வெள்ளி, 25 நவம்பர், 2022

ரகசிய தீவு 60

ரகசிய தீவு

அத்தியாயம் 60

ஒன்றை மூன்றாக்கும் மந்திரவாதி

ஆதித்தனை கூர்ந்து பார்த்த பார்த்திபன் "நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை" என்றான்.

"புரியும்படியாகவே சொல்கிறேன். முதலில் நாம் நம்முடைய பலவீனங்களை பட்டியலிடுவோம். அதில் முதலிடம் பிடிப்பது நமக்கு போதுமான வீரர்கள் இல்லை என்பது தான் " என்றான் ஆதித்தன்.

"ஆம்.மதிமாறனிடம் ஆள் பலம் அதிகம். நம்மிடம் குறைவான ஆட்களே இருக்கிறார்கள். கப்பலில் வரும் ஆயுதங்களும் அவனுக்கு கிடைத்து விட்டால் அவனுடைய பலமும் அதிகரித்து விடும்"

"வீரம், வெற்றி என்பதெல்லாம் எண்ணிக்கையை பொறுத்து அமைவதல்ல.களத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது.விரர்கள் அவனிடம் அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் மன உறுதியை நாம் தகர்த்து விட்டால் போதும். நெல்லி காய் மூட்டையை அவிழ்த்து கொட்டியது போல் பயத்தில் சிதறி ஓடி விடுவார்கள். இதுவொரு தீவு . முற்றிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. தோற்றவன் தப்பி ஓட வழியே யில்லை. உயிரோடு இருக்க வேண்டுமானால் வென்றவனிடம் சரணடைந்து தான் தீர வேண்டும்"

"நீ சொல்வது நமக்கும் பொருந்தும் அல்லவா? நாம் இந்த புரட்சியில் தோற்றுவிட்டால் ஓடி ஓளியவேறு எந்த இடமும் இல்லை"

"கலகங்கள் வெற்றி பெற்றால் புரட்சி என்றழைக்கப்படும். புரட்சிகள் தோற்றுவிட்டால் கலகம் எனப்படும். இப்படி எதிர்மறையாக யோசிப்பதை விட்டுவிடு. நீ ஒரு தலைவன். உன்னை பின்பற்ற ஏராளமான ஆட்கள் உள்ளனர். அவர்களை வழி நடத்த வேண்டிய நீ நேர்மறையாக பேசி அவர்களுக்கு நம்பிக்கையை தர வேண்டும். நீயே அவநம்பிக்கையோடு இருந்தால் உன்னை எப்படி மற்றவர்கள் நம்பி பின் தொடர்வார்கள்? முழு நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் எந்த செயலும் தோல்வியை சந்திப்பதில்லை.."

"என்னை மன்னித்து விடு ஆதித்தா! நான் மறந்து போன தலைவனுக்கான தகுதியை நீ மீண்டும் நினைவு படுத்தி விட்டாய். இனி ஒருபோதும் அவநம்பிக்கையாக பேச மாட்டேன். நீ எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு இந்த நேர்மறை எண்ணம் தான் காரணம் போலும் " என்றான் பார்த்திபன்

" எது நடந்தாலும் நன்மைக்கே என்று வருவதை எதிர்கொள்ள நானும் என் தமையனும் பழகிவிட்டோம். சோர்ந்து உட்காருவதால் எதுவும் நம்மை விட்டு விலகிவிடாது."

"புரிகிறது. நாம் தான் ஜெயிக்கப் போகிறோம். நாம் தோற்று இந்த தீவை விட்டு ஓடப்போவதில்லை. இப்போது மேலே சொல் " என்றான் பார்த்திபன் தெளிவுடன் .

" உன் மனம் செய்யும் காரியத்தில் ஒரு முகப் பட்டு விட்டது. அக்கறையான உன் பேச்சு உன்னுடைய ஆர்வத்தை காட்டுகிறது. இனி நான் சொல்வதை கவனமாக கேள்.மதிமாறனின் ஆட்கள் பலம் அதிகம்.அந்த படையின் மன உறுதியை குலைக்க வேண்டுமென்றால் நமக்கு அதிக வீரர்கள் தேவை. இப்போதைய நிலைமையில் அதிக வீரர்கள் வெளியிலிருந்து வர முடியாது. தீவிற்கு உள்ளே தான் நாம் ஆட்களை தேட வேண்டும்"

"இங்கே யார் நமக்கு உதவ வரப்போகிறார்கள்?" என்றான் பார்த்திபன் குழப்பத்துடன் .

"ஓரு மந்திரவாதி இங்கே இருக்கிறான். ஒரு ஆளை மூன்று ஆட்களாக மாற்றும் சக்தி அவனிடம் உண்டு. அவன் தான் நமக்கு உதவ போகிறான்."

"ஏற்கனவே யோகி என்ற பெயரில் கருணாகரன் என்னை ஏமாற்றி கொண்டிருந்தான். இப்போது புதிதாக ஒரு மந்திரவாதி வந்திருக்கிறான். யார் அவன்? எனக்கு தெரியாமல் அவன் இங்கே எப்படி இருக்க முடியும்?" என்றான் பார்த்திபன்.

"அவனை இந்த தீவில் தான் நான் முதன் முதலில் பார்த்தேன். தன்னுடைய ஆற்றல் தெரியாமல் அதை தெருவில் பயன்படுத்தி கொண்டிருந்தான்."

ஆதித்தனின் பூடகமான பேச்சு புரியாமல் திகைத்து நின்றான் பார்த்திபன்.

"இன்னமும் புரியவில்லையா?" என்று அவனை பார்த்து நகைத்தான் ஆதித்தன்.

"எனக்கு ஓன்றுமே புரியவில்லை" என்றான் குழப்பத்துடன் பார்த்திபன்.

"புரியும்படியாகவே சொல்கிறேன். உன் கலை கூத்தாடி நண்பர்களை இங்கே வரச் சொல். நான் சொல்வதை நீ உன் கண்ணாலேயே காணலாம்" என்றான் சிரிப்புடன் ஆதித்தன்.

சற்று நேரத்தில் அவனுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தது கலை கூத்தாடிகளின் குழு ..ஆதித்தன் எதற்காக தங்களை அழைத்திருக்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை.

தன் முன்பு நின்று கொண்டிருந்தவர்களை கவனமாக ஓரு முறை கூர்ந்து பார்த்தான் ஆதித்தன். ரகசிய தீவின் துறைமுகத்தில் இறங்கிய பிறகு ஆதித்தன் பார்த்தது கலை கூத்தாடிகளின் வித்தையைத் தான். அதற்கு நடுவே தான் மதி மாறனும் கருணாகரனும் உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி குழுவையே கைது செய்து விட்டார்கள். அந்த சம்பவத்தின் போது வித்தை காட்டி கொண்டிருந்தவனைத்தான் ஆதித்தன் இப்போது தேடிக் கொண்டிருந்தான்.

அவனது கழுகு கண்கள் கூட்டத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டன.

ஓரமாக நின்றவனை சுட்டி காட்டியவன் "உன்னைத்தான் நண்பனே இவ்வளவு நேரம் தேடிக் கொண்டிருக்கிறேன். கூட்டத்திலிருந்து விலகி முன்னால் வா!" என்றான் முகமலர்ச்சியுடன் .

அவன் எதுவும் புரியாமல் முன்னால் வந்து நின்றான்.

"நண்பா! உன்னுடைய பெயர் என்ன?"

" என்னுடைய பெயர் சாத்தன். என்னை எதற்காக தேடினீர்கள்?"

"சாத்தன். நல்ல பெயர் .இந்த பெயரை அதிகமாக வணிகர் தலைவர்கள் அல்லவா வைத்து கொள்வார்கள்?"

" வணிகர் தலைவராக வேண்டும் என்று நானும் தான் ஆசைப்பட்டேன். ஆனால் விதி வலியது. அது நடக்கவில்லை" என்றான் அவன் சோகமாக .

"வருந்தாதே! விதி வேறு ஒரு காரியத்திற்கு உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த கலை குழுவில் உன்னுடைய வேலை?"

" வித்தை காட்டுவது தான். மூன்று மனிதர்கள் என்னும் பொம்மலாட்ட வித்தை"

"எங்களுக்காக அந்த வித்தையை ஒரு முறை செய்து காட்டுவாயா?" என்றான் ஆதித்தன். அவன் செய்வதை கவனிக்கும் படி பார்த்திபனுக்கு சாடை காட்டவும் அவன் தயங்கவில்லை.

சாத்தன் தன் தோளில் இருந்த துணி மூட்டையை கீழே இறக்கினான். அதில் இருந்த மனித உருவ துணிகளுக்குள் பஞ்சை நிரப்ப ஆரம்பித்தான். சற்று நேரத்தில் இரண்டு மனித உ ருவங்கள் அங்கே உருவாகிவிட்டன. தன் முதுகில் சொருகியிருந்த நீளமான மூங்கில் குச்சிகள் இரண்டை எடுத்தவன் அதில் ஒன்றின் நுனியைபொம்மைகளின் கையிலும் மற்றோரு நுனியை இன்னொரு பொம்மையின் கையிலும் கட்டினான். அதே போல் இன்னொரு குச்சியை எடுத்து அதன் நுனியை ஓரு பொம்மையின் காலிலும் மற்றோருமுனையை இன்னொரு பொம்மையின் காலிலும் இறுகக் கட்டினான். இரண்டு பொம்மைகளுக்கும் நடுவே ஒரு ஆள் நு ழையக் கூடிய இடைவெளி இருந்தது.

இரண்டு உருவங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியில் நுழைந்த சாத்தன் குச்சிகளின் நடுவே தன்னுடைய கைகளையும், கால்களையும் கட்டி ஒரு கயிறு கொண்டு கட்டி கொண்டான்.

இப்போது அங்கே மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். நடுவில் உண்மையான மனிதனான சாத்தன் இருந்தான். அவனது இரு புறத்திலும் முன் பின்னாக இரண்டு பொம்மைகள் இருந்தன.சாத்தன் நடந்தால் குச்சிகளின் உதவியால் பொம்மைகளும் அவனுடன் நடந்தன. அவன் கைகளை வீசினால் பொம்மைகளும் கையை வீசின. அவன் உட்கார்ந்தால் பொம்மைகளும் உட்கார்ந்தன.

தூரத்தில் இருந்து யார் பார்த்தாலும் அங்கே மூன்று மனிதர்கள் இருப்பதாகத் தான் சொல்வார்கள். மூன்று பேர் ராணுவ பயிற்சியில் ஒன்று போல் ஈடுபடுவது போல் தான் அந்த காட்சி இருந்தது.

நடப்பவற்றை கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன். இந்த கள்வர்புரத்து கள்வன் சாதாரண ஆள் இல்லை. கண்ணில் பார்க்கும், காதில் கேட்கும் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறான். இவன் ஏன் தன்னுடைய எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுகிறான் என்பது இப்போது தான் பார்த்திபனுக்கு புரிந்தது.

" எப்படி என்னுடைய மந்திரவாதியின் மந்திர வேலை?" என்று அவன் தோளை தட்டி சிரித்தான் ஆதித்தன்.

"நண்பா. இப்படி ஓரு தந்திர வேலையை நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இரண்டாயிரம் பேரை இந்த மந்திரவாதி ஆறாயிரம் பேராக மாற்றி காட்டி விடுவான் போலிருக்கிறதே? இப்படி சரிக்கு சரியான படை பலம் இருக்கும் என்று மதிமாறன் கனவுகூட கண்டிருக்க மாட்டான் " என்றான் பார்த்திபன் மகிழ்ச்சியுடன் .

"இந்த போலி படைகளை உள்ளே நிறுத்தி உண்மையான ஆட்களை ஆட்களை வெளியே நிறுத்தி வைத்து மதிமாறனின் கண்களை கட்டி விடலாம்.இதிலேயே பாதி வீரர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தொலைத்திருப்பார்கள்.. மதிமாறனின் மன உறுதியை குலைக்க இன்னொரு திட்டம் உள்ளது"

"அது என்ன?"

"பொய்யை உண்மையாக்கும் வித்தை. நாம் சொல்ல போகும் பொய் நம்முடைய புரட்சிக்கு உதவியாக வளநாடு படை அனுப்பப் போகிறது என்பது. அந்த பொய்யை நாம் உண்மையாக்கப் போகிறோம். அதுவும் வள நாட்டிற்கு தெரியாமல் "

"அது எப்படி முடியும்?"

" சொல்கிறேன்" என்று புன்னகைத்தான் ஆதித்தன்.

இவனுடைய தலைக்குள் இன்னும் என்னென்ன யோசனைகள் புதைந்து கிடக்கின்றதோ என்ற வியப்பில் சிலையாக நின்றான் பார்த்திபன்.

வியாழன், 24 நவம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 59

எதிரிக்கு எதிரி

நஞ்சுண்டன் ஆதியை பணயக் கைதியாக பிடித்து கொண்டு போவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள் அனைவரும் .

"அந்த சிறுவனை மீட்க இத்தனை பேர் இருந்தும் நம்மால் முடியவில்லை" என்று தன்னையே நொந்து கொண்டான் பார்த்திபன்.

"நாம் ஏடாகூடமாக எதையாவது செய்ய நினைத்தால் அவனது உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்து சேரும் என்றுதான் அனைவரும் அமைதியாக இருந்தோம். அந்த பாதகன் ஆதியின் கழுத்தில் வாளை வைத்திருந்ததை நீயும் பார்த்தாய் தானே? நாம் ஆதியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவன் மிகுந்த கெட்டி காரன் எப்படியாவது அந்த கொடியவனை ஏமாற்றி அவனது பிடியில் இருந்து தப்பி வந்து விடுவான். நாம் கவலைப்பட வேண்டியது வேறு ஒரு விசயத்தைப் பற்றித்தான் " என்றான் வில்லவன்.

" எதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்கிறாய்?" என்றான் ஆதித்தன்.

"ஆயுதங்களை நமக்கு தருவதாக சொன்ன கருணாகரன் அதற்கு பதிலாக நமக்கு விதித்த நிபந்தனை ஓன்று தான். அது நஞ்சுண்டனை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது. அவனிடம் ஒப்படைக்க அந்த நயவஞ்சகன் நம்மிடம் இல்லை. அவனது நிபந்தணையை நாம் நிறைவேற்றாதபோது அவன் எப்படி நமக்கு ஆயுதங்களை கொடுத்து உதவி செய்ய முன் வருவான்" என்றான் வில்லவன்.

"நல்ல கேள்வி தான். ஆனால் அந்தப் பக்கம் நமக்கு உதவி செய்ய நீலன் என்ற ஓருவன் இருப்பதை மறந்து விட்டாய். அவன் என்னுடைய நண்பன் தான். அவன் ஆயுதங்களைப் பெற நமக்கு உதவி செய்வான். கவலைப் படாதே"என்று அவனைத் தேற்றினான் ஆதித்தன்.

"அடுத்தது நாம் என்ன செய்ய போகிறோம்?" என்றான் யவனன்.

"வேறு என்ன செய்வது? கருணாகரனிடமிருந்து ஆயுதங்களை பெற வேண்டியதுதான்." என்றான் ஆதித்தன்.

"அது என்னுடைய வேலை இல்லையே? என்னுடைய எஜமானர் மகேந்திரன் நீலனை கண்காணிக்க வல்லவா என்னை அனுப்பினார்? நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?" என்றான் யவனன்.

" நீ சொல்வதும் சரிதான். எங்களின் உள்நாட்டு விவகாரத்தில் அந்நியனான நீ மூக்கை நுழைப்பது அவ்வளவு நல்லதல்ல" என்றான் பார்த்திபன்.

"அப்படியானால் நம்முடைய யவன நண்பரை இன்று இரவு இரண்டாம் சாமத்தில் நீலனின் கப்பலில் ஏற்றி விட வேண்டியது தான் " என்றான் ஆதித்தன்.

"சரி நாம் பேசியது போதும். இங்கிருந்து கிளம்பலாம்.நாம் துறைமுகத்தை அடைவதற்குள் இரண்டாம் சாமம் துவங்கி விடும். ஊரே அயர்ந்து தூங்கும் அந்த நேரம் தான் நமக்கு ஆயுதங்களை எடுத்து செல்ல சரியான நேரம் " என்றான் பார்த்திபன்

அவர்கள் அங்கிருந்து கிளம்ப தொடங்கினார்கள். வில்லவன் கருணாகரனை சந்திப்பதற்காக குதிரையில் முன்னதாக கிளம்பினான். அவனுடன் யவனனும் இணைந்து கொண்டான். நீலனை கண்காணிக்க அனுப்பப்பட்ட தான் இத்தனை நாட்களாக தன் பணியை மறந்து திரிந்ததற்காக யவனன் தன்னையே நொந்து கொண்டான். நீலன் சிறையிலிருந்து திடிரென்று மாயமாக மறைந்து போனது தான் தன் பணி தடையாக காரணம் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். நீலனை தன் கண் பார்வையில் வைத்து கொண்டு மோகினி தீவில் கொண்டு போய் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதியில்லை.

அதே நேரம் ஆதித்தனை இப்படி நாட்டாற்றில் விட்டு விட்டு கிளம்புகிறோமே என்ற சங்கடமும் அவனை பாடாகப் படுத்தியது. எந்த சூழ்நிலையையும் ஆதித்தன் வெற்றிகரமாக சமாளிப்பான் என்பதும் இப்போதைக்கு பார்த்திபனுக்கு அவனுடைய உதவி தேவை என்பதும் அவனுக்கு புரிந்தது. தன்னுடைய உதவி இல்லாவிட்டாலும் கூட ஆதித்தன் சமாளித்து கொள்வான் என்பதில் அவனது மனம் சாந்தியடைந்தது.

மற்றவர்கள் குதிரையிலும் கால்நடையுமாக பயணத்தை தொடர்ந்தனர்.

பாதி வழியிலேயே அவர்களை சந்திக்க வந்து விட்டது சந்திரவதனா தலைமையிலான குழு .

சந்திரவதனாவை பார்த்ததும் பார்த்திபனின் முகம் மலர்ந்தது. அவளை அவன் இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு பெண்ணை பார்த்து பார்த்திபன் அசட்டு சிரிப்புடன் பேசிக் கொண்டி ருப்பதை பார்த்த ஆதித்தன் அவர்களை நெருங்கினான்.

தங்களை நோக்கி நடந்து வரும் கம்பீரமான ஆண் உருவத்தை ஓரக்கண்ணால் கவனிக்க தவறவில்லை சந்திரவதனா.

"யார் இவர்?" என்றாள் அவள் பார்த்திபனிடம் ஆதித்தனை காட்டி.

" இவர்தான் ஆதித்தன். சற்று முன் தான் எனக்கு நண்பராக மாறினார். கள்வர் புரத்து பிரசித்தி பெற்ற இரட்டை கள்வர்களில் இவரும் ஓருவர் " என்று பார்த்திபன் ஆதித்தனை சந்திரவதனாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"இந்தப் பெண் ?" என்று கேள்விகுறியோடு நிறுத்தினான் ஆதித்தன்.

"எனக்கு நெருக்கமான உறவு" என்றான் அவன் வெட்கத்தோடு.

"புரிகிறது" என்றான் ஆதித்தன் குறும்பு சிரிப்புடன்.

"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதா?" என்றான் பார்த்திபன் படபடப்புடன்.

சந்திரவதனாவிற்கு அருகே இருந்த பார்வதி "அதை ஏன் கேட்கிறாய் பார்த்தி பா? அந்த சண்டாளன் மதிமாறன் நம்முடைய மாளிகையை சுற்றி வளைத்து விட்டான். சந்திரவதனாவை மட்டும் ஒப்படைத்தால் எங்கள் எல்லோரையும் உயிரோடுவிட்டு விடுவதாக பேரம் பேசினான். அவனது ஆசை காட்டலுக்கு நாங்கள் இணங்கவில்லை. சந்திரவதனாவை ஒப்படைக்க மறுத்து விட்டோம். அப்போதுதான் அந்த மோகினி அங்கே வந்து சேர்ந்தாள் "

"மோகினியா? யார் அது?"

"அவள் தான் ரத்னாவதி .மதிமாறனின் ஆசை நாயகி. அவள் வரும் வரை சந்திரவதனாவின் பிறப்பு ரகசியம் தனக்கு மட்டுமே தெரியும் என்று கூறி எங்களுக்கு ஆசை வலை வீசிக் கொண்டிருந்தான் அவன். அந்த மோகினி அவன் காதில் என்ன ஓதினாளோ தெரியவில்லை. திடிரென்று எங்களை வீட்டின் உள்ளே வைத்து உயிருடன் எரிக்க உத்தரவிட்டு விட்டான்"

"அடக்கடவுளே.! ஈவு இரக்கமற்ற அந்த சண்டாளனிடமிருந்து எப்படி தப்பினீர்கள்?"

"கடவுள் அனுப்பி வைத்ததூதனைப் போல் சுரங்க வழியில் வந்து எங்களை காப்பாற்றினான் ஓரு மகராசன். அவன் மட்டும் சரியான நேரத்தில் வந்து எங்களை காப்பாற்றாவிட்டால் நாங்கள் நெருப்பில் கருகி சாம்பலாகி இருப்போம்" என்றாள் பார்வதி பெருமூச்சுடன்.

"உங்களை காப்பாற்றியது யார்?" என்றான் பரபரப்புடன் பார்த்திபன்.

" அவன் ஆதி! நீங்கள் நினைப்பதுபோல் அவன் வாய் பேச முடியாதவன் அல்ல. நன்றாக பேச கூடியவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் உயிரை காப்பாற்றி கொள்ள இத்தனை நாட்களாக ஊமையாக நடித்து கொண்டிருந்திருக்கிறான். சுரங்க வழியில் எங்களை காப்பாற்றி கூட்டி வந்த பின்பு அவனே சொன்ன உண்மை இது "

கூட்டத்தில் நஞ்சுண்டனிடமிருந்து ஆதி தப்பி வந்த விசயம் வெகு வேகமாகப் பரவியது. பயல். கெட்டிகாரன் தான் என்ற பாராட்டு மொழிகள் ஆங்காங்கு எழுந்தன.

" அவன் வாய் பேச இயலாதவன் அல்ல என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம். உங்களை ஆதி காப்பாற்றி இருக்கிறான் என்றால் அவன் நஞ்சுண்டனிடமிருந்து தப்பித்து விட்டான் என்று பொருளாகிறது. அவன் உங்களுடன் வராமல் எங்கே போனான்?"

" அவன் கருணாகரனை தேடிக் கொண்டு போயிருக்கிறான். அவனுக்கும் இவனுக்கும் ஏதோ பழைய கணக்கு இருப்பதாகவும் அதை தீர்க்க வேண்டும் என்று கருவிக் கொண்டிருந்தான்"

"அடக்கடவுளே! யவனனும், வில்லவனும் கருணாகரனை தேடிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆதி நிச்சயமாக கருணாகரனை கொலை செய்யத்தான் கிளம்பி இருப்பான்.கருணாகரன் நம்மிடம் ஆயுதங்களை கையளிக்கும் முன்பாக ஆதி அவனது கதையை முடித்துவிட்டால் நம்முடைய புரட்சி ஆயுதம் இன்றி பிசுபிசுத்து விடுமே?" என்றான் பார்த்திபன்.

"கவலைப்படாதே! ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் வெற்றி பெற வேறு வழிகள் இருக்கிறதா என்று யோசிப்போம்" என்றான் ஆதித்தன் ஆறுதலாக .

" எதிரிகள் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். நம்முடைய எண்ணிக்கை குறைவு . ஆயுதங்கள் குறையும் வீரர்களை சரிகட்டி விடும் என்று நினைத்தேன். ஆதியின் குறுக்கீட்டால் எல்லாமே வீணாகிவிடும் போலிருக்கிறதே?" என்றான் பார்த்திபன்.

"ஆட்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்ட என்னிடம் ஒரு யுக்தி இருக்கிறது. அது போதாது என்றால் எதிரிகளின் கூடாரத்தை கலகலக்க வைக்க வேறு யோசனை உள்ளது"

"நீ சொல்வது எனக்கு புரியவில்லை"

" எதிரிக்கு எதிரி நண்பன். இப்போது வளநாட்டிலிருந்து படை உதவி கிடைத்தால் எப்படி இருக்கும்?"

"நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நான் அவர்களிடம் உதவி கேட்கவில்லையே? அப்படி எனக்கு உதவினால் ஆதாயம் இல்லாமலா உதவி செய்வார்கள்.?"

"அவர்களே வலிய வந்து உனக்கு உதவினால்?"

" எப்படி எனக்கு உதவுவார்கள்?"

"அப்படி ஒரு பொய் செய்தியை பரப்புவோம். எனக்கு ஒரு ஓலையும் ஒரு தூதுவனும் வேண்டும்"

"உன் திட்டம் எனக்கு புரியவில்லை"

"விளக்கமாகவே சொல்கிறேன்" என்ற ஆதித்தன் தன் திட்டத்தை விவரிக்க தொடங்கினான்.

புதன், 23 நவம்பர், 2022

ரகசிய தீவு58

ரகசிய தீவு

அத்தியாயம் 58

சாத்தானின் இருப்பிடம்

தலையில் இடி இறங்கியது போல் திகைத்து நின்றான் நஞ்சுண்டன் .மதிமாறனை சந்திக்க வந்த இடத்தில் இப்படி நீலனை சந்திப்போம் என்று அவன் கனவுகூட காணவில்லை. இனி தான் தப்பவேறு எந்த வழியும் இல்லை என்பதால் திகைத்து நின்றான் நஞ்சுண்டன் .

"துரோகம் ஒரு நாளும் வாழாது. உண்மை ஒரு போதும் உறங்காது. என் கதையை முடிக்க கடவுள் உனக்கு இரண்டு சந்தர்ப்பங்களை கொடுத்தான். அவற்றை நீ வீணடித்து விட்டாய். காரணம் அதிர்ஷ்ட லட்சுமியின் கடை கண் பார்வை என் மீது இருந்ததால். உன் கொலை முயற்சிகளில் நான் மயிரிழையில் தப்பி பிழைத்து விட்டேன். என்னை காப்பாற்றிய அதே அதிர்ஷ்ட தேவதை இப்போது உன்னை காப்பாற்றுகிறாளா என்று ஒரு முறை சோதித்து பார்ப்போமா?" என்றபடி விசமமாக சிரித்த நீலன் தன்னுடைய வாளை இடுப்பிலிருந்து உருவினான்.

நஞ்சுண்டனின் கண்கள் பயத்தால் விரிந்தன. அவனது உடல் உயிர் பயத்தால் நடுங்க ஆரம்பித்தது.

"நீலா. என்னை மன்னித்து உயிருடன் விட்டுவிடு. நான் செய்தது தவறு தான்" என்று அவனை இறைஞ்ச ஆரம்பித்தான் நஞ்சுண்டன்

"பாம்பிற்கு பல்லில் மட்டும் தான் விசம் .ஆனால் உனக்கு உடல் முழுக்க விசம் .உன் குணம் அறிந்து தான் பிறந்த உடனேயே உனக்கு நஞ்சுண்டன் என்று பெயர் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது" என்றான் நீலன்.

"நஞ்சை உண்டு கழுத்தில் கண்டமாக வைத்திருக்கும் சிவபெருமானின் பெயரைதீயவனான இவனுக்கு வைத்திருப்பது மிகப் பெரிய முரண் இல்லையா?" என்று சிரித்தான் கருணாகரன்.

"எனக்காக நீங்கள் நீலனிடம் பேசக்கூடாதா?" என்று கருணாகரனை கெஞ்ச ஆரம்பித்தான் நஞ்சுண்டன் .

"நீ யார்? நான் எதற்காக உனக்காக நீலனிடம் பேச வேண்டும்?" என்றான் கருணாகரன்.

"அவனொரு விரியன் பாம்பு. அவனை நம்பாதே.! வினயமாக பேசியே தன்னுடைய காரியத்தை சாதித்து கொண்டு விடுவான்" என்று அவனை எச்சரித்தான் நீலன்.

" அவனது குள்ள நரி தந்திரம் என்னிடம் பலிக்காது" என்றான் கருணாகரன்.

கருணாகரனும் தன்னை கைவிட்ட பின்பு நஞ்சுண்டனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள கேவலமான மற்றொரு வேலையில் இறங்கினான்.

சட்டென்று நீலனின் காலில் விழுந்தவன்" என்னை மன்னித்து உயிரோடு விட்டு விடு நீலா இனி உன் பாதையில் நான் குறுக்கே வரவே மாட்டேன்" என்று அவன் கால்களை பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தான்.

"நடிக்காதே இழிபிறவியே .! உன் உயிரை காப்பாற்றி கொள்ள நீ எந்த எல்லைக்கும் செல்வாய் என்று எனக்கு தெரியும். உன் நடிப்பை நம்பி ஏமாற நான் பழைய நீலன் அல்ல" என்று அவனை உதைத்து தள்ளினான் அவன்.

"ஓரே வாள் வீச்சில் உன் சிரசை துண்டித்து அதைபந்தாட என்னால் முடியும். அதனால் என்ன பயன்? உன் தவறுகளை உணராமல் நிம்மதியாக உயிரை விட்டு விடுவாய். அப்படி நீ சாவதை நான் விரும்பவில்லை. உனக்காக ஒரு மரண ஏற்பாட்டை செய்திருக்கிறேன். உன் தவறுகளை நினைத்து நீ நொந்து நொந்து சாக வேண்டும். முதலில் உன் வாயை அடைத்து கை கால்களை கட்ட வேண்டும்" என்ற நீலன் கருணாகரனை பார்த்து "உன் ஆட்களை வரச் சொல்லி இவனை சிறைபடுத்த சொல் " என்றான்.

"யார் அங்கே ?" என்று அழைத்தான் கருணாகரன். அவன் குரலுக்கு ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்க வேண்டும். ஆனால் யாரும் வரவில்லை. மீண்டும் ஒருமுறை அழைத்தான் கருணாகரன். இந்த முறையும் யாரும் வரவில்லை.

"ஆட்கள் வேறு வேலையில் இருப்பார்கள் போல தெரிகிறது. நானே போய் இவனை கட்ட கயிற்றையோ திரைச்சீலையையோ எடுத்து வருகிறேன். நான் வரும் வரை இவனை கவனமாக பார்த்து கொள்" என்ற நீலன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அதற்காகவே காத்திருந்தது போல் நஞ்சுண்டன் சத்தம் வராமல் நகைக்க ஆரம்பித்தான். "எதற்காக இப்போது சிரிக்கிறாய்?" என்றான் குழப்பத்துடன் கருணாகரன்

"உன்னை போன்ற முட்டாளை பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது?" என்றான் விசம சிரிப்புடன் நஞ்சுண்டன் கருணாகரனை வலையில் வீழ்த்த அவன் மனதில் ஒரு திட்டம் உருவாக தொடங்கியிருந்தது.

"நாவை அடக்கி பேசு. என்னையே முட்டாள் என்கிறாயா?" என்றான் கோபத்துடன் கருணாகரன்.

"கையில் வெண்ணெயை வைத்து கொண்டு நெய்யிற்கு அலைந்த கதையாக இருக்கிறது உன்னுடைய நிலைமை"

" என்ன சொல்கிறாய் நீ?"

"நீ வள நாட்டிற்கு மார்க்கதரிசியின் பொக்கிசத்தை கொண்டு செல்ல நினைப்பது எனக்கு தெரியும். அது காட்டில் இல்லை என்பதுவும் எனக்கு தெரியும். அந்த பொக்கிசத்தை கொண்டு செல்லமுத்தழகி தேவை. அதை இயக்க நீலன் என்ற அனுபவம் வாய்ந்த மாலுமி தேவை. அதனால் தான் அவனுடன் கூட்டணி போட்டிருக்கிறாய். சரிதானே?"

"ஆமாம். நீ சொல்வது உண்மைதான்."

"அதே முத்தழகி கப்பலில் துணை மாலுமியாக அனுபவம் வாய்ந்த நான் இருக்கிறேன். நீலனுக்கு பதிலாகஎன்னுடைய உதவியை நீ ஏன் பயன் படுத்தி கொள்ள கூடாது?" என்றான் நஞ்சுண்டன் .இந்த தந்திரம் சரியாக வேலை செய்யும் என்று அவனுக்கு தெரியும்.

நஞ்சுண்டனின் பேச்சை கேட்ட கருணாகரன் விக்கித்து நின்று விட்டான். நஞ்சுண்டனின் பேச்சை காது கொடுத்து கேட்காதே என்ற நீலனின் எச்சரிக்கையை அவன் புறம் தள்ளி விட்டான். நீலனை விட இவனால் ஆதாயம் அதிகம். நீலனின் இடத்தில் இவனை வைத்து கொள்ள வேண்டியது தான் என்று நினைத்தவன் "உன்னை பயன்படுத்தி கொள்ளலாம் தான். பிரதியுபகாரமாக என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்?" என்றான்.

" என் உயிர். அது மட்டும் போதும். எங்கு போனாலும் நான் பிழைத்து கொள்வேன்"

"நீ புத்திசாலி தான் .உன் உயிருக்கு நீல னால் எந்த ஆபத்தும் நேராது என்று உத்தரவாதம் தருகிறேன். ஆனால் என்னால் இப்போது நீலனை கழட்டி விட முடியாது. அவன் தன் நண்பர்கள் மூலம் பணியாட்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். எல்லாமே அவன் கட்டுப்பாட்டில் நடப்பது போல் இருக்கட்டும். சரியான நேரத்தில் அவனது முதுகில் குத்தி விட்டு உன்னை முத்தழகி கப்பலின் மாலுமியாக்குகிறேன். வள நாட்டிற்கு பொக்கிசங்கள் போய் சேர்ந்த பின்பு உன் உயிர் உன்னுடையது. அந்த கப்பலும் உன்னுடையது. என் அன்புபரிசாக அதை வைத்து கொள்" என்றான் கருணாகரன்.

"மிக்க மகிழ்ச்சி" என்ற நஞ்சுண்டனின் முகத்தில் நிம்மதி பரவியது.

கப்பலை இயக்க நீலன் மட்டுமல்லாது கூடுதலாக இன்னொரு நபரும் கிடைத்து விட்டதால் இனி நீலனின் சர்வாதிகாரம் தன்னிடம் செல்லுபடியாகாது என்று நினைத்து ஆசுவாச பெருமூச்சு விட்டான் கருணாகரன்.

நீலனின் காலுக்கடியிலேயே இன்னொரு சதி திட்டம் நடைபெற்று முடிந்திருந்தது. அதைப் பற்றி எதுவும் தெரியாமல் கயிற்றை தேடுவதில் மும்முரமாக இருந்தான் நீலன்.கயிற்றை தேடிக் கொண்டு சென்ற நீலன் அதைக் கண்டு பிடிக்க முடியாமல் திரைச்சீலை ஓன்றை உருவி எடுத்து கொண்டான். அவன் மறுபடியும் மாடிப்படி ஏறி அறைக்குள் நுழைந்த போது நஞ்சுண்டனும் கருணாகரனும் பூடகமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவர்களின் பார்வை ரகசியத்தை அறியாத நீலன் திரைச்சீலையால் நஞ்சுண்டனின் கைகளை பின்புறமாக கட்டினான். பிறகு கிழித்த துணி ஓன்றை அவனது வாயில் திணித்து அவனை மவுனமாக்கினான்.

"இவனிடம் எதையும் பேசாதிருப்பது நமக்கு நல்லது. எப்படியெப்படியோ பேசி நம்மை குழப்பிதான் நினைத்ததை சாதித்து கொண்டு விடுவான். நான் போன பிறகு உன்னிடம் ஏதாவது கதை அளந்திருப்பானே?" என்று சந்தேகத்திற்கிடமான கேள்வி ஓன்றை கருணாகரனை நோக்கி வீசினான் அவன்.

சட்டென்று தன்னை சுதாரித்து கொண்ட கருணாகரன் "இல்லை. அவன் என்னிடம் எதையும் பேசவில்லை. ஆனால் சிந்தனை வசப்பட்டிருந் தான் " என்றான்.

"அது இவன் பேசுவதை விடவும் ஆபத்து. இவன் வாயை திறந்தால் மூளை இரு மடங்கு வேலை செய்யும். வாயை மூடிக் கொண்டிருந்தால் நான்கு மடங்கு வேலை செய்யும். இவனது மூளை சாத்தானின் இருப்பிடம்.இவனை இன்னமும் இங்கே வைத்திருப்பது நமக்கு ஆபத்து. மதிமாறன் வருவதற்குள் நாம் இவனுடன் கிளம்பியா கவேண்டும். இல்லையென்றால் இவன் நம்மை மதிமாறனிடம் சிக்க வைத்து விடுவான்" என்றான் நீலன்.

"ஆமாம். நீ சொல்வது உண்மைதான். நாம் உடனடியாக இங்கிருந்து கிளம்புவது தான் நல்லது " என்றான் கருணாகரன்.

மூவரும் படிகளில் கீழே இறங்க தொடங்கினர்.கருணாகரன் நஞ்சுண்டனை பார்த்து சிநேகமாக சிரித்தான்.

வெள்ளி, 18 நவம்பர், 2022

ரகசிய தீவு 57

ரகசிய தீவு

அத்தியாயம் 57

சிலந்தி வலையில் சில்வண்டு

தனக்கு தெரிந்த சுரங்க வழியில் சந்திரவதனாவின் குழுவினரை வழிநடத்தி சென்றான் ஆதி.கருணாகரனின் கொலைகாரப் பார்வையிலிருந்து தன்னை காப்பாற்றி உணவு உடை கொடுத்து காப்பாற்றிய வில்லவனின் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்து முடித்திருந்தான் அந்த காட்டு சிறுவன்.

யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டு காட்டின் நடுவே இருந்த ஒரு கோயிலில் வந்து முடிந்தது அந்த சுரங்க பாதை .தங்கள் உயிரை காப்பாற்றி மீட்டு வந்த ஆதியின் செயலை அனைவரும் பாராட்டி புகழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் பாராட்டுக்களை காதில் போட்டு கொள்ளாமல் சிந்தனை வசப்பட்டிருந்தான் ஆதி.தன் கண் முன்பாகவே தன் தந்தையை கொன்ற கருணாகரனை பழிக்கு பழிவாங்க அவனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

கருணாகரனை பழி தீர்க்கத்தான் ஆதி அவனை தேடிக் கொண்டு கிளம்பினான். அவனது அதிர்ஷ்டம்மதிமாறன் சந்திரவதனா வை பிடிக்க கிளம்பியசேதியை அவன் கேட்டது. அவன் வில்லவனின் வீட்டை மதிமாறனுக்கு முன்பாகவே நெருங்கி விட்டான். ஆனால் அவனது கழுகு கண்கள் அரசாங்க ஒற்றர்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்து விட்டன. இப்போது வீட்டிற்குள் நுழைவது நல்லதல்ல என்று நினைத்தவன் சுரங்க வழியில் வீட்டின் உள்ளே நுழைந்து அனைவரையும் மீட்டு வந்து விட்டான்.

இறுக்கமான முகத்தோடு இருந்த ஆதி குழப்பமான மனநிலையில் இருந்த சந்திரவதனாவை பார்த்தான்.

"அக்கா. அந்த தீயவன் நம் வீட்டை சுற்றி வளைத்ததும் பயந்து விட்டாயா? கவலைப்படாதே! இனி அவனால் நம்மை கண்டு பிடிக்க முடியாது"

" அவன் ஏன் நம்மை தேடப் போகிறான்? நாம் அனைவரும் நெருப்பில் கருகி இறந்து விட்டதாகவல்லவா அவன் நினைப்பான்?" என்றாள் பார்வதி பெருமூச்சுடன்.

" அவனுக்கு என்னுடைய பிறப்பின் ரகசியம் தெரிந்திருக்கிறது. அவனுக்கு நான் மட்டுமே குறி. என் தந்தை என்னிடம் சொல்லாத ரகசியத்தை அவனிடம் சொல்லியி ருப்பதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றாள் சந்திரவதனார்

"எங்களை காப்பாற்றும் கவசமாகத் தான் நீ இருந்தாய். ஆனால் ஆண் உடை தரித்து ரத்னாவதி வந்த பிறகு காட்சி மாறி விட்டது. மதிமாறனின் மனமும் மாறி விட்டது. அதுவரை உன்னை சரணடையும் படி கெஞ்சிக் கொண்டிருந்தவன் அதற்கு பிறகே நீ தேவையில்லை. நீ உயிரோடு இருப்பதே இடைஞ்சல் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான். அதன் பிறகே அவன் மாளிகைக்கு தீ வைத்து நம்மை கொல்லவும் முயன்றான்" என்றாள் பார்வதி.

"ஆம். அந்த திடீர் மாற்றத்தை நானும் கவனித்தேன். எனக்கு எல்லாமே புதிராக இருக்கிறது. அவனது விசித்திரமான நடத்தைக்கு காரணம் எதுவும் புரியவில்லை." என்றாள் சந்திரவதனா குழப்பத்துடன் .

"அவனைப் பற்றி, அவனது கிறுக்கு தனமான நடவடிக்கைகளைப் பற்றி இப்போது யோசிக்க நேரமில்லை. நாம் எப்படியோ உயிர் பிழைத்து விட்டோம். அதையே என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. கிள்ளிபார்த்து தான் நடந்தது நிஜம் என்று உணர்ந்து கொண்டேன்" என்றான் குழுவில் ஒருவன்.

"இனி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதே திசையில் தெற்கு பக்கமாக சில கல் தொலைவு நடந்தால் வில்லவனும், பார்த்திபனும் இருக்கும் காட்டு பகுதியை அடைந்து விடலாம் அனைவரும் கிளம்புங்கள்" என்றான் ஆதி

அனைவரும் பணத்திற்கு தயாராயினர்."பெண்களை கவனமாக அழைத்து செல்லுங்கள். இரவு கவிழ்ந்து விட்டது. காட்டு விலங்குகளின் நடமாட்டம் துவங்கும் முன்பு அண்ணனிடம் இவர்களை ஒப்படைத்து விடுங்கள்" என்ற ஆதி அவர்கள் நடந்த திசையில் இருந்து எதிர் திசையில் நடக்க துவங்கினான்.

"ஆதி .எங்களை விட்டு விட்டு எங்கே செல்கிறாய்?" என்றாள் சந்திரவதனா.

" கருணாகரனுடன் எனக்கு தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஓன்று இருக்கிறது. அதை தீர்த்து விட்டு விரைவிலேயே வந்து சேர்கிறேன்"

"அவசரப்படாதே ஆதி. பொறுமையாக இரு.வீணாக சென்று ஆபத்தில் சிக்கி விடாதே. குழந்தை இல்லாத எனக்கு நீமகன் போன்றவன் .இந்த தாயின் வார்த்தைகளை கேள்" என்றாள் பார்வதி.

" என் அன்னையை போல் அன்பு காட்டிய உங்களை மறக்கவே மாட்டேன் அம்மா. ஆனால் இப்போது உங்கள் பேச்சை கேட்டு நடக்க முடியாததற்கு வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். கருணாகரனை கொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் வந்து உங்களை சந்திப்பேன். இல்லையென்றால்…"

"அப்படி பேசாதே ஆதி. போன காரியத்தில் வெற்றி பெற்று வீரனாக திரும்பி வா என்று உன்னை பெறாத தாய் வாழ்த்தி அனுப்புகிறேன். வெற்றியுடன் திரும்பி வா! உனக்காக இங்கே ஓருத்தி காத்திருக்கிறாள் என்பதை மறவாதே." என்றாள் பார்வதி..

கண் கலங்கிய ஆதி " போய் வருகிறேன் அம்மா " என்று விடை பெற்று கிளம்பினான்.

மதிமாறனின் இல்லத்தில் தான் கருணாகரன் இருப்பான் என்பதால் அவனது மாளிகையை நோக்கி நடை போட்டான் ஆதி.

அவன் மதி மாறனின் மாளிகையை நோக்கி நடந்து கொண்டிருந்த போது இரண்டு வலியகரங்கள் அவனது வாயை பொத்தின.

அவனுக்கு பின்புறம் வந்த இரண்டு முரட்டு ஆசாமிகளில் ஓருவன் தான் ஆதியின் வாயை பொத்தியிருந்தான்.

"இவன் வில்லவனின் வீட்டில் இருந்த வாய் பேச முடியாத ஊமை தானே?" என்றான் ஒருவன்.

"ஆமாம். அவனே தான். வில்லவனின் மாளிகை தீக்கு இரையாகி விட்டது. வில்லவனும் ஆளைக் காணோம். இவனுக்கு ஆதரவு தந்த குடும்பமும் அழிந்து விட்டது. இவன் யார் ஆதரவும் இல்லாத அனாதை" என்றான் இன்னொருவன்.

"அப்படியானால் இவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறு"

" இவனை என்ன செய்ய போகிறாய்?"

" இவனை நீலனின் கப்பலில் அடிமையாக விற்க போகிறேன்.வரும் பணத்தை இருவரும் சமபங்காக பிரித்து கொள்ளலாம்.என்ன சொல்கிறாய்?"

"நல்ல திட்டம் தான். கருணாகரனும் நீலனும் சேர்ந்து கொண்டு என்னவோ செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் என்னவோ செய்து தொலையட்டும். நாம் இவனால் லாபம் சம்பாதிக்க இதையாவது செய்வோம்"

ஆதி இப்படி மாட்டி கொள்வோம் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உரக்ககத்தி ஆட்களை வரவழைத்து தப்பி விடலாம் என்று நினைத்தவன் கத்த முனைந்தான்.

" பயல் கத்தி ஊரை கூட்டி விடப் போகிறான்.வாளின் பின் பகுதியால் அவனது தலையில் ஒரு போடு போடு" என்றான் ஒருவன்.

வாளின் பின் பக்கத்தால் ஆதியின் தலையில் அடித்தான் மற்றொருவன் .சுயநினைவை இழந்து மயங்கி சரிந்தான் அவன். மயங்கி விழுந்த ஆதியை தோளில் தூக்கி போட்டு கொண்டு நடக்க தொடங்கினார்கள் இருவரும்.

ஆதியை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்று பேசியபடி நடந்தனர் இருவரும் .

நஞ்சுண்டன் களவாடிய குதிரையோடு மதிமாறனின் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். அவனது உள்ளம் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தது. தன்னுடைய திட்டம் நிறைவேறி விட்டால் தான் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் திரும்ப பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் குதியாட்டம் போட்டது அவனது மனம்.

காவல் ஆட்கள் குறைவாக இருந்த மதிமாறனின் மாளிகைக்குள் அவனுக்கு எளிதில் அனுமதி கிடைத்து விட்டது. தான் யார் என்று விசாரிக்காமலேயே உள்ளே நுழைய அனுமதி தரப்பட்டதை அவன் சந்தேகிக்கவேயில்லை.

"உங்கள் தலைவரை நான் சந்திக்க வேண்டும்" என்றான் எதிர் பட்ட வீரனிடம் நஞ்சுண்டன் .

" மாடியில் தனிமையில் இருக்கிறார் போய் பாருங்கள்" என்றான் அந்த வீரன்.

தடதடவென்று மாடிப்படிகளில் ஏறினான் அவன்.

உபரிகையில் நாற்காலியில் அமர்ந்தபடி இருட்டில் தெரிந்த நிலவை ரசித்து கொண்டிருந்தவனின் பின்புறமாக வந்து நின்ற நஞ்சுண்டன் "தலைவரே ! உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது. உங்கள் தளபதி கருணாகரன் உங்களை மோசம் செய்ய போகிறான். அவனை நம்பாதீர்கள் - அவன் ஓரு துரோகி" என்றான் பரபரப்புடன் நஞ்சுண்டன் .

"உன்னை விட பெரிய துரோகி உலோகத்திலேயே கிடையாதே?" என்றது கரகரத்த குரல்.

இந்த குரல். இது வெகு பரிச்சையமான குரலாயிற்றே என்று குரலை அடையாளம் காண முடியாமல் தவித்தான் அவன்.

"இன்னுமா என்னை அடையாளம் காண முடியவில்லை?" என்று நாற்காலியை திருப்பினான் நீலன்.அவனது உதடுகளில் வெறித்தனமான புன்னகை ஒன்று உட்கார்ந்திருந்தது.

நீலனை அங்கே பார்த்ததும் தலையில் இடி விழுந்தது நஞ்சுண்டனுக்கு .

"சண்டாளா ! இந்த முறை உன்னை விட மாட்டேன்" என்றபடி இடுப்பில் இருந்த குறு வாளை உருவி நீலனின் மேல் எறிய முற்பட்டான் நஞ்சுண்டன் .

திரைசீலைமறைவிலிருந்து மின்னலாக பாய்ந்த மற்றோரு குறுவாள் அவன் கையிலிருந்த கத்தியை வீழ்த்தியது.

நஞ்சுண்டனுக்கு வழி சொன்ன வீரன் புன்னகையுடன் மறைவிலிருந்து வெளிப்பட்டான். "நீ சொன்ன அந்த துரோகி கருணாகரன் நான் தான். நீ வருவதை நாங்கள் உபரிகையிலிருந்து முதலிலேயே பார்த்து விட்டோம். அதனால் தான் உள்ளே வர எளிதில் அனுமதித்தோம் " என்றான் கருணாகரன்.

"இரண்டாவது முறையாக என்னை கொல்ல தவறுகிறாய். ஆனால் நான் முதல் வாய்ப்பிலேயே உன் கதையை முடிக்க தீர்மானித்து விட்டேன்" என்றபடி இடுப்பிலிருந்த வாளை உருவினான் நீலன்.சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாக தன்னை உணர்ந்தான் நஞ்சுண்டன் .

ரகசிய தீவு 56

ரகசிய தீவு

அத்தியாயம் 56

ஆள் மாறாட்டம்

குதிரையை நிறுத்திவிட்டு குதித்து இறங்கிய முக்காட்டு உருவத்தை பார்த்த மதிமாறன் கோபத்தின் உச்சத்தில் யார் நீ?" என்றான்.. அவனது கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்ற உருவம் தன்னுடைய முக்காட்டை அவிழ்த்து தன்னுடைய முகத்தை வெளிக்காட்டியது.

அதன் முகத்தை பார்த்த மதிமாறன் கண் இமைக்கவும் மறந்தான். அவனது உதடுகள் வெளிறத் தொடங்கின. அவனது உடல் முழுவதும் வேர்வை நதி உற்பத்தியாக ஆரம்பித்தது. "நீயா?" என்ற அவனது குரலில் மெல்லிய நடுக்கம் சேர்ந்து கொண்டது."என்னை இங்கே எதிர்பார்க்கவில்லையா அன்பரே?" என்றாள் ஆண் உடை தரித்து அவன் எதிரே நின்றிருந்த ரத்னா வதி.

தன் ஆசை நாயகியின் திடீர் வரவை எதிர்பார்க்காத மதிமாறன் கதிகலங்கி போனான். சந்திரவதனாவை மீட்டு தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பது மட்டும் இவளுக்கு தெரிந்து விட்டால் காரியம் அனைத்தும் கைமீறிப் போய் விடும் என்று நினைத்தவன் " ரத்னா! நீ எப்படி இங்கே வந்தாய்? இவர்கள் நம் எதிரிகள். இவர்களால் உனக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாது. உடனே இங்கிருந்து கிளம்பு" என்று அவளை அங்கிருந்து அனுப்புவதில் அவசரம் காட்ட தொடங்கினான்.

"போதும் உங்கள் நடிப்பு. சற்று முன்பு சந்திரவதனாவிற்கு நீங்கள் விடுத்த எச்சரிக்கையை நான் கேட்டு கொண்டு தான் இருந்தேன். இந்த பெண் மீது நீங்கள் ஏன் அதிக அக்கறை காட்டுகிறீர்கள் என்று கருணாகரன் சந்தேகித்தது சரிதான் போலிருக்கிறது. கருணாகரனுக்கு வந்த அதே சந்தேகம் அவன் பேச்சை மறைந்து நின்று கேட்ட எனக்கும் வந்தது நல்லதாக போயிற்று. அத்தான் அப்படிப்பட்டவர் இல்லை என்றஅவநம்பிக்கையோடு தான் நான் உங்களை பின்தொடர்ந்து வந்தேன். இங்கே வந்த பின்புதான் உண்மை புரிந்தது " என்றாள் ரத்னாவதி எரிக்கும் விழிகளோடு.

இதுவரை தன் மீது மையல் கொண்டிருந்த மதிமாறன் இப்போது திடிரென்று இன்னொரு பெண்ணை தேடிக் கொண்டு செல்வதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தான் சந்திரவதனாவோடு நடத்திய பேச்சுவார்த்தைகளை ரத்னாவதி முழுதாக கேட்டு விட்டாள் என்பதை அறிந்த மதிமாறன் ஆடிப்போய்விட்டான். அந்த சண்டாளன் கருணாகரன் தன் மனதில் இருந்த சந்தேகத்தை உளறி கொட்டி ரத்னாவை சந்தேகம் கொள்ள செய்து விட்டானே என்று அவன் மீது மதிமாறனுக்கு ஆத்திரம் பொங்கியது.

"ரத்னாவதி .அந்த பெண் தயாநிதியின் மகள் . அவளை பிடித்து விட்டால் மலை நாட்டில் நாம் சுகபோகமாக வாழலாம்"

"அதற்கு நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் இல்லையா?"

"ஆமாம். ஆனால் அவளை திருமணம் செய்து கொண்ட பின்பு நான் உன்னை கைவிட்டு விடுவேனா என்று என்னை சந்தேகிக்காதே! உன் மீதான என் காதல் உண்மையானது. அவளை ஆதாயத்திற்காகத் தான் நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்"

"ஒரு பெண் தன் காதலனை இன்னொருவருடன் பங்கு போட்டு கொள்ள சம்மதிப்பாள் என்று நம்புகிறீர்களா?"

"நீயும் என் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாய். அவளும் எனக்கு கிடைக்க மாட்டாள். என் நிலமை குழப்பமாக இருக்கிறது. இப்போது நான் என்ன தான் செய்வது? தயாநிதியின் குடும்ப ஆபரணத்தை வைத்து கொண்டு வேடிக்கை பார்ப்பதா?" என்றான் கடும் கோபத்துடன் மதி மாறன் .

"அன்பரே. வீண் கோபம் வேண்டாம். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் போதும் "

" என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"இந்த வில்லவனின் வீட்டை உடனே எரியூட்ட சொல்லுங்கள்.உள்ளே இருக்கும் யாரும் உயிரோடு தப்பி விடக் கூடாது" என்றாள் ரத்னாவதி நிறுத்தி நிதானமாக .

மதிமாறனுக்கு ஒரு நிமிடம் உலகமே சுற்றுவது போல் தோன்றியது. ரத்னா வதிக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கூட அவனுக்கு தோன்றியது.

"ரத்னாவ தி. உனக்கென்ன.."

"பைத்தியமா என்று கேட்கிறீர்கள். ஆம் உங்கள் மீதான பைத்தியம். உங்களை யாருடனும் பங்கு போட விரும்பாத பைத்தியம் "

"அந்த சந்திரவதனா வீட்டின் உள்ளேயே தீயில் கருகி இறந்து விடுவாள்" என்றான் பதட்டத்துடன் .

"இல்லை. அவள் உயிருடன் இருப்பாள்"

" எப்படி ? " என்றான் குழப்பத்துடன் மதி மாறன் .

"உங்கள் முன்னால் நின்று கொண்டிருப்பது தான் சந்திரவதனா " என்றாள் புன்னகையுடன் ரத்னா வதி.

மதிமாறனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. குழப்பத்தில் அவனது புருவங்கள் முடிச்சிட்டன.

"நீ என்ன சொல்ல வருகிறாய்?" என்றான் மதி மாறன் .

"இன்னுமா புரியவில்லை. தயாநிதி தன்னுடைய மகளை இதுவரை நேரில் பார்த்ததில்லை. அவன் மகளை கண்டுபிடிக்க அவனுக்கு இருக்கும் ஓரே துப்பு அந்த ஆபரணம் தான். அந்த ஆபரணத்துடன் எந்த பெண் அவனை தேடி சென்றாலும் அவன் அவளை தன்னுடைய மகளாகவே கருதுவான். அந்த ஆபரணம் இப்போது உங்கள் கைவசம் இருக்கிறது. சந்திரவதனாவிற்கு பதில் நான் இருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொண்டு அதே ஆபரணத்துடன் தயாநிதிக்கு முன்பாக என்னை நிறுத்துங்கள். தயாநிதி என்னை மகளாக ஏற்று கொள்வான். உங்களை மருமகனாக ஏற்று கொள்வது நிச்சயம் " என்றாள் ரத்னாவதி .

அவளுடைய திட்டத்தை கேட்ட மதிமாறன் அயர்ந்து போய் நின்றான். எவ்வளவோ குறுக்கு வழிகளை யோசிக்கும் தன்னுடைய மூளைக்கு ஏன் இப்படி ஓரு யோசனை தோன்றவில்லை என்று அவன் தன்னையே நொந்து கொண்டான். கையில் வெண்ணெயை வைத்து கொண்டு இத்தனை நாட்களாக நெய்யை தேடி அலைந்து கொண்டிருந்த தன்னுடைய அறியாமையை அவன் நொந்து கொண்டான்.

பெண் புத்தி பின் புத்தி என்று சொன்னவனை மனதார சபித்து கொண்டிருந்தான் அவன். அவள் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தும் போதெல்லாம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி சமாளித்து வந்தான்மதிமாறன். காலம் அவனை ரத்னாவதியை திருமணம் செய்து கொள்ளும் படி வினோதம் செய்திருந்தது.

தன் திட்டத்தை எண்ணி தன்னையே மெச்சி கொண்டாள் ரத்னாவதி . தன் வாழ்க்கைக்கு போட்டியாக வந்த சந்திர வதனா வைதீக்கு இரையாக்கியா கிவிடலாம்.மதிமாறனையும் திருமணம் செய்து கொண்டு விடலாம். சந்திரவதனா என்ற பெயரில் உயர்குடி பிறப்பு அந்தஸ்தை அடைந்து விடலாம்.

தன் திட்டம் பலித்து தான் மலை நாட்டில் வாழ நேர்ந்தால் சாகும் வரை ரகசிய தீவில் காலடி எடுத்து வைக்க கூடாது என்று நினைத்தாள் ரத்னாவதி . தீவில் அவளது கேவலமான பூர்வாசிரம கதை அனைவருக்கும் தெரியும். அதனால் இங்கு வராமல் சந்திரவதனாவின் பெயரிலேயே தன் வாழ்க்கையை மலைநாட்டில் ஓட்டிவிட வேண்டியதுதான் என்று அவள் நினைத்தாள்.

மதிமாறனுக்கு இந்த ஆள் மாறாட்ட திட்டம் வெகுவாக பிடித்திருந்தது. இனி சந்திரவதனாவை பிடிப்பது வெட்டி வேலை என்று அவனுக்கு தோன்றியது. அவள் உயிரோடு இருந்தால் பின்னாளில் ஏதாவது இடைஞ்சல் வரலாம் என்று நினைத்தான். கலை கூத்தாடிகளோடு சேர்ந்து அவளும் தீயில் பஸ்பமாகட்டும் என்று நினைத்தவன் வீட்டை கொளுத்தும்படி தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிட்டான்.

அவனது ஆட்களால்எங்கிருந்தோ எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டன. அவை அனைத்தும் வில்லவனின் வீட்டின் மீது ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. கொளுந்து விட்டெரியும் வீட்டை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தனர் ரத்னா வதியும், மதிமாறனும். "நீதான் எனக்கேற்ற வாழ்க்கை துணை" என்று அவளை மெச்சி கொண்டான் மதி மாறன் .

சந்திரவதனா வீட்டின் உள்ளே இருக்கும் வரை விபரீதமாக எதையும் செய்ய மாட்டான் மதிமாறன் என்று நினைத்திருந்தாள் பார்வதி. ஆனால் அவளது எண்ணத்திற்கு மாறாக வீட்டின் மீது எண்ணை ஊற்றப்பட்டு நெருப்பும் பற்ற வைக்கப்பட்டது.

நல்ல நேரத்தில் சுரங்க வழியாக வீட்டிற்குள் வந்த ஆதி அதே வழியில் அனைவரையும் அங்கிருந்து அழைத்து சென்றான். சுரங்க வழியின் கதவை இறுக்கமாக பூட்டினான் ஆதி. பற்றி எரியும் வீட்டின் புகை சுரங்க வழியாக பயணித்து வேறு இடத்தில் வெளிப்பட்டால் ஆபத்து வந்து விடும் என்று நினைத்தவன் கதவை பூட்டி விட்டு பயணமானான்.

புதன், 16 நவம்பர், 2022

ரகசிய தீவு 53

ரகசிய தீவு

அத்தியாயம் 53

இரண்டு எத்தர்கள்

திகைப் பூண்டை மிதித்த நஞ்சுண்டன் திசை தெரியாமல் ஓரே இடத்தில் சுற்றி கொண்டிருந்தான்.அவனது குதிரையை கைப்பற்றி கொண்ட ஆதி அங்கிருந்து கிளம்பினான். வெளியே சூரியன் மறைந்து இருள் பரவ தொடங்கியிருந்தது.

தன் திட்டத்தின் அடுத்தடுத்த படி நிலைகளை வெற்றிகரமாக கடந்து கொண்டிருந்த கருணாகரன் அடுத்ததாக மதி மாறனை காண கிளம்பினான். இரண்டொரு நாட்களாக அவன் மதி மாறனின் மாளிகையின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை. ஏராளமான வேலைகள் அவனை நெருக்கி தள்ளி கொண்டிருந்தன.மதிமாறனை எப்படியாவது சிகப்பு முகமூடி யோடு மோதவிட்டு விட்டால் நடக்கும் உள்நாட்டு குழப்பத்தில் புதையலோடு ஓடி விட வேண்டும் என்பது அவனது திட்டம்.

கடைசி நேரத்தில் களத்திலிருந்து காணாமல் போய் மதிமாறனின் கழுத்தை அறுத்து அவனை கட்டாய தோல்விக்கு உள்ளாக்க நினைத்திருந்தான் அவன். அவன் மதி மாறனின் அரண்மனைக்குள் நுழையும் முன்பே அங்கே வந்து சேர்ந்திருந்தான் நீலன்.

தன் கைவசமுள்ள ஆயுதங்கள் கோளாறுகள் நிறைந்தவை என்பதை சொல்லி மதிமாறனை எச்சரிக்கவே அங்கே வந்து சேர்ந்த திருந்தான் நீலன்.மதிமாறனை எச்சரித்து விட்டு கருணாகரனின் துரோகத்தை எடுத்து கூறி அவனை நம்ப வேண்டாம் என்று சொல்லவே நீலன் அங்கே வந்திருந்தான்.மதிமாறனை சந்தித்த பின்பு கருணாகரனின் மாளிகைக்கு செல்லலாம் என்று அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே அங்கே வந்து விட்டான் கருணாகரன்.

அவனை அங்கே பார்த்ததும் நீலனின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.இந்த சண்டாளன் மட்டும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் காரியம் சுலபமாக முடிந்திருக்கும். எமகாதகன் சரியான நேரத்தில் வந்து தன்னை பிடித்து விட்டானே? இனி இவனுக்கு முன்னால் எந்த உண்மையையும் மதிமாறனிடம் சொல்ல முடியாதே என்று தன்னையே அவன் நொந்து கொண்டான்.

மதிமாறனின் மாளிகையில் நீலனை பார்த்ததும் கருணாகரனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. மார்க்கதரிசியின் தங்கத்தை பற்றி அவன் ஏதாவது மதிமாறனிடம் சொல்லிவிட்டால் தன்னுடைய கதி அதோ கதிதான் என்று உணர்ந்து கொண்டவன் இவன் வாயை திறக்காமல் பார்த்து கொள்வதே தனக்கு நல்லது என்று எண்ணினான்.

" என்ன நண்பா! இங்கே வந்திருக்கிறாய்? நான் உன்னை என்னுடைய மாளிகைக்கு அல்லவா வரச் சொன்னேன்?" என்றான் நைச் சியமான புன்னகையுடன் .

அவனது கேள்வியில் இருந்த குதர்க்கத்தை புரிந்து கொண்ட நீலன் தன்னை சுதாரித்து கொண்டான். எப்படியாவது இவனை சமாளிக்க வேண்டுமே என்று நினைத்தவன் " விருந்தாளி வீட்டிற்கு வரும் போது வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்புவது போல் கிளம்பலாமா நண்பா! நான் உன்னை தேடி உன் வீட்டிற்கு வந்த போது அவர்கள் நீ இங்கே வந்திருப்பதாக சொன்னார்கள். அதனால் தான் நான் இங்கே வந்தேன்" என்றான் நீலன் சாமர்த்தியமாக.

நல்ல வேளை. இவன் நம்மை பின் தொடர்ந்து வந்து இடுகாட்டு ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் போனானே என்று நினைத்த கருணாகரன் " நான் இல்லாவிட்டால் என்ன நண்பா ? அது உன் வீடல்ல வா? உனக்காக யவன நாட்டு மது வகைகளை ஏராளமாக வாங்கி வைத்திருக்கிறேன். அவற்றை உல்லாசமாக அருந்தி விட்டு நான் வரும் வரை காத்திருக்கலாமே?" என்றான்.

" காத்திருக்கலாம் தான். ஆனால் மதிமாறனை நானும் சந்திக்க வேண்டியிருக்கிறதே?"

"நீ எதற்காக அவனை சந்திக்க போகிறாய்? உன்னைத்தான் அவன் ஏற்கனவே கைது செய்திருக்கிறானே?"

"அப்போது ஆயுதங்களை கொண்டு வருபவன் நான் என்று அவனுக்கு தெரியும்.  அவனது கோபம் கப்பலை நான் தொலைத்து விட்டதால் தான் அதிகமானது. அதனால் தான் அவன் என்னை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்"

"இப்போது அவனிடம் என்ன பேச போகிறாய்?"

" தொலைந்து போன என் கப்பலை மீட்டு விட்டதாக சொல்வேன். என் மீது எந்த தவறும் இல்லை என்று நிருபிப்பேன்"

"ஆயுதங்கள் எங்கே என்று கேட்டால்?"

" அவற்றை நஞ்சுண்டன் சிகப்பு முகமூடியிடம் விற்று விட்டான். கப்பலை நான் கைப்பற்றிய போது அது காலியாக இருந்தது என்பதற்கு நீயே சாட்சி" என்று சிரித்தான் நீலன்

"சபாஷ். குயுக்தியான மூளைதான் உனக்கு. நான் முதலில் போய் மதிமாறனை சந்திக்கிறேன். சரியான நேரத்தில் உன்னை உள்ளே அழைக்கிறேன். நீ எதுவும் பேச வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் கருணாகரன்,

கருணாகரன் மதி மாறனை காண கிளம்பினான்.கருணாகரன் தன்னை அழைப்பதற்காக படபடக்கும் இதயத்தோடு காத்திருக்க துவங்கினான் நீலன்.

மாடியில் வானத்து முழு நிலவை வெறித்து கொண்டிருந்த மதிமாறன் அரவம் கேட்டு திரும்பினான்.

அவனுக்கு முன்னால் நின்று முகமன் கூறினார் கருணாகரன்.

" கருணாகரா. என்னாயிற்று உனக்கு?ஏன் சில நாட்களாக என்னை சந்திக்க வராமல் இருக்கிறாய்?" என்றான் படபடப்புடன் மதி மாறன் .

" மன்னிக்க வேண்டும் பிரபு. இங்கே நிறைய வேலைகள். அவற்றை முடிக்க நேரமாகிவிட்டது. கிடைத்த சொற்ப ஓய்வில் உங்களை காண ஓடி வந்திருக்கிறேன். உங்கள் அதிகாரத்திற்கு ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது"

" என்ன சொல்கிறாய் நீ? அதிகாரத்திற்கு ஆபத்தா? நீ சொல்வது எனக்கு புரியவில்லை"

" பிரபு. நமக்காக கப்பலில் ஆயுதங்களை கொண்டு வந்தவன் நீலன்"

" அவன் தான் கப்பலையே தொலைத்து விட்டானே ? அதனால் தானே அவனை சிறையில் அடைத்தேன்"

"தெரியும். அவனிடமிருந்து கப்பலை களவாடியவன் நஞ்சுண்டன் .நீலனின் துணை மாலுமி. அவன் அந்த ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் விற்று விட்டான்"

"அந்த சிகப்பு முகமூடிக்கு எது அவ்வளவு செல்வம்?"

" எல்லாம் வள நாட்டின் உதவி தான். அவர்கள் இந்த தீவை கைப்பற்றி சிகப்பு முகமூடியை பொம்மையாக உட்கார வைத்து தீ வை ஆள நினைக்கிறார்கள். அவர்கள் தான் ஆயுதங்களை வாங்க உதவியிருக்க வேண்டும்"

"நம் கையை வைத்து நம் கண்களையே குத்துகிறார்களா? நம் ஆயுதங்களை வைத்து நம்மையே வீழ்த்த நினைக்கிறார்கள்"

"இன்னொரு விசயமும் இப்போது தெரிய வந்திருக்கிறது. அதை சொன்னால் நீங்கள் நம்ப மாட்டிர்கள்"

"நீ சொல். நான் நம்புகிறேன்"

"தீவின் தெற்கு பகுதியில் உள்ள காட்டில் தான் சிகப்பு முகமூடியின் புரட்சி கும்பலுக்கு ஆயுத பயிற்சியை வளநாட்டு வீரர்கள் வழங்குகின்றனர். சிகப்பு முகமூடியும் அங்கு தான் போய் பதுங்கி கொள்கிறான். அதனால் தான் நம்மால் அவனை பிடிக்க முடியவில்லை."

"ஓ! இதென்ன விபரீத செய்தி. அங்கே நர மாமிசம் சாப்பிடும் காட்டுவாசிகள் இருப்பதாகவல்ல வா கேள்வி "

"அது காட்டுவாசிகள் வேடத்தில் இருக்கும் வளநாட்டு வீரர்களின் சதி. அதை நாம் உண்மை என்று நம்பி விட்டோம்"

"நீ சொல்லும் விசயங்களை கேட்க வே அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு நாட்களாக நாம் அசட்டையாக இருந்து விட்டோம்"

"ஆயுதங்களையும், கப்பலையும் பறிகொடுத்த நீலன் வெளியே நிற்கிறான்"

"அவனை உள்ளே வரச் சொல் "

உள்ளே வந்த நீலன் வணக்கம் சொல்லிவிட்டு கருணாகரனை பார்த்தான்.

பேசு என்று சைகை செய்தான் கருணாகரன்.

"என்னை மன்னித்து விடுங்கள்" என்றான் நீலன்.

"உன் மேல் தவறில்லை. அந்த துரோகி நஞ்சுண்டன் மீது தான் தவறு.அரசாங்க சொத்தை அரசிடம் ஒப்படைப்பதுதான் முறை.ராஜதுரோகம் செய்து விட்டான் அவன். அவனை தண்டிப்பது தான் ஒரே வழி " என்றான் மதிமாறன்.

" அவன் இப்படி துரோகம் செய்வான் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை" என்றான் நீலன்.

" என் காலடியிலேயே குழிபறித்திருக்கிறார்கள் வளநாட்டு உளவாளிகள். அதை தெரிந்து கொள்ளாமல் இத்தனை நாட்களாக இருந்திருக்கிறேன். என்னுடைய முட்டாள் தனம் உன்னுடைய முட்டாள்தனத்தை விட பெரியது "

"ஆயுதங்கள் கிடைத்த பிறகு சிகப்பு முகமூடி சும்மா இருக்க மாட்டான். நம் மீது போர் தொடுக்க தயங்க மாட்டான் . அவனுக்கு வளநாட்டின் படை உதவியும் கிடைத்து விட்டால் நாம் தோற்பது உறுதி "

"வள நாட்டிலிருந்து உதவி வரும் என்கிறாயா?"

"வரலாம் என்கிறேன்"

"நம்மிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை" என்றபடி யோசித்தமதிமாறன் "அந்த பெண் இப்போது எங்கிருக்கிறாள்?" என்றான்.

"எந்த பெண் ?" என்று விழித்தான் கருணாகரன்.

"அந்த கலை கூத்தாடி பெண் பெயர் கூட சந்திரவதனாவோ என்னவோ?"

"அவள் வில்லவனின் வீட்டில் இருக்கிறாள் " என்றான் கருணாகரன்.

போரில் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமே தெரியாது. சந்திரவதனாவை திருமணம் செய்து விட்டால் தயாநிதிக்கு மருமகனாகி அவனது சொத்துகளை அடைந்து விடலாம் என்று கணக்கு போட்ட மதிமாறன்" எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது. இருவரும் இங்கேயே காத்திருங்கள். இல்லை அவசர வேலை இருந்தால் கிளம்பி செல்லுங்கள். நாம் நாளை சந்திக்கலாம்" என்ற மதிமாறன் பரபரப்புடன் வெளியேறினான்.

வெளியே அவன் ஆட்களை அழைப்பதும் வில்லவனின் வீட்டை முற்றுகையிடுங்கள் என்று உத்தரவிடுவதும் தெளிவாக கேட்டது.
வேறு ஓரு உருவமும் அந்த உத்தரவை கேட்டு கொண்டிருந்தது.

ரகசிய தீவு55

Qரகசிய தீவு

அத்தியாயம் 55

தூண்டிலில் மண்புழு

நஞ்சுண்டன் மதி மாறனின் இல்லத்தை நோக்கி பயணமாகி கொண்டிருந்த அதே நேரத்தில் தன்னுடைய மாளிகையிலிருந்து சிறு படையுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்மதிமாறன்.

அவனது ஒரே நோக்கம் வில்லவனின் வீட்டில் இருக்கும் சந்திரவதனாவை பிடிப்பது தான். அவளை தன் கைவசம் கொண்டு வந்து விட்டால் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்பது அவனது மன கணக்கு .சந்திரவதனா வை தான் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு விட்டால் தயாநிதியின் மருமகனாகி விடுவோம்.இந்த தீவே தன்னுடைய அதிகாரத்திலிருந்து நழுவி போனாலும் மலைநாட்டு உதவியோடு தயாநிதி அதை மீட்டு விடுவான். தயாநிதியின் அரசியல் வாரிசாக தான் உருவாகி விடலாம். தயாநிதியின் இடத்தை தான் பிடித்து விட்டால் தாய் நாட்டிலேயே தங்கிவிடலாம். இவ்வளவு தூரம் ஆளுநராக அலைய வேண்டியதில்லை.

தன்னுடைய பிரதிநிதியாக தயாநிதி மதிமாறனை ரகசிய தீவிற்குஅனுப்பியது போல் தானும் வேறு யாரையாவது ரகசிய தீவிற்கு ஆளுநராக நியமித்து விட்டு சொந்த நாட்டிலேயே சுகபோகமாக வாழலாம். இந்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் அவனுக்கு சந்திரவதனா தேவை.சந்திரவதனா தயாரிதியின் மகள் என்ற உண்மை மதிமாறனுக்கு மட்டுமே தெரியும். அந்த உண்மை தெரிந்த செங்கோடனையும் அவன் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அனுப்பி விட்டான். சந்திரவதனா தயாநிதியின் மகள் என்பதற்கு ஆதாரமாக இருப்பது அந்த ஆபரணம் அது தற்போது தன்வசம் இருக்கிறது என்ற மிதப்பில் இருந்தான் அவன்.

அவன் தன்னுடைய படைகளை வழி நடத்தி கொண்டு வில்லவனின் மாளிகையை நோக்கி சென்றான்.மதிமாறனின் கட்டளைகளை கேட்டு கொண்டிருந்த ஆதி சூழ்நிலையை சட்டென்று புரிந்து கொண்டு விட்டான்.

மதிமாறனால் சந்திரவதனாவிற்கும் அவளுடைய குழுவிற்கும் ஆபத்து என்பதை புரிந்து கொண்டவன் அவர்களை காப்பாற்ற தன் குதிரையை குறுக்குவழிகளில் விரட்டி சென்றான்.மதிமாறன் வில்லவனின் மாளிகையை அடையும் முன்பாக தான் அந்த இடத்தை அடைந்து விட வேண்டும் என்பது அவனது நோக்கம். அவன் மின்னல் வேகத்தில் குதிரையை விரட்டி சென்றான்.

மதிமாறனும், ஆதியும் அங்கிருந்து கிளம்பிய பின்பு முக்காடு அணிந்த உருவம் ஓன்று மதிமாறனின் மாளிகையிலிருந்து வெளியேறியது. இருட்டில் ஒரு உருவம் தீப்பந்தத்துடன் குதிரை லாயத்தை நோக்கி விரைவதை பார்த்த நீலன் அதை கருணாகரனிடம் சுட்டி காட்டினான்.

"யாரோ ஒருவன் மாளிகையிலிருந்து வெளியேறி குதிரை லாயத்தை நோக்கி விரைகிறான். நீ அதை கவனித்தாயா?" என்றான் நீலன் கருணாகரனை பார்த்து.

"கவனித்தேன். இருட்டில் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. யார் அங்கே ? குதிரை லாயத்தில் யாரோ குதிரையை களவாட முயல்கிறார்கள். அவனை உடனே தடுத்து நிறுத்துங்கள்" என்று ஆட்களுக்கு உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். ஆட்கள் அவன் கட்டளையை கவனித்து குதிரை லாயத்தை நோக்கி விரையும் முன் அந்த ஆசாமி துரிதமாகச் செயல்பட்டான். கருணாகரனின் ஆட்கள் விரைவில் தன்னை சுற்றி வளைத்து விடுவார்கள் என்பதை உணர்ந்தவன் மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தான்.

சட்டென்று ஒரு குதிரையில் தாவி ஏறியவன் அதன் பிடரியை ஓங்கி தட்டினான். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட புரவி மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது.கருணாகரனின் ஆட்கள் நிலைமையை புரிந்து கொண்டு குதிரையை தடுத்து நிறுத்தும் முன்பாக குதிரை காற்றை கிழித்து கொண்டு பறந்தது.

தடுக்க முயன்ற இரண்டு வீரர்களின் முகத்தில் தீப்பந்தம் மோதி அவர்களை விலக வைத்தது. குதிரையில் தப்பி சென்றவனை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தனர் நீலனும், கருணாகரனும்.

"உன் ஆட்களின் முயற்சி பலிக்கவில்லை. அவன் தப்பி சென்று விட்டான். புதிய நபர் தன் மீது ஏறினால் அடம் பிடிப்பது குதிரைகளின் சுபாவம். ஆனால் இந்த குதிரை அவனை கண்டு அப்படி சுணங்கவில்லையே? பழக்கமான ஆசாமி போல் அவனது உத்தரவுக்கு கீழ்படிந்து பறக்கிறதே?" என்று தான் கவனித்ததை கேள்வியாக கேட்டான் நீலன்.

"சரியாக சொன்னாய். அந்த குதிரை அந்த ஆசாமிக்கு பழக்கமானது தான் "

' அப்படியானால் அந்த குதிரை வீரனை உனக்கு தெரியுமா?" என்றான் நீலன்.

"தெரியும் "

"யார் அவன்? அவனது பெயர் என்ன?" என்றான் நீலன் ஆவலுடன் .

கருணாகரன் அந்த பெயரை சொன்னான். அதை கேட்டதும் அயர்ந்து போய் நின்றான் நீலன்.

"என்னால் நம்ப முடியவில்லை" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.

அதே நேரம் வில்லவனின் மாளிகையை சுற்றி வளைத்திருந்தன மதி மாறனின் படைகள் .

உபரிகையிலிருந்தே படைகள் வருவதை கவனித்த பார்வதி தங்களை ஆபத்து சூழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள். கைவசம் இருக்கும் சொற்ப ஆயுதங்கள் . ஆயுதங்களை பிரயோகிக்க தெரியாத கலை கூத்தாடிகள் இவர்களை வைத்து கொண்டு எப்படி மதி மாறனை எதிர்கொண்டு இங்கிருந்து தப்பிப்பது என்று அவளுக்கு புரியவில்லை.

கலை கூத்தாடிகளும் தங்களை ஆபத்து சூழ்ந்திருப்பதை விரைவிலேயே புரிந்து கொண்டனர். இரண்டு பெண்களை காப்பாற்ற தங்களால் முடிந்ததை செய்யலாம் என்று நினைத்தவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு எதிரிகளை எதிர்கொள்ளதயாராயினர்.

பார்வதி சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடிகளை பாத்திரத்தில் எடுத்து கொண்டான். வெளியே காத்து கொண்டிருந்த மதி மாறன் தன்னுடைய குதிரையிலிருந்து குதித்து இறங்கினான். சுற்றும் முற்றும் பார்த்தவன் தன் தொண்டையைகனைத்து கொண்டான். தன் பேச்சை கேட்க பொதுமக்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டவன் உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.

"நண்பர்களே! நீங்கள் ஆயுத பயிற்சியற்றவர்கள் என்பதை நான் அறிவேன். மக்களை மகிழ்விக்க கத்தியை எடுத்து பழகியவர்கள் நீங்கள்.உங்களுக்கு அது பொம்மை கருவி. எனக்கோ அது கொலை கருவி.எனக்கு தேவை உங்களில் ஓரு ஆள். அவனை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விட்டால் மற்றவர்களை நான் மன்னித்து விட்டு விடுவேன். ஒரு ஆளுக் காக இத்தனை பேர் பலியாக வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்" என்றான் மதி மாறன்

பார்வதிக்கு அவனது வேண்டுகோள் புதிராக இருந்தது. இப்படி கெஞ்சுகிறான் என்றால் அவன் பிடிக்க விரும்பும் ஆசாமிக்கு உயிரபாயம் ஏற்படக் கூடாது என்று அவன் விரும்புகிறான்.

"யார் அந்த ஆசாமி?" என்றாள் பார்வதி.

"சந்திரவதனா! அவளை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். எல்லோரையும் உயிரோடு விட்டு விடுகிறேன்"

"காமாந்த காரா! உன் எண்ணம் ஈடேறாது. அவளை உன்னிடம் ஒப்படைக்க முடியாது."

"அவசரப்படாதே பெண்ணே. அவள் செங்கோடனின் வளர்ப்பு மகள். அவளது உண்மையான பெற்றோர் யாரென்று எனக்கு தெரியும். உன் தந்தை சாகும் தருவாயில் இந்த ஆபரணத்தை என் கையில் கொடுத்து உன் பிறப்பின் ரகசியத்தையும் என்னிடம் கூறினார். உன்னுடைய உண்மையான பெற்றோர் யார் என்று தெரிந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?" என்றான் மதிமாறன் நைச்சியமாக. மீனை பிடிக்க வேண்டுமென்றால் தூண்டிலில் மண்புழுவை மாட்ட வேண்டும்.மதிமாறன் சந்திரவதனா என்ற மீனை பிடிக்க குத்திய மண்புழு தான் அவளின் பிறப்பு ரகசியம்.

தான் செங்கோடனின் வளர்ப்பு மகள் என்பது அரசல் புரசலாக சந்திரவதனாவிற்கு தெரியும். ஆனால் அதை செங்கோடன் தன் மகளிடம் நேரடியாக சொன்னதில்லை. சிரித்து மழுப்பி விடுவான். உண்மையான பெற்றோரை தேடி தன் மகள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்பது தான் அவனது பயம்.

சந்திரவதனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு தீயவனிடம் தன்னுடைய பிறப்பு ரகசியத்தை சொன்ன தகப்பன் அதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று அவளுக்கு வியப்பாக இருந்தது.

"சந்திரவதனா வேண்டும் என்பதற்காக விதவிதமாக கதை கட்டுகிறாயா?" என்றாள் பார்வதி.

"இல்லை. என்னை நம்பு. அவளுக்கு பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது. அவளை என்னிடம் ஒப்படையுங்கள்" என்றான் மதி மாறன்

"இப்போது நாம் என்ன செய்வது?" என்றாள் பார்வதி.

"எனக்காக யாரும் பலியாக வேண்டாம். நான் சரணடைகிறேன். என் பிறப்பு ரகசியம் தெரிவதற்காகவாவது நான் அவனிடம் போய் தான் தீர வேண்டும்" என்றாள் சந்திரவதனா.

"உளறாதே! அவன் உன்னை பிடிக்க பொய் கூறுகிறான்"

"இல்லை. அவன் உண்மையை கூறுவது போல் தான் தோன்றுகிறது "

" எதை வைத்து கூறுகிறாய்?"

" என் தந்தையிடம் இருந்த அந்த ஆபரணம் இப்போது அவனிடம் இருக்கிறதே?"

"யோசிக்க வேண்டிய விசயம்தான். ஆனால் உன்னை அவனிடம் ஒப்படைக்க மாட்டோம்,

"இங்கிருந்து தப்பிக்க வழியேயில்லை"

"ஏன் இல்லை?" என்றது ஒரு கணீர் குரல். அது ஆதியுடையது.

"ஆதி நீ எப்படி உள்ளே வந்தாய்? காவலர்கள் நம் வீட்டை சூழ்ந்திருக்கும் போது " என்றாள் வியப்புடன் பார்வதி.

"அக்கா. இப்படி ஒரு சூழ்நிலை வரும் போது இங்கிருந்து தப்பி செல்ல சுரங்கம் ஓன்றை அமைத்து வைத்திருக்கிறார் அண்ணன். வாய் பேச முடியாத வன் என்று நினைத்து அந்த வேலையில் அண்ணன் என்னை ஈடுபடுத்தினார். அந்த வழியாக உள்ளே வந்தேன். அதே வழியாக அனைவரும் தப்பி சென்று விடலாம். எல்லோரும் என் பின்னால் வாருங்கள்" என்ற ஆதியை பின்தொடர்ந்தனர் அனைவரும் .

வில்லவனின் மாளிகையை சுற்றி வளைத்திருந்த வீரர்களை பிளந்து கொண்டு முன்னேறியது ஒரு குதிரை. வீரர்களின் சலசலப்பை பார்த்த மதிமாறன் எரிச்சலுடன் "யார் அது?" என்றான்.

மதிமாறனின் மாளிகையிலிருந்து வந்த அந்த முக்காட்டு உருவம் குதிரையிலிருந்து குதித்து இறங்கியது. "யார் நீ?" என்றான் மதி மாறன் சினத்துடன் .

முக்காட்டு உருவம் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் முக்காட்டை நீக்கியது.

அதன் முகத்தை பார்த்த மதிமாறன் திகைத்து நின்றான்.

"நீயா?" என்றன அவனது உதடுகள். அவனது தொண்டை குழி மேலும் கீழும் ஏறி இறங்கியது.

ரகசியதீவு54

ரகசிய தீவு

அத்தியாயம் 54

காத்திருக்கும் எமன்

மதிமாறன் தன்னுடைய ஆட்களை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான். உபரிகையில் நின்றபடி நடப்பவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் கருணாகரனும், நீலனும்.

இருவருக்குமே அவனது நடவடிக்கை புதிராக இருந்தது. இருவரும் ஓன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

" இவனை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சிகப்பு முகமூடியை எதிர்க்க தேவையான ஆயுதங்கள் பறி போய்விட்டன. அவற்றை பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை. அவனுடைய கவனம் எங்கிருக்கிறது பார். ஒரு பெண்ணை தேடிக் கொண்டு செல்கிறான்" என்று மதிமாறனின் நடத்தையை பற்றி விமர்சனம் செய்தான் கருணாகரன்.

"நான் நிறைய பெண் பித்தர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஓருவனை பார்த்ததில்லை.அதிகாரம் பறிபோகும் அபாயம் இருந்தும் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஒரு பெண்ணை தேடிக் கொண்டு ஓடுகிறானே? ஒரு வேளை அந்த பெண் பிரமாதமானஅழகி யோ?" என்றான் நீலன் கேள்விக்குறியுடன் .

"அவள் அழகி தான். ஆனால் அந்த அழகை மீறிய ஏதோவொரு விசயம் அவளிடம் ஓளிந்திருக்கிறது. அது என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவள் மீது மதிமாறனுக்கு ஒரு கண் இருக்கிறது என்பது மட்டும் உண்மை" என்றான் கருணாகரன்.

"நல்ல வேளை அந்த மதிமாறனின் கவனம் இந்த பெண் மீது திரும்பியது. இல்லையென்றால் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நானும் நீயும் தலையால் தண்ணீர் குடித்திருப்போம்"

" என்ன சொல்கிறாய் நீ? எனக்கு நீ சொல்வது புரியவில்லை"

"ஓ! உனக்கும் மதி மாறனை போல் மந்த புத்தி தான் போலும். அவன் மட்டும் என்னை பார்த்து சிறையிலிருந்து எப்படி தப்பி சென்றாய் என்று கேட்டிருந்தால் என்னுடைய நிலைமை என்னாவது?" என்றான் நீலன்.

நீலனின் கேள்வியை கருணாகரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் அப்படி ஒரு கோணத்தில் சிந்தித்து கூட பார்க்கவில்லை. எப்போதும் முன்னெச்சரிக்கையாக பதில்களை தயார் செய்து வைத்து கொள்ளும் தான் எப்படி இந்த கேள்விக்கு பதில் தயார் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டோம் என்று அவன் தன்னையே நொந்து கொண்டான்.

" அவன் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தால் நீ என்ன பதில் கூறியிருப்பாய்?" என்றான் கருணாகரன்

"நான் எதற்கு அவன் கேள்விக்கு பதில் சொல்ல போகிறேன்? நான் உன்னையல்லவா கைகாட்டி விடுவேன். நீ தான் என்னை சிறையிலிருந்து மீட்டு வந்தாய் என்ற உண்மையை அவனிடம் கூறிவிட வேண்டியதுதான்" என்றான் விசம சிரிப்புடன் நீலன்.

"அடப்பாவி! என்னை சிக்கலில் சிக்க வைக்க பார்க்கிறாயா?"

"இல்லை. சிக்கலில் இருந்து விடுபடும் உன்னுடைய திறமையை பார்க்க விரும்புகிறேன்"

"நம்முடைய அதிர்ஷ்டம் அவன் அந்த கேள்வியை கேட்க மறந்தது?" என்றான் கருணாகரன்

"யாருடனும் மோதி வெற்றி பெறலாம். ஆனால் அதிர்ஷ்டகாரனிடம் மோதி வெற்றி பெற முடியாது"

"அடுத்தது நாம் என்ன செய்ய போகிறோம்?"

"அதைப் பற்றி யோசிப்போம். இரண்டாம் சாமத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது" என்றான் கருணாகரன்.

இரவின் இருளில் பதுங்கியபடி இருவரது உரையாடலையும் கேட்டு கொண்டிருந்த
மர்ம உருவம் சத்தமின்றி அங்கிருந்து நழுவியது. 

அதே நேரம் ஆகி நஞ்சுண்டனின் குதிரையில் விரைந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மார்க்கதரிசி தன்னுடைய தங்க புதையலை புதைத்ததை சிறு வயதில் மறைந்து நின்று பார்த்த ஒரே ஆள் அவன் தான்.

அவனது கண் முன்னால் புதைக்கப்பட்ட பொக்கிசங்கள் இப்போது காணாமல் போயிருக்கின்றன. தன்னுடைய சகாக்களை ஏமாற்றி அவற்றை இடம் மாற்றி வைத்திருக்கிறான் எமகாதகனான கருணாகரன். இவ்வளவு திறமைசாலியான ஓருவனை கொன்று அவன் தன்னுடைய பழியை தீர்த்து கொள்ள வேண்டும். பெரியவர்களையே இப்படி சாமர்த்தியமாக ஏமாற்றும் கருணாகரனை சிறுவனான தன்னால் பழிவாங்க முடியுமா என்ற மெல்லிய சந்தேகமும் அவனது மனதில் எழுந்தது.

அவன் உடனே கருணாகரன் எங்கிருக்கிறான் என்பதை கண்டறிய விரும்பினான். அவன் கருணாகரனின் மாளிகைக்கு சென்ற போது தான் கருணாகரன் அங்கிருந்து மதிமாறனின் மாளிகைக்கு கிளம்பியிருந்தான்.

தனியாக பயணமான கருணாகரனை சரியான தருணத்தில் வீழ்த்தி விடலாம் என்று நினைத்து பின் தொடர்ந்த ஆதிக்கு அதற்கான எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவேயில்லை.

கருணாகரன் மதி மாறனின் மாளிகைக்குள் சென்ற பிறகு அவன் திரும்ப வரும் வரை இருட்டில் பதுங்கி கிடக்க முடிவு செய்தான் ஆதி.மதிமாறனின் மாளிகைக்கு சற்று தள்ளி இருட்டில் குதிரையை கட்டி வைத்துவிட்டு கால்நடையாக மதிமாறனின் மாளிகை வழியாக நடக்க ஆரம்பித்தான் ஆதி.

கருணாகரன் மதி மாறனின் மாளிகைக்குள் நுழைந்த சற்று நேரத்தில் அந்த மாளிகை பரபரப்பானது. காவல் வீரர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடுவதும் தங்கள் குதிரைகளை பயணத்திற்கு தயார் செய்வதும் அவனது கண்களில் தட்டுப்பட்டது. விபரீதமாக ஏதோ நடக்க இருப்பதாக யூகித்தவன் இருளில் மறைந்து கொண்டு நடப்பதை கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மதிமாறன் தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிடும் சத்தம் அவனுக்கு கேட்டது.

"வீரர்களே! அனைவரும் தயாராகுங்கள். சிகப்பு முகமூடியும் அவனது ஆட்களும் வில்லவனின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. நாம் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய வேண்டும். உடனே கிளம்புங்கள்"

மதிமாறனின் உரத்த குரல்கட்டளை மறைந்திருந்த ஆதியின் காதுகளில் விழுந்தது.

வில்லவனின் வீட்டில் சந்திரவதனாவும், பார்வதியும் கலை கூத்தாடிகளும் இருப்பதும் அவர்களுக்கும் பார்த்திபனுக்கும் தொடர்பு இருப்பதும் மதிமாறனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அவனுக்கு இந்த விசயம் தெரிகின்றதென்றால் புரட்சி கூட்டத்தில் மதிமாறனின் கையாட்கள் யாராவது கலந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த விசயம் இவனுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்?

ஆதியின் சின்ன இதயம் கேள்விகளால் நிரம்பியது. சந்திரவதனாவும் பார்த்திபனும் ஓருவரை ஒருவர் விரும்புவது அவனுக்கு தெரியும். சந்திரவதனா மதிமாறனிடம் பிடிபட்டு விட்டால் அவளை மீட்க முனையும் பார்த்திபனும் பிடிபட்டு விடுவான். புரட்சி நடைபெறாமலேயே நசுக்கப்பட்டு விடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால் எப்படியாவது சந்திரவதனாவை காப்பாற்றியாக வேண்டும் என்று நினைத் த ஆதி தன்னுடைய குதிரை இருந்த இடத்திற்கு வந்தான்.

அதை அவிழ்த்து கொண்டு கிளம்பியவன் வில்லவனின் வீட்டை அடைய குறுக்குவழிகளில் விரைந்தான்.

மதிமாறனின் சிறு படை அங்கிருந்து கிளம்பியது.

ஓரே இடத்தில் சுற்றி கொண்டிருந்த நஞ்சுண்டன் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நேரமானது.

தனக்கு என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை. தன்னுடைய குதிரையையும் ஆதியையும் காணாமல் திகைத்தான். அந்த பொடியன் ஏதோ ஒரு மாயம் செய்து தன்னிலை மறக்க செய்து தன்னை வீழ்த்தி விட்டான் என்று அவனுக்கு சீக்கிரத்திலேயே புரிந்து விட்டது.

அவன் அங்கிருந்து கால்நடையாகவே கிளம்பினான். சொற்ப தூரநடையிலேயே பெருமளவு களைத்து போனான் அவன். நடந்து போய் மதிமாறனின் மாளிகையை அடைவதற்குள் எல்லாமே நடந்து முடிந்திருக்கும் என்று நினைத்தான் நஞ்சுண்டன் .

அவனிடம் இருந்த வாளை ஆதி எடுக்காமல் விட்டு விட்டான். அது போதும் வேண்டிய காரியத்தை சாதிக்கலாம் என்று நினைத்த நஞ்சுண்டன் எதிரே தென்பட்ட ஒரு குதிரை வீரனை வாள்முனையில் நிறுத்தி அவனுடைய குதிரையை பறிமுதல் செய்தான். குதிரை கிடைத்து விட்டது.இனி வேகமாக பயணிக்கலாம் என்று நினைத்தவன் மதி மாறனின் மாளிகையை நோக்கி குதிரையை விரட்டினான்.

அங்கே நீலன் என்ற பெயரில் எமன் அவனுக்காக காத்திருந்தான்.

புதன், 9 நவம்பர், 2022

ரகசிய தீவு 51

ரகசிய தீவு

எல்லாவற்றையும் இழந்தவன்

கருணாகரன் தான் இத்தனை நாட்களாக யோகியாக நடித்து எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறான் என்பதை அறிந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தன் கப்பலை கருணாகரனின் உதவியோடு நீலன் திரும்ப கைப்பற்றி விட்டான் என்பதை அறிந்த நஞ்சுண்டன் திகைப்பில் ஆழ்ந்தான். அவன் ஆயுதங்களை இலவசமாகவே பார்த்திபனுக்கு தர முன்வந்ததை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மலைநாட்டு ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைக்க வேண்டிய நீலன் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது அவனுக்கு வியப்பாக இருந்தது.

தன்னுடைய துரோகத்திற்கு ஆதரவு தந்து உதவிய தன்னுடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுவிட்டதை வில்லவன் மூலமாக தெரிந்து கொண்டான் நஞ்சுண்டன் .

நஞ்சுண்டன்தான் எல்லாவற்றிலும் தோற்று நிர்கதியாக நிற்பதை உணர்ந்தான். நீலனை ஏமாற்றி அவன் கடத்தி கொண்டு வந்த முத்தழகி கப்பல் அவன் கையை விட்டு போய்விட்டது. மார்க்கதரிசியின் தங்க புதையலும் அவன் பெரிதும் நம்பியிருந்த ஆயுதங்களும் கூட அவன் கையை விட்டு போய்விட்டன. போதாதற்கு கருணாகரன் வேறு ஆயுதங்களுக்கு பதிலாக நஞ்சுண்டனை பணயக் கைதியாக கேட்டு அவன் கதையை முற்றிலுமாக முடித்து வைக்க போகிறான்.

எல்லாமே தனக்கு எதிராக நடந்து கொண்டிருந்தாலும் நஞ்சுண்டன் தன் மன தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் இழக்கவில்லை. அவனுக்கு ஒரு விசயம் சாதகமாக இருந்தது. அது மார்க்கதரிசியின் தங்க புதையல் . எல்லோரும் நினைத்து போல் அது காட்டுக்குள் இல்லை என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

அந்த புதையல் இருக்கும் இடம் கருணாகரனுக்கு தெரியும். அவன் மதி மாறனின் முகத்தில் கரியை பூசிவிட்டு அவனுக்கு தெரியாமல் அதை இங்கிருந்து கொண்டு செல்ல நினைக்கிறான். இது மட்டும் தான் அவனுக்கு சாதகமான அம்சம்.

கருணாகரனின் குள்ள நரிதந்திரத்தை எப்படியாவது மதிமாறனின் காதுகளுக்கு கொண்டு சென்று விட்டால் போதும். கப்பலில் இருக்கும் ஆயுதங்கள் கண்டிப்பாக மதிமாறனின் கவனத்தை கவரும். அவற்றை அவன் கைப்பற்றி விட்டால் அவன் எளிதாக சிகப்பு முகமூடியின் புரட்சியை அடக்கி விடுவான். கருணாகரனிடமிருந்து தங்க புதையலையும் கைப்பற்றி விடுவான்.

தான் செய்த உதவியை மதிமாறன் மறக்க மாட்டான். அதற்கு பதிலுதவி செய்ய நினைப்பவனிடம் முத்தழகி கப்பலை மீண்டும் கேட்டு பெற வேண்டும். அப்படியே கிடைத்த புதையலில் கணிசமான பங்கை கேட்டால் மதிமாறன் அதை மறுக்க போவதில்லை. இவ்வாறு யோசித்த நஞ்சுண்டன் தன்னுடைய அடுத்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் தான் இங்கிருந்து தப்பியாக வேண்டும் என்ற முகத்தில் அறையும் உண்மையை உணர்ந்தான்.

இங்கே இருக்கும் யாரையாவது பணயக் கைதியாக பிடித்து வைத்து கொண்டு இங்கிருந்து தப்பி சென்று விட வேண்டும் என்று நினைத்தவனின் கண்ணில் தென்பட்டான் ஆதி.

வயதில் சிறியவன். அனைவரின் அனுதாபத்தையும் பெற்றவன். இவனை பணயமாக்கிவிட வேண்டியது தான் என்று நினைத்தவன் சட்டென்று தன் குறுவாளை உருவி அவனது கழுத்தில் வைத்தான்.

" யாராவது என்னை பிடிக்க நினைத்தால் இவனது தலை தரையில் உருளும்" என்று கர்ஜித்தான்.

எதிர்பாராமல் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அனைவரும் திகைத்து நின்றனர். "நஞ்சுண்டா! விபரீதமாக எதையாவது செய்து விடாதே! அவன் உலகம் அறியாத சிறுவன் " என்றான் வில்லவன்.

"நான் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எனக்கு ஓரு குதிரையை கொடுங்கள். நான் இங்கிருந்து கிளம்புகிறேன். சிறுவனை கொல்லுமளவிற்கு நான் கொடியவன் அல்ல.. நான் பாதுகாப்பான தூரத்திற்கு சென்றதும் இவனை விடுவித்து விடுவேன். பயப்படாதீர்கள்" என்றான் நஞ்சுண்டன் .

நஞ்சுண்டன் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் " அவனுக்கு ஒரு குதிரையை கொடுங்கள்" என்று உத்தரவிட்டான்.

நஞ்சுண்டனிடம் குதிரை ஓன்று ஒப்படைக்கப்பட்டது. அதில் ஆதியை ஏற்றிக் கொண்டு அவனது பின்னால் அமர்ந்து கொண்ட நஞ்சுண்டன் அங்கிருந்து கிளம்பினான்.

"யாரும் என்னை பின் தொடர்ந்து வர முயற்சி செய்யாதீர்கள். அப்படி பின் தொடர்ந்தால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல" என்ற நஞ்சுண்டனின் குரல் காற்றில் கலந்து எதிரொலித்தது.

நண்பர்கள் அனைவரும் செய்வதை யறியாது நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்..

வில்லவனை அனுப்பி வைத்த கருணாகரன் தன்னுடைய உடைகளை மாற்றி கொண்டு குதிரையில் கிளம்பினான்.

அவன் போய் சேர்ந்தது செங்கோடனின் உடல் எரியூட்டப்பட்ட இடுகாடு.

மயான அமைதியாக இருந்த இடுகாட்டின் வெளியே குதிரையை நிறுத்தி இறங்கிய கருணாகரன் வெட்டியானை தேடத் துவங்கினான்.

விரைவிலேயே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பூபதியை கண்டுபிடித்து விட்டான்.

" என்ன இங்கே வந்து உட்கார்ந்து விட்டாய்?" என்றான் கருணாகரன்.

"வேறு என்ன செய்வது? இங்கே இருப்பவர்கள் வெளியே போவதில்லை. வெளியே இருப்பவர்கள் உள்ளே வருவதில்லை. நான் மட்டும் தான் இரண்டையும் செய்கிறேன்" என்றான் சலிப்புடன்.

"உன்னுடைய சலிப்பும், ஆயாசமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளையிலிருந்து உன் தனிமைக்கு விடுதலை" என்றான் கருணாகரன்.

"உண்மையைத்தான் சொல்கிறாயா?" என்றான் பூபதி மகிழ்ச்சியுடன் .

"ஆமாம். நான் சொல்வது உண்மை. என்னை நம்பு. அந்த பனிரெண்டு புதை குழிகளையும் தோண்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. மாண்டவர் பூமியான இங்கேதான் புதையல் ஓளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீயும் நானும் தான் அறிவோம்"

" ஆனாலும் நீ பலே கை காரன் கருணாகரா.காட்டில் மறைந்து வாழும் உன் நண்பர்களை போதையில் வீழ்த்தி விட்டு புது ஆட்களை வைத்து அந்த புதையலை இங்கு கொண்டு வந்து விட்டாய். உனக்கு உதவி செய்த பன்னிரெண்டு பேர்களையும் கொன்று அவர்களின் சவக்குழியிலேயே புதையலையும் சமபாகங்களாக பிரித்து ஓளித்து வைத்து விட்டாய். அதற்கு காவலாக என்னையும் நியமித்து விட்டாய்."

"நான் என் நண்பர்களுக்கு செய்த அதே புதையல் மாற்றத்தை நீ எனக்கு செய்து விடாதே"

"நீ இப்போது வேண்டுமானாலும் குழிகளை தோண்டி பார்த்து என்னுடைய நேர்மையை சோதித்து கொள்ளலாம். ஆனால் நான் உன்னை நம்பவில்லை பனிரெண்டு பேரை எமலோகம் அனுப்பி வைத்த நீ பதிமூன்றாவது ஆளாக என்னையும் எமலோகம் அனுப்ப தயங்க மாட்டாய்" என்றான் பூபதி..

"சேச்சேl நான் உனக்கு துரோகம் செய்வேனா? மனதில் உள்ளதை மறைக்காமல் கேட்டு விடும் உன் பழக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த புதையலில் உனக்கும் பங்கு இருக்கிறது"

"அனைத்தையும் வள நாட்டிடம் ஒப்படைக்க நீ முடிவு செய்து விட்டாய். பிறகு எப்படி வரும் எனக்கு பங்கு?"

"முட்டாள் . அத்தனையையும் அப்படியே அள்ளி அரசனிடம் கொடுக்க நான் என்ன முட்டானா? என் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த புதையலுக்காக நான் செலவு செய்திருக்கிறேன். இதில் சரிபாதியைக் தான் நான் வளநாட்டில் ஒப்படைக்க போகிறேன். மீதமுள்ள பாதி உனக்கும் எனக்கும் தான். இறந்து போன மார்க்கதரிசிக்கு மட்டும் தான் முழுமையான புதையலின் அளவு தெரியும். அவன் உயிரோடு வந்து சாட்சி சொல்லவா போகிறான்?" என்று சிரித்தான் கருணாகரன்.

" கருணாகரா, உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. எல்லோரையும் விட நீ புத்திசாலி என்பதை அடிக்கடி நிருபித்து விடுகிறாய்.
உன்னுடைய மதியுகத்திற்கு முன்னால் நான் ஓன்றுமேயில்லை."

"பல முட்டாள்கள் சேர்ந்துதான் ஒரு புத்திசாலியை உருவாக்குகிறார்கள். உலகத்தில் முட்டாள்கள் அதிகம் என்பது தான் உண்மை. இன்று இரவு இரண்டாம் சாமத்தில் கப்பலிலிருந்து ஆயுதங்கள் சிகப்பு முகமூடிக்கு கை மாறும். மூன்றாம் சாமத்தில் இங்கிருக்கும் பொக்கிசங்கள் கப்பலுக்கு இடம் மாறும். நாம் வாழ்க்கையின் இயல்பும் மாறும் " என்றான் கருணாகரன்

"இந்த திட்டத்தில் நாம் இருவர் மட்டும்தானா?"

"இல்லை. மூன்றாவதாக இன்னொருவன் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறான். அவனது பெயர் தர்மபாலன்.வள நாட்டின் அதிகார வர்க்கம் நமக்கு உதவி செய்ய அவனை அனுப்பி வைத்திருக்கிறது."

" அவனுக்கு தெரியாமல் நாம் எப்படி புதையலில் பாதியை அபகரித்து பிரித்து கொள்வது? இல்லையென்றால் அவனையும் கூட்டு சேர்த்து கொண்டு பாதி புதையலை மூன்றாக பிரித்து அவனுக்கும் பங்கு தந்து விடலாமா?"

"நீ ஓரு முட்டாள் என்பதை மீண்டும் நிருபிக்கிறாய். இந்த பொக்கி சத்திற்காக வெவ்வேறு வேடமிட்டு முதலிலிருந்து கஷ்டப்பட்டவர்கள் நாம். நேற்று வந்தவன் அந்த தர்மபாலன்.. அவனுக்கும் அதில் பங்கா? ஆதியில் வந்தவள் வீதியில் நின்றாள். நேற்று வந்தவள் நெய்யும் சோறும் தின்றாள் என்ற பழமொழி போல் இருக்கிறது உன் பேச்சு " என்று வார்த்தைகளில் கனல் கக்கினான் கருணாகரன்.

"என்னை மன்னித்து விடு கருணாகரா. உன் அளவிற்கு நான் புத்திசாலி இல்லை" என்றான் பரிதாபமாக பூபதி.

"அவனை நான் பார்த்து கொள்கிறேன். இன்று இரவு நிறைய வேலை இருக்கிறது. நன்றாக தூங்கி ஓய்வெடு" என்ற கருணாகரன் அங்கிருந்து கிளம்பினான்.

ரகசிய தீவு 52

தீயவனுக்கு திகைப் பூண்டு.
நீலன் வானத்தை வெறித்து கொண்டிருந்தான். அன்று பெளர்ணமி முழு நிலவு வானத்தை அலங்கரிக்க விண்ணில் உலாவரப் போகிறது. அமாவாசையிலும், பௌர்ணமி நாளிலும் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பதை நீலன் அனுபவ பூர்வமாக உணர்ந்தவன். இன்று இரவு தூக்கம் இல்லாமல் வேலை நெட்டி முறிக்க போகிறது என்றது அவனது உள்ளுணர்வு .
ஏற்கனவே பலமுறை ரகசிய தீவிற்கு உணவு பொருட்களை கொண்டு வந்த வகையில் இங்கே சில நண்பர்களை அவன் சம்பாதித்து வைத்திருந்தான். அவர்களை நேரில் சென்று சந்தித்தவன் தன்னுடைய கப்பல் தனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது என்ற விசயத்தை சொன்னான். மேலும் இன்று இரவு தன்னுடைய கப்பல் இங்கிருந்து கிளம்ப போகிறது. ஆனால் போதுமான பணியாட்கள் இல்லை என்றும் சொன்னவன் தனக்கு கப்பலில் வேலை செய்த அனுபவம் உள்ள ஆட்கள் அல்லது அனுபவம் இல்லாத ஆட்கள் யார் கிடைத்தாலும் அவர்களை பணிக்கு சேர்த்து கொள்ள தயார் என்றும் அறிவித்தான்.ஆட்களை ேசர்த்து விடுபவர்களுக்கு கணிசமான அன்பளிப்புகளும் உண்டு என்பதையும் அவன் அறிவிக்க தவறவில்லை.
தன்னுடைய அன்பளிப்பு கணிசமான ஆட்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவன் அறிவான். சற்று நேரத்தில் துறைமுகம் முழுவதும் நீலனின் கப்பலுக்கு ஆட்கள் தேவை என்ற செய்தி காட்டுத் தீ போல பரவத் தொடங்கியது.
நீலனின் ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு தர்மபாலனின் காதுகளையும் வந்தடைந்தது. அவனது குறுக்கு புத்தி மூளை வேறு மாதிரியாக வேலை செய்ய துவங்கியது. தன் ஆட்களில் சிலரை நீலனின் கப்பலுக்குள் ஊடுருவ விட்டால் என்ன? என்று அவன் நினைத்தான். நீலனின் கப்பல் வள நாட்டை அடைந்தால் தன்னுடைய ஆட்களுக்கு எந்த வேலையும் இல்லை.
நீலன் ஏதாவது தில்லு முல்லு செய்து கருணாகரனையும் ஏமாற்றி விட்டு பொக்கிசத்தோடு கம்பி நீட்ட நினைத்தால் தான் தன்னுடைய ஆட்களுக்கு வேலை என்று நினைத்தவன் தன் ஆட்களில் தன் நம்பிக்கைக்குறிய இருவரை அழைத்தான்.
தன் திட்டத்தை அவர்களுக்கு விபரமாக எடுத்து கூறியவன்" ஜாக்கிரதை. அந்த நீலன் உங்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது. அவனது கப்பல் வள நாட்டிற்கு சென்றால் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை. அவன் புதையலுடன் கம்பி நீட்ட நினைத்தால் நீங்கள் உங்கள் திறமையை காட்டி விடுங்கள்" என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.
நீலன் துறைமுகத்திலிருந்து கருணாகரனின் மாளிகையை நோக்கி கிளம்பினான். வழியில் தன்னுடைய நண்பர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவனாக அங்கிருந்து கிளம்பினான்.
மாலை மயங்க தொடங்கியிருந்தது.
நஞ்சுண்டன் ஆதியை குதிரையின் முன்னால் உட்கார வைத்தபடி காட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தான்.
அவனால் நீலன் தன்னுடைய கப்பலை மீட்டு கொண்டுவிட்டதை இன்னமும் நம்ப முடியவில்லை. இப்போதைக்கு எல்லாமே தனக்கு எதிராக இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினான் நஞ்சுண்டன் கடலில் தத்தளிக்கும் கலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போல அவனுக்கு தெரிந்ததுமணிமாறன் ஓருவன்தான்.
அவனை சந்தித்து கப்பலில் ஆயுதங்கள் இருப்பதை சொல்லி நீலனை துரோகியாக்கி விடலாம். ஆயுதங்களை அவன் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதை வைத்தே அவனை தேசதுரோக குற்றம் சாட்டி தூக்கில் போடலாம்.மோகினி தீவில் எப்படியோ உயிர் பிழைத்து தப்பி வந்தவனுக்கு இரண்டாவது முறையாக முடிவுரை எழுதி விடலாம்.
அந்த கருணாகரன் ? அவன் தான் உண்மையில் திறமைசாலி. இரட்டை வேடம் அணிந்து எல்லோரையும் ஏமாற்றி மார்க்கதரிசியின் புதையலை எடுத்து செல்ல நினைப்பவன்.மதிமாறனை சந்தித்து அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் நஞ்சுண்டன் .
கப்பலும், புதையலில் பாதியும் தனக்கு. ஆயுதங்களும் பாதி புதையலும் மதிமாறனுக்கு .உப சலுகையாக நீலனின் உயிர் உடலை விட்டு பறக்க வேண்டும். இந்த திட்டம் மட்டும் நிறைவேறி விட்டால் தான் இழந்தவைகளையெல்லாம் திரும்ப பெற்று விடலாம் என்று அவன் திட்டம் தீட்டினான்.
மனதிற்குள் இப்படி நஞ்சுண்டன் யோசித்து கொண்டிருந்த போது முன்னால் உட்கார்ந்திருந்த ஆதி இவனிடமிருந்து எப்படி தப்பி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இவன் முன்பு சொன்னது போல் தன்னை விட்டு விடுவானா இல்லை கொன்று விடுவானா என்ற பயம் அவனை சூழ்ந்தது. இவன் அடுத்ததாக என்ன செய்ய போகிறான் என்பதை ஆதியால் யூகிக்க முடியவில்லை. கிளம்பியதிலிருந்தே மவுனமாக இருந்த நஞ்சுண்டனை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எதைப் பற்றியோ பலமாக சிந்தித்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.
அவனது மவுனத்தை கலைத்து தப்பியோடும் வழியை கண்டுபிடிக்க நினைத்தான் அவன்.
"குதிரையை நிறுத்து" என்றான் ஆதி.
சிந்தனையில் இருந்த நஞ்சுண்டனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது அவனுடைய குரல்.
"எதற்காக குதிரையை நிறுத்த சொல்கிறாய்?" என்றான் நஞ்சுண்டன் . தான் பணயக் கைதியாக பிடித்து வந்த இந்த சிறுவனை என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. தப்பி வரும்போது முக்கியமாக இருந்தவன் இப்போது வீண் சுமையாக மாறி இருந்தான்.
"எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்" என்றான் ஆதி.
அவனை கீழே இறக்கி விட்ட நஞ்சுண்டன் "அந்த புதருக்கு அருகே போ. என் கண் முன்னாலேயே தான் நீ இருக்க வேண்டும். தப்பி செல்ல முயற்சி செய்தால் நான் மிகவும் பொல்லாதவனாக இருப்பேன்" என்று அவனை எச்சரித்து அனுப்பினான்.
புதரை நோக்கி நடந்து சென்ற ஆதி நின்றபடி தன் கீழாடையை அகற்ற தொடங்கினான். அப்போதுதான் புதரின் ஓரமாக முளைத்து கிடந்த அதைப் பார்த்தான். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் உணர்ந்தான் ஆதி. அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. இருள் நடுவே எழுந்து கொண்டிருந்த முழு நிலவை பார்த்தான் ஆதி.
"சரியான நேரத்தில் சரியான உதவி கிடைத்து விட்டது" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.
ஆதி புதரின் ஓரத்தில் பார்த்தது முளைத்து கிடந்த திகைப் பூண்டுகளை .
அவை விசேசமான சக்தி கொண்டவை.மற்ற நாட்களில் அவற்றால் எந்த பிரச்சனையும் இல்லை.அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தெரியாமல் அவற்றை வெறும் காலில் மிதித்து விட்டால் மிதித்தவர்களின் ஞாபக சக்தி பறிபோய்விடும் சில நாழிகைகளுக்கு!தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் ஓரே இடத்தை திரும்ப திரும்ப சுற்றி வருவார்கள். அவர்கள் சுய நினைவுக் குவர சில மணி நேரங்களாகும்.
அத்தகைய சக்தி வாய்ந்த திகைப் பூண்டை பார்த்ததும் ஆதிக்கு சந்தோஷம். அவன் சிறுவனாக இருந்த போது ஒரு முறை அமாவாசை நாளில் அதை மிதித்து விட்டு ஓரே இடத்தில் சுற்றி சுற்றி வந்திருக்கிறான். இப்போது அதை நஞ்சுண்டன் மீது பிரயோகித்து விட்டு அங்கிருந்து தப்பி செல்ல நினைத்தான்.
சிறுநீர் கழிப்பது போல் உட்கார்ந்தவன் திகைப் பூண்டுகளை கையில் பறித்து மறைத்து கொண்டான். சிறுநீர் கழித்து விட்டு எழுந்தவன் தன்னுடைய உடைகளை சரிப்படுத்தி கொண்டான்.
"முடிந்ததா?" என்றான் நஞ்சுண்டன் .
"முடிந்தது. இதோ வருகிறேன்" என்ற ஆதியின் கண்ணில் பட்டது நஞ்சுண்டன் அணிந்திருந்த காலணிகள் .
இவற்றை கழற்றினால் தான் தன்னுடைய திட்டம் ஈடேறும் என்று நினைத்த ஆதிகுதிரையை நோக்கி நடந்தான்.
"ம். முன்னால் ஏறு" என்று உறுமினான் நஞ்சுண்டன் .
நஞ்சுண்டன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனுடைய ஒருகாலில் இருந்த செருப்பை உருவி இருளில் வீசி எறிந்தான் ஆதி.
"முட்டாள் . என்ன செய்கிறாய் நீ?" என்று பதறினான் நஞ்சுண்டன் .
குதிரையின் கால் இடைவெளி வழியாக நுழைந்து மறுபுறம் வந்த ஆதி அவனின் இன்னொரு செருப்பையும் கழற்றி வீசினான்.
நஞ்சுண்டனுக்கு ஓன்றும் புரியவில்லை. இவனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதோ என்று நினைத்தவன் குதிரையிலிருந்து குதித்து இறங்கினான்.
அவன் இறங்குவதற்காகத்தான் ஆதி காத்திருந்தான். அவனது காலடி படும் இடத்தை கண் கொத்தி பாம்பாக கவனித்து கொண்டிருந்தவன் நஞ்சுண்டணன் பாதம் பூமியில் படும் முன்பாக தன் கையிலிருந்த திகைப் பூண்டுகளை அந்த இடத்தில் வீசினான்.
நஞ்சுண்டனின் பாதங்கள் கனகச்சிதமாக திகைப் பூண்டுகளின் மேல் பதிந்தன. அடுத்த நொடியில் என்ன நடந்ததென்று நஞ்சுண்டனுக்கு ஓன்றும் புரியவில்லை. அவன் தன்னுடைய சுயநினைவை இழந்தான். எதுவும் பேசாமல் குதிரையை சுற்றி சுற்றிவரத் தொடங்கினான்.
தன்னுடைய திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்த ஆதிகுதிரையில் தாவி ஏறி அதை கிளப்பினான். சற்று தொலைவு சென்ற பின் அவன் திரும்பி பார்த்தான். நஞ்சுண்டன் ஓரே இடத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.
ஆதி தனக்குள் சிரித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

திங்கள், 7 நவம்பர், 2022

ரகசிய தீவு 50

ரகசிய தீவு

அத்தியாயம் 50

பலமான எதிரி

சில நாட்களாக மதி மாறனை சந்திக்காமல் இருந்தான் கருணாகரன். தினமும் நாட்டு நடப்புகளை மதி மாறனை சந்தித்து கூறி அவனது ஆலோசனைகளை பெறுவது கருணாகரனின் நித்திய கடமைகளில் ஒன்று. அதை சில நாட்களாக அவன் செய்யாமல் இருப்பதால் மதிமாறன் தன்னைப் பற்றி தவறாக எதையாவது நினைத்து கொள்வானோ என்று கருணாகரன் நினைத்தான். தீவிலிருந்து தங்கத்தை கப்பலுக்கு கொண்டு சென்ற பின் மதி மாறனை நிர்கதியாக விட்டு விடத் திட்டமிட்டிருந்தான் கருணாகரன்

ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற சிகப்பு முகமூடியை தான் இல்லாத நிலையில் படைகளுக்கு  தலைமை தாங்கி மதிமாறனால் நடத்த முடியாது என்பது அவனுக்கு தெரியும். அவன் நடக்கும் போரில் கட்டாயமாக தோற்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.

பார்த்திபனின் வலது கையான வில்லவனிடம்  அவன் தங்க புதையலை எடுத்து செல்வதை பற்றி மூச்சு கூட விடவில்லை.மதிமாறனை சந்திக்க கிளம்பினான் கருணாகரன்

அதே நேரம் வில்லவன் தன் குதிரையில் தீ வின் தெற்கு பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். இதுவரை மர்ம யோகியாக நடித்து கொண்டிருந்தவன் கருணாகரன் என்பது தெரிந்தால் பார்த்திபனின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தான் வில்லவன். அதுவும் அவன் வள நாட்டின் உளவாளி என்பது தெரிந்தால் கண்டிப்பாக பார்த்திபன் வியப்படைவான். ஒரு எதிரி நாட்டு ஒற்றன் எப்படி வெகு திறமையாக நாட்டின் தளபதியாகவும், ஆன்மீக யோகியாகவும் இரட்டை வேடம் போட்டு தங்களை ஏமாற்றி விட்டான் என்பதை நினைக்கையிலேயே வில்லவனுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அதே நேரம் காட்டு பகுதியில் காட்டுவாசியாக வேடம் அணிந்து கொண்டிருந்தவர்கள் குழி தோண்ட துவங்கியிருந்தார்கள். அவர்களுக்கு துணையாக பார்த்திபனின் ஆட்களும் இறங்கினார்கள். ஆதித்தனும், பார்த்திபனும் வேலையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர்..

இரண்டடி, மூன்றடி என்று தோண்டப்படும் குழியின் ஆழம் அதிகமாக ஆரம்பித்தது.ஆதி ஒரு ஓரமாக நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகே நின்று கொண்டிருந்த நஞ்சுண்டனின் விழிகளில் பேராசை மின்னியது.இந்த தங்கம் மட்டும் தனக்கு கிடைத்து விட்டால் பிறகு சுகபோக வாழ்வு தான் என்று அவனது மனம் எதிர்கால கனவுகளில் மூழ்கியது.

தோண்டப்படும் குழியின் விஸ்தீரணம் அதிகமாக ஆரம்பித்தது.நான்கிற்கு நான்கு என்ற நீள அகலத்தில் துவங்கிய குழி கடைசியில் ஆறுக்கு ஆறு என்ற கணக்கில் முடிந்தது. ஐந்தடி தூரம் தோண்டியும் எதுவும் கிடைக்காததில் அனைவரும் சோர்ந்து போனார்கள். ஆதித்தன் சற்றே ஐய்யத்துடன் "தம்பி .ஆதி. நன்றாக யோசித்து பார்த்து சொல் ° இந்த இடத்தில் தான் புதையலை புதைத்தார்களா?" என்றான்.

"நான் உறுதியாக சொல்கிறேன். அவர்கள் இங்கே தான் புதைத்தார்கள். அதை நான் என் இரண்டு கண்களில் பார்த்தேன்" என்றான் ஆதி குழப்பத்துடன் .

"அவனை சந்தேகிக்க வேண்டாம். நாங்கள் இங்கே தான் அதை புதைத்தோம் " என்றான் தோண்டி கொண்டிருந்த கடல் கொள்ளையர்களில் ஒருவன்.

" ஆனால் இவ்வளவு ஆழத்தில் நாங்கள் அதை புதைக்க வில்லை" என்றான் மற்றொருவன்

"அப்படியானால் நீங்கள் புதைத்த பொருள் எங்கே தான் போயிற்று? " என்றான் ஆத்திரத்துடன் பார்த்திபன்.

"அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை" என்றான் இன்னொருவன்.

" இவர்களை விட திறமையான இன்னொருவன் இவர்களிடமிருந்து அதை தூக்கி சென்று விட்டான் போலிருக்கிறதே?" என்றான் நஞ்சுண்டன் .

"அவ்வனவு கனமான பெட்டிகளை தனி ஆளாக தூக்கி சென்றிருக்க முடியாது." என்றான் ஒருவன்.

"உங்களுக்கு யோகி ஏன் உணவு சமைத்து அனுப்ப வேண்டும்?" என்றான் ஆதித்தன்.

"அவர் கருணாகரனின் அனுதாபி என்று கருணாகரன் கூறினான். ஆன்மீகத்தில் ஈடுபடும் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்று கூறி எங்களை சமாதானம் செய்தானே?" என்றான் கடற்கொள்ளையரில் ஒருவன்.

"உங்களுக்கு உணவு கொண்டு வருபவர்கள் வழக்கமாக இங்கேவரும் ஆட்கள்தானே?"

"ஆமாம். ஆனால் ஓரே ஒரு முறை மட்டும் புதிய ஆட்கள் வந்தார்கள். அன்று கருணாகரனின் பிறந்த நாள் என்பதால் அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. அன்று கருணாகரன் எங்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தான். கள், மதுபான வகைகள் என்று போதை வஸ்துகள் பரிமாறப்பட்டன. அன்றும் அதற்கடுத்த நாளும் கூட எங்களால் கண் திறக்க முடியாத அளவுக்கு போதையில் மூழ்கி கிடந்தோம்."

"உங்கள் யாருக்கும் அந்த குறிப்பிட்ட நாளைப் பற்றி எந்த சந்தேகமும் வரவில்லையா?"

"இல்லை. அவன் எப்போதும் தன்னுடைய பிறந்த தினத்தை இப்படி ஆர்பாட்டமாக எங்களுடன் கொண்டாடுவதே வழக்கம். இதில் சந்தேகிக்க எதுவுமில்லை"

"முட்டாள்களே! நீங்கள் குடித்துவிட்டு போதையில் கண் மூடிக்கிடந்த போது கருணாகரன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு விட்டான். இன்னுமா புரியவில்லை. நீங்கள் கண் திறந்து பார்ப்பதற்குள் அவன் புதையலை இங்கிருந்து கிளப்பிக்கொண்டு போய் விட்டான். அதை எடுத்து செல்லத்தான் புதிய ஆட்களை கூட்டி வந்திருக்கிறான். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் அந்த புதிய ஆட்கள் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்புகள் குறைவு .உண்மையை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற பயத்தால் அவன் அவர்களை கொன்றிருப்பான். அவன் சாமர்த்தியமாக உங்களையும் ஏமாற்றி விட்டான்." என்றான் ஆதித்தன். 

"எங்களையும் ஏமாற்றி விட்டான் அந்த சண்டாளன்" என்றான் கொள்ளையரில் ஓருவன்.

அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் வில்லவன்.

"வில்லவன் வந்து விட்டான். அவனுக்கு விலகி வழி விடுங்கள்" என்ற து கூட் டம்.

கூட்டத்தை விலக்கி கொண்டு வந்த வில்லவன் வெறும் குழியை மட்டும் பார்த்து விட்டு "என்னாயிற்று?" என்றான் ஏமாற்றத்துடன் .

"இங்கே புதையல் இல்லை நண்பா. அந்த சண்டாளன் கருணாகரன் தன் சகாக்களை ஏமாற்றி அதை கொண்டு சென்று விட்டான்" என்ற பார்த்திபன் நடந்ததை விளக்கி கூறினான்.

"ஆமாம். நீ போன விசயம் என்னாயிற்று?" என்றான் பார்த்திபன்

வில்லவன் நடந்ததை அப்படியே விவரிக்க தொடங்கினான். அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி தாக்கியது.கருணாகரன், மர்மயோகி ஆகிய இருவரும் ஒரே ஆள் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. இரட்டை வேடம் தரித்து எல்லோரையும் முட்டாளாக்கி விட்டிருந்தான் கருணாகரன்.

எதிராளி சாமான்ய ஆள் அல்லவென்று அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக புரிந்தது.

சிந்தனை செய்து கொண்டிருந்த ஆதித்தன் எல்லோரையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்தான்.

" கருணா கரனின் நோக்கம் எனக்கு புரிந்து விட்டது. ஆயுதங்களை இலவசமாக கொடுத்து பார்த்திபனுக்கும் மதிமாறனுக்கும் இடையே ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்த நினைக்கிறான். எல்லாருடைய கவனமும் யுத்தத்தின் மீது இருக்கும் போது புதையலுடன் இங்கிருந்து ஓடி விட நினைக்கிறான். நாம் இங்கே தங்கத்தை தேடாதிருந்தால் போர் முடிந்த பின்பு தேட துவங்கியிருப்போம். அதற்குள் அவன் புதையலுடன் வளநாடு போய் சேர்ந்திருப்பான். இதில் எனக்கு ஒருவன் மீது சந்தேகமாக இருக்கிறது?"

"யார் அது?"

"நீலன்.மலை நாட்டின் ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைக்க வேண்டியதுதான் அவனது பணி .அதை அவன் மீறி தேசதுரோகியாக விரும்ப மாட்டான். ஆயுதங்கள் மதி மாறனை தவிர வேறு யாரிடமாவது அகப்படும் சூழ்நிலை உருவானால் அவன் அதை கடலில் வீசி எறிவானே தவிர எதிரிகளிடம் ஒப்படைக்க மாட்டான். நீலன் ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்க சம்மதித்திருந்தால் அதில் வில்லங்கமாக ஏதாவது இருக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

தன்னுடைய கப்பலை நீலன் மீட்டு விட்டான் என்பதை கேட்ட நஞ்சுண்டனின் இதயத்தில் இடி இறங்கியது. அவனால் அதை நம்ப முடியவில்லை. கிழட்டு சாத்தான் நினைத்ததை சாதித்து விட்டானே என்று அவன் மனம் குமுறியது. கப்பலும் பறிபோய்விட்டது. ஆயுதங்களையும் இலவசமாக தருவதாக கருணாகரன் சொன்ன பிறகுதான் இங்கு இருப்பது சரியல்ல என்று நினைத்தவன் தன் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து நழுவ ஆரம்பித்தான்.

அவன் நழுவுவதை பார்த்த வில்லவன் " அவன் தப்பி செல்ல முயல்கிறான். அவனை வளைத்து பிடியுங்கள். அவனை நாம் கருணாகரனிடம் ஒப்படைத்தாக வேண்டும்" என்றான்.

தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்த நஞ்சுண்டன் அதை அருகில் இருந்த ஆதியின் கழுத்தில் வைத்தான்.

" யாராவது என்னை தடுக்க நினைத்தால் இவனுடைய தலை தரையில் உருண்டு விடும்" என்றான் நஞ்சுண்டன் இயலாமை நிறைந்த வெறியுடன்!

ரகசிய தீவு 49

ரகசிய தீவு
 
அத்தியாயம் 49

இரு முகமூடிகள்

யோகியின்ன் பூஜை அறையில் இருந்த ரகசிய வழியாக நுழைந்த வில்லவன் தீவட்டியின் உதவியோடு முன்னேறி கொண்டிருந்தான். பல கிளைகளாக பிரிந்து சென்ற பாதையில் அவன் கவனமாக காலடி தடம் பதிந்திருந்த பாதையை பின்பற்றி சென்றான்.பாதையின் முடிவில் ஏதோ சத்தம் கேட்டதால் தன்னுடைய தீவட்டியை அணைத்து விட்டு இருளில் பதுங்கி கொண்டான்.

வேறு ஒரு வழியாக உள்ளே நுழைந்த அந்த மர்ம ஆசாமி தன்னுடைய உடைகளை களைந்து விட்டு கஷாய உடைகளை அணிந்து கொண்டு பொய்தாடி ஓன்றையும் தன் முகத்தில் பொருத்தி கொண்டான். அது தன்னுடைய முகத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறதா என்று அவன் சுவற்றில் இருந்த கண்ணாடியில் ஒரு முறை பார்த்து சரி செய்து கொண்டான்.

அவனுடைய முகத்தை தீவட்டியின் வெளிச்சத்தில் பார்த்த வில்லவன் அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றான். தாடி ஒட்டிய அந்த முகத்திற்கு சொந்தக்காரன் சாட்சாத் கருணாகரனே தான். "இவனா அந்த துறவி?" என்று முணுமுணுத்தனவில்லவனின் உதடுகள். இப்படி ஓரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை சுவற்றை ஒட்டியபடி நின்று கொண்டிருந்த வில்லவன் நகர முற்பட்டான். இந்த செய்தியை எப்படியாவது பார்த்திபனிடம் சொல்லி விட வேண்டும் என்று அவனது உள்ளம் துடியாகத் துடித்தது.

அவன் பக்கவாட்டில் நகர முற்பட்ட போது தரையில் கிடந்த பானை துண்டு ஓன்றை இருட்டில் தெரியாமல் மிதித்து விட்டான். " பட் " என்ற சத்தத்துடன் பானையின் ஓடு இரண்டு துண்டானது.

கருணாகரனின் பாம்பு செவிகளில் அந்த சத்தம் துல்லியமாக விழுந்தது. சத்தம் வந்த திசையில் தீ வட்டியை காட்டியவன்" யாரது?" என்றான். வில்லவனுக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இங்கேயிருந்து கண்மண் தெரியாமல் ஓடி விடலாம் இல்லையோகியின் உருவத்தில் இருப்பது கருணாகரன் தான் என்பதை வெளிகாட்டி கொள்ளலாம். இரண்டாவதில் அவனுடைய உயிர் பறிபோகும் அபாயம் அதிகமாக இருந்தது.

என்ன நடந்தாலும் சரி. கருணாகரனின் இன்னொரு முகத்தை பார்த்திபனிடம் அம்பலப்படுத்தியே தீர வேண்டும். அதற்கு தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவன் சட்டென்று தன் இடுப்பில் இருந்த வாளை எடுத்து யோகியின் மார்பில் வைத்துடன் "நகராதே! விபரீதமாக எதையாவது செய்ய நினைத்தால் உன் உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும். ஜாக்கிரதை!" என்று அவனை எச்சரிக்கவும் செய்தான்.

தர்மபாலனிடம் விடைபெற்று கிளம்பிய கருணாகரன் ஆயுதங்களை முதலில் பார்த்திபனிடம் ஓப்படைத்து கப்பலை காலி செய்து விட விரும்பினான். அதற்காகவே அவன் தன்னுடைய மாளிகையில் இருந்த சுரங்க வழியில் பயணம் செய்தான். இப்போது இருட்டில் நிற்கும் யாரோ ஒரு ஆசாமி தன்னுடைய மார்பில் கத்தியை வைத்ததும் அவன் முற்றிலுமாக நிலை குலைந்து போனான்.

"யாரப்பா நீ? உன் முகத்தை காட்டு" நடுக்கத்துடனும் அதிர்ச்சியுடனும் வெளிப்பட்டது அவனது குரல் ..

"நான் தான்!" என்றபடி இருளிலிருந்து முன்னேறி வெளிச்சத்திற்கு வந்தான் வில்லவன். முன் எச்சரிக்கையாக யோகி தன்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்பதால் தன் மேலாடையால் முகத்தில் முகமுடி அணிந்து அதை மறைத்திருந்தான் வில்லவன்.

" முகத்தை மூடிக் கொண்டிருக்கும் உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லையே?" என்றான் கருணாகரன்

" ஆனால் உன்னை எனக்கு அடையாளம் தெரியும் கருணாகரா.ரகசிய தீவின் தளபதி, ஆன்மீக அடிகளார் இருவரும் ஒருவரே என்பதை நான் இன்று கண்ணால் கண்டு விட்டேன். எதற்கு இந்த கபட நாடகம் கருணாகரா?" என்றான் கோபத்துடன் வில்லவன்.

இதுவரை யாருக்கும் தெரியாமல் தான் கட்டி காத்து வந்த ரகசியத்தை ஒருவன் கண்டுபிடித்து விட்டானே என்ற அதிர்ச்சியில் கல்லாக சமைந்து நின்று விட்டான் கருணாகரன்.

"என்னப்பா நீ? என்னென்னவோ கூறுகிறாய்?" என்ற கருணாகரனின் குரல் நடுங்கியது. வெண்ணெய் திரண்டு வரும் போது பானை உடைந்த கதை போல் எல்லாம் கூடிவரும் நேரத்தில் இடையூறாக ஒருவன் வந்து முளைப்பான் என்று அவன் கனவுகூட காணவில்லை.

"போதும் ! நிறுத்தி கொள் உன் பொய்களை" என்ற கோபத்தோடு சீறிய வில்லவன் அவனது பொய் தாடியை பிடித்து இழுத்தான். பொய்காடி கருணாகரனின் முகத்திலிருந்து விடைபெற்றது.கருணாகரனின் உண்மை முகம் வெளிப்பட்டது.

கருணாகரன் அதிர்ந்து போய் நின்றான். சட்டென்று தன்னை சுதாரித்து கொண்டவன் தன் கையிலிருந்த தீவட்டியால் மார்பில் இருந்த வாளை தட்டி விட்டான். அதே நேரம் அவனது இன்னொரு கை எதிராளி யார் என்று பார்க்க நினைத்து வில்லவனின் முகத்தில் இருந்த முகமூடியை பிடித்து இழுத்தது.

வில்லவனின் உண்மையான முகம் வெளிப்பட்டது." வில்லவா! நீயா?" என்றான் கருணாகரன். அவனுக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போலிருந்தது. சிகப்பு முகமூடியான பார்த்திபனை தொடர்பு கொள்ள நினைக்கும் தன்னுடைய வேலை எளிதாக முடிந்துவிடும் என்று அவனுக்கு தோன்றியது.

வில்லவன் தன்னுடைய அடையாளம் வெளிப்பட்டு விட்டதே யென்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

"பயப்படாதே வில்லவா! நான் உன்னுடைய நண்பன் தான் " என்றான் கருணாகரன் சிரித்தபடி.
தன்னை சுதாரித்து கொண்ட வில்லவன் "எங்களை வேட்டை நாயாக துரத்தி வரும் நீ எப்படி எனக்கு நண்பனாக முடியும்?" என்றான்.

" எல்லாமே மதிமாறனுக்கு போக்கு காட்ட நான் நடத்திய நாடகம்."

"நீ இந்த தீவின் தளபதி. நீ எதற்காக இப்படி இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை"

" எல்லாம் காரணமாகத் தான்."

" சொந்த நாட்டிற்கே துரோகம் செய்யும் துரோகி நீ "

"நான் உங்கள் நாட்டை சார்ந்தவனே இல்லை. நான் வள நாட்டின் ஒற்றன். வள நாட்டிற்கு இந்த தீவின் மீது ஒரு கண்.பார்த்திபன் சம்மதித்தால் வளநாடு உங்களுக்கு உதவி செய்யும் "

"உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை."

"அதை தலைவனான பார்த்திபன் சொல்லட்டும். தயாநிதி மலை நாடு இரண்டிலிருந்தும் விடுதலை உங்களுக்கு .உங்களுக்கு வளநாடு நல்ல நட்பு நாடாக இருக்கும். மலை நாட்டிலிருந்து எந்த இடையூறு வந்தாலும் வளநாடு உங்கள் உதவிக்கு வரும். நீ என்னுடைய உதவியை ஏற்க சம்மதித்தால் கப்பல் நிறைய ஆயுதங்கள் உனக்காக காத்திருக்கின்றன. நான் அவற்றை இலவசமாகத் தருகிறேன்"

"அந்த ஆயுதங்கள் நஞ்சுண்டனுக்கு சொந்தமானவை"

"அவனொரு துரோகி. அந்த கப்பலை என்னுடைய உதவியோடு அதன் பழைய எஜமானன் நீலன் கைப்பற்றி விட்டான். அதன் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்கள். அந்த ஆயுதங்கள் என்னுடையவை. நஞ்சுண்டன் இனி செல்லாக் காசு. அவனை நம்பினால் அம்மஞ் சல்லிக்கு பிரயோஜனமில்லை" என்றான் கருணாகரன்.

" இதைப் பற்றி நான் பார்த்திபனிடம் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும்"

"இன்று இரவுக்குள் நல்ல முடிவு என்னை நாடி வர வேண்டும். இல்லையென்றால் அந்த ஆயுதங்கள் கடல் நீரில் எறியப்பட்டு ஜல சமாதியாகி விடும்" என்றான் கருணாகரன் மிரட்டல் தொனியில் .

"இன்று இரவுக்குள் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். ஆமாம் உங்களின் பரகாயப் பிரவேசவழி என்பது இதுதானா?"

"ஆம். இது தான் அந்த வழி. இந்த ரகசிய வழியின் வழியாகத்தான் கரிகாலனை மீட்டு வந்தேன். அந்த கடலோடி நீலனையும் மீட்டு வந்தேன்.கரிகாலனுக்கு ஆயுதங்கள், வரிப்பணம் வரும் வழியை சொல்லி அதை கொள்ளையடிக்க வழிகாட்டியவனும் நான் தான் "

"எதற்காக?"

"சிகப்பு முகமூடியின் தலைமையில் ஒரு புரட்சி வெடிக்க வேண்டும், மனன் நாட்டின் ஆதிக்கம் முடிவு பெற வேண்டும். வள நாட்டின் உதவியோடு ஒரு ஆட்சி இங்கே மலர வேண்டும். அதற்காகத்தான் நான் கரிகாலனுக்கு உதவி செய்தேன். அவன் என் வழி நடத்தலை ஏற்று கொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு நடந்து மரணத்தை தேடிக் கொண்டான். பைத்தியக்காரன். என் லட்சியத்தை நிறைவேற்ற நல்ல வேளையாக பார்த்திபன் கிடைத்து விட்டான். ஆமாம் பார்த்திபன் எங்கே இருக்கிறான்?" என்று வில்லவன் எதிர்பார்க்காத கேள்வி ஒன்றை வீசினான் கருணாகரன்.

கரிகாலன் யோகியின் பேச்சை கேட்காமல் சென்று மரணத்தை தழுவியது போல் இந்த முறையும் யோகியின் பேச்சை கேட்காமல் பார்த்திபன் செயல்படுவதை சொல்வதா வேண்டாமா என்று யோசித்தபடி நின்றான் வில்லவன்.

"என்ன வில்லவா? தயங்குகிறாய். இந்த முறையும் எனக்கு தெரியாமல் எதையாவது செய்து தொலைக்க போகிறானா பார்த்திபன் ?" என்றான் கருணாகரன்.

"ஆம். அந்த நஞ்சுண்டன் ஆயுதங்களுக்கு ஈடாக மார்க்கதரிசியின் தங்க புதையலை கேட்கிறான். அது எங்கே இருக்கிறது என்று அவனுக்கு தெரியுமாம்.அதை எடுக்கத்தான் பார்த்திபன் போயிருக்கிறான்."

"முட்டாள்தனமான செயலை செய்கிறான் பார்த்திபன். நான் ஆயுதங்களை இலவசமாக தருவதாக சொல்கிறேன். அதை வைத்து முதலில் அதிகாரத்தை கைப்பற்றுங்கள். பிறகு உங்கள் ஆதிக்கம் தான்.புதையலை பொறுமையாக தேடி எடுக்கலாம்" என்றான் கருணாகரன் படபடப்புடன்.

"நீசொல்வதும் சரிதான்!"

"அவனை உடனே திரும்ப வரச் சொல். அந்த நஞ்சுண்டன் - அவனை கைது செய்யுங்கள். அவன் என் நண்பனுக்கு தேவை "

" உடனே கிளம்புகிறேன்"

"அந்த பெண். சந்திரவதனா?"

"அவள் என் வீட்டில் தான் இருக்கிறாள். "

" நல்லது. நீ உடனே கிளம்பி நான் சொன்ன தகவல்களை பார்த்திபனிடம் கூறு" என்றான் கருணாகரன்.

வில்லவன் அங்கிருந்து கிளம்பினான்.

கருணாகரன் உடையை மாற்றிக் கொண்டு மதி மாறனை சந்திக்க கிளம்பினான். அவனிடம் சந்திரவதனா என்ற துருப்பு சீட்டு இருந்தது.

செவ்வாய், 1 நவம்பர், 2022

ரகசிய தீவு

Aரகசிய தீவு

அத்தியாயம் 48

முத்திரை மோதிரம்

வில்லவன் அங்கிருந்து கலை கூத்தாடிகளை அழைத்து கொண்டு கிளம்பினான்.

"நண்பர்களே! அந்த பெண் சந்திரவதனா என்னுடைய வீட்டில் தான் இருக்கிறாள். அவள் தன் தந்தையை இழந்து விட்டு பெரும் வேதனையில் இருக்கிறாள். உங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் மனம் மகிழ்வாள். வாருங்கள் நாம் போகலாம்" என்றான் வில்லவன்.

தன்னுடைய புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்களிடமிருந்து நான்கைந்து குதிரைகளை கடனாக வாங்கி கொண்ட வில்லவன் அதை தன்னுடைய நண்பர்களுக்கு கொடுத்தான். வில்லவனின் சிறு குழு அங்கிருந்து கிளம்பியது.

அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தன்" காட்டுவாசி போல் வேடமணிந்து நம்மை தாக்கியவர்களில் பிடிபட்டவர்களை இங்கே அழைத்து வாருங்கள்" என்றான்.

"இரண்டு பேர் மட்டும் தான் பேசும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்" என்றான் பார்த்திபன்.

"பரவாயில்லை. அவர்களை இங்கே அழைத்து வாருங்கள். அவர்களுக்குத்தான் மார்க்கதரிசியின் புதையல் எங்கே இருக்கிறது என்று தெரியும். நாம் அவர்களை விசாரிப்போம். நம்மிடம் பிடிபடாமல் தப்பி ஓடிய அவர்களின் நண்பர்கள் இந்நேரம் புதையலை எடுத்து செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்" என்றான் ஆதித்தன்.

"அதற்கு நாம் இவர்களை விசாரிக்க வேண்டியதில்லை.அந்த ரகசியம் தெரிந்த ஒருவன் நம்முடன் இருக்கிறான்."

"யார் அது?"

"ஆதி .மலைவாழ் சிறுவன். மார்க்கதரிசியின் தங்கம் புதைக்கப்பட்டதை நேரில் பார்த்த ஒரே சாட்சி"

ஆதித்தன் தனக்கு முன்பாக வந்து நின்ற ஆதியை பார்த்தான்.

"இந்த சிறுவனா ?"

"ஆம்.இவன்தான்.இவன் இனத்தையே க ருணாகரன் அழித்து விட்டான். அதில் தப்பி பிழைத்தவன் இவன் ஒருவன் தான்.இவன் அந்த ரகசியத்தை நேரில் பார்த்திருக்கிறான்" என்றான் பார்த்திபன்.

"பிறகென்ன தாமதம்? நாம் உடனே கிளம்பலாம்.இந்த சிறுவன் நமக்கு வழிகாட்டட்டும்." என்றான் ஆதித்தன்.

ஆதி காட்டு பகுதியில் நடக்க ஆரம்பித்தான். மற்றவர்கள் அவனைப் பின் தொடர ஆரம்பித்தனர். நஞ்சுண்டனும் அதில் கலந்து கொண்டான். அவன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடத் தொடங்கியது.

முத்தழகி கப்பல் ரகசிய தீ வை வந்தடைந்தது. சிறு சிறு படகுகளில் கரையை வந்தடைந்தனர் அனைவரும் .முத்தழகிகப் பலில் வேலை செய்த நஞ்சுண்டனின் ஆட்களை கைது செய்ய உத்தரவிட்டான் கருணாகரன்.

காவலர்கள் பிடிபட்டவர்களை சிறைசாலைக்கு அழைத்து சென்றனர்.

"அடுத்தது என்ன செய்ய போகிறாய் கருணாகரா?" என்றான் நீலன்

"எனக்கு என் மாளிகையில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு புதையலை மீட்க வேண்டியதுதான். நீயும் என்னுடன் வருகிறாய் தானே?" என்றான் கருணாகரன்

"வர வேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆனால் என்னுடைய கப்பல் அனாதையாக எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிராதரவாக கடலில் நிற்கிறது. கடல் கொள்ளையர்கள் யாராவது அதை கிளப்பிக்கொண்டு போய் விட்டால் நம் திட்டம் தவிடுபொடியாகி விடும். மேலும் கப்பலுக்கு தேவையான பணியாளர்களை வேறு பணியமர்த்த வேண்டும். அவர்களை கப்பலுக்கு அனுப்பி வைத்துவிட்டு சீக்கிரமாகவே உன்னுடைய மாளிகைக்கு வந்து சேர்கிறேன்"

"அதுவும் சரிதான். ஆட்களை சேர்த்து கொண்டு இங்கிருந்து ஓடி விட மாட்டாயே?" என்றான் கருணாகரன்.

'அப்படி ஓடிவிட்டால் புதையலில் பங்கு கிடைக்குமா என்ன?" என்று சிரித்தான் நீலன்.

"அப்படியானால் உன் வேலையை முடித்து கொண்டு விரைவாக மாளிகைக்கு வந்து சேர்" என்ற கருணாகரன் அங்கிருந்து கிளம்பினான்.

துறைமுகத்தில் இருந்த லாயத்தில் குதிரையை எடுத்து கொள்ள கிளம்பியவன் மீது வந்து மோதினான் ஓருவன்.

"யார் நீ? காட்டெருமை போல் மேலே விழுகிறாய். கண் தெரியவில்லையா?" என்று கோபத்துடன் இரைந்தான் கருணாகரன்.

மேலே மோதியவன்" என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. பசி மயக்கத்தில் கண்கள் இருண்டு விட்டன. என் பசியாரஇந்த மோதிரத்தை வைத்து கொண்டு ஏதாவது தாருங்கள்" என்றான்.

அவனது நீட்டிய கையில் பளபளத்தது வளநாட்டின் முத்திரை மோதிரம்.கருணாகரன் பரபரப்புடன் அவன் சட்டையை பிடித்தான். "யார் நீ? இந்த முத்திரை மோதிரம் உன்னிடம் எப்படி வந்தது? நீவள நாட்டின் ஒற்றனா?" என்றான் குரலில் மகிழ்ச்சி பொங்க .

அவன் பதில் சொல்லும் முன்பாக அவனது தோளில் ஒரு கை விழுந்தது. "நான் தான் வள நாட்டின் ஒற்றன்.இவன் என்னுடைய பணியாள் " என்றபடி கருணாகரனுக்கு முன்னால் வந்து நின்றான் தர்மபாலன்.

மோதிரத்தை தர்மபாலனிடம் கொடுத்து விட்டு விலகினான் பணியாள்.

"நீ தர்மபாலன்.கடலோடி இல்லையா?" என்றான் கருணாகரன்.

"கடலோடி தான். அதே நேரம் வள நாட்டின் ஒற்றனும் கூட "

"என்னை எப்படி அடையாளம் கண்டுபிடித்தாய்?"

"இந்த மோதிரம் உன்னை கண்டுபிடித்து விட்டது"

"அம்பலவாணர் சொன்ன அந்த திருமூர்த்தி?"

"நானே தான் "

"பலே! திறமைசாலி தான் நீர் எதிரி நாட்டின் தளபதி வளநாட்டின் ஒற்றன். எதிர்பாராத திருப்பம். யாரும் நம்ப முடியாத விந்தை "

"போதும் புகழ்ச்சி .நீலனின் கப்பல் தயாராக இருக்கிறது.இனி மார்க்கதரிசியின் தங்கத்தை எடுப்பது மட்டும் தான் என் வேலை. நீலன் இங்கிருந்து ஓடி விடாமல் பார்த்து கொள். அப்படி அவன் ஓடிவிட்டால் உன் கப்பலில் புதையலை ஏற்றி விடலாம். நீலன் ஓடாவிட்டால் நீ அவனது கப்பலுக்கு வழித்துணையாக வா. நமக்குள் அறிமுகம் உண்டு என்பதை நீ வெளிக்காட்டி கொள்ளாதே." என்றான் கருணாகரன்.

"நீலனின் கப்பலில் யாரும் வேலைக்கு இல்லை போலிருக்கிறதே? அவர்களை கைது செய்து அழைத்து செல்வதைப் பார்த்தேன்"

"ஆமாம். அவனுக்கு பணியாளர்கள் தேவை. அவனுக்கு உதவி செய். இப்படி முத்திரை மோதிரத்தை பொது வெளியில் காட்டுவது ஆபத்தல்லவா?"

அதனால் தான் நான் என் பணியாளனை அனுப்பினேன். யாராவது அதை வாங்க முயற்சித்தால் நான் தலையிட்டு அவன் ஒரு பைத்தியம் என்று கூறி அதை தடுத்து விடுவேன்"

"நல்ல காரியம் செய்தாய். இனி அந்த மோதிரத்தை வெளியே காட்டாதே! இன்று இரவு நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தயாராக இரு. இப்போது உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்" என்ற கருணாகரன் அங்கிருந்து கிளம்பினான்.

குதிரையில் விரையும் கருணாகரனை பார்த்தபடி நின்றான் தர்மபாலன்.இவ்வளவு எளிதில் வள நாட்டின் ஒற்றனைதான் அடையாளம் கண்டு பிடிப்போம் என்று அவன் நினைக்கவேயில்லை.

கருணாகரன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். தனக்கு சரியான நேரத்தில் வள நாட்டிலிருந்து உதவியை அனுப்பி வைத்த அம்பலவாணரை மனதிற்குள் வாழ்த்தினான் அவன்.

ஆதி தன்னுடைய கையில் இருந்த வாளால் செடிகொடிகளை வெட்டி வழி ஏற்படுத்தி கொண்டு காட்டு பாதையில் முன்னேறினான். மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

"ஆதி! உனக்கு இந்த இடம் தான் என்று தெளிவாகத் தெரியுமா?" என்றான் பார்த்திபன்.

"என்னால் அதை மறக்கவே முடியாது" என்றான் ஆதி.

பல பேர் நடந்ததால் ஒரு ஓற்றையடி பாதை உருவாக ஆரம்பித்தது.

ஆதி ஒரு புதரை வெட்டி வழி ஏற்படுத்திய போது காட்டு பகுதியில் சிலர் தரையில் குழி தோண்டி கொண்டிருப்பதை பார்த்தனர். கிடைத்த வரை லாபம் என்று புதையலை தோண்டி எடுக்க அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.கூட்டத்தை பார்த்ததும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றவர்கள் விரைவிலேயே பிடிபட்டு விட்டனர்.

" என்ன நண்பர்களே! வேலையை அறைகுறையாக விட்டு சென்றால் எப்படி ?வேலையை முழுதாக செய்து முடியுங்கள்" என்றான் ஆதித்தன் கேலியாக .

"ஆதியின் நினைவாற்றல் அபாரமானது" என்று அவனை பாராட்டினான் பார்த்திபன்.

அவர்கள் மீண்டும் தோண்ட ஆரம்பித்தனர்.

வில்லவன் விருந்தினர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான். அவர்களை எதிர்பாராத சந்திரவதனா மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். அவர்கள் பழைய கதைகளைப் பேசிக் கொள்ள துவங்கியதும் வில்லவன் அங்கிருந்து கிளம்பினான்.

ஆசிரமத்திற்கு சற்று தொலைவிலேயே குதிரையை நிறுத்தி வைத்தவன் நடந்தே ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

அவன் றுழைந்தது மதிய வேளை. எல்லோரும் உறங்கும் நேரம். ஆசிரமமே மயான அமைதியில் மூழ்கியிருந்தது.

இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த வில்லவன் சத்தமின்றி பூஜை அறைக்குள் நுழைந்தான்.

இங்கேதான் எங்கேயோ சுரங்க வழி இருக்க வேண்டும்.கரிகாலனை மீட்டு வர யோகி இங்கேதான் அடைக்கலமானார். விடிய விடிய வெளியே உட்கார்ந்திருந்தது அவனுக்கு நினைவுக் கு வந்தது.

வில்லவன் வெகு விரைவிலேயே அந்த ரகசிய வழியை கண்டுபிடித்து விட்டான். அதன் வழியே அவன் இறங்க தொடங்கினான்.சுவற்றில் இருந்த தீவட்டியை எடுத்து கொண்டு சுரங்க வழியில் நடக்க ஆரம்பித்தான் அவன்.பாதை முடிந்த இடத்தில் காவி வஸ்திரங்களும், ருத்ராட்ச மாலைகளும் ஒரு பையில் இருப்பதை அவன் பார்த்தான். "வேடதாரி" என்று முணுமுணுத்தன அவன் உதடுகள். யாரோ வருவது போல் சத்தம் கேட்டதும் தீவட்டியை அணைத்து விட்டு இருளில் பதுங்கினான் வில்லவன். சுரங்க வழியில் வந்தவன் தன் உடைகளை களைந்து விட்டு காவி உடைகளை அணிந்து கொண்டான். பிறகு ருத்ராட்ச மாலையை அணிந்தவன் பொய் தாடியை தன் முகத்தில் ஒட்ட வைத்தான். தீவட்டி வெளிச்சத்தில் தாடி நன்றாக ஓட்டி கொண்டதா என்று சுவரில் இருந்த கண்ணாடியை பார்த்து சோதனை செய்தான்.

சொற்ப வெளிச்சத்தில் தாடி இல்லாத அவனது முகத்தை பார்த்து திடுக்கிட்டான் வில்லவன்.

"இவனாயோகி ?" என்று முணுமுணுத்தன அவன் உதடுகள்