திங்கள், 16 ஜனவரி, 2023

ரகசிய தீவு 84

ரகசிய தீவு

அத்தியாயம் 84.

மகளும், மருமகனும்

இத்தனை வருடங்களாக யாரை தேடித் திரிந்தானோ பெரு முயற்சி செய்தானோ அந்த மகளை மதிமாறன் கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கு ஆதாரம் இதோ என்று தயாநிதியின் குடும்ப ஆபரணத்தை அவன் காட்டியதையும் பார்த்த தயாநிதி வியப்பில் வாயடைத்து போய் கல்லாக நின்றான். அவனது வாயில் எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. மகிழ்ச்சியில் வாயில் வார்த்தைகள் எதுவும் வராமல் திக்குமுக்காடிய தயாநிதி ஒருவாறு தன்னை சுய நினைவுக்கு மீட்டுக் கொண்டு பேசத் தொடங்கினான்.

"மதிமாறா! நீ என்ன கூறுகிறாய்? இத்தனை வருடங்களாக நான் தேடிக் கொண்டிருந்த என் மகளை நீ கண்டுபிடித்து விட்டாயா? இதை என்னால் நம்பவே முடியவில்லையே? எங்கே என் மகள்? அவளை காண வேண்டும் என்று என் கண்கள் தவியாக தவிக்கின்றன" என்றான் மகிழ்ச்சி பெருக்குடன் தயாநிதி .

"அவளை உங்களிடம் காட்டுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் இன்று அவள் வேறு ஒருவருக்கு மனைவியாகி விட்டாள் "

" என்ன சொல்கிறாய் மதி மாறா ? அவளுக்கு திருமணமாகி விட்டதா?" என்றான் அதிர்ச்சியுடன் தயாநிதி .

"ஆமாம்" என்ற மதிமாறன் "சந்திரவதனா! உள்ளே வா.! உன் தந்தை உன்னை காண ஆவலுடன் காத்திருக்கிறார். " என்றான்.

அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்தாள் ரத்னாவதி .அவளைப் பார்த்ததும் தயாநிதியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

"இது என் மகள்?"

"ஆம். நான் உங்கள் மகள் .அதை தெரிந்து கொள்ளாமலேயே இத்தனை நாட்களாக என் நாட்களை வீணடித்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் தந்தையே " என்ற ரத்னாவதியை கட்டி கொண்டான் தயாநிதி .

"கடவுள் கருணை மிக்கவன். என் காலம் முடியும் முன்பாகவே உன்னை எனக்கு அடையாளம் காட்டினானே. அதற்கு நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்"

"நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது கடவுளுக்கல்ல. இவருக்குத்தான். கலை கூத்தாடிகளின் குழுவில் இருந்த என்னை அடையாளம் கண்டு கொண்டவர் இவர்தான் " என்றாள் ரத்னாவதி .

"நன்றி மதி மாறா நன்றி.உன் உதவியை என் உயிர் உள்ளவரை மறக்கவே மாட்டேன்" என்று தழுதழுத்தான் தயாநிதி .

"நீங்கள் என்னிடம் ஒப்படைத்த இரண்டு வேலைகளில் ஓன்றை முடித்துவிட்டேன். இன்னொரு வேலையில் நான் தோற்றுவிட்டேன், " என்றான் மதி மாறன் தலை குனிந்தபடி.

"நீ என்ன சொல்கிறாய்? எனக்கு எதுவும் புரியவில்லையே?" என்றான் தயாநிதி குழப்பத்துடன் .

"நீங்கள் கொடுத்த முதல் வேலை உங்கள் மகளை கண்டுபிடிப்பது. அதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டேன். இன்னொரு வேலை ரகசிய தீவை உங்களின் சார்பாக நிர்வகிப்பது. அதில் நான் தோற்றுவிட்டேன். சிகப்பு முகமூடி எனக்கெதிரான போரில் சதி செய்து வென்று விட்டான். நான் போரில் சாகும் வரை போரிட்டிருப்பேன். அப்படி இறந்து போயிருந்தால் உங்கள் மகளை உங்களிடம் ஓப்படைத்திருக்க முடியாது. உங்கள் மகளை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓரே ஆசையில் போரில் தோற்று ஓடி வந்திருக்கிறேன்"

"வருந்தாதே! நீ எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய். ரகசிய தீவு கையை விட்டு போய் விட்டதே என்று கவலைப்படாதே! மலைநாட்டு அரசரிடம் பேசி அதை மீண்டும் கைப்பற்ற ஏற்பாடு செய்கிறேன். ஆமாம். என் மகளுக்கு திருமணமாகி விட்டதாக சொன்னாயே? எங்கே அவளது கணவன் ? "

"இதற்கு சந்திரவதனா தான் பதில் கூற வேண்டும்"

"மகளே! நீ சொல் எங்கே உன் கணவன் ? "

"அவர் இங்கே தான் இருக்கிறார். " என்றாள் வெட்கப் புன்னகையுடன் ரத்னாவதி,

" யார்?"

"கலை கூத்தாடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை காதலித்து மணந்து கொண்ட பெரிய மனதிற்கு சொந்தக்காரர் இவர்தான் " என்று மதிமாறனை கை காட்டினாள் ரத்னாவதி

"மதி மாறா ! நீயா என் மகளின் கணவன் ? "

"மாப்பிள்ளை என்று அழையுங்கள் மாமா. என் மனம் அதில் தான் மகிழும்." என்றான் மதி மாறன் .

" நல்லது. நடக்க வேண்டியவைகள் நல்ல முறையில் தான் நடந்தேறி இருக்கின்றன. எல்லாம் கடவுளின் செயல்"

"சிகப்பு முகமூடியிடம் தோற்றதும் கடவுளின் செயல்தானா ?"

"இல்லையென்றால் என் மகள் கிடைத்திருப்பாளா?"

"நல்ல விசயம்தான். ஆனால் அந்த சிகப்பு முகமூடிக்கு பக்க துணையாக இருப்பது யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டிர்கள்"

"யார் அவனுக்கு உதவி செய்வது?"

"கள் வர்புரத்தின் பிரசித்தி பெற்ற கள்வன் ஆதித்தன்" என்றான் மதி மாறன் . தயாநிதியின் புருவங்கள் முடிச்சிட்டன.
"அவன் எப்படி அங்கே ?"

"அதுதான் புரியவில்லை."

"அநீதிக்கு எதிரான அவதாரம் அவன்"

"என்னை அயோக்கியன் என்கிறீர்களா?"

"நான் அப்படி சொல்லவில்லையே?"

"சிகப்பு முகமூடி, அவனுக்கு துணையாக ஆதித்தன், நீலன், பைராகி .இந்தமும் மூர்த்திகள் கள் தான் தோல்விக்கு காரணம். என்னை குற்றவாளியாக்க இப்போது இங்கே பின் தொடர்ந்து வருகிறார்கள்"

"வரட்டும். அவர்களை நான் பார்த்து கொள்கிறேன். நெடும்பயணத்தில் இருவரும் களைத் திருப்பீர்கள். போய் ஓய்வு எடுங்கள். பிறகு சந்திப்போம்," என்றான் தயாநிதி .

" மற்றோரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த மார்க்கதரிசியின் தங்கப் புதையல் அகப்பட்டு விட்டது. அது இப்போது நீலனின் கப்பலில் இருக்கிறது."

" என்ன சொல்கிறாய் நீ?"

"நான் சொல்வது உண்மை. அந்த புதையலை எடுக்கும் பொருட்டு தான் இந்த போரையே நடத்தியிருக்கிறார்கள். நீங்கள் எனக்கு உதவ கொடுத்தனுப்பிய ஆயுதங்களை அந்த நீலன் சிகப்பு முகமூடியிடம் கொடுத்து விட்டான். விசாரித்தால் என் கப்பல் களவு போய்விட்டது. அதை திருடியவன் தான் சிவப்பு முகமூடியிடம் அவற்றை கொடுத்தான் என்று விதவிதமாக கதை அளப்பான். அதை நம்பி விடாதீர்கள்" என்றான் மதி மாறன் .

"அவனைப் பற்றி நீ சொல்லும் எதையும் என்னால் நம்ப முடியவில்லை. அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை"

"பணம் குணத்தை மாற்றும் ஆற்றல் கொண்டது"

" உண்மைதான். நீங்கள் இருவரும் ஓய்வெடுங்கள். நடக்கப் போவதை நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் தயாநிதி .

"யார் அங்கே ? என் மகளையும், மருமகனையும் தனி அறைக்கு அழைத்து செல்லுங்கள்" என்று உத்தரவிட்டான் தயாநிதி .

தனி அறையில் நுழைந்ததும் அதன் கதவை தாழிட்டான்மதிமாறன்

அதன் பிறகு ரத்னாவதியை கட்டி தழுவிய மதிமாறன் "அந்த முட்டாள்கிழவன் உன்னை தன் மகள் என்று நம்பி விட்டான்"

"ஆம். நாம் போட்ட திட்டம் கனகச்சிதமாக நடந்தேறி வருகிறது " என்று சிரித்தாள் ரத்னாவ தி.

" எல்லாம் உன்னுடைய திறமை தான்" என்று அவளை பாராட்டினான் மதி மாறன் .

அன்று இரவு இருவருடனும் உரையாடிக் கொண்டிருந் தான் தயாநிதி . அப்போது வந்து நின்ற வாயிற் காவலன் முகமன் கூறியதுடன் இரண்டு பேர் அவனைக் காண வந்திருப்பதாகவும் கூறினான்.

அதைக் கேட்டதும் தயாநிதியின் முகம் மாறியது.

"நாம் நாளை காலை சந்திப்போம்" என்ற தயாநிதி விருட்டென்று அங்கிருந்து கிளம்பினான்.மதிமாறனின் முகத்தில் சந்தேகத்தின் சாயைபடர்ந்தது. அவன் மறைந்து நின்று பார்த்த போது வந்து நின்ற இருவருடன் தயாநிதி தனி அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

எதுவும் புரியாமல் கையை பிசைந்த மதிமாறன் தன்னுடைய அறைக்கு திரும்பினான்.

"என்னாயிற்று? ஏன் இப்படி குழப்பமாக இருக்கிறீர்கள்?" என்றாள் ரத்னாவதி .

"யாரோ இருவர் அந்த கிழவனைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களில் ஓருவன் தோளில் நங்கூர பச்சை குத்தியிருக்கிறான். அனேகமாக அவன் ஒரு கடலோடியாக இருக்கலாம்"

" இருந்து விட்டுப் போகட்டுமே? அதனால் என்ன? சொந்த மகளையும் மருமகனையும் சந்தேகிக்க துணிவாரா அவர்? நிம்மதியாக தூங்குங்கள்" என்றாள் ரத்னாவதி .

மறுநாள் காலையில் சூரியன் உதித்துக் கொண்டிருந்தது. தயாநிதி ரத்னா வதியுடனும், மதிமானுடனும் பேசிக் கொண்டிருந்தான். அப்போது மாளிகைக்குள் பிரவேசித்தனர் நிலனும் ஆதித்தனும். அவனுக்கு பின்னால் வந்தான்ஆதி. முந்தைய தினம் இரவே நீலனின் கப்பல் முத்தழகி மலை நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தது. தயாநிதியை காண அதிகாலையிலேயே மூவரும் அவனது மாளிகைக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்து விட்ட ரத்னாவதி இவர்கள் தன்னுடைய பழைய வாழ்க்கையை வெளியே சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் மாளிகையின் உள்ளே ஓளிந்து கொள்ள நடந்தாள்.

"சந்திரவதனா ? எங்கே செல்கிறாய்?" என்றான் தயாநிதி .

ரத்னாவதியை அடையாளம் கண்டு கொண்டு விட்ட ஆதி " இவளா சந்திரவதனா ? இதென்ன பித்தலாட்டம்?" என்றான் உரத்த குரலில்.

அவனது குரல் காதில் விழுந்ததும் தயாநிதி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக