அவர்கள் ரத்னபுரி கோட்டையை அடைந்த போது மழை தூறத் தொடங்கி இடியும்,மின்னலும் குமுறத் தொடங்கின."ஆரம்பமே அமர்க்களம்.!"என்றான் கரிகாலன்.வீரன் .பயமறியான்.
ஆமோதிப்பாய் தலையசைத்தவன் சென்னி.கரிகாலனின் அண்ணன்.இருவருக்கும் தந்தை கருணாகரன்.தற்காப்புகலை நிபுணன்.பயிற்சியாளன்.மூவருமே ரத்னபுரியில் நடைபெறும் வீர விளையாட்டு போட்டியில் பங்கெடுக்க வந்தவர்கள்.கோட்டை முகப்பில் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கியவர்களை வரவேற்று முகமன் கூறிய ஒரு வீரன் கோட்டை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல்லில் சொருகியிருந்த ஒரு வாளை காட்டி "அந்த வாளை பிடுங்க முயற்சி செய்துவிட்டு உள்ளே வாருங்கள்.!"என்றான்.
"இதென்ன புதுப் பழக்கம்.?"
"இதுதான் இங்கு வழக்கம்.!"
பாறையில் புதையூண்டிருந்த வாளை பிடுங்க முயன்ற கருணாகரனும்,சென்னியும் முயற்சியில் தோற்றார்கள்.கடைசியாக கரிகாலன் வாளை பிடுங்க நெருங்கிய போது எங்கிருந்தோ பளிச்சிட்ட மின்னல் வாளின் கைப்பிடியில் பாய்ந்து அதை செந்தணழாக்கியது.பின் வாங்கிய கரிகாலனை பார்த்து"இதுவரை இது போல் நடந்ததில்லை.!நீ காலையில் வந்து பிடுங்கி காட்ட வேண்டும்.!"
ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு தங்களுக்கென ஒதுக்கிய சத்திரத்தில் உணவருந்தினார்கள்.கரிகாலன் உறங்கத் தொடங்கினான்.கருணாகரன் யோசனையில் இருந்தான்."அந்த வாள் சாதாரண வாள் அல்ல.!"
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.!"
கேட்டுக் கொண்டிருந்த சத்திரத்தின் உரிமையாளன் அவர்களை தனியாக அழைத்தான்."அந்த வாள் பாறையையும் வெட்டும் சக்தி படைத்தது.இப்போதைய மன்னன் கார்கோடன் முன்னாள் மன்னனும்,தன் மாமாவுமாகிய மார்த்தாண்டனை சூழ்ச்சியாக கொல்லும் போது அவர் கடைசி தருணத்தில் விட்டெரிந்த கத்தி அது.அதை அவரது வாரிசால் மட்டுமே பிடுங்க முடியும்.அதை பிடுங்குபவனால் மட்டுமே கார்கோடகனை கொல்லவும் முடியும்.!"
"கொல்லப்பட்ட மன்னரின் வாரிசு.?"
"தன் தங்கையை கொன்ற கார்கோடகன் அவர்களின் வாரிசை கொல்ல முயற்சி செய்தான்.ஆனால் விசுவாசி ஒருவனால் இளவரசன் கடத்தப்பட்டான்.அவனை கண்டு பிடிக்கவே இந்த வீர விளையாட்டுபோட்டி.!நீங்கள் வாளை பிடுங்கியிருந்தால் மரணம் பரிசளிக்கப்பட்டிருக்கும்.!"
"இளவரசருக்கு ஏதாவது அடையாளம்.!?"
"இருக்கிறது .நடுமுதுகில் ஒரு நட்சத்திர மச்சம்.!"
இருவரும் படுக்கையை விரிக்கும்போது புரண்டு படுத்த கரிகாலனின் முதுகில் இருந்தது நட்சத்திர மச்சம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக