அரண்மனையின் பயனற்ற கிணறு ஒன்று பீஷ்மனின் மேற்பார்வையில் தயாராகிக் கொண்டிருந்தது.கொதிக்கும் மனதுடன் அதை மேற்பார்வையிட்டான் பீஷ்மன்.அஸ்தினாபுரத்தின் அரசன் திருதராஷ்டிரன் காந்தாரிக்கு இரண்டாவது கணவன் என்ற உண்மையை பீஷ்மனால் ஏற்க முடியவில்லை.!ஏதோ தோஷமாம் காந்தாரிக்கு.!இரண்டாவது கணவன்தான் நிலைப்பானாம்.!முதல் திருமணத்தை ஆட்டுடன் நடத்தி வெட்டி கொன்றதை மறைத்தான் காந்தார அரசன்.!சேதியறிந்த பீஷ்மன் எரிமலையானான்.புல் மேயும் ஆடும்,பாராளும் வேந்தனும் ஒன்றா.?உலோகத்தின் உருகிய கொதிநிலையில் காந்தாரத்தின் மீது படையெடுத்து அரசனை கொன்று அவனது நூறு மகன்களை பிடித்து வந்தான்.!கையறு நிலையில் சகோதரர்களை காப்பாற்ற வழியில்லாமல் தவித்தாள் காந்தாரி.!பீஷ்மனை எதிர்க்க எவருமில்லை.!பீஷ்மனின் குரலுக்கு எதிர்குரல் எண்திசையிலும் இல்லை.!
நூறு சகோதரர்களும் கிணற்றினுள் இறக்கப்பட்டனர்."ஒருவேளை உணவு மட்டும் வழங்குங்கள்.சோற்றுக்கு அடித்துக் கொண்டு சோதரர்கள் சாகட்டும்.!தீராபழி சூழட்டும்.!"கட்டளைக்குப் பின் பீஷ்மன் கிளம்பினான்.கடைசி தம்பி சகுனியை அழைத்தான் மூத்தவன்."சத்திரிய வம்சம் சாப்பாட்டிற்காக சாககூடாது.!இன்றிலிருந்து வடக்கே உண்ணாநோன்பிருந்து அனைவரும் மடிவோம்.அந்த உணவை சாப்பிட்டு உயிர் வளர்ப்பாய்.!கௌரவர் குலம் அறுப்பாய்.!"
அனைவரும் பசித்திருக்க,பார்த்திருக்க கண்ணீரின் உப்பையும் சேர்த்தே சுவைத்தான் சகுனி.ஒவ்வொருவராக இறக்க பிண நாற்றத்திலும் தன் சகோதரர்களின் அண்மையை உணர்ந்தான் சகுனி.காற்றோடு வெறியையும் சுவாசித்தான். ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த வித்தைகளை அவன் தலையில் இறக்கினர்.மூத்தவன் மரணிக்கும் முன் கூரிய கல்லெடுத்து சகுனியின் குதிகால் நரம்பை அறுத்தான்.!"ஒவ்வொரு முறை உன்பாதம் பூமியில் படும்போதும் மண்ணோடு மண்ணான நாங்கள் நினைவுக்கு வர வேண்டும்.!"வலியோடு சபதம் ஏற்றான் சகுனி.பிறிதொரு சகோதரன் "என் முதுகுதண்டில் தாயக்கட்டைகளையும்,சதுரங்ககாய்களையும் செய்.!நீ விரும்பிய வண்ணம் வெற்றியை கொண்டு வந்து தருவேன்.!"என்றான்.தனியாக,தன்னந்தனியாக நூற்றுவரை உள்ளடக்கி (கௌரவர்களின்)நூற்றுவர்களின் கூற்றுவனாக உருமாறி நின்றான் சகுனி.!
"ஒற்றை குலக்கொழுந்து.!"என்ற காந்தாரியின் கதறல் சகுனியை கிணற்றிலிருந்து உயிரோடு மீட்டது.திருதராஷ்டிரனையும்,பீஷ்மனையும் வீழ்ந்து வணங்கி மன்னிப்பு கேட்டான் சகுனி.!அருகே சிறு குழந்தையாக இருந்த துரியோதனனை தூக்கி "என் அருமை மருமகன்.!"என்று கொஞ்ச ஆரம்பித்தான்.அழிவு ஆட்டத்தின் முதல் பகடையை துரியோதனன் மூலமாக உருட்ட ஆரம்பித்தான் சகுனி.!காலம் சிரிக்க ஆரம்பித்தது.!
சனி, 21 நவம்பர், 2015
சகுனி.!வில்லனல்ல ஹீரோ.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக