ரகசிய தீவு
அத்தியாயம் 86
உண்மை வெளிப்படும் தருணம்
சந்திரவதனா தயாநிதியின் மகள் என்ற உண்மை தெரிந்த இரண்டே நபர்கள் மதிமாறனும் செங்கோடனும் மட்டும் தான். இந்த உண்மையை வெளியே சொல்லி விடக் கூடாது என்ற ஓரே காரணத்துக்காகத்தான் மதி மாறன் செங்கோட்னையே சிறையில் வைத்து கொன்றான். அந்த ரகசியம் தெரிந்த ஓரே ஆள் இப்போதைக்கு மதிமாறன் மட்டும் தான். தனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இப்போது எப்படி தயாநிதிக்கு தெரிய வந்தது என்ற குழப்பத்தில் பேயறைந்தது போல் நின்றான் மதி மாறன் .
அவனது திகைப்பை புரிந்து கொண்டு விட்ட தயாநிதி " என்ன மதி மாறா ? உனக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்போது எனக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கிறாயா?" என்றான் தயாநிதி .
அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான் மதிமாறன்.
"இந்த உண்மை எனக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கிறாயா? இந்த உண்மையை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது ஓரு மது புட்டி என்று சொன்னால் அது விசித்திரமாக இருக்கும். யாரும் அதை நம்பக்கூட மாட்டார்கள்" என்ற தயாநிதி தன் இடுப்பில் இருந்த காலிமதுப் புட்டியை கையில் எடுத்தான்.
அவனுக்கு அருகே நின்ற நீலன் அந்த மது புட்டியை அடையாளம் கண்டு கொண்டு விட்டான். அது சிறைச்சாலையில் அவனிடமிருந்து காணாமல் போன அதே மது புட்டி.கல்லறைதீவில் அவனது உயிரை காப்பாற்றிய அதே மதுபுட்டி.
"இது என்னுடையது. இது எப்படி உங்களுக்கு கிடைத்தது?" என்றான் வியப்புடன் நீலன்.ரகசிய திவில் தான் தொலைத்த மதுபுட்டி இத்தனை காத தூரம் தாண்டி மலை நாட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தது என்ற ஆச்சரியம் அவனது குரலில் கலந்திருந்தது.
"இது உன்னுடையதா? அப்படியானால் செங்கோடன் உன்னிடமிருந்து தான் இந்த புட்டியை எடுத்திருக்க வேண்டும். கடலில் பயணம் செய்யும் உனக்கு தெரியாதா இது ஒரு தகவல் தெரிவிக்கும் சாதனம் என்று " என்றான் தயாநிதி
"கடல் பயணத்தில் உயிர் அபாயமான நேரங்களில் தங்களின் கடைசி விருப்பத்தை எழுதி அந்த கடிதங்களைஇப்படியான காலி புட்டிகளில் அடைத்து கடலில் வீசி விடுவோம். அது கடலில் மிதந்து கரை சேர்ந்து விடும். அப்படி கரை சேரசில மாதங்கள் கூட ஆகிவிடும். அதை கண்டெடுப்பவர்கள் அதில் உள்ள விலாசத்தில் அந்த புட்டியை ஒப்படைத்து கணிசமான பொருளை பரிசாக பெறுவார்கள். ஒருவனது கடைசி ஆசை என்பதால் சிலர் பணம் பெற மறுப்பதும் உண்டு" என்றான் நீலன்.
"சரியாகச் சொன்னாய். இது செங்கோடனின் கடைசி செய்தியை தாங்கி வந்த மதுபுட்டி. இது என் கைக்கு வந்து மூன்று நாட்களாகிறது. இதை கண்டெடுத்த ஓரு மீனவன் என்னிடம் இதை ஒப்படைத்தான். அவனுக்கு கை நிறைய பொருள் கொடுத்து அனுப்பி வைத்தேன். அதில் இருந்த கடிதம் துணியில் இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. செங்கோடன் தன் ரத்தத்தால் அந்த கடிதத்தை எழுதியிருக்கிறான். அதை படிக்கிறேன் கேள்" என்ற தயாநிதி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துணிச்சுருளை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
"அன்புள்ள தயாநிதிக்கு ! என்னை உங்களுக்கு தெரியாது. எனக்கும் உங்களை தெரியாது. நான் ஒரு கலை கூத்தாடி. ஊர் ஊராக சென்று வித்தை காட்டி வயிறு வளர்ப்பவன் . நான் அனாதையாக கடலில் மிதந்து வந்த ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்து வளர்த்து வந்தேன். அந்த குழந்தைக்கு சந்திரவதனா என்று பெயரிட்டேன்.அந்த குழந்தையின் கழுத்தில் இருந்த ஆபரணத்தை அடகுவைத்து அவ்வப்போது ஏற்படும் கஷ்டங்களை சமாளித்து வந்தேன். ரகசிய தீவிற்கு சென்ற என் குழுவினரை சந்திரவதனாவின் மீதான ஆசையால் கைது செய்தான்மதிமாறன். என் குழுவை மீட்க நான் அந்த நகையை அவனிடம் வேறு வழியின்றி ஓப்படைத்தேன். அப்போதுதான் சந்திரவதனா உங்கள் மகள் என்ற உண்மையை மதிமாறன் வெளிப்படுத்தினான். அவளை மணந்து தன் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள நினைத்தான். இந்த உண்மையை நான் வெளியே சொல்லாது இருக்க என் நாவை அறுத்து விட்டான். விரைவில் என்னையும் கொன்று விடுவான். என் மகள் சந்திரவதனா வை எப்படியாவது அவனிடமிருந்து காப்பாற்றுங்கள். மன்னித்து விடுங்கள். அவள் உங்கள் மகள் என்பதை மறந்து விட்டேன். அவளது அன்பிற்காக, பாசத்திற்காக என் வாழ்விற்கு பொருள் தந்ததற்காக அவளது வளர்ப்பு தந்தை உயிரை விட்டு விட்டான் என்பதை அவளிடம் கூறுங்கள். சந்திரவதனாவின் அடையாளம் அவளது உதட்டின் இடதுபுறம் இருக்கும் மச்சமாகும். உங்கள் மகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். என்னுடைய பாசத்தையும் சேர்த்து இரட்டிப்பாக அவள் மீது பாசத்தை பொழியுங்கள்"
அன்புடன்
தயாநிதி .
இந்த கடிதத்தை கண்டெடுப்பவர்கள் மலை நாட்டின் அரச பிரமுகர் தயாநிதியிடம் இதை ஒப்படைத்தால் தக்க சன்மானம் கிடைக்கும்.
கடிதத்தை படித்து முடித்தான் தயாநிதி . அவன் படிப்பதை கேட்டு கொண்டிருந்த மதிமாறன் திகைத்து நின்றான். இப்படி ஒரு வழியில் உண்மை வெளிவரும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.
"இந்த மதிமாறன் அழைத்து வந்த பெண்ணிற்கு கடிதத்தில் குறிப்பிட்ட மச்சம் இல்லை. போதாதற்கு இந்த சிறுவன் வேறு அவள் சந்திரவதனா இல்லை என்று உரத்த குரலில் கூறி என் கண்ணை திறந்து விட்டான். அரசியல் அனுபவம் மிக்க என்னால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொண்டேன். இந்த கடிதம் என் கைக்கு கிடைத்த மறுகணமே உளவாளிகள் இருவரை ரகசிய தீவிற்கு கிளம்பிய கப்பலில் அனுப்பி வைத்துவிட்டேன். அவர்கள் இருவரும் தான் நேற்று இரவு என்னை சந்திக்க வந்தார்கள். இதுவரை கலகக்காரனாக சிகப்பு முகமூடி என்ற பெயரில் மறைந்திருந்த பார்த்திபன் புரட்சியின் மூலம் ரகசிய தீவின் அதிகாரத்தை கைப்பற்றியதும் அந்த முகமூடியை அகற்றிவிட்டான். இனி இது தேவைப்படாது என்பதால் தன்னுடைய உண்மையான அடையாளமான மலையமானின் இளைய மகன் என்ற அடையாளத்தை வெளிப்படையாக உலகிற்கு அறிவித்துவிட்டான்.
மலையமானின் ஆசைதன் மகன்களில் ஒருவனுக்கு என் மகளை மனைவியாக்குவது. அது விதியின் வழியே நடந்து முடிந்து விட்டது. அதைப் பார்த்து மகிழத்தான் என் நண்பன் இல்லை. அது ஓன்று தான் என்னுடைய வருத்தம். இந்த மதுபுட்டி உண்மையை வெளி கொண்டு வரும் என்பதை மதிமாறன் எதிர்பார்க்கவில்லை. இந்த மதுபுட்டி சரியான நேரத்தில் என் கையில் கிடைத்தது. இல்லையென்றால் இந்த வஞ்சகன் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பியிருப்பேன்" என்றான் தயாநிதி
"உண்மை கதிரவனை போன்றது. கருமேகங்கள் சில மணி நேரங்கள் அதை மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக அதை மறைத்து விட முடியாது" என்றான் நீலன்.
மாளிகையின் உ ள்ளே இருந்து காவலர்களால் அழைத்து வரப்பட்டாள் ரத்னாவதி .
"அப்பா! இங்கே என்ன நடக்கிறது? " என்றாள் அவள் குழப்பத்துடன் .
"இங்கே என்ன நடந்தது என்று உன் கணவனை கேள். விளக்கமாக சொல்வான். இவர்கள் இருவரையும் ஓரே அறையில் அடைத்து விடாதீர்கள். சிறையை நாசம் செய்து விடுவார்கள். தனி தனி சிறைகளில் அடையுங்கள்" என்று உத்தரவிட்டான் தயாநிதி .
" என்ன நடந்தது? " என்றாள் கிசுகிசுப்பான குரலில் ரத்னாவதி மதிமாறனிடம்.
"உண்மை தெரிந்து விட்டது" என்றான் மதி மாறன் .
இருவரும் அங்கிருந்து சிறைசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
"ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. அந்த மார்க்கதரிசியின் தங்கம் ?"
" என் கப்பலில் ப்த்திரமாக இருக்கிறது" என்றான் நீலன்.
"அவனும் ஓரு அரச துரோகி தான். உனக்கு தந்தது போல் அவனுக்கும் அரசின் சாசனம் ஓன்று தரப்பட்டது. காரணம் ஒன்று தான் .வணிக போட்டி .மலை நாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். அதே நேரம் வள நாட்டின் கப்பல்களையும் கொள்ளையடிக்க வேண்டும். இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டவன் தான் மார்க்கதரிசி.கொள்ளை பொருட்களைப் பார்த்ததும் அவன் மனம் மாறி விட்டது. எங்களுக்கு துரோகம் செய்ய துணிந்து கொள்ளை பொருட்களுடன் மாயமாகி விட்டான்.
அவனது கொள்ளை பொருட்களை கண்டுபிடிக்கத்தான் உன்னை நியமித்தேன். அந்த அரச சாசனம் களவு போய்விடக் கூடாது என்பதால் தான் அதை உன் தலையில் பச்சை குத்த வைத்தேன். கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்து விட்டாய். அதற்கு என் பாராட்டுகள் உனக்குரிய பங்கு உன்னை வந்து சேரும் " என்றான் தயாநிதி .
"அந்த துரோகியும் இன்னொரு துரோகியால் தான் மாண்டான். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது. நிரம்பவும் மகிழ்ச்சி எனக்கு " என்றான் நீலன்.
"ஆதித்தா! உன்னுடைய உதவி இல்லாவிட்டால் பார்த்திபன் போரில் வென்றிருக்க மாட்டான். அவனுக்கு உதவி செய்ததற்கு என்னுடைய நன்றி" என்றான் தயாநிதி .
"அது என் கடமை நண்பரே!" என்றான் ஆதித்தன்.
" என் மகளைக் காண என் மனம் துடியாக துடிக்கிறது. நாளையே கடல் பயணம் மேற்கொள்ள நினைக்கிறேன். ஆனால் நீங்கள் வெகுவாக களைத்திருக்கிறீர்கள். இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி இருங்கள். மூன்றாம் நாள் நாம் அனைவரும் ரகசிய தீவிற்கு கிளம்புகிறோம்."
" நாங்களும் அங்கே வந்து தான் தீர வேண்டும். பைராகியின் சேகரிப்புகள் அடங்கிய கழுகு படகை மோகினி தீவிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம். அதை எடுக்க நானும், பைராகியும் வந்து தான் தீர வேண்டும்" என்றான் ஆதித்தன்.
"நானும் வில்லவனை பார்க்க துடிப்பாக இருக்கிறேன்" என்றான் ஆதி.
"கவலைப்படாதே தம்பி. நாம் விரைவில் அவர்களை சந்திப்போம்" என்றான் நீலன்.
இரண்டு நாட்களில் உலகத்தின் அத்தனை உல்லாசங்களையும் நண்பர்களுக்குஅறிமுகம் செய்தான் தயாநிதி .
இரண்டு நாட்களும் மதுவருந்தாமல் இருந்த நீலனை ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும் .
"அந்த பாழாய் போன பழக்கத்தை நான் நிரந்தரமாக விட்டு விட்டேன்" என்று சிரித்தான் நீலன்.
மூன்றாம் நாள் காலை தயாநிதியின் தலைமையில் முத்தழகி மலை நாட்டிலிருந்து கிளம்பியது. அங்கே ஒரு புதிய விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.
முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக