ரகசிய தீவு
அத்தியாயம் 26
காட்டிற்குள் கல்யாண விருந்து
சந்திரவதனா தன் தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாவிட்டால் தன்னுடைய உயிரை தானே மாய்த்து கொள்வதாக கூறிகுறு வாளை காட்டியதும் பார்த்திபன் அதிர்ந்து போனான்.
"இப்போது நிலமை சரியில்லை. இருந்த போதும் உன்னுடைய வேண்டுகோளை நிறைவேற்ற நான் முயற்சி செய்கிறேன்.அதுவரை பொறுமையாக இரு சந்திரவதனா.தவறான முடிவு எதையும் எடுத்து விடாதே" என்று அவளை சமாதானம் செய்தான் பார்த்திபன்.
சற்று முன் தான் வில்லவன் பெண் மோகத்திற்கு அடிமைப்பட்டு விடாதே என்று தனக்கு அறிவுரை கூறினான். இப்போது அதே பெண்ணிற்காக தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவதை பார்த்தால் வில்லவன் தன்னை கண்டிப்பாக தவறாக நினைப்பான் என்று அவனுக்கு தோன்றியது. சந்திரவதனாவிற்கு காதலின் காரணமாக தான் உதவுவது அவனுக்கு தெரியக்கூடாது என்று பார்த்திபன் நினைத்தான். ஓரு வழியாக சந்திரவதனாவை சமாதானம் செய்து விட்டு வெளியே வந்தவன் தனக்காக காத்திருந்த வில்லவனை சந்தித்தான்.
"அந்த பெண் எதற்காக இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள்? அவளுக்கு இங்கே இருக்கும் யாராவது தொந்தரவோ இடையூறோ தருகிறார்களா?" என்றான் வில்லவன் ஆர்வத்துடன் .
"அவள் அழுவதற்கான காரணம் வேறு. அவளுடைய தந்தையை மதிமாறன் கொன்று விட்டான். இன்று மதியம் அவனது இறுதி சடங்கு நடக்க இருக்கிறது. தன் தந்தையின் உடலுக்கு தானே கொள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாள். சாஸ்திரம் அதை அனுமதிக்காது என்றாலும் அதை கேட்க மறுக்கிறாள்.அவள் வேண்டுகோளை நாம் நிறைவேற்றாவிட்டால் தன் உயிரை மாய்த்து கொள்வதாக என்னையே மிரட்டுகிறாள் "
"பேதை பெண். எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வதென்று தெரியாமல் உளறுகிறாள். அவள் தான் புரியாமல் பேசுகிறாள். நீ சகலமும் அறிந்தவன்.நீ அவளுக்கு என்ன பதில் கூறினாய்?"
"என்னை மன்னித்து விடுவில்லவா! அவள் உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவளது வேண்டுகோளை நிறைவேற்றுவதாக நான் வாக்கு கொடுத்து விட்டேன்"
"முட்டாள்தனமான முடிவு .ஒரு பெண்ணிற்காக ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறாய். இதில் உன்னை நம்பி இருப்பவர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது"
"அதை நான் யோசித்து பார்க்கவில்லை என்றா நினைக்கிறாய்? இதே மதி மாறனால் என் தந்தை உயிரோடு எரித்து கொல்லப்பட்ட போது அவரது உடல் கிடைக்காமல் நான் பட்ட வேதனையை நான் இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். அப்படி ஒரு நிலமையை இன்னொரு பெண்ணுக்கு ஏற்படுத்த சொல்கிறாயா? அவளது வேதனையை நினைத்து பார்.சிறு வயதிலிருந்து அவளை மார்மேலும் தோள்மேலும் தூக்கி வளர்த்த தன் தந்தையின் உடலுக்கு தீ மூட்ட நினைக்கிறாள். அவளது ஆசையை நிறைவேற்ற நான் வாக்குறுதி கொடுத்தது தவறா?" என்றான் பார்த்திபன் உணர்ச்சி மேலிட்ட நிலையில்.
அவனது மனநிலையை அறிந்து கொண்ட வில்லவன் "தவறில்லைதான். ஆனால் இக்கட்டான இந்த சூழலில் அவளது ஆசையை நீஎப்படி நிறைவேற்ற முடியும்?"
"உன்னுடைய உதவி இருந்தால் அவளுடைய ஆசையை என்னால் நிறைவேற்றி விட முடியும் " என்று வில்லவனின் கையை பிடித்தான் பார்த்திபன்.
அதே நேரம் இடுகாட்டில் கருணாகரன் தன்னுடைய வீரர்களுடன் நின்று கொண்டிருந்தான்.
" பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இன்னும் சற்று நேரத்தில் செங்கோடனின் பிரேதம் இங்கே வரப்போகிறது. அந்த கூத்தாடி குழு எப்படியும் தங்கள் தலைவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இங்கே மாறுவேடத்தில் வந்ததாக வேண்டும். அவர்களை நாம் கையும் களவுமாக பிடித்தாக வேண்டும்." என்று தன்னுடைய வீரர்களுக்கு உத்தரவிட்டவன் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த சுடுகாட்டு வெட்டியானான வீரபாகுவை பார்த்து சிரித்தான்.
"இந்த முறை புதைக்க எதுவுமில்லையா?" என்றான் வீரபாகு .
" வழக்கத்திற்கு மாறாக இந்த முறை எரியூட்டப் போகிறாய்."
"குழி தோண்டும் வேலை இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி."
"இறந்தவர்கள் பத்திரமாகத் தானே இருக்கிறார்கள்?" என்றான் கருணாகரன்.
"இங்கே இருப்பவர்கள் வெளியே போக முடிவதில்லை. வெளியே இருப்பவர்கள் உள்ளே வர நினைப்பதில்லை"
" விதிவிலக்குகளும் உண்டுதானே?"
"அதற்கு காவலாகத்தானே நான் இருக்கிறேன்" என்று சிரித்தான் வீரபாகு .
"கவனம் . எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றான் கருணாகரன்.
அதே நேரம்.
ரகசிய தீவின் தெற்கு பகுதியில் .
நர மாமிசபட்சிணிகள் வாழும் காட்டில் ஆதித்தனின் குழுவினர் மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டி ருந்தனர்.
"நம்மிடம் ஆயுதங்கள் சொற்பமாகத்தான் இருக்கின்றன. இந்த கலை கூத்தாடிகளும் போர் பயிற்சியற்றவர்கள். அந்த காட்டுமிராண்டி கும்பல் நம் மீது தாக்குதல் நடத்தினால் நம் நிலை என்னாவது?" என்றான் யவனன்.
அவனது கேள்வியை கேட்டு விட்டு சிறிது நேரம் யோசித்த ஆதித்தன் " ஓரு சிறுத்தை ஓரு மனிதனை துரத்தினால் யார் அதிக வேகமாக ஓடுவார்கள்?" என்று பதில் கேள்வி கேட்டான்.
"வேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தை தான். ஆனால் உயிருக்கு பயந்து ஓடும் மனிதன் சிறுத்தையை விட வேகமாக ஓட வே முயற்சி செய்வான். பசிக்கு உணவு தேடி துரத்தும் சிறுத்தையை விட உயிரை காப்பாற்றி கொள்ள ஒடும் மனிதனின் வேகம் அதிகமாகத் தான் இருக்கும்.அதுதான் இயல்பும் கூட "
"அந்த மனிதனின் நிலையில் தான் கலை கூத்தாடிகள் இருக்கிறார்கள். தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்"
"உண்மை தான் " என்று அவன் சொன்னதை ஆமோதித்தான் கடோத்கஜன்.
"எந்த ஆயுதமும் இல்லாமல் என்னால் நான்கு பேரை வெறும் கையால் தாக்குதல் நடத்தி சாய்க்க முடியும். என் உயிர் ஆபத்திற்கு உள்ளாகி விட்டால் மண்ணில் புரளும் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகலாம்" என்றான் கடோத்கஜன்.
"உன்னுடைய ஹேர்குலஸ் எங்கே போய்விட்டது?" என்றான் ஆதித்தன்.
"அது வானத்திலிருந்து காட்டை கண்காணித்து கொண்டிருக்கிறது. நம்மை சுற்றி நாலாபுறத்திலும் அதன் பார்வை படர்ந்திருக்கிறது. சிறு சலனம் ஏற்பட்டாலும் அது நம்மை எச்சரிக்கை செய்து விடும். அதனால் அந்த காட்டுவாசிகள் திடிரென நம் மீது தாக்குதல் நடத்திவிட முடியாது. என் பறவை முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடும்" என்று சிரித்தான் யவனன்.
"இப்போதைக்கு நம்மிடமுள்ள விலை மதிப்பு மிகுந்த பொருள் உன் பறவை தான் " என்றான் ஆதித்தன்.
"இனி நம் முன் இருக்கும் பெரும் பிரச்சனை உணவு தான். அவசரமாக தப்பி வந்ததில் நாம் போதுமான உணவு பொருள்களை எடுத்து வரவில்லை" என்றான் யவனன்.
" என் கப்பலில் சில நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கின்றன. அதை வைத்து கொண்டு சில நாட்கள் சமாளிக்கலாம். ஆனால் இத்தனை பேருக்கு அந்த உணவு எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியவில்லை." என்றான் ஆதித்தன்.
"உணவு இருப்பது சரிதான். ஆனால் அதை சமைக்கும் போது ஒரு பிரச்சனை இருக்கிறது. சமைக்கும் போது வரும் புகை நமக்கு பகையாகி விடும். காட்டுவாசிகளின் கண்ணில் அந்த புகைப்ட்டாலும் சரி, நம்மை தேடி அலையும் மதிமாறனின் ஆட்களின் கண்ணில் புகை பட்டாலும் சரி. நம்முடைய கதை முடிந்தது." என்று வரக்கூடிய ஆபத்தை எடுத்து கூறி எச்சரித்தான் யவனன்.
"கவலைப்படாதீர்கள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. பைராகி இப்படியான நிலமையை சமாளிக்க ஒரு மண்ணாலான அடுப்பை செய்திருக்கிறான். அதில் புகை மட்டும் தனியாக ஒரு வழியில் வெளியேறும். அந்த புகையை மூங்கில் குழாய் வழியாக கடத்தி தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் வைத்து விட்டால் புகை தண்ணீரில் குமிழிகளாக வெளியேறி விடும்"
"ஆஹா.அருமையான யோசனை. இவையெல்லாம் அவனுக்கு எப்படி தோன்றுகின்றன?
"அவனது பல்துறை அறிவு அலாதியானது. என்னுடைய அண்ணன் அரிஞ்சயன் அடிக்கடி சொல்வார். பைராகி காலத்தில் முந்தி பிறந்தவன் என்று. அவனுடைய திறமையை முற்றாக பயன்படுத்தி கொள்ள உலகம் தவறிவிட்டது. இப்போதைக்கு அவனது திறமை தெரிந்தவர்கள் நாங்கள் இருவர் தான் " என்றான் ஆதித்தன்.
"சரி. நான் போய் அந்த அடுப்பை தேடி எடுத்து வருகிறேன்" என்றான் யவனன்.
அதே நேரம் பறந்து வந்து அவன் தோளில் உட்கார்ந்தது ஹேர்குலஸ்.
" உன் பறவை எதையோ கண்டு வந்திருக்கும் போலிருக்கிறதே?" என்றான் ஆதித்தன்.
"ஆமாம். அப்படித்தான் தெரிகிறது. நாம் மூவரும் பறவை செல்லும் திசையில் சென்று உளவு பார்த்து வருவோம். நம் நண்பர்கள் இங்கேயே மறைவாக பத்திரமாக இருக்கட்டும்" என்றான் கடோத்கஜன்.
அனைவரையும் பத்திரமாக மறைந்து கொள்ள சொல்லிவிட்டு மூவரும் ஆயுததாரிகளாக கிளம்பினார்கள். ஓவ்வொரு அடியையும் வெகு கவனமாகவே எடுத்து வைத்து நடந்தனர் மூவரும். ஹேர்குலஸ் ஒரு மேட்டு பகுதியில் அமர்ந்து சமவெளியை நோட்டமிட்டது.
மூவரும் அது பார்த்த திசையில் பார்த்தனர்.
அங்கே சில வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் பெரிய பெரிய சமையல் பாத்திரங்கள் மூடப்பட்டிருந்தன.
"அவர்கள் காட்டை நோக்கி வருவது போல் தோன்றுகிறது. காட்டிற்குள் கல்யாணமா நடக்க போகிறது? " என்றான் யவனன்.
"பாத்திரங்களின் உள்ளேயிருக்கும் உணவுகளின் மணம் சாப் பாட்டு ப்ரியனான என்னுடைய மூக்கை துளைக்கிறது. என் வாயில் எச்சில் ஊறுகிறது" என்றான் கடோத்கஜன்.
" காட்டுவாசிகளுக்கு கல்யாண விருந்தா?" என்றான் ஆதித்தன்.
அவனது வார்த்தையை கேட்ட இருவரும் திகைத்து நின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக