எண்பதுகளின் தமிழ் சினிமாவை ரஜினி,கமல் என்ற வசூலில் உத்தரவாதம் தரக்கூடிய இரண்டு நட்சத்திரங்கள் முழுமையாக ஆட்சி செய்ய துவங்கியிருந்த காலகட்டம்.எம்ஜிஆர் அரசியலில் பிஸியாகி விட சிவாஜியும் வயதாகி ஒதுங்கிவிட,ஜெய்சங்கர் தனக்கான ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரை இழந்து வீட்டில் ஒய்வெடுக்க,புதுமுகங்களும்,புது இயக்குநர்களும் படையெடுத்த இந்த காலகட்டத்தை லாவகமாக பயன்படுத்திக்கொண்டு ரஜினியும்,கமலும் தங்களின் கொடியை பறக்க விடத் தொடங்கினர்.ரஜினி தன் பழிவாங்கும் ஆக்சன் படங்களின் கதையை அமிதாப்பின் படங்களை தழுவி எடுத்து வெற்றியை சுவைக்க தொடங்கினார்.கமல் இன்றைய வித்யாசங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு ரஜினியின் டிராக்கில் ஒடிக் கொண்டிருந்த காலகட்டமும் இதுவே.ராஜபார்வை என்ற படத்தை தனது 27வது வயதில் எடுத்து வித்யாச டிராக்கிற்கு பிள்ளையார் சுழி போட்டு ரஜினியிடமிருந்து தன்னை தனித்துக்காட்டியதும் இதே காலகட்டம்தான்.
80களின் இசையை இளையராஜா என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிடலாம்.எம்எஸ்வியின் ஆதிக்கம் முடிந்து விட சங்கர்கணேஷ் மட்டுமே பேர் சொல்லும் இசையமைப்பாளர்களாக இருந்தனர்.இளையராஜாவின் பொற்காலம் இதுவென்று தைரியமாக சொல்லலாம்.மைக் மோகனின் பல படங்கள் தறி கெட்டு ஒட இசைராஜா ஒரு காரணமாக இருந்தார்.அப்போது ராசாவிற்கு போட்டியாக களமிறங்கி கலக்கியவர் டி.ராஜேந்தர்.இசையின் லகான் இளையராஜாவின் கையிலிருக்க,தமிழ் சினிமாவின் காமெடி நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
சுருளிராஜனின் மறைவுக்குப்பிறகு காலியான அந்த இடத்தை ஒய்.ஜி.மகேந்திரன்,பிந்துகோஸ்,தேங்காய் சீனிவாசனின் மொக்கை காமெடிகளால் நிரப்ப வேண்டிய அவல நிலையில் தமிழ் சினிமா தடுமாறியது.வாராது வந்த மாமணியாய் வாய்த்த கவுண்டமணி காமெடியின் கையை பிடித்து நெடும் பயணத்தை துவக்கினார்.உடன் பயணிக்க செந்திலும் வந்த பிறகு இந்த காமெடி வண்டி நான்ஸ்டாப்பாக பட்டையை கிளப்பியது.ஹீரோவின் நான்கு நண்பர்களில் சார்லியும்,சின்னி ஜெயந்தும் இடம்பெற ஆரம்பித்ததும் இதே காலத்தில்தான்.!
இந்த நேரத்தில் அலைகள் ஒய்வதில்லையில் கார்த்திக்கும்,பொன்விலங்கில் முரளியும்,சங்கிலியில் பிரபுவும் அறிமுகமாகி கதாநாயக பஞ்சத்தை தீர்த்தனர்.மோகன் தன் ஸ்டைலில் பாடியே படத்தை ஒட்டத் தொடங்கினார்.சாட்சி,சட்டம் ஒரு இருட்டரை மூலமாக விஜயகாந்த் ஆக்சன் ஹீரோவாக அவதாரமெடுத்ததும் இப்போதுதான்.ஒரு பெண் நாலு சின்னபசங்க என்ற கான்செப்ட் பாய்ஸ்வரை நீடிக்க அலைகள் ஒய்வதில்லை அடித்தளமிட்டது.
ஸ்ரீப்ரியா,அம்பிகா,ராதா,சுலக்சனா,ரதி, ரேவதி மாதவி போன்றவர்கள் தமிழில் பட்டையை கிளப்பத் தொடங்கினார்.இன்று போல் மும்பை பெண்களின் வரவு அன்று அறவே இல்லை.மாறாக ஸ்ரீதேவியும்,ரதியும் இந்தியில் நடிக்கப் போனார்கள்.கதாநாயகிகள் கவர்ச்சி காட்டும் காட்சிகளோ,நடனம் ஆடும் காட்சிகளோ அப்போது இல்லை.அது சில்க்ஸ்மிதா,அனுராதா,ஜெயமாலினிகளின் கோலேச்சும் தனி டிபார்ட்மெண்டாக இருந்தது.அதிலும் சில்கின் நடனத்திற்காகவே மூன்றாம்பிறை படம் விற்பனையாகுமளவிற்கு அவரது ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது.
மகேந்திரன் தனது முள்ளும்மலரும்,ஜானி,உதிரிப்பூக்கள் மூலமாக தமிழ் சினிமாவின் போக்கை மாற்ற முயலும்போதெல்லாம்,எஸ்பிமுத்துராமன்,ராஜசேகர் போன்ற கமர்சியல் இயக்குநர்கள் காக்கிசட்டை,சகலகலா வல்லவன் போன்ற படங்களை எடுத்து பழைய ரூட்டிற்கே தமிழ் சினிமாவை இழுத்துச் சென்றனர்.பாரதிராஜா கிராமத்திற்கு தமிழ் சினிமாவை கூட்டிக்கொண்டு போனார்.அவரது சீடரான பாக்யராஜ் தனியே வந்து பெண்களுக்கு பிடித்த அந்தமாதிரி விசயங்களை படத்தில் சொல்லி தொடர் வெற்றிகளை கொடுக்க ஆரம்பித்தார்.நிழல்கள் படத்தில் கதைவசனம் எழுதிய மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லையில் டைரக்டராகிறார்.பாலசந்தர் தனது நாடகபாணியை கை விட்டு சினிமாவிற்கான புது மொழியை தனது அவர்கள்,தாப்புதாளங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்.ஆர்.சுந்தர்ராஜன்,டி.ராஜேந்தர், மணிரத்னம்போன்றவர்கள் வெற்றிகரமான இயக்குநர்களாக வலம்வர துவங்குகின்றனர்.
தேங்காய் சீனிவாசன்,விஜயகுமார்,கராத்தே மணி வில்லன்களாக நடிக்கதுவங்கிய சோர்வுற்றபோது சரியான சந்தர்ப்பத்தில் வந்தார் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்.சத்யராஜ் தனி வில்லனாக தலையெடுக்கும்வரை ஜெய்யின் ஆதிக்கம் தொடர்ந்தது.அடியாளாக இருந்து வில்லனாக பிரமோசன் வாங்கிய சத்யராஜ் தனது பிரத்யேக உடல்மொழியாலும்,கிண்டல் வசனங்களாலும் வில்லன் வேடத்தை கவனிக்கும் வேடமாக மாற்றினார்.கடைசியாக வில்லனாக நடித்த விக்ரம்படம் வரை சத்யராஜின் அதகளம் தொடர்ந்தது.மாறுவேடத்தில் மறு வைத்துக்கொண்டு ஹீரோ ஆடுவது,கடைசி சண்டை பெட்டிகள்,பேரல்கள் அடுக்கப்பட்ட குடோனில் நடப்பது.தண்ணி அடித்து கொண்டு கவர்ச்சி நடனம் பார்ப்பது,வில்லனின் மகள் ஹீரோவையே லவ் பண்ணுவது.கிளைமேக்ஸில் வில்லனை ஹீரோ அடிக்கும்போது மகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு தேமேவென்று நிற்பது,தோளில் பாய்ந்த குண்டை கத்தியால் எடுப்பது,வில்லனை மன்னிக்கும்,சிறைக்கனுப்பும் எம்ஜிஆர் பார்முலா காணாமல் போய்,கொன்றே தீர்வது என்ற புது பார்முலா உருவானது,மாடர்ன்டிரஸ் ஹீரோயின் கல்யாணத்திற்கு பின் சேலையிலேயே இருப்பது,கிளைமேக்ஸில் டூமில் சத்தத்துடன் போலீஸ் வருவது,அசட்டு ஜோக்கிற்கு சிரித்தவுடன் வணக்கம் போடுவது என்று வழக்கமான கிளிஷோக்கள் எண்பதுகளிலும் இருந்தன.
ஊமை விழிகள் மூலமாக திரைப்படக்கல்லூரி மாணவர்கள் தங்களை கவனிக்க வைத்தனர்.அதில் இசையமைத்த மனோஜ்கியான் இசையுலகில் சற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.சங்கர்லாலின் இயக்குநர் மறைந்ததால் கமலே பாதிபடத்தில் டைரக்டர் ஆனார்.சைன்ஸ்பிக்சன் கதையான விக்ரமில் ப்ளுபேக் முறை முதலில் பயன்படுத்தப்பட்டது.இணைஇசை என்னும் சொல்லை ஆபாவாணண் கொண்டுவந்தார்.எண்பதுகளின் தமிழ் சினிமா தனது பழைய முகத்தை உதறி புதிய அரிதாரம் பூச தயாராகி கொண்டிருந்ததை இப்போது திரும்பிப் பார்க்கும் போது உணர முடிகிறது.தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆயிரம் குறைகள் இருந்தாலும் எண்பதுகளின் சினிமா தன்னால் முடிந்தவரை தமிழ் ரசிகனை திருப்திபடுத்த முயன்று வந்திருக்கிறது.இசையை பொறுத்தவரை இந்த காலகட்டம் இளையராஜாவின் பொற்காலம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஞாயிறு, 11 அக்டோபர், 2015
எண்பதுகளின் தமிழ் சினிமா.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக