செவ்வாய், 1 நவம்பர், 2022

ரகசிய தீவு47

ஆபத்பாந்தவன்

தங்களை எதிரிகள் சுற்றி சூழ்ந்த போதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஆதித்தன் அம்புகளை சரமாரியாக எதிரிகள் மீது செலுத்த துவங்கினான். பதுங்கி கிடந்தவர்கள் வில் அம்புகளை பயன்படுத்தவே இல்லை என்பதை ஆதித்தன் கவனித்தான்.

உண்டு உறங்கி காடுகளில் பதுங்கி வாழ்ந்தே பழக்கப்பட்டவர்கள் குறுவாளையும், வாளையும் ஆயுதமாக வைத்திருந்தார்களே தவிர வில் அம்புகளை பயன்படுத்த தவறியிருந்தனர். வேட்டையாடுவதற்காக ஒன்றிரண்டுவில் களை மட்டுமே அவர்கள் தயார் செய்து வைத்திருந்தார்கள்.

ஆதித்தனிடம் வெகு வேகமாக அம்புகளின் எண்ணிக்கை குறைந்தது போலவே எதிரிகளிடமும் அம்புகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இரண்டு பக்கமும் பொழிந்த அம்பு மாரி சற்று நேரத்தில் ஓய்ந்தது. இருவரிடமும் அம்புகள் தீர்ந்து போனதால் அடுத்தது எப்படி தாக்குதல் நடத்துவது என்று தெரியாமல் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.

கையில் கிடைத்த ஆயுதங்களுடன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த கலை கூத்தாடிகளை அழைத்த ஆதித்தன் அவர்களை கும்பலாக ஒரே இடத்தில் நிற்க செய்தான். "நண்பர்களே! பயப்படாதீர்கள். இனி அவர்களாலும் நம்மாலும் தூரத்தில் இருந்து தாக்குதல் நடத்த முடியாது. இனி நெருங்கி போய் தான் தாக்குதல் நடத்த வேண்டும். அவர்கள் புதர்களுக்கு நடுவே பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறார்கள். நாமோ வெட்ட வெளியில் அகப்பட்டு விட்டோம். உங்களை சூழ்ந்து கொண்டு மூன்று திசைகளில் நாங்கள் பாதுகாப்பாக கையில் வாளுடன் நிற்போம். எங்களில் யாராவது வீழ்ந்தால் உங்களில் ஒருவன் வெளியே வந்து அந்த இடத்தை நிரப்புங்கள். எங்கள் அரவணைப்பில் நிற்பவர்கள் நவகிரகங்களைப் போல் பிரிந்து நில்லுங்கள். அப்போதுதான் எல்லா திசைகளையும் நம்மால் கண்காணிக்க முடியும் " என்றான் ஆதித்தன் எதிரிகளுக்கு கேட்காத கிசுகிசுப்பான குரலில்.

அவனது உத்தரவிற்கு அனைவரும் கீழ்படிந்தனர்.யவனனும் கடோத்கஜனும் தங்கள் இடுப்பில் இருந்த வாளை உருவிக்கொண்டு எதிரிகளின் வருகையை எதிர்பார்த்து நின்றனர்.

அங்கே ஓரு துவந்த யுத்தம் தொடங்கியது. புதரில் மறைந்து கிடந்தவர்கள் ஓவ்வொருவராக வெளிவர ஆரம்பித்தனர். கையில் வாளுடன் ஓடி வந்தவர்களை தடுத்து நிறுத்தி சண்டையிட்டு வீழ்த்த ஆரம்பித்தனர் மூவரும். ஒவ்வொருவராக எதிரிகள் வெளிவந்ததால் அவர்களை வீழ்த்துவது நண்பர்களுக்கு எளிதாக இருந்தது.

எதிரிகள் ஆட்கள் வீழ்த்தப்படுவதை பார்த்ததும் தங்கள் வியூகத்தை மாற்றி கொள்ள துவங்கினர்.

ஓவ்வொரு திசையிலும் நான்கைந்து பேர் கூட்டமாக ஓடி வர துவங்கினர். அவர்களை தடுத்து நிறுத்துவதில் நண்பர்களின் சக்தி வீணாக ஆரம்பித்தது. விரைவிலேயே அவர்கள் சோர்வடைய ஆரம்பித்தனர்.

ஆதித்தனை சுற்றி வளைத்தவர்கள் கும்பலாக அவன் மீது திடிரென்று அவன் மீது பாய்ந்து அவனை வீழ்த்தினர். ஆதித்தன் தன் மேல் விழுந்த மூவரில் இருவரை கைகளால் பற்றி தூக்கி வீசினான். அவனது வாள்கை தவறி கீழே விழந்திருந்தது. மூன்றாவது ஆசாமி அவனது மார்பின் மீது உட்கார்ந்து அவனை எழவிடாமல் செய்து கொண்டிருந்தான்.

அவனது கையில் குறுவாள் ஓன்று மின்னியது. "செத்து போ" என்றவன் அந்த வாளை ஆதித்தனின் மார்பில் பாய்ச்ச முயன்றான்.

எங்கிருந்தோ வந்த அம்பொன்று அவனது தொண்டையில் பாய்ந்து வெளியே வந்தது.வலியால் அவன் தவறவிட்ட குறுவாளை கச்சிதமாக பிடித்து கொண்டான் ஆதித்தன். தன் மீது உட்கார்ந்திருந்தவனை கீழே தள்ளி விட்டவன் தன் வாளை தேடி எடுத்து கொண்டு நிமிர்ந்தான்.அம்பை பிரயோகிக்கும் அளவுக்கு நம் நண்பர்களுக்கு திறன் கிடையாதே என்று ஆதித்தன் யோசிக்கும் போதே "நண்பரே கீழே படுங்கள்" என்றது ஒரு கம்பீர குரல்.

ஆதித்தன் அந்த குரலுக்கு கட்டுப்பட்டு கீழே படுத்தான். விஷ் என்ற சத்தத்துடன் ஏராளமான அம்புகள் எதிரிகள் மீது பாய்வதை அவன் பார்த்தான். தன்னைப் போலவே யவனனும் கடோத்கஜனும் கீழே படுத்திருப்பதை அவன் அப்போதுதான் பார்த்தான்.

ஆதித்தனின் குழப்பமான பார்வையை பார்த்த யவனன் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதன் அடையாளமாக உதட்டை பிதுக்கினான்.

மெல்லபுரண்டு படுத்த ஆதித்தன் தலையை நிமிர்த்தி குரலுக்குறியவனை பார்த்தான்.

ஆதித்தனை காப்பாற்ற வந்திருந்தவன் சிகப்பு முகமூடியான பார்த்திபன்.

காட்டிற்குள் புதையலை தேடி தன்னுடைய ஆட்களுடன் வந்த பார்த்திபன் தன்னுடைய காலடியில் அம்பு ஓன்று பாய்ந்ததை பார்த்து திடுக்கிட்டான். அது எதிரிகள் ஆதித்தனை நோக்கி விட்ட அம்பு. அது இலக்கு தவறி பார்த்திபனிடம் வந்து சேர்ந்திருந்தது. சிறிது தூரத்திலேயே பலத்த சத்தம் கேட்பதை உணர்ந்த பார்த்திபன் இந்த வனத்திற்குள் விபரீதமாக ஏதோ நடக்கிறது என்று தன் ஆட்களை உசார் படுத்தினான்.

என்ன நடக்கிறதென்று பார்க்க அவர்கள் சத்தமின்றி பதுங்கி பதுங்கி முன்னேறினர். அங்கே சமவெளி பகுதியில் அரண் அமைத்து நின்றிருந்த சிலரை காட்டுவாசிகள் தாக்குவதை அவன் பார்த்தான்.

புதையலை எடுக்க காட்டுவாசிகள் வேடத்தில் இருக்கும் கடல் கொள்ளையர்கள் இடையூறு விளைவிப்பார்கள் என்பதால் முதலில் அவர்களை ஓழித்து விடுவது நல்லது என்று அவனுக்கு தோன்றியது.

" காட்டுவாசிகள் தாக்குகிறார்கள். அவர்களை குறிவைத்து தாக்குங்கள்" என்று தன்னுடைய புரட்சி கூட்டத்திற்கு கட்டளையிட்டான்.

ஆதித்தனை கொல்ல முயன்றவனை தன் அம்பால் வீழ்த்தினான் பார்த்திபன். கூடுதல் ஆட்கள் ஆயுதங்களுடன் வந்ததால் மிச்சம் இருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த யுத்தம் அறைகுறையாக முடிவுக்கு வந்தது.

சற்று நேரத்தில் அங்கே அமைதி நிலவ ஆரம்பித்தது.

"சரியான நேரத்தில் வந்து எங்கள் உயிரை காப்பாற்றி விட்டீர்கள். மிகவும் நன்றி" என்றான் ஆதித்தன்.

"அது என் கடமை நண்பரே! ஆமாம் இங்கே என்ன கலவரம்? அவர்கள் ஏன் உங்களை தாக்க முயற்சி செய்கிறார்கள்?" என்றான் பார்த்திபன்.

"நாங்கள் வழிபோக்கர்கள். பாதை தெரியாமல் இந்த பக்கமாக வந்து விட்டோம். இவர்கள் எங்களை தாக்கினார்கள்"

"பொய் சொல்லாதீர்கள்.இந்த தீவிற்கு வரும் அனைவரும் இங்கே வரத் தயங்குவார்கள். அவர்களின் எச்சரிக்கையை மீறி நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். யார் நீங்கள்? உண்மையை சொல்லுங்கள்" என்றான் பார்த்திபன்.

"நான் ஆதித்தன். கள்வர்புரத்தை சேர்ந்த கள்வன்"

பார்த்திபனின் முகம் மாறியது. அவன் குதிரையிலிருந்து குதித்து இறங்கினான். உடனே ஓடிச் சென்று ஆதித்தனின் கைகளை பற்றியவன் "ஆகா! அந்த ஆதித்தன் நீங்கள் தானா? உங்களை பின்பற்றித்தான் என் அண்ணன் கரிகாலன் இந்த தீவின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தான்?உங்களை பற்றி அவன் அடிக்கடி பெருமையாக பேசுவான்" என்றான் மகிழ்ச்சியுடன் .

"நல்லது நண்பா! அந்த சிகப்பு முகமூடி ? புரட்சி கூட்டத்தின் தலைமை நீதானா?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். அது நான் தான் .இவர்கள் எனக்கு துணையாக இருக்கும் நண்பர்கள் " என்று வில்லவன் உட்பட அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தான் பார்த்திபன்.

பார்த்திபன், வில்லவன், ஆதித்தன் மூவரும் தனிமையான இடத்திற்கு சென்றனர்.

" நண்பா! இங்கே என்ன நடக்கிறதென்று விளக்கமாக சொல். அப்போதுதான் என்னால் உனக்கு உதவி செய்ய முடியும் " என்றான் ஆதித்தன்.

பார்த்திபன் ஆதியோடு அந்தமாக முழு கதையையும் கூறி முடித்தான்.

எல்லாவற்றையும் கவனமாக கேட்ட ஆதித்தன் "அதோ அங்கே யாரை பாதுகாக்க நாங்கள் போராடினோமோ அவர்கள் அந்த பெண் சந்திரவதனாவின் நண்பர்கள். அந்த பெண்ணை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்" என்றான் ஆதித்தன்.

"அவர்கள் ஒரு வகையில் எனக்கு உறவுக்காரர்கள் தான். அவர்களை இப்போதே அவளிடம் அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்" என்றான் பார்த்திபன்.

"ஆயுதங்களை புதையலுக்கு பதிலாக தருவதாக சொல்லும் நஞ்சுண்டனை நம்பாதே.! அவன் என் நண்பனை ஏமாற்றி கப்பலை திருடிக் கொண்டு ஓடியவன். நீ இவனிடம் பொக்கிசங்களை கொடுத்து விட்டு ஆயுதங்களை வாங்கினால் என் நண்பன் சிக்கலில் மாட்டி கொள்வான். அந்த நஞ்சுண்டன் மீது ஒரு கண் வையுங்கள். பிறகு அந்த யோகி. அவர் மீது எனக்கு ஐய்யமாக இருக்கிறது. இந்த காட்டுவாசிகளுக்கு தினப்படி உணவு சமைத்து அனுப்புகிறவன் அவன் தான் " என்றான் ஆதித்தன்.

"நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை" என்றான் அதிர்ச்சியுடன் பார்த்திபன்.

"அவர்களை நான் கப்பலில் அடைத்து வைத்திருக்கிறேன். அவர்களை விசாரித்து உண்மையை நீயே தெரிந்து கொள்" என்றான் ஆதித்தன்.

ஆதித்தனின் உத்தரவை ஏற்ற யவனன் கழுகில் அடைபட்டு கிடந்தவர்களை விடுவித்து அழைத்து வந்தான்.

அவர்களை விசாரித்த பார்த்திபன் அதிர்ச்சியின் உச்சிக்கு போனான்.

" இவர்களுக்கு அவன் ஏன் சமைத்த உணவை அனுப்ப வேண்டும்? எனக்கு யோகியின் மீது சந்தேகமாக இருக்கிறது. வில்லவா.நீ சந்திரவதனாவின் நண்பர்களை அவளிடம் அழைத்து செல்.வரும் வழியில் ... "

"யோகியின் ஆசிரமத்திற்குள் சென்று அவர் இருக்கிறா என்று பார்த்து வருகிறேன்" என்றான் வில்லவன். அவன் அங்கிருந்து கிளம்பினான்.

"அடுத்தது?" என்றான் பார்த்திபன்.

"புதையலை தேடுவோம்" என்றான் ஆதித்தன்.

நஞ்சுண்டன் நடப்பதை மவுனமாகப் பார்த்து கொண்டிருந்தான்.முத்தழகி தன் கையை விட்டு போனது அவனுக்கு தெரியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக