ஞாயிறு, 29 நவம்பர், 2015

பீஷ்ம சபதம்.!

"இளவரசே.!இனி ரதம் ஒட வழியில்லை.!
ரதத்திலிருந்து இறங்கினான் தேவவிரதன்.சந்தனுவிற்கும்,கங்கைக்கும் பிறந்த கங்கையின் மைந்தன்.காங்கேயன் என்றழைக்கப்படும் தேவவிரதன்.!சுற்றிலும் இருந்த பரதவ குடிசைகளை பார்வையிட்டான்.எங்கெங்கும் மீன் நாற்றம்.இடம்,பொருள்,மனிதர்கள் மீதெல்லாம் மீன் வாசனை.சட யோகம் பயின்ற விரதன் தனமூசசடக்கி் உறுதியான கால்களால் பூமியை உழுதான்.அரசகுமாரனை அடையாளம் கண்ட பரதவர்களில் ஒருவன் தொழுதான்."பரதவர் தலைவன் தனராஜன் வீடெது.?"அவன் விரல் நீண்ட திசையில் இருந்த மாளிகை நோக்கி நடந்தான்.கம்பீரமாய் கட்டழகோடு நடந்தவனை கைகூப்பியவர்களை கண் அசைவில் நகர்த்தினான்.மாளிகையின் அண்மையில் மீன் நாற்றம் குறைந்து பரிமளகந்தம் வீசுவதில் வியப்பானான் விரதன்.பாராளும் வேந்தனின் பத்தினி பரதவர் தெருவில்.?என்னே விதியின் விளையாட்டு.!நீண்ட பெருமூச்சை விட்டு அந்த வாசனையை அனுபவித்த போது தனராஜன் வாசலில் வந்து வரவேற்றான்.உள்ளே நுழைந்தவனுக்கு செம்பில் தண்ணீர் வழங்கினாள் சத்யவதி.!தனராஜனின் மகள்.சந்தனுவின் மனதில் காதல் விளக்கேற்றிய அகல்.!
உபசாரம் முடிந்ததும் தெரிந்த விசயத்தை எப்படி பேசுவதென நிலவிய மவுனத்தை உடைத்தான் விரதன்.
"என் தந்தை சாந்தனு இரண்டு நாட்களாக இயல்பாக இல்லை.!காரணம் நீர் அறிவீர்.!"

"என் மகளின் மீதான மோகம் உறக்கம் கெடுக்கிறதென அறிவேன் நான்.!"

"உன் மகளின் பரிமளகந்தம் எப்போதும் தன்னருகே இருக்க வேண்டுமென்பது தந்தையின் ஆசை.!படகோட்டும் உன் மகளைக் கண்டார்.மோகம் கொண்டார்.பட்டத்து மகிஷியாக பரதவப் பெண் வர வேண்டும் என்ற விருப்பத்தின் குறுக்கே வந்து பெண் தர மறுத்தவன் நீ.!"

"உன் தந்தையின் விருப்பத்திற்கு தடையாக வந்தவன் நானல்ல நீ.!"

"என்ன சொல்கிறாய்.?"

"யுவராஜானாக நீ இருக்க என் பெண்ணின் வாரிசுகள் எவ்வாறு அரியணை ஏற இயலும்."!உமது வாரிசுகள் அரசுரிமை விட்டுத்தர மறுத்து பின்னாளில் பிரச்சனை செய்யலாம் என்றே மறுத்தேன்.!"

"உமது பிரச்சனையை நான் தீர்ப்பேன்.!"

"எவ்விதம்.?"

"எமது கேள்விக்கு பதில் சொல்லும் காலஇடைவெளியில் அதற்கான உபாயம் தோன்றும்.!"

"கேளும் உன்கேள்வியை.?"

"உமது மகளின் மேனியில் எப்படி பரிமளகந்த வாசனை வீசுகிறது.?"

"அது ஒரு கதை.!"

"சொல்லும் கேட்போம்.!"

"பராசரன் முற்றும் உணர்ந்த முனிவன். குறித்த முகூர்த்தத்தில் ஒரு பெண்ணை கூடினால் ஞானம் நிறைந்த மகனை பெறலாம் என்பதரிந்து வீட்டிற்கு விரைந்தான் மனைவியைகூட.!குறுக்கிட்ட ஆற்றை என் மகள் ஒட்டிய படகின் துணை கொண்டு கடந்தான்.நெருங்கிய முகூர்த்தத்தை தவறவிட விரும்பாதவன் என் மகளைக் கூடி ஒரு மகனைப் பெற்றான்.செய்த பாவத்தின் பரிகாரமாக மச்சகந்தியான என் மகளை பரிமளகந்தியாக மாற்றி மீண்டும் கன்னியாக்கினான்.அந்த மகனின் பெயர் வியாசன்.இந்த வரலாறை அப்பாவும் அறிவார்.!"

"நல்லது! என் தகப்பனாருக்கும் இதே போன்ற ஒரு வரலாறு உண்டு.அலைகடலேன ஒடி அமைதி நாடி கரை ஒதுங்கினாள் என் அன்னை.கங்கை எனும் மங்கை.கண்டவுடன் காதல் கொண்டான் சாந்தனு.என் செயலை தடுத்தால் உனை பிரிவேன் என என் அன்னை கங்காதேவி சாந்தனுவிற்கு நிபந்தனை விதித்து மணந்தாள்.அடுத்தடுத்து பிறந்த ஏழு குழந்தைகளை பிரசவித்து நதிதீரத்தில் மூழ்கடித்து கொன்றாள்.தடுக்கும் வழியின்றி தடுமாறினான் வேந்தன்.!எட்டாவதாக பிறந்த என்னை கொல்ல முற்பட்ட போது தடுத்தான்.உறுதிமொழியைமீறிமனைவியை பிரிந்தான்.தகப்பனின் ஆசைகளை நிறைவேற்ற உறுதிவாங்கி எனை விட்டு பிரிந்தாள்.சாஸ்திர விரோதமாய் தந்தைக்கு பெண் கேட்டு வந்த முதல் மகன் நான்.!"

"அனைத்தும் அறிவேன்.!என் பேரன்கள் அரசாளும் வழி.?"

"இதோ இந்த கணத்தில் சத்தியம் செய்கிறேன்.உடலாலும்.,மனதாலும் எந்த பெண்ணையும் தீண்ட மாட்டேன்.சாகும்வரை மணம் செய்யாமல் நைஸ்டீக பிரம்மச்சாரியாய் ஒரு வேளை உணவு உண்பேன்.என் புலன்களை அடக்க அந்த ஒரு வேளை உணவையும் உப்பின்றி உண்பேன்.!"
வெளியே இடிஇடித்து அசிரீரி ஒலித்தது.
"வாழ்க்கையின் நோக்கம் வாரிசு.அதை மறுதளித்து முனிகளும்,ரிஷிகளும் செய்யாத சபதத்தை,சத்தியத்தை செய்ததால் இன்று முதல் பீஷ்மன்.(பயங்கர சபதம் செய்தவன்.)என்றழைக்கப்படுவாய்.!"
தனராஜனின் முகத்தில் சம்மதமும்,மகிழ்ச்சியும் நிலவ வெளிவந்த விரதனை பரதவர்கள் "பீஷ்ம.!பீஷ்ம."என வாழ்த்த பரதவர் சேரி விட்டு கிளம்பினான் பீஷ்மன்.!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::அரண்மனையில் அனலில் மாட்டிய புழுவென துடித்தான் சாந்தனு.மகனுக்கு பெண் கேட்டு தந்தை போவது உலகவழக்கம்.இங்கோ தலைகீழாக தந்தைக்கு பெண் கேட்டு மகன் போயிருக்கிறான்.உலகம் தன்னை பழிக்குமோ என்ற கவலையில் நடுங்கினான் சாந்தனு.பரிமளவாசம் வீசும் பெண் மீதான ஆசை.!மோகம்.!தன்னை எப்படியெல்லாம் சீரழிக்கிறது.?
தொலைவில் தெரிந்த புழுதிபடலம் காங்கேயனின் வருகையை அறிவித்தது.

வந்து நின்ற கங்கையின்் மைந்தனை கண் கொண்டு காணவும் வெட்கமாக இருந்தது.!
"தந்தையே.!உம் அருகில் பரிமளவாசம் எப்போதும் மணக்கும்.!"

"எப்படி மகனே நடக்கும்.!உனை காரணமாக காட்டி மறுத்தானே தனராஜன்.?"

தான் செய்த சபதமெனும் இடியை தந்தையின் தலையில் இறக்கினான் பீஷ்மன்.!
கலங்கினான் வேந்தன்.தன் ஆசை தன் மகனின் வாழ்வை அழித்ததை எண்ணி குமுறினான்.!

"கலங்க வேண்டாம் தந்தையே.!என் அன்னைக்கு சத்தியம் செய்திருக்கிறேன்.உமது மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சியென்று.!"

"மகனே.!உனக்கொரு வரம் தருகிறேன்.!நீ எப்போது விரும்புகிறாயோ அப்போது மரணிப்பாய்.!"
வரத்தோடு கிளம்பினான் பீஷ்மன்.தேரோட்டியை விலக்கி விட்டு பீஷ்மன் ரதத்தை கிளப்பினான்.கிளம்பிய புழுதி புயல் விரைவில் அடங்கியது.சாந்தனுவின் உள்ளத்து குற்றப்புயல் நிலை கொண்டு சுழலத் தொடங்கியது.!
:::::::::::::::::::::::::::::::::::::

கங்கைகரையில் நின்றான் பீஷ்மன்.
"அம்மா.!"என்ற பீஷ்மனின் அலறல் கங்கை என்ற மங்கையை கொண்டு வந்தது.மகனை ஆரத்தழுவ ஒடி வந்தவளை ஆணையிட்டு தடுத்தான் பீஷ்மன்.!அதிர்ந்தாள் அன்னை.!
"உனை தழுவ எனக்கு உரிமையில்லையா.?"

"பெண் என்பதால் உரிமையற்றுப் போகிறது தாயே.!"

தன் தந்தைக்காக தான் செய்த சத்தியத்தையும்,தந்தை தந்த வரத்தையும் விளக்கினான் பீஷ்மன்.!
"அய்யோ.!ஏமாந்து விட்டாய் மகனே.!"என்று அழுது புலம்பினாள் தாய்.புரியாமல் பார்த்த பீஷ்மனை பார்த்து

"நீ அஷ்டவசுக்களில் ஒருவன்.!உன் மனைவியின் பேச்சை கேட்டு உன் சகோதரர்கள் எழுவரின் துணையோடு வசிஸ்டரின் காமதேனுவை திருடினாய்.!பெண்ணின் பேச்சை கேட்டதால் பெண்ணின் ஸ்பரிசம் இல்லாமல் போகட்டும் என்ற சாபத்தை பெற்றாய்.!உனக்கு உதவிய எழுவரும் பூமியில் பிறந்து கொல்லப்படும் சாபத்தை பெற்றார்கள்.என் மகவாய் அவதரித்து மரணித்தார்கள்.!உனை கொன்று சாபவிமோசனம் தரும் நேரத்தில் சாந்தனு அதை கெடுத்தான்.நீ குறுகிய காலம் வாழ்ந்து மடிந்து சொர்க்கம் போக இடையூறாக ஒரு வரத்தை கொடுத்தான்.!"

"அம்மா.!அனைத்தும் விதியின் விளையாட்டு.!அதில் உருளும் ஒரு பகடை நான்.!"
இருவரின் கண்ணிலிருந்தும் வெப்பமான உப்புநீர்கோடு ஒன்று உற்பத்தியானது.!
"அம்மா.!எனக்கு ஒரு ஆசை.!"

"சொல் மகனே.!நிறைவேற்றுகிறேன்.!"

"என் வாழ்வின் கடைசி நாளில் உன் மடியில் தலைவைத்து உன் அரவணைப்பில் சாகவிரும்புகிறேன்.!"

"எந்த தாயும் கனவிலும் விரும்பாத ஒன்றை கேட்கிறாயே.?"

"நீங்கள் என் அருகில் இருந்தால் மரணமும் இன்பமே.!"

"வருவேன் மகனே.!எந்த தாயும் விரும்பாத ஒன்றை செய்ய விதி வழி செய்கிறது.சொந்த மகனின் மரணத்தை பார்க்கும் துர்பாக்கியம் பெற்றவள் நான்.!"
கண்ணீரோடு கங்கை நதியில் மறைந்தாள்.பீஷ்மன் நிர்சலனமற்ற மனதோடு ரதத்தில் ஏறினான்.அஸ்தினாபுரம் வெகுதூரத்தில் இருந்தது பீஷ்மனின் மரணத்தை போல்.!
ரதம் காலம் என்னும் பாதையில் ஒட ஆரம்பித்தது.!

2 கருத்துகள்: