சனி, 21 நவம்பர், 2015

ஆறாவது கணவன்.!

"அந்த கனி எனக்கு வேண்டும்.!"
பாஞ்சாலியின் கை நீண்ட திசையில் புற்றின் மேலாக தொங்கியது ஒரு நெல்லிக்கனி.பீமன் "அர்ஜீனா.!உன் திறமையை காட்டலாமே.?"
"என் திறமை உலகறியும்.வில் வித்தையில் உன் திறமையை பரிட்சிக்கலாம்.!"
அர்ஜீனன் தற்காப்புக்கென வைத்திருந்த காண்டீபம் கைமாறியது.பீமனின் குறியும் இடம் மாறியது."இது மூன்றாவது அம்பு.!"என்று பீமன் விட்ட அம்பு இலக்கை வீழ்த்தியது.பீமன் கொடுத்த கனியை பாஞ்சாலி உண்ண முற்பட்ட போது கை பிடித்து தடுத்தான் கிருஷ்ணன்.மாயாவி.பாண்டவர்களுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் மீட்கும் உபகாரி."கிருஷ்ணா.நீ எப்படி வந்தாய்.?"
"ஆபத்தென்றால் வருபவன்தானே நான்.!"
"இந்த கானகத்தில் என்ன ஆபத்து வர முடியும்.?"
"மரத்தின் கீழிருப்பது புற்றல்ல.விபுண்டன் என்னும் முனிவன். வருடம் முழுவதும் பசியோடு புற்று வளர்ந்தது தெரியாமல் தவமியற்றும் அவனுக்கு வருடத்திற்கு ஒருமுறை துளிர்க்கும் இந்த நெல்லிக்கனியே உணவு.!அவன் கண் விழிக்க ஒரு நாழிகையே உள்ளது.நெல்லிக்கனி இல்லாவிட்டால் பசியோடிருக்கும் அவன் கோபத்தில் உங்களை சபித்து விடுவான்.உங்களை காப்பாற்றவே வந்தேன்.!"
"இப்போது என்ன செய்வது.?"

"உங்கள் உள்ளத்தின் ஆசைகளை ஒளிக்காது கூறினால் கனி கொஞ்சம்,கொஞ்சமாக சென்று மரத்தில் ஒட்டிக் கொள்ளும்.!பீமா உன் ஆசையை கூறு.!"

"துரியோதனன் தொடையை பிளப்பது என் ஆசை.!
கனி அந்தரத்தில் மிதந்தது.
ஒவ்வொருவராக ஆசையை சொல்ல கனி உயர்ந்து மரத்தை அடைந்தது.கனி ஒட்டுவது மட்டுமே பாக்கி.!ஆசைகளில் பாஞ்சாலியே மீதி.!
"பாஞ்சாலி.!நீ சொல் உன் ஆசையை.!"
பாஞ்சாலி சொன்ன எதற்கும் கனி அசையவில்லை.
பாண்டவர்களை தொலைதூரம் போகச் சொன்ன கிருஷ்ணன்
"உண்மையை சொல் பாஞ்சாலி.!"
"எனக்கு ஏனோ கர்ணனின் மீது இனம்புரியாத மோகமும்,ஆசையும் இருக்கிறது.!"
கனி ஒட்டிக் கொண்டது.
"குந்தியின் வார்த்தைகளின் பிரதிபலிப்பு அது.!கனியை சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றதன் விளைவுக்கு நீ பொறுப்பாக மாட்டாய்.!உன்னை தொடாத உன் மீதான உரிமை கொண்ட,ஆனால் உரிமை கொண்டாடாத ஆறாவது கணவன் கர்ணன்.!"
தங்களின் மனைவியை மிகுந்த நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்த பாண்டவர்களை ஒருமுறை பரிதாபமாக பார்த்துவிட்டு மறைந்தான் கிருஷ்ணன்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக