ரகசிய தீவு
அத்தியாயம் 27
இடுகாட்டில் எரி அம்பு
இடுகாட்டில் கருணாகரன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இடுகாட்டின் நடுவே செங்கோடனின் உடல் சிதையின் மீது கிடத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டம் நடக்கும் சம்பவங்கள் எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தது. செங்கோடனின் சவத்தை இங்கே கொண்டு வந்து வைத்து எதை சாதிக்க நினைக்கிறான் மதி மாறன் என்று யாருக்கும் புரியவில்லை. கருணாகரனுக்கும் அதே சந்தேகம் இருந்தது. அனாதை பிணங்களை அடக்கம் செய்வது தான் ரகசிய தீவு இதுவரை கடைபிடித்து வந்த விதிமுறை.
மதிமாறன் அந்த வழக்கமான விதிமுறையை மீறி எதற்காக செங்கோடனின் பிரேதத்தை அடக்கம் செய்யாமல் எரிக்கும் வழக்கத்திற்கு மாற்றினான் என்ற சந்தேகம் அவனது மனதில் எழுந்தது. அது மட்டுமல்லாமல் செங்கோடனின் பிரேதத்திற்கு தீ மூட்ட போவது யார் என்ற கேள்வியும் கருணாகரனின் மனதில் உலா வந்தது. சரி என்ன தான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டிருந்தான். அவனுக்கு அருகே நின்ற வீரபாகுவின் பார்வை இடுகாட்டின் ஓரத்தில் சற்று மேடிட்டிருந்த மண் குவியல்களின் மேல் நிலைத்தது.
அந்த இடத்தில் பணிரெண்டு இடங்களில் மண்மேடிட்டிருந்தது. எப்போதோ இறந்து போனவர்களை பு தைத்த புதை குழி அது.வீரபாகுவின் பார்வை அங்கே நிலைப்பதை பார்த்த கருணாகரன்" என்ன வீரபாகு ? பழைய ஞாபகமா?" என்றான்.
"ஆமாம். இவர்களால் நள்ளிரவில் நான் படும் பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அதற்கு பயந்து நான் இரவில் இங்கிருந்து ஓடி விட முடியாது"
"ஓடித்தான் பாரேன்"
"அந்த பன்னிரெண்டு குழிகளுக்கு அருகே எனக்காக இன்னொரு குழி வெட்டப்படும் என்பதை நான் அறிவேன்"
"புத்திசாலி தான் .நிலவரத்தை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டாய்" என்றான் விசமசிரிப்புடன் கருணாகரன்.
" கிடைக்க போகும் பலன் பெரிது. அதனால் தான் எல்லாவற்றையும் பல்லை கடித்து கொண்டு பொறுத்து கொள்கிறேன்"
" என் நிலைமையும் அதேதான். ஆனால் இந்த நிலைமை வெகு நாள் நீடிக்காது. சீக்கிரமாகவே நம் இருவருக்கும் விடுதலை கிடைத்துவிடும்." என்றான் கருணாகரன்.
இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக ஒரு வரை ஒருவர் பார்த்து கொண்டனர். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் ஓளிந்திருந்தன.
அதே நேரம் பலத்த பாதுகாப்புடன் அங்கே வந்து சேர்ந்தான்மதிமாறன். குதிரையிலிருந்து இறங்கிய மதிமாறன் நேராக கருணாகரனிடம் சென்றான்.
" எல்லா ஏற்பாடுகளும் தயாரா?" என்றான் மதி மாறன் .
" எல்லா ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பது போல் அந்த கூத்தாடி கும்பல் இங்கே வருவது போலவோ இல்லை பதுங்கி கிடப்பது போலவோ எனக்கு தோன்றவில்லை. ஆமாம் இந்த பிரேதத்திற்கு தீ வைக்கப் போவது யார்? இவனது மகன் தானே இவனுக்கு கொள்ளி வைக்க வேண்டும்? அவனை அழைத்து வந்து விட்டீர்களா?"
"இவனுக்கு மகன் இல்லை. மகள் மட்டும் தான். அதுவும் வளர்ப்பு மகன் தான் " என்று தானறிந்த உண்மையின் ஒரு பாகத்தை தன்னை அறியாமலேயே உளறி விட்டான்மதிமாறன்.
"அந்த சந்திரவதனா இவனது வளர்ப்பு மகளா ? " என்றான் கருணாகரன் இது அவன் இதுவரை கேள்விப்படாத புது விசயமாக இருந்தது.
சட்டென்று சுதாரித்து கொண்ட மதிமாறன் " ஆமாம். பெண்கள் இதுவரை இடுகாடு வந்து கொள்ளி வைத்ததில்லை. இவனுக்கு கொள்ளி வைக்க மகனும் இல்லை. அதனால் வேறு வழியில்லை."
" வழக்கம் போல்புதைத்து விடலாம் என்கிறீர்களா?"
"இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. கொள்ளியை நான் வைத்தால் என்ன?"
"நாட்டின் தலைவன் என்ற முறையில் ஒவ்வொரு குடிமகனும் உங்கள் குழந்தை தான். அதனால் நீங்கள் கொள்ளி வைப்பதும் சரிதான்."
"அப்படியானால் அதற்கான சடங்குகளை செய்ய சொல் " என்றான் மதி மாறன் . அவனது மனம் குழப்பத்தில் இருந்தது. கூத்தாடி கும்பலோ, சிகப்பு முகமூடி யோ இங்கு இந்த நேரம் வந்தாக வேண்டுமே என்று அவன் மனம் அலை பாய்ந்தது. தன் தடுமாற்றங்களை வெளிகாட்டாமல் சடங்குகளை செய்ய துவங்கினான்மதிமாறன்.
மக்கள் அந்த சடங்குகளை கவனித்து கொண்டிருந்த போது சற்று தொலைவில் மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்த வில்லவன் தன் ஆட்களுக்கு சைகை காட்டினான். அவனது ஏற்பாட்டின்படி காலையிலேயே அவனது ஆட்கள் மாடு மேய்ப்பவர்கள் போல் மாடுகளையும், எருமைகளையும் அங்கே கொண்டு வந்து மேயவிட்டு விட்டு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
வில்லவன் சைகை காட்டியதை பார்த்ததும் அவனது ஆட்கள் துரிதமாக செயல்பட்டனர்.
மாடுகளையும் எருமைகளையும் அணிவகுத்து நிறுத்தியவர்கள் அவற்றை சாட்டையால் அடித்தும் வாலை முறுக்கி கடித்தும் சுடுகாட்டை நோக்கிவிரட்டி விட்டனர். மிரண்டு போன கால்நடைகள்பெருத்த சத்தத்துடன் கூட்டத்திற்குள் நுழைந்து கலவரத்தை உண்டாக்கின
கால்நடைகளுக்கு பயந்த பொதுமக்கள் அங்கும் இங்கும் மிரண்டுஓடி நிலைமையை மோசமாக்கினார்கள். காவலுக்கு இருந்த காவலர்கள் கூட கால்நடைகளுக்கு பயந்து தெறித்து ஓடினர்.
நடப்பவற்றை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்த மதிமாறன் "கருணாகரா! இங்கே என்ன நடக்கிறது? " என்று கோபத்தில் இறைந்தான்.
" என்ன நடக்கிறது என்று உங்களை போலவே எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இங்கேயே இருங்கள் நான் என்ன நடக்கிறதென்று பார்த்து வருகிறேன்" என்ற கருணாகரன் அங்கிருந்து நகர்ந்தான்.
சுடுகாட்டில் எழுந்த புழுதி புயலுக்கு நடுவே திடிரென்று வந்து நின்றது ஒரு புரவி .அதில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் பார்த்திபன். வழக்கம் போல் அவனது முகத்தை ஓரு சிகப்பு முகமூடி அலங்கரித்து கொண்டிருந்தது. அவனது குதிரையில் அவனுக்கு முன்பாக அமர்ந்திருந்தாள் சந்திரவதனா. அவள் முகம் அழுது அழுது சிவந்து சோகத்தில் மூழ்கியிருந்தது.
"கவலைப்படாதேசந்திரவதனா! நான் திட்டமிட்டபடி என் தோழர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இது தான் நான் செயல்பட சரியான தருணம். நீ ஆசைப்பட்டது போல் உன் தந்தையின் சிதைக்கு நீயே தீ மூட்டலாம்" என்ற பார்த்திபன் தனது அம்பாரத்திலிருந்து ஓரு அம்பை வானை நோக்கி ஏவினான். அதன் பின் பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த எண்ணெய் குடுவை ஒன்றும் அந்த அம்புடன் சேர்ந்தே பயணமானது. கலவரத்தை பார்த்து கொண்டிருந்த மதிமாறன் தன்னுடைய வாளை உருவிக்கொண்டு கிளம்பினான். அவனுக்கு பொது மக்கள் யார் கலகக்காரர்கள் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.பார்த்திபன் விட்ட அம்பு ஆகாயத்தில் பயணமாகி பிறகு தனது வேகத்தை இழந்து புவி ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி பயணமானது. அதன் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த எண்ணெய் குடுவை அதன் வேகத்தை அதிகரித்தது. கீழே வந்த அம்பு நேராக சிதையில் வந்து விழுந்தது. அதன் நுனியில் இருந்த எண்ணெய் குடுவை உடைந்து சிதையில் சிதறியது.
வில்லவன் வைத்திருந்த தீப்பந்தத்தில் தன் அம்பின் நுனியை பற்ற வைத்த பார்த்திபன் " சந்திரவதனா! இதோ இந்த எரி அம்பு தான் உன் தந்தையின் சிதைக்கு தீ மூட்டப் போகிறது. இஷ்ட தெய்வத்தை வணங்கி விட்டு இதை பிடி" என்றான் பார்த்திபன்.
அவள் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி முடித்ததும் அவளது கரத்தை அம்பில் வைத்து பிடிக்கச் செய்த பார்த்திபன் முன்பு எய்தது போலவே இம்முறையும் அம்பை எய்தான்.
அடுத்த விநாடி எரி அம்பு ஒன்று வானில் கிழித்து கொண்டு பயணமானது. என்ன நடக்கிறதென்று மதிமாறன் யூகிக்கும் முன்னரே சிதையில் விழுந்த அக்னி அம்பு ஏற்கனவே சிதறி கிடந்த எண்ணெயில் பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது.
கருணாகரன் காவலர்களை ஒன்றிணைத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான்.மதிமாறன் தன்னுடைய ஆட்களில் சிலரை அழைத்து கொண்டு பார்த்திபனும் சந்திரவதனாவும் இருந்த இடத்தை அடைந்த போது அங்கே யாருமேயில்லை.
காற்றில் கற்பூரம் கரைந்தது போல் எந்த தடயமும் இல்லாமல் பார்த்திபன் சந்திரவதனாவுடன் காணாமல் போயிருந்தான்.
"இந்த முறையும் எப்படியோ தப்பி விட்டான்" என்று பல்லை கடித்தான் மதி மாறன் . அவன் கண்ணுக்கு முன்னால் தெரிந்த சந்திரவதனாவைகையில் பிடிக்க முடியவில்லையே என்ற கழிவிரக்கம் அவனது குரலில் எதிரொலித்தது. இத்தனை பேர் எதிரில் அந்த சிகப்பு முகமூடி தன்னை கையலாக தவனாக உறுதி செய்து விட்டானே என்ற அவமானத்தில் அவன் கூனி குறுகி கொண்டிருந்தான்.
அங்கே தன் ஆட்களுடன் வந்து சேர்ந்த கருணாகரனை பார்த்த மதிமாறன் " அவனது ஆட்கள் யாராவது?"
"அகப்படவில்லை. எல்லோரும் தாங்கள் நினைத்த காரியத்தை முடித்துவிட்டு சிட்டாக பறந்து விட்டார்கள். காலையிலிருந்து நன்றாக திட்டமிட்டு தெளிவாக செயல்பட்டிருக்கிறார்கள்"
" எதிரிக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காதே கருணா கரா! அவனை பிடிப்பதற்கான முயற்சியை செய்.முக்கியமாக அந்த பெண் உயிரோடு எனக்கு வேண்டும்"
"அந்த பெண் "
"ஏன் எதற்கு என்று அனாவசியமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்காதே! எனக்கு அந்த பெண் உடனே வேண்டும்" என்று கோபத்தில் உறுமினான்மதிமாறன்.
"உத்தரவு" என்றான் கருணாகரன்.
அதே நேரம் சிறையில் அடைபட்டு கிடந்த நீலன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியை தொடங்கினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக