திங்கள், 12 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 29

ஆன்மீகத்தின் புதையல்

கீழே கிடந்த எலும்பு கூட்டின் எலும்புகளை சோதித்த ஆதித்தன் தன்னுடைய கணிப்பை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்து கூறினான். ஆதித்தனின் மதி யுகத்தையும் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்ற அவனது அவதானத்தையும் நேரில் பார்த்த இருவரும் எதுவும் பேசாமல் வாயடைத்து போய் நின்றிருந்தனர்.

எதுவும் பேச தோன்றாமல் இருவரும் திகைப்புடன் ஆதித்தனையே பார்த்து கொண்டிருந்தனர். இருவரும் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்த ஆதித்தன்" என்ன நண்பர்களே ஏன் என்னை இப்படி வைத்த கண் எடுக்காமல் இப்படி பார்க்கிறீர்கள்?" என்றான் எதுவும் புரியாமல் .

"இல்லை ஆதித்தா! உன்னை பற்றியும் உன் சகோதரனை பற்றியும் நிறைய பேர் பேசிகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நான் அதை நம்ப மறுத்து வந்தேன். ஆனால் இன்று உன் திறமையை நான் நேரிலேயே பார்த்து விட்டேன்" என்றான் கடோத்கஜன்.

" நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இங்கு இதுதான் நடந்திருக்கும் என்று நீயூகமாக சொல்வதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை" என்றான் யவனன் வியப்புடன்.

"போதும் புகழ்ச்சி .நாம் காரியத்தில் கவனம் செலுத்துவோம். அங்கே உணவு கொண்டு வருபவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அதனால் அவர்களை வீழ்த்துவது எளிது. அவர்களில் யார் தலைவன் என்று தெரியவில்லை. அவனை மட்டும் கண்டுபிடித்து அவனது கழுத்தில் கத்தியை வைத்து விட்டால் காரியம் முடிந்தது "

"இங்கே நடக்கும் நிகழ்வுகள் எதுவும் எனக்குப் புரியவில்லை. இங்கே காட்டுவாசிகள் மனிதர்களை கொன்று தின்பதாக நகரத்தில் பேசிக் கொண்டார்கள். இங்கே என்னடாவென்றால் அந்த பயமே இல்லாமல் ஓரு கும்பல் உணவோடு இங்கே வந்து கொண்டிருக்கிறது. கொன்று தின்னப் படாமல் இருக்கும் ஒரு எலும்பு கூடு வேறு குழப்பத்தை அதிகரிக்கிறது." என்றான் யவனன்.

"காட்டிற்குள் வரும் நம்முடைய விருந்தாளிகள் வாயை திறந்து உண்மையை பேசினால் எல்லாமே தெளிவாகிவிடும்" என்றான் ஆதித்தன்.

"நீ சொல்வதும் சரிதான். இப்போது நாம் என்ன செய்ய போகிறோம்? நம்முடைய அடுத்த திட்டம் என்ன?"

" திட்டத்தின் மைய மே நீ தான். நான் சொல்வதை நீ அப்படியே செய்தால் போதும் " என்ற ஆதித்தன் யவனனின் காதில் கிசுகிசுத்தான்.

"நீ சொன்னது புரிந்தது. நான் அதன் படியே நடக்கிறேன்" என்ற யவனன் வண்டி வரும் பாதையை நோக்கி செடிகொடிகளின் நடுவே மறைந்து மறைந்து முன்னேறினான்.

"நான் என்ன செய்வது?" என்றான் கடோத்கஜன்.

"பொறு. உனக்கான வேலையை நான் பிறகு கூறுகிறேன்" என்ற ஆதித்தன் வில்லை எடுத்து அம்பை நாணேற்றினான்.

எதுவும் புரியாமல் குழப்பத்தோடு நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினான்கடோத்கஜன்.

முன்னதாக பதுங்கி பதுங்கி வண்டி வரும் பாதையை அடைந்த யவனன் சாலையின் குறுக்காக படுத்து கொண்டான். அவ்வப்போது வண்டி வருகிறதா என்று தன் தலையை தூக்கி பார்த்து கொண்டான்.

மெதுவாக பாதையில் வந்த வாகன அணி வரிசை சாலையின் குறுக்காக படுத்திருப்பவனை பார்த்ததும் சற்று தயங்கி நின்றது. வாகன ஓட்டி வண்டியிலிருந்து குதித்து இறங்கினான். பின்புறமாக வந்த வண்டிகளை நிற்கும் படி சைகை செய்தவன் "தலைவரே! நம் பயணத்தில் எதிர்பாராத இடையூறு ஏற்பட்டுவிட்டது. யாரோ ஒருவன் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கிறான்" என்று கத்தினான்.

"நன்றாக பார். இந்த பகுதியில் யாரும் உயிரோடு நடமாட வாய்ப்பில்லை நம்மை தவிர. நம் தோழர்கள் அவனை கொன்று போட்டிருக்கலாம். அந்த பிரேதத்தை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு பயணத்தை தொடங்கலாம்" என்றான் தலைவன் போலிருந்தவன்.

இதை கேட்டவுடன் யவனன் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.திட்டத்தின் அடுத்த பகுதியை நிறைவேற்ற வேண்டியது தான் என்று நினைத்தவன் காக்காய் வலிப்பு வந்தவனைப் போல் கை கால்களை ஆட்ட துவங்கினான். இறந்த பிணம் என்று நினைத்தவன் உடலில் அசைவு ஏற்பட்டதும் நடந்து வந்தவன் நின்று விட்டான்.

"தலைவரே ! நாம் நினைப்பதுபோல் அவன் இன்னும் இறக்கவில்லை.காக்காய் வலிப்பு வந்து விழுந்து கிடக்கிறான் போல் தெரிகிறது"

" என்ன உளறுகிறாய்?"

"நான் சொல்வதை நம்பாவிட்டால் நீங்களே வந்து பாருங்கள்"

"இரு . நானே வருகிறேன்"

தலைவன் வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் நின்று யவனனை பார்த்தவன் "விசித்திரமாக இருக்கிறது. இங்கே இவன் எப்படி வந்து சேர்ந்தான்? இவனை நம் ஆட்கள் எப்படி உயிருடன் விட்டு வைத்தார்கள்?" என்று அடுத்தடுத்த கேள்விகளை வீசினான்.

" இவனை இந்த யவ னனை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே?" என்று தலையை தட்டிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.

சட்டென்று அவனுக்கு காலையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்து விட்டன. காலையில் துறைமுகத்தில் நLந்த கலவரத்தை வேடிக்கை பார்த்தவர்களில் அவனும் ஒருவன். அங்கே நடந்தவற்றில் யவனன் மட்டும் அவனுக்கு தனித்து தெரிந்திருந்தான். நாடு விட்டு நாடு வந்தவன் பிழைக்கும் வழியைப் பார்க்காமல் ஏன் இப்படி சிக்கலில் சிக்கி கொள்கிறான் என்று அவன் காலையிலேயே நினைத்திருந்தான்.
"இவன். இந்த யவனன் அரசின் கைதியாக நேற்று காலையில் சிறை செய்யப்பட்டான். நேற்று இரவு சிறையில் இருந்து எப்படியோ தப்பித்து விட்டான் போல் தெரிகிறது. நகரத்தில் இவனால் பதுங்க முடியாது. இவனது உடல் நிறமும் முடியின் வண்ணமும் இவனை தனியாக காட்டிவிடும். அதனால் விரைவில் பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் இந்த காட்டிற்குள் வந்து விட்டான் போலிருக்கிறது. இங்கே பதுங்கி இருந்தவன் காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டு விழுந்து விட்டான் போலிருக்கிறது" என்றான்.

" இவனை அரசு தேடிக் கொண்டிருக்கிறது. இவனை நாம் எப்படி காப்பாற்றுவது? இவனை காப்பாற்றினால் தேசதுரோக குற்றம் நம் மீது வந்து விடுமே?" என்றான் பணியாள்.

"நீ சொல்வதும் சரிதான். ஆனால் அதற்காக நாம் இவனை இப்படியே விட்டு விட்டு போக முடியாது. நாம் உதவி செய்யாவிட்டால் இவன் கண்டிப்பாக இறந்து விடுவான். அந்த பாவம் வேறு நம்மை சேர்ந்து விடும். சரி. நீ போய் அவனை தூக்கு "

"என்னை மன்னித்து விடுங்கள். நான் அவனை காப்பாற்ற முன்வர மாட்டேன். நாளை ஏதாவது விவகாரமாக நடந்தால் நான் தான் உதவி செய்ததாக சொல்லி என்னை மாட்டிவிட்டு விடுவீர்கள். உங்களுக்கு மேலிட செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. நீங்களே அவனை காப்பாற்றுங்கள். நாளை ஏதாவது பிரச்சனை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். என் போன்ற சாமான்ய ஆளால் அது இயலாது"
என்று நழுவிக் கொண்டான் பணியாள்.

"முட்டாள் . விலகி நில். என் துணைக்கு யாராவது வாருங்கள்" என்றான் தலைவன்.

அனைவரும் அமைதியாக தலை குனிந்து நின்றனர். அதை பார்த்து கோபமடைந்த தலைவன்" கோழைகள். நானே போய் அவனை காப்பாற்றி கைது செய்து அரசிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்கி கொள்கிறேன்" என்ற தலைவன் கீழே கிடந்த யவ னனை நோக்கி நடந்தான்.

யவனனுக்கு அருகே உட்கார்ந்து குனிந்தவனின் வயிற்றை முத்தமிட்டது ஒரு குறுவாள்.அதுவரை வலிப்பு வந்தது போல் நடித்து கொண்டிருந்த யவனன் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தான்.

"முட்டாள்களே! இது ஒரு நாடகம் .இவனை உடனே பிடியுங்கள்." என்று தலைவன் கத்தினான்.

பணியாட்களில் ஒருவன் தன் இடுப்பில் இருந்த வாளை உருவமுனைந்த போது எங்கிருந்தோ வந்த அம்பொன்று அவன் கையை படுகாயப்படுத்தியது.

"யாரும் வீர சாகசம் எதையும் செய்ய முனையாதீர்கள். முனைந்தால் உயிர் உடலை விட்டு பறந்து விடும். உங்கள் தலைவனின் தலை தரையில் உருண்டு விடும்" என்று எச்சரித்தான் யவனன். அவனது எச்சரிக்கையும் அவன் தலைவன் கழுத்தில் வைத்திருந்த வாளையும் பார்த்தவர்கள் எதையும் செய்ய நினைக்காமல் அமைதியாக நின்றனர்.

தலைவனைப் பார்த்து புன்னகைத்த யவனன்" நான் மட்டும் சிறையில் இருந்து தப்பியதாக தப்பு கணக்கு போட்டு விட்டாய். என்னுடன் இன்னும் இருவர் கூடுதலாக தப்பி வந்திருக்கின்றனர். அவர்கள் தான் மறைந்திருந்து அம்பு ஏய்தவர்கள் " என்றான்.

"உயிரை காப்பாற்ற வந்த என்னை நீதவறாகப் புரிந்து கொண்டு விட்டாய்" என்றான் நைச்சியமாக தலைவன்.

"போதும் நிறுத்து. உன் பசப்பு வார்த்தைகளை என்னிடம் வீணடிக்காதே. என்னை அரசிடம் பிடித்து கொடுக்க நினைத்தவன் தானே நீ ? நீபேசியது அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்."

"சண்டாளன். எல்லாவற்றையும் கேட்டு தொலைந்து விட்டான்" என்று முணுமுணுத்தான் தலைவன்.

ஆதித்ததும், கடோத்கஜனும் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தனர்.

"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் கஷ்டப்பட்டு அதிகார தோரணையை வரவழைத்து கொண்ட தலைவன்.

"அது நான் கேட்க வேண்டிய கேள்வி. வினோதமாக நீ எங்களை கேட்கிறாய்" என்றான் ஆதித்தன்.

கடோத்கஜன் உணவு அண்டா ஓன்றை திறந்து பார்த்தான்.

"இந்த காட்டில் வசிக்கும் நர மாமிசபட்சிணிகள் எப்போதிருந்து சைவ உணவுக்கு மாறினார்கள்? கலவை சாதத்தை எடுத்து போகிறீர்களே?" என்றான் கடோத்கஜன்.

"உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்றான் தலைவன் திமிராக.

"சரி.எனக்கு நீ பதில் சொல்ல வேண்டாம். என் குறுவாளுக்கு பதில் சொல் " என்ற ஆதித்தன் தலைவனின் மார்பில் குறுவாளை வைத்தான்.

"நீ பதில் சொல்ல தாமதிக்கும் ஓவ்வொரு மணித்துளிக்கும் என் கத்தி கொஞ்சம் கொஞ்சமாக உன் மார்பினுள் இறங்கும் " என்றான் ஆதித்தன்.

அவன் குறுவாளை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்த ஆரம்பித்தான். தலைவனின் மேலாடை ரத்தத்தால் நனைய ஆரம்பித்தது.

"சித்ரவதையை நிறுத்து. நான் உண்மையை சொல்லிவிடுகிறேன்" என்றான் தலைவன்.

"அப்படி வா வழிக்கு .சொல் உண்மையை .இந்த உணவு யாருக்கு செல்கிறது?"

" காட்டுவாசிகளுக்கு "

" இதை யார் அனுப்பி வைப்பது?"

"நான் சொல்வதை நீ நம்ப மாட்டாய்"

"நீ சொல்வதை நான் நம்புகிறேன். உண்மையை சொல் "

"எங்களை காட்டுவாசிகளுக்கு உணவு கொண்டு செல்ல பணித்தது மர்மயோகி"

" என்ன?" என்றான் யவனன் அதிர்ச்சியுடன் .

"இன்னொரு விசயம். காட்டில் இருப்பவர்கள் காட்டுவாசிகள் அல்ல" என்றான் தலைவன்.

மூவரும் குழப்பத்தோடு ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக