திங்கள், 12 செப்டம்பர், 2022

ரகசிய தீவு 31

ரகசிய தீவு

அத்தியாயம் 31

இறந்தவன் வருகை

நீலன் சிறை அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது மனம் முழுவதும் இங்கேயிருந்து எப்படி தப்பிச் செல்வது என்பதில் லயித்திருந்தது. கருணாகரன் தன்னுடைய கப்பலை கண்டுபிடித்து தன்னிடம் ஓப்படைப்பான் என்ற நம்பிக்கையை அவன் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தான். தன்னோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதித்தனும் யவனனும் கூத்தாடி கலைஞர்களும் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டதை அவன் கருணாகரன் சொல்லி தெரிந்து கொண்டு விட்டிருந்தான். ஆதித்தனை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைக்க முடியாது என்பதை நீலன் நன்றாக அறிவான். சிறையில் இருந்த அனைவரையும் அவன் தான் தப்பிக்க வைத்து பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்திருக்க வேண்டும் என்று நீலனுக்கு நன்றாகத் தெரியும்.

ஆதித்தனும், யவனனும் தன்னை மீட்காமல் ரகசிய தீவிலிருந்து வெளியேற மாட்டார்கள். ஆனால் தான் இங்கு கருணாகரனின் தனிப்பட்ட சிறையில் அடைபட்டு கிடப்பது அவர்களுக்கு தெரியாது என்பதால் தன்னை தேடி கண்டு பிடிக்க அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தன்னை கண்டு பிடிக்கும் வரை தான் வாளாவிருக்க முடியாது. எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விட வேண்டும் என்று நினைத்த நீலன் அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

நீலன் யோசனையில் ஆழ்ந்திருந்த போது யாரோ நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. உணவருந்தும் நேரம் நெருங்கி விட்டதால் தன்னை கவனித்து கொள்ள கருணாகரன் நியமித்த வாய் பேச முடியாத பணியாள் தான் உணவு கொண்டு வருகிறான் போலிருக்கிறது என்று நினைத்தான் நீலன்.
நீலனின் எதிர்பார்ப்பிற்கு நேர் எதிராக சிறை கதவுக்கு எதிரே வந்து நின்றவன் கருணாகரன். எப்போதும் நீலனை தயக்கத்துடன் எதிர்கொள்வான் கருணாகரன் காரணம் அவன் கப்பலை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற விரக்தி. ஆனால் இந்த முறை அவனது முகத்தில் கிழட்டு மாலுமியை பார்ப்பதில் எந்த சங்கடங்களும் இல்லை. எப்போதும் கவலை படர்ந்த அவனது முகத்தில் இப்போது மகிழ்ச்சியும் பூரிப்பும் பொங்கி வழிந்தது.

வழக்கத்திற்கு விரோதமான அவனது மு க மாற்றத்தை பார்த்து எதற்காக இவன் இன்று இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று பு ரியாமல் மனதிற்குள் குழம்பினான் நீலன்.

நீலனை பார்த்து புன்னகைத்த கருணாகரன் தன் இடுப்பில் இருந்த சிறை அறையின் சாவியை எடுத்து கதவை திறந்தான். எப்போதும் கதவுக்கு வெளியே நின்று பேசிவிட்டு செல்லும் கருணாகரன் இன்று வழக்கத்திற்கு விரோதமாக கதவை திறந்ததை பார்த்த நீலன் தன் கண்ணையே நம்ப முடியாமல் திகைத்து நின்றான்.

கதவை திறந்து உள்ளே வந்த கருணாகரனை பார்த்த நீலன்" என்ன இன்று வழக்கத்திற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கிறாய்? உன் வீட்டில் ஏதாவது விசேசமா? இல்லை கப்பல் கிடைக்காததால் என்னை விடுவிக்க முடிவு செய்து விட்டாயா?" என்றான்.

"இல்லை. நீலா! உனக்குத்தான் இன்று மகிழ்ச்சியான நாள். நான் கொண்டு வந்திருக்கும் செய்தியை கேட்டால் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பாய்" என்றான் கருணாகரன்.

"இன்று உன் செயல்கள் அனைத்தும் வெகு புதிராக இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருப்பது நீ. சிறையில் அடைபட்டு கிடக்கும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியான செய்தி என்கிறாய். எனக்கு ஓன்றும் புரியவில்லை"

"புரிய வைக்கிறேன். நான் சொல்லும் செய்தியை கேட்டால் நீயும் மகிழ்ச்சி கடலில் மிதப்பாய். உன்னுடைய கப்பல் முத்தழகி எங்கிருக்கிறது என்று நான் கண்டுபிடித்து விட்டேன்" என்ற கருணாகரன் நீலனை கட்டி அணைத்து கொண்டான்.

" என்ன? என்னுடைய கப்பல் கிடைத்துவிட்டதா?" என்று சந்தோசத்தில் திக்குமுக்காடினான் நீலன்.

அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தது.

"உன்னுடைய கப்பல் கிடைக்கவில்லை. அது இருக்கும் இடம் மட்டும் இப்போது தெரிந்திருக்கிறது. நாம் தான் அதை மீட்க வேண்டும்" என்ற கருணாகரன் அரபு வியாபாரியான முகமதுவின் வருகையையும் வரும் வழியில் அவன் சந்தித்த விசித்திர கப்பலை பற்றிய தகவலையும் எடுத்து கூறினான்.

நீலன் கருணாகரன் கூறியதை நிதானமாக கூர்ந்து கேட்டான்.

"அந்த நஞ்சுண்டன்? அவனது பிடியில் தான் என் கப்பல் இருந்தது. அவன் அந்த கப்பலில் இருந்தால் அவனை பழி தீர்த்து ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விடுவேன். அவனோடு தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று எனக்கு இருக்கிறது" என்று பல்லை கடித்தான் நீலன்.

"இல்லை. முகமது என்னிடம் சொன்ன விசயங்களை வைத்து பார்த்தால் அந்த கப்பலில் மீகாமன் யாரும் இல்லையென்று தான் தெரிகிறது" என்ற கருணாகரன் முகமது சொன்ன விசயத்தை எடுத்து கூறினான்.

"அந்த கப்பலில் உள்ளவர்களில் இரண்டு பேர் மட்டும் தான் புத்திசாலிகள். ஓருவன்நஞ்சுண்டன் "

"இன்னொருவன் யார்?" என்றான் கருணாகரன் ஆவலுடன் .

"அது நான் தான்." என்று சிரித்தான் நீலன்.

"போதும் தற்பெருமை. உன் மீதான கட்டுப்பாடுகளை, இந்த சிறைவாசத்தை இந்த கணத்திலிருந்து நீக்குகிறேன்"

" என் கப்பலை மீட்கும் வரை நான் இங்கிருந்து தப்பி ஓட மாட்டேன் என்று கருதுவதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாய். இப்போது என்னை விட புத்திசாலி நீதான் " என்றான் நீலன்.

"சரியாகப் புரிந்து கொண்டாய். உன் கப்பலை மீட்க என்ன செய்வதென்று நான் யோசித்து கொண்டிருக்கிறேன். உன் கப்பலை நாம் பகலில் நெருங்க முடியாது. நீயும் பகலில் வெளியே தலைகாட்ட முடியாது.நஞ்சுண்டனின் ஆட்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள். நாம் இரவில் தான் நம் முயற்சியை தொடங்க வேண்டும்" என்றான் கருணாகரன். 

எதையோ யோசித்து கொண்டிருந்த நீலன்" நீ சொல்வது உண்மைதான். உன் ஆட்களை இரவு பயணத்திற்கு தயாராக சொல். நாம் இரவில் கடலுக்கு செல்ல போகிறோம்" என்றான்.

"அவர்கள் கப்பலில் நிறைய ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் விழித்து கொண்டு தாக்குதலில் முந்தி கொண்டால் நம்முடைய நிலைமை மோசமாகி விடும்" என்றான் கருணாகரன்.

"கவலைப்படாதே! என்னிடம் அதற்கு ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதை செய்தால் போதும் அத்தனை பயல்களும் நடுங்கி விடுவார்கள்" என்றான் நீலன்.

" என்ன அது?" என்றான் கருணாகரன்

"இறந்தவனை எழுப்புவது " என்று சிரித்தான் நீலன்.

அவனை எதுவும் புரியாமல் பார்த்தான் கருணாகரன்.

"இன்று இரவு உனக்கு எல்லாம் விளங்கி விடும்" என்று சிரித்தான் நீலன்.

…..

பார்த்திபன் செங்கோடனின் உடலுக்கு சந்திரவதனா மூலமாக தீ மூட்டிவிட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்ப வந்து சேர்ந்திருந்தான்.

சந்திரவதனாவை வில்லவன் மனைவியோடு அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய ஆட்களை வரவழைத்தான் பார்த்திபன்.

வந்து சேர்ந்த தன் ஆட்களிடம் நஞ்சுண்டனை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேச ஆரம்பித்தான் பார்த்திபன்.

"நண்பர்களே. நாம் இந்த கொடுங்கோலாட்சியை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறோம். நம்மிடம் இந்த அரசை எதிர்க்க போதுமான ஆயுதங்கள் இல்லை. அவற்றை இந்த நண்பர் தருவதாக சொல்கிறார். அதற்கு பதிலாக இவர் கேட்கும் தொகையை நம்மால் தர முடியாது. ஆனால் அதற்கு பதிலாக மார்க்கதரிசியின் புதையலை நாம் இவருக்கு தேடித் தந்தால் நமக்கு அந்த ஆயுதங்கள் நம்மிடம் வந்து சேரும் "

"நீ சொல்வது சரிதான் பார்த்திபா. ஆனால் அந்த புதையல் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாதே?" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"நம் நண்பர் அந்த புதையல் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக திடமாக நம்புகிறார். அதை தோண்டி எடுக்க நம்முடைய உதவி தேவை. அதை ஏற்றி செல்ல கடலில் இவரது கப்பல் காத்திருக்கிறது" என்றான் பார்த்திபன்.

"அவை நம் நாட்டு செல்வங்கள் அல்லவா?" என்றான் இன்னொருவன்.

"இல்லை. அவை களவாடப்பட்ட பொருட்கள். அவை இவரிடம் இருப்பது உரிமையாளர்களுக்கு தெரிந்தால் வீணான பிரச்சனைகள் வரும் " என்றான் வில்லவன்.

"அந்த புதையலின் பொருட்டு நான் எந்த பிரச்சனைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றான் நஞ்சுண்டன் .

"நமக்கு வேறு வழியில்லை. இவரது திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் தான் நமக்கு ஆயுதங்கள் கிடைக்கும் " என்றான் பார்த்திபன்.

"எங்களை வழி நடத்தும் தலைவன் நீ! நீ பார்த்து எதை செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும். சரி. நாம் இந்த திட்டத்திற்கு உடன்படுகிறோம். நண்பர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் ஒருவன்.

"நாங்கள் இதற்கு சம்மதிக்கிறோம்" என்று குரல் கொடுத்தது கும்பல் .நஞ்சுண்டனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடத் துவங்கியது. தன் திட்டம் இவ்வளவு எளிதாக நிறைவேறும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.

"அந்த புதையல் எங்கே இருக்கிறதென்று சொல் பார்த்திபா?" என்றது ஒரு குரல்.

"நாட்டின் தென்திசையில்" என்றான் பார்த்திபன்.

"அது நர மாமிசபட்சிணிகள் வாழும் காடாயிற்றே?" என்றது ஒரு குரல்.கூட்டத்திற்குள் கசமுச வென்று பேச்சு குரல் எழுந்தது.

"எங்கள் திட்டத்திற்கு உட்பட்டு எங்களுடன் அந்த காட்டிற்கு வர விரும்புகிறவர்கள் மட்டும் கைகளை உயர்த்துங்கள்" என்றான் பார்த்திபன்.

தோழர்கள் அனைவரும் அமைதியாக ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். யாருடைய கைகளும் உயர மறுத்தன.

ஒரே ஒரு கை மட்டும் உயரத்தில் இருப்பதை பார்த்த பார்த்திபன்" யார் அது? கைகளை உயர்த்தியது ? எழுந்து நின்று உங்களை வெளிகாட்டுங்கள்" என்றான்.

கூட்டத்திலிருந்து எழுந்து நின்றான் ஆதி.

"இவன் உன்னுடைய பணியாள்தானே?" என்றான் பார்த்திபன் வில்லவனை பார்த்து.

"ஆமாம். ஆனால் இவன் எதற்கு அங்கே வர விரும்புகிறான் என்று தெரியவில்லையே?" என்றான் வில்லவன் குழப்பத்துடன் .கூ ட்டம் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக