுவான். முழு பொக்கிசத்தையும் கைப்பற்ற அவனது பேராசை அவனை தூண்டி விட்டு விடும். எங்கப்பன்கு திருக்குள் இல்லை என்று நாமே சொன்னது போலாகி விடும்"
"இப்போது என்ன தான் செய்வது?"
"அவனை எச்சரிக்க போகிறேன். பயல் நம் பக்கம் வராமல் ஓடி விடுவான்"
"உன்னை பார்த்து பயப்படுவான் என்றா நினைக்கிறாய்?"
"என்னைப் பார்த்து பயப்பட மாட்டான். ஆனால் மலை நாட்டின் அரசன் தந்திருக்கும் அரச சாசனத்திற்கு அவன் பயந்து தான் தீர வேண்டும்"
"அரச சாசனமா?அப்படி ஒன்று உன்னிடம் இருக்கிறதா? நீ ரகசிய தீவில் சேட்டை செய்து சிறைக்கு சென்ற போது வீரர்கள் உன்னை முழுதாக சோதனையிட்டார்களே? அந்த சாசனம் உன்னிடம் இருந்தால் அதை அப்போதே அவர்கள் கைப்பற்றியிருக்க வேண்டுமே?" என்றான் ஆச்சரியத்துடன் ஆதித்தன்.
அவனது வியப்பை அமைதியாக பார்த்த நீலன்" உன்னிடம் குறுவாள் இருக்கிறதா?" என்றான்.
"எதற்காக இப்போது சம்மந்தமில்லாமல் குறுவாளை கேட்கிறாய்?"
" எல்லாம் காரணமாகத் தான். கப்பலின் வேகத்தை குறையுங்கள்" என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டுவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.
அவனது உத்தரவை அவனது ஆட்கள் நிறைவேற்ற துவங்கினர்.
முத்தழகியின் வேகம் குறையத் தொடங்கியது.
முத்தழகியின் தோற்றம் கண்ணுக்கு பெரிதாக தெரிவதை பார்த்ததர்மபாலன் அதன் வேகம் குறைவதை கண்டு கொண்டான். நீலன் எதற்காக திடிரென்று தன்னுடைய கப்பலின் வேகத்தை குறைக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை.
அவன் தன்னிடம் ஏதோ பேச விரும்பித்தான் தன்னுடைய கப்பலின்வேகத்தை குறைக்கிறான் என்பதை கண்டு கொண்டவன் அமைதியாக இருந்தான்.
அவனது கப்பல் முத்தழகியை நெருங்கி கொண்டிருந்தது. கப்பலின் மேல் தளத்தில் திடிரென்று தோன்றினான் நீலன்.
"வணக்கம் தர்மபாலா ! நலமாக இருக்கிறாயா?" என்றான் நீலன்.
"நான் நலமாக இருக்கிறேன் நரனே! நீ எப்படி இருக்கிறாய்?"
"நான் நலமாகத் தான் இருக்கிறேன். உன்னுடைய நலன் தான் கேள்வி குறியாகப் போகிறது "
" என்ன சொல்கிறாய் நீ?"
" நஞ்சுண்டன் என்னும் துரோகி உன்னுடைய கப்பலில் இருப்பான் போல் தெரிகிறதே? அவனை நம்பி விடாதே! என் முதுகில் குத்தி விட்டு என் கப்பலை திருடிச் சென்றவன் அவன். எப்போது வேண்டுமானாலும் உன் முதுகில் குத்தி விட்டு உன் கப்பலையும் களவாடி விடுவான். உன் நல்லதற்காக சொல்கிறேன். அவனை என்னிடம் ஒப்படைத்துவிடு"
"நான் அவனிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறேன். அவனது ஜம்பம் என்னிடம் பலிக்காது. அவன் என்னுடைய அதிதி அவனை உன்னிடம் ஒப்படைக்க முடியாது" என்றான் தர்மபாலன்..
" உன் புதை குழியில் நீயே மண்ணை அள்ளி போட்டு கொள்ளும் போது நான் என்ன சொல்ல முடியும்? மோகினி தீவில் உனக்கு எந்த வணிக பேரமும்படியவில்லை போலிருக்கிறதே?"
"ஆம். அங்கே என் கப்பலுக்கு சரியான வணிக கூட்டாளி கிடைக்கவில்லை"
"எதற்காக பொய் பேசுகிறாய்? மார்க்கதரிசியின் புதையல் என்னிடம் இருப்பதை தெரிந்து கொண்டு தானே் நீ என்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்?"
"ஆமாம். அவை வளநாட்டிற்கு சொந்தமானவை. அவற்றை அடைவதுதான் என்னுடைய லட்சியம்."
" உன் லட்சியம் நிறைவேற ஆழ்ந்த வாழ்த்துகள். அவற்றை கைப்பற்ற நீ என் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் வம்பை விலைக்கு வாங்குகிறாய் என்று அர்த்தம் "
" நீ என்ன சொல்கிறாய்?"
"நான் மலை நாட்டின் கடல் காவலன்.மலை நாட்டின் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு என்னுடையது. அதற்காக மன்னர் எனக்கு ஒரு அரச சாசனம் தந்திருக்கிறார். "
"என்னை திசை திருப்ப பொய் சொல்கிறாய். எங்கே அந்த அரச சாசனத்தை காட்டு பார்ப்போம்"
"இதோ காட்டுகிறேன்" என்ற நீலன் தன்னுடைய தலை பாகையை அவிழ்த்தான். சற்று நேரத்திற்கு முன்பாக ஆதித்தனின் குறுவாளால் மொட்டையடிக்கப்பட்ட அவனது தலை வெய்யிலில் பளபளத்தது. கப்பலில் பதுங்கி கிடந்த நஞ்சுண்டன் இவர்களின் உரையாடலை ஒட்டு கேட்டு கொண்டிருந்தான்.
நீலனின் அருகில் நின்ற ஆதித்தன் அப்போதுதான் தலைபாகை இல்லாத நீலனின் தலையை பார்த்தான். அதில் ஏதோ பச்சை குத்தப்பட்டிருந்தது.
தர்மபாலனை பார்த்து சிரித்த நீலன்" உன் தொலைநோக்கி மூலமாக என் தலையில் எழுதியிருப்பதை படித்து பார்" என்றான்.
தர்மபாலன் தொலைநோக்கி மூலம் அவன் தலையில் உள்ளதை சத்தமாக படிக்க ஆரம்பித்தான்.
"மலை நாட்டு கப்பல்களின் பாதுகாவலனாக மலை நாடு இந்த நீலனை நியமிக்கிறது.இவன் மீதோ இவன் கப்பல் மீதோ தாக்குதல் நடத்துபவர்களை மலைநாடு தண்டிக்கும் என்று எச்சரித்து தரப்படும் பாதுகாப்பு சாசனம் இது. இதை மதிக்காதவர்களின் உயிர் பறிக்கப்படும்
இப்படிக்கு
மலைநாட்டு அரசனின் அரச முத்திரையோடு கூடிய கையெழுத்து இருந்தது.
நஞ்சுண்டனுக்கு நீலனின் தலைபாகை ரகசியம் இப்போது தான் புரிந்தது. கல்லறைதீவில் தான் தலைபாகையை எடுத்தோமே தவிர அவனது தலையை சோதனை செய்யாமல் விட்டு விட்டோமே என்று அவன் வருந்தினான்.
ஆதித்தனுக்கு என் தலை உனக்குத்தான் என்று ஆதியைப் பார்த்து ஏன் நீலன் சொன்னான் என்பது இப்போது தான் புரிந்தது.
"என்னை பின் தொடர்வது மரணத்தை தொடர்வதற்கு சமம். உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் அப்படியே திரும்ப சென்றுவிடு" என்றான் நீலன் தர்மபாலனை பார்த்து.
தர்மபாலனின் தலை தொங்கியது. "இனி உன் வழியில் குறுக்கிட மாட்டேன்" என்றான் ஈனஸ்வர மான குரலில்.
நீலன்" கப்பலின் வேகத்தை கூட்டுங்கள் போய் வருகிறேன் தர்மபாலா " என்றான்.முத்தழகி வேகம் பிடித்தது. அதை பார்த்து கொண்டிருந்த தர்மபாலனின் உதடுகளில் விசமபுன்னகை ஓன்று பூத்தது.
" தலையில் எழுதப்பட்ட அரச சாசனத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்," என்றான் ஆதித்தன் ஆச்சரியத்துடன் .
"ஓலை, செப்பு தகடு இவற்றை எளிதில் களவாடிவிடலாம். ஆனால் என் தலையை அவ்வளவு எளிதாக களவாட முடியாதல்லவா?" என்று சிரித்தான் நீலன்.
அங்கே
தர்மபாலனின் கப்பலில் .
"இனி என்ன செய்வது? கண் முன்னே பொக்கிசங்கள் போவதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதானா?" என்றான் நஞ்சுண்டன் எரிச்சலுடன்
"நாம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும். நீலன் அற்புதமான ஆலோசனை ஓன்றை எனக்கு தன்னையறியாமலேயே கொடுத்து சென்றிருக்கிறான். அதை பின்பற்ற வேண்டியது தான் "
'அவன் கூறிய ஆலோசனையா? அப்படி அவன் எதுவும் கூறியது போல் தெரியவில்லையே?"
"உன்னை பற்றி அவன் கூறியது தான் அந்த ஆலோசனை ?"
"என்னை அவன் துரோகி என்றல்லவா வசை பாடினான்?"
"அதை உண்மையாக்கி விட்டால்?"
"எனக்கு புரியவில்லை."
"புரியும்படியாக சொல்கிறேன். நீ எனக்கு துரோகம் செய்து இந்த கப்பலை கைப்பற்றி விட்டாய். நீ தான் இந்த நொடியிலிறந்து இந்த கப்பலின் மாலுமி.என்னை கப்பலின் கொடி மரத்தில் கட்டி வைத்துவிடு. கடற் கொள்ளையர்களின் மண்டையோட்டு கொடியை ஏற்றி விட்டு வளநாட்டின் கொடியை இறக்கி வையுங்கள். நீலனை நீ ஏமாற்றி கப்பலை களவாடியது போல் என்னையும் ஏமாற்றி கப்பலை உன்னுடையதாக்கி கொண்டு விட்டாய். நான் தாக்குதல் நடத்தினால் சிக்கல். உனக்கு அந்த சிக்கல் இல்லை. உன்னை யாரும் அடையாளம் காண முடியாது. அடையாளமோ சாட்சியோ சொல்ல நாம் யாரையும் விட்டு வைக்க போவதில்லை" என்றான் தர்மபாலன் விகார சிரிப்புடன்.
நஞ்சுண்டணிடமிருந்து நயவஞ்சக புன்னகை பூத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக