வெள்ளி, 27 நவம்பர், 2015

துரத்தும் மரணம்.!

அவர்கள் நூறு பேர் மரங்களின் நிழலில் உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களின் ஒய்வு நேரம் அது.கைகளும்,கழுத்துகளும் இரும்புச் சங்கிலியாலும்,கயிறுகளாலும் கட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பி ஒட முடியாது.கொஞ்ச தூரத்திலிருந்த சாரட் வண்டியில் அவர்களை கைதியாக பிடித்திருந்த வாசிம்கான் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தான்.பாதுகாப்புக்கு வந்த அவனது வீரர்கள் கையில் சவுக்குடன் குதிரைகளின் மீது ஒய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.எங்கிருந்தோ வந்த ஒரு ராஜாளி சாரட்டின் மீதிருந்த கொடியை மூன்றுமுறை சுற்றிவிட்டு உட்கார்ந்தது.அதை கூட்டத்திலிருந்த ராணா பார்த்தான்.அருகிலிருந்த ராஜ் திலக்கை தட்டியவன் "இப்போது நாம் விடுவிக்கப்படலாம்.!இல்லை கிளம்ப அவசரப்படுத்தப் படலாம்.!"
"எப்படி சொல்கிறாய்? "
"அந்த ராஜாளி ஒரு ஒலையை கொண்டு வந்திருக்கிறது.அவனது நாட்டில் அடிமைகள் அதிகரித்தால் விலை குறைந்து விடும்.ஆகவே நம்மை விடுவித்து விடுவார்கள். நாம் எப்படியோ இங்கு வாழப் பழகுவோம்.அடிமைகளின் விலை ஏறும்போது நம்மை பிடிப்பார்கள்.!"
"அது சரி.!அந்த ராஜாளி எப்படி சரியாக ஒலையை கொண்டு வந்து சேர்க்கிறது.?"

"அந்த கொடி எங்கு பறக்கிறதோ அங்கு தரையிரங்கும்படி அதை பழக்கியிருப்பார்கள்.!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.?"

"நம்மிடம் குதிரையை விற்கும் அரபுவியாபாரி அடிமைகளையும் விற்கிறான்.அவனிடமிருந்து தெரிந்து கொண்ட விசயம் இது.!"

"அப்படியானால் அவர்களின் பாஷை உனக்கு தெரியும்.?"

"தெரியும்.!ஆனால் வெளிக்காட்டாததால் ஒரு விசயம் தெரிய வந்திருக்கிறது."
"உலூக்கான் என்ற அடிமை வியாபாரிக்கும் இவனுக்கும் சண்டை இருக்கிறது.அவனுடைய தம்பி புதிதாக அடிமை வியாபாரத்திற்கு வந்திருக்கிறான்.அதனால் இவன் உலூக்கான் மீது கோபத்தில் இருக்கிறான்.!"
அதே நேரம் ஒலையை படித்த வாசிம்கான் அடிமைகளின் விலை கன்னோசியில் குறைவதால் அடிமைகளை விடுவிக்க முடிவு செய்தான்.உடனடியாக நெருப்பு மூட்டப்பட்டது.அவனது அடிமை சின்னமான நங்கூரம் நெருப்பில் காட்டப்பட்டு அனைவரின் நெஞ்சிலும் பொறிக்கப்பட்டு பச்சிலை கசக்கி விடப்பட்டது.
"அருமை நண்பர்களே.!உங்களையெல்லாம் விடுவிக்க முடிவு செய்து விட்டேன்.நீங்கள் இங்கேயே உங்கள் வாழ்க்கையை துவக்கலாம்.உங்கள் நாட்டிற்கு திரும்ப செல்ல முயன்றால் மறுபடியும் யாரிடமாவது அடிமையாக பிடிபட்டு விடுவீர்கள்.!அப்போது இந்த அடிமை சின்னம் உங்களை காப்பாற்றும்.!திரும்பவும் உங்களை சந்திக்கும் போது எனக்கு விருந்து தருவீர்களா.?"
துபாஸினால் மொழி பெயர்க்கப்பட்ட அவனது கேள்விக்கு அவர்கள் சந்தோஷமாக "தருவோம்.!தருவோம்.!"என்றபோது வாசிம் "பிடிபடும்போது உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று சொன்ன அந்த வீரன் எங்கே.?"
ராணா முன்னாடி வந்தான்."தங்களின் கருணை மனம் எனக்கு தெரியவில்லை.!ஆகவே உளறி விட்டேன்.தங்களுக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன்.!"

"அடிமையான நீ எனக்கு என்ன தர முடியும்.?"

"உங்களுக்கு தெரியாமல் ஒளித்து வைத்த ஒரு மோதிரம்.!"
இடுப்பு மடிப்பிலிருந்து மோதிரத்தை எடுத்தவன் அதை இரண்டாக உடைத்து்்பாதியை வாசிமிடம் கொடுத்தான்.
"இதன் மீதி பாதியை கொண்டுவரும் நபர் உங்களுக்கு வேண்டியதை தருவார்.நான்தான் அவர்களை அனுப்பினேன் என்று சொன்னால் போதுமானது.உங்களின் பெரிய மனதிற்கு எங்களின் பரிசு.!"

முட்டாள் என்று நினைத்த வாசிம் அவர்களை விடுவித்துவிட்டு தன் வீரர்களுடன் கிளம்பினான்.
ராணா தன் வீரர்களை கட்டுக்களிலிருந்து விடுவித்துவிட்டு "இந்துஸ்தானத்தை அடையும் குறுக்கு வழி எனக்கு தெரியும்.!அதன் வழியே நாம் செல்வோம்.அதற்கு முன் ஆயுதங்கள் வேண்டும்.!"
அவர்கள் மரக்கிளைகளை வெட்டி வில்,அம்புகளையும்,ஈட்டிகளையும் தயார் செய்து கொண்டு நடக்க ஆரம்பித்தனர்."நமக்கு குதிரைகள் இருந்தால் பரவாயில்லை.!சீக்கிரம் இந்துஸ்தானத்தை அடைந்து விடலாம்.!"என்ற ராஜ்திலக்கை பார்த்து புன்னகைத்த ராணா "அதற்க்குத்தான் ஏற்பாடு செய்கிறேன்.!"தூரத்தில் எழுந்த புழுதிபுயலை பார்த்த ராணா "யாரோ இந்த வழியாக வருகிறார்கள்.அவர்களை வீழ்த்தினால் குதிரைகள் நமக்கு கிடைக்கும்.!"
அனைவரும் பதுங்கி பாறைகளில் மறைந்தார்கள்.சாரட்டின் மண்டையோட்டுக் கொடியை பார்த்தவுடன் ராணாவின் கண்களில் வெளிச்சம் ."வருபவன் உலூக்கானின் தம்பி.!தன் அடிமைகளுடன் வருகிறான்.!"

அவர்கள் மணலில் கயிற்றை புதைத்துவிட்டு பாறைகளின் ஒரம் பதுங்கினார்கள்.கடக்க முற்பட்ட குதிரைகள் திடிரென குறுக்கிட்ட கயிறுகளால் நிலை தடுமாறி கவிழ்ந்தன.சிறிது நேர தாக்குதலிலேயே உலூக்கான் வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டான்.பிடிபட்ட அடிமைகளை தன்னுடன் சேர்த்துக் கொண்ட ராணா உலூக்கானின் வீரர்களை நெருங்கி கட்டுகளை அவிழ்த்தான்.உடைந்த மோதிரத்தின் பாதியை அவர்களிடம் கொடுத்து விட்டு ஒரு ஓலையை எழுத ஆரம்பித்தான்.!
"அன்புள்ள உலூக்கான்.உம்முடனான தொழில் போட்டியில் என்னுடைய எஜமான் வாசிம்கான் உன் தம்பியை கொல்ல எங்களை அனுப்பினார்.வேறு வழியின்றி அவரைக் கொல்ல வேண்டியதாகி விட்டது.நாங்களும் தப்பிச் செல்கிறோம்.உமக்கு சந்தேகமென்றால் உமது வீரர்களை கேட்டால் வாசிமின் அடிமை சின்னம் எங்களின் நெஞ்சில் இருந்ததை சொல்வார்கள்.!நான் கொடத்த மோதிரத்தின் பாதியை வாசிமிடம் காட்டினால் அவரே உண்மையை ஒப்புக் கொள்வார் இப்படிக்கு அவரின் அடிமை வீரன் ராணா."
இதை எழுதி கையொப்பமிட்டவன் அதை வீரர்களிடம் கொடுத்து உலூக்கானிடம் கொடுங்கள் என்று சொல்லி விடுவித்தான்.
அவர்கள் குதிரையில் கிளம்பிய பிறகு மீதமுள்ள குதிரைகளில் தன் ஆட்களை ஏற்றிக் கொண்டு ராணா கிளம்பினான்.கன்னோசியை நோக்கி மரணத்தின் தூதுவர்கள் போய் கொண்டிருந்தார்கள்.தன் குடும்பத்தை அழித்த வாசிம்கானை கொல்ல செய்த ஏற்பாடுகளை நினைத்து சிரித்துக் கொண்டான் ராணா.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக