கெஸ்ட் ஹவுசில் டிவி பார்த்தபடி காபி குடித்துக் கொண்டிருந்த ராமசந்திரன் தலைகலைந்து,வியர்வையோடு உள்ளே வந்த சரணை ஏறிட்டுப் பார்த்தார்.சரண் அவரது கோடிக்கணக்கான சொத்துகளுக்கு ஒரே வாரிசு.மனைவியின் இறப்புக்கு பின் ராமசந்திரன் பணத்திற்கும்,பெண்களுக்கும் பின்னாடி அலைந்து கொண்டிருந்த போது எப்படியோ வளர்ந்து விட்டவன்.உலகின் அத்தனை கெட்ட பழக்கங்களுடனும் சகவாசம் கொண்டவன்.திடிர்,திடிரென மாறும் இயல்புக்கு சொந்தக்காரன்.ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள அதன் அடி ஆழம்வரை செல்லும் எக்ஸாண்டிரிக் மனநிலை படைத்தவன்.
"இன்னைக்கு என்னடா பண்ணித் தொலைஞ்ச.?"
"பின்னாடி போலீஸ் வருதுப்பா.!அவங்க சொல்லுவாங்க.!"பிரிட்ஜிலிருந்து பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஒடியவனை இவன் எனக்குத்தான் பொறந்தானா என்று யோசித்தபடி கல்யாணியின் படத்தை பார்த்தார்.நான் பத்தினி .நம்புங்கள் என்றது இறந்த மனைவியின் புன்னகை.
"சங்கரு.!"என்றார் ராமசந்திரன்.
வந்து நின்ற டெல்லி கணேசின் சாயல் மனிதர் "சொல்லுங்கய்யா.!"என்றார்.ராமசந்திரனின் பி.ஏ.ஆலோசகர்,மாமா இன்னபிறவாகவும் இருப்பவர்.
"இந்த தாயோளி எதையோ பண்ணி வச்சிட்டு வந்துட்டான்.போலீஸ் வேற வருதாம்.என்ன பண்றது.?"
"புல் டீடெய்ல் தெரியட்டுங்கய்யா.!பாத்துட்டு பண்ணிக்கலாம்.!"
தட்டப்பட்ட கதவை திறந்த போது நின்றிருந்த இன்ஸ்பெக்டர் "இங்க சரண்கிறது யாரு.?"
"எம்பையன்தான்.!என்ன விசயம்? "
"அவரு இப்ப எங்கிருக்காரு.?"
"ரெண்டு நாளா சின்னயாக்கு உடம்பு சரியில்லை.பெட் ரெஸ்ட்ல இருக்காரு."
"நீங்க யாரு.?
"அவரு என்னோட பி.ஏ.பேர் சங்கர்.!"
"நான் கேட்கும் போது நீங்க பேசினா போதும்.!
சரி என அமைதியானார் சங்கர்.
"உங்க பையன் பைக் ரேஸ்ல வேகமா வண்டிய ஒட்டி நாலு வயசு புள்ளைய கொன்னுட்டான்.!"
"அவன்தான் வெளிய போகவேயில்லையே.!"
"பொய் சொல்லாதீங்க.!வண்டியோட சைலண்ஸர் இன்னும் சூடு ஆறாமத்தான் இருக்கு."
"சமையல்காரன் இப்பத்தான் வெளில போயிட்டு வந்தான்.ரெண்டாவது இதெல்லாம் கோர்ட்ல நிக்காது."
சங்கர் அதற்குள் கமிசனருக்கு போன் பண்ணி விசயத்தை சொல்ல போன் இன்ஸ்பெக்டருக்கு கை மாறியது.
"யோவ்.!அந்தளு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா.?பைக் ரெண்டு நாளைக்கு முன்னாடியே திருட்டுப் போயிருச்சுன்னு சொல்லி எப்ஐஆர் போட்டு சிக்குனவனை வைத்து கேஸை முடிய்யா.!"
"சரி சார்.!"என்ற இன்ஸ் பெக்டருக்கு கோபம் வந்தது.வெளிக்காட்டாமல் அடக்கினார்.
மாடியிலிருந்து எட்டிப்பார்த்த சரண் "இன்னோரு குழந்தையை பெத்துக்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.வறுமையிலும்,ஏழ்மையிலிருந்தும் நான் விடுதலை கொடுத்திருக்கிறேன்.!"
"டேய்.!நீ உள்ள போ."!ராமசந்திரன் உறுமினார்.
இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.அந்த கேஸ் ஒன்றுமில்லாமல் ஆனது.கஞ்சா அடிமை ஒருவன் நான்தான் வண்டியை திருடி ஒட்டி விபத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்லி சரணடைய இன்ஸ்பெக்டர் நொந்து போனார்."எங்களுக்கெல்லாம் நியாயமே கிடைக்காதா.?"என்று அந்த ஏழைத் தம்பதிகள் கண்ணீரோடு கேட்ட போது அவரிடம் பதிலில்லை.!
மெல்ல சரணைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
இப்போதெல்லாம் ராமசந்திரன்சரணுக்கு பணம் தருவதை நிறுத்தி விட அவன் போதைக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருந்தான்.தற்செயலாக பாரில் அவனை சந்தித்து பேசினார் இன்ஸ்பெக்டர்.அதன் பிறகு தினமும் இருவரும் சந்திப்பதும் அவர் சரக்கு வாங்க செலவு செய்வதும் தொடர்ந்து கொண்டிருந்தது.இரண்டு வாரங்களுக்கு பிறகு தொழிலதிபரின் மகன் தற்கொலை என சரணிண் புகைபடத்துடன் செய்தி வந்திருந்தது.
இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டார்.எதையும் அடிஆழம்வரை தெரிந்து கொள்ள முனையும் அவனது ஆர்வ கோளாறை தற்கொலை,மரணத்திற்கு பிந்தைய வாழ்வு,மறு ஜென்மம் என்று தினமும் பேசி திசைதிருப்பி அவனை அதில் அதீத ஆர்வம் கொள்ளச் செய்து கடைசியில் தானாகவே தற்கொலை செய்யும்படி தூண்டிய தன் சாமார்த்தியத்தை தானே மெச்சிக் கொண்டார்.இப்போது மனம் இலேசாகியிருந்தது அவருக்கு.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக