ரகசிய தீவு
அத்தியாயம் 30
தேடி வந்த அதிர்ஷ்டம்
கருணாகரனின் பிடியில் அகப்பட்டு தனிமை சிறையில் வாடிக் கொண்டிருந்தான் நீலன்.கருணாகரன் அவ்வப்போது வந்து அவனை சந்தித்து விட்டு சென்றான். அவன் அங்கு வரும் ஓவ்வொரு முறையும் நீலன் தன்னுடைய முத்தழகி கப்பல் கிடைத்துவிட்டது என்ற நினைப்பில் மகிழ்ச்சி கடலில் மூழ்குவான். ஆனால் கருணாகரன் ஒவ்வொரு முறையும் உதட்டை பிதுக்கி தன்னுடைய ஏமாற்றத்தை வெளிகாட்டுவான். தான் முத்தழகியை தேடும் பணியை முடுக்கி விட்டிருப்பதாகவும் விரைவிலேயே கப்பல் தன்னிடம் அகப்பட்டு விடும் என்றும் நீலனுக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வான்.
சில நாட்களிலேயே கருணா கரனின் வருகையின் போது நீலனுக்கு ஏற்படும் உற்சாகம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. வாரத்தின் இறுதியில் நீலன் கருணாகரன் தன்னுடைய கப்பலை கண்டுபிடிப்பான் என்ற நம்பிக்கையை இழக்கக் துவங்கி விட்டான் நீலன். நீலனை தனிப்பட்ட முறையில் கவனிக்க ஒரு வாய் பேச முடியாத காது கேளாத ஊனமயும் செவிடனுமான ஒருவனை நியமித்திருந்தான் கருணாகரன் தனிமை சிறையில் அடைபட்டு கிடந்த நீலனுக்கு நேரத்திற்கு நேரம் சுவையான உணவு கிடைத்தது. கிடைத்த உணவை உண்ட நீலன் மறந்தும் கூட மதுபானம் எதையும் கேக்கவில்லை. அவனது கவனம் முழுக்க தன் உயிரை காப்பாற்றிய தான் மடியில் வைத்து பாதுகாத்த அந்த காலி மதுபுட்டி எங்கே தான் காணாமல் போயிருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தது.
நீலனிடம் இரண்டு திட்டங்கள் இருந்தன. அவன் கருணாகரன் மீது இருந்த நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருந்தான்.கருணாகரன் சொன்னது போல் கப்பலை கண்டுபிடித்து மீட்டிருந்தால் அதில் பொக்கிசங்களை ஏற்றி கொண்டு கருணாகரனையும் ஏமாற்றி விட்டு கப்பலோடும் செல்வங்களோடும் தப்பி ஓடிவிட திட்டமிட்டிருந்தான்.
அவன் நினைப்பதுபோல் கருணாகரன் கப்பலை மீட்டு வருவது போல் அவனுக்கு தோன்றவில்லை. அதனால் தானே களத்தில் இறங்கி தன்னுடைய கப்பலை தேட முடிவெடுத்தான் நீலன்.அதற்கு அவன் முதலில் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும். தப்பித்த பிறகு தன்னுடைய கப்பலை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பிறகு இருக்கிறது ஒரு பழிவாங்கும் படலம். அந்த துரோகி நீலன். அவனை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை தேடிக் கண்டு பிடித்து கொல்லவேண்டும். நீலன் தன்னுடைய மனதிற்குள் கருவிக் கொண்டான். முதலில் தன்னுடைய கப்பல் தனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.கருணாகரன் தன்னுடைய கப்பலை கண்டுபிடிக்காவிட்டால் இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்று விட வேண்டும் என்ற முடிவிற்கு நீலன்வந்துவிட்டிருந்தான்.
கருணாகரன் தன்னுடைய மாளிகையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவனுடைய ஆட்கள் துறைமுகத்தில் எங்கு தேடியும் நீலனின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவனிடம் சொன்னதை அவன் ஆழ்ந்து யோசித்து கொண்டிருந்தான். ரகசிய தீவிற்கு முத்தழகி கப்பலிலிருந்து வழக்கமாக வரவேண்டிய சரக்குகள் சிறிய கப்பல்களில் கரைக்கு வந்து சேர்ந்து விட்டன என்ற தகவல் ஓற்றர்கள் மூலம் அவன் காதுக்கு வந்து சேர்ந்திருந்தது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால் நீலனின் கப்பலான முத்தழகி அருகில்தான் எங்கேயோ இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்து சேர்ந்திருந்தான்.
அவனது சிந்தனையை கலைத்து அங்கே வந்து நின்று முகமன் கூறிய காவலனின் வருகை .
அவனது வருகையால் யோசனையிலிருந்து விடுபட்ட கருணாகரன்" என்ன விசயம்?" என்றான் அதட்டலான குரலில்.
" பிரபு. தங்களை காண அரபு தேசத்திலிருந்து முகமது வந்திருக்கிறார்" என்றான் காவலன்.
" வரச் சொல் " என்றான் கருணாகரன்.மதிமாறனுக்கு எதிராக எழப்போகும் புரட்சியை அடக்கவும், சிகப்பு முகமூடியை பிடித்து அவனது ஆட்களை கொல்லவும் மலை நாட்டிலிருந்து கணிசமான ஆயுதங்கள் முத்தழகியில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. போருக்கு தேவையான புரவிகளை வாங்கி கொள்ளவும் தயாநிதி அனுமதி தந்திருந்தார். ரகசிய தீவிற்கு தேவையான குதிரைகளை வழக்கமாக அரபுதேசத்து குதிரை வணிகனான முகமதுவிடமிருந்து கொள்முதல் செய்வது தான் வழக்கம். தனக்கு தேவையான குதிரைகளை சொல்லி ஓலை எழுதி அனுப்பியதுடன் அதை அப்படியே மறந்து விட்டான் கருணாகரன்.
பல கடல்களை, கப்பல்களை தாண்டி தன் கைக்கு வந்து சேர்ந்த ஓலையை படித்த முகமது தரமான குதிரைகளை கூட்டிக் கொண்டு ஒரு தனி கப்பலில் தன் ஆட்களோடு ரகசிய தீவிற்கு வந்து சேர்ந்து விட்டான்.
கருணாகரனின் மாளிகைக்குள் நுழைந்த முகமது முகமன் கூறி நின்றான்.
"வா முகமது! பயணம் எப்படி இருந்தது?" என்றான் கருணாகரன் அவனை வரவேற்றபடி.
"அல்லாவின் கருணையினால் நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டேன் பிரபு " என்றான் முகமது.
"நான் சொன்னபடி குதிரைகள் அனைத்தும் ?"
" பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனி நீங்கள் அதை பார்வையிட்டு தேர்ந்தெடுப்பது மட்டும் தான் பாக்கி"
"நீண்ட தூர பயணத்தில் வெகுவாக களைத்திருப்பாய். முதலில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறு, நம் வியாபாரத்தை பிறகு பேசுவோம். யார் அங்கே ? முகமதுவும் அவனது ஆட்களும் தங்க வசந்த மாளிகையை தயார் படுத்துங்கள்"
சில காவலர்கள் கருணாகரன் முன்பு வந்து வணங்கினர்.
"வசந்த மாளிகையை உடனே தயார் செய்கிறோம் பிரபு " என்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
"உன் வருகை எதிர்பாராமல் நிகழ்ந்து விட்டதால் உன் இருப்பிடத்தை தயார் செய்ய சற்று தாமதமாகிறது. மாளிகை தயாராகும் வரை நாம் ஏதாவது பேசிக் கொண்டிருப்போம். உனக்கு இதில் சம்மதம் தானே?"
"மறுப்பேனா? என்னுடன் உரையாடுவது நீங்கள் காட்டும் பெரும் கருணையல்லவா? ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம்."
" கேள்"
"என்னிடம் திடிரென்று இத்துணை குதிரைகளை கொள்முதல் செய்ய என்ன காரணம்? இங்கே போர் ஏதாவது நடைபெற போகிறதா?"
"சரியாக சொன்னாய். விரைவிலேயே இங்கே ஒரு போர் துவங்க போகிறது. அதற்கான முஸ்தீபுகள் துவங்கி விட்டன. இதில் யார் முந்தி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்ற இக்கட்டான நிலைமை. அதனால் தான் முந்தி கொண்டு முதல் ஆளாக உன்னிடம் குதிரைகளை கொள்முதல் செய்கிறேன்"
" வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். நீங்கள் புத்திசாலி என்பதை மெய்பித்து விட்டீர்கள்"
" பாராட்டுக்கு நன்றி முகமது .இந்த நீண்ட பயணத்தில் சுவராஸ்யமான சம்பவங்கள் ஏதாவது நடந்திருந்தால் அவற்றை கூறு. அவற்றை கேட்டு மகிழ்கிறேன்"
"சுவாரஸ்யமான விசயம் என்று எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ஐயத்திற்கு இடமான ஒரு சம்பவம் நடந்தது "
"ஐயத்திற்கு இடமான சம்பவமா? இது என்ன புதிர் போடுகிறாய்? விளக்கமாக கூறு"
" கூறுகிறேன் பிரபு. நாங்கள் குதிரைகளை ஏற்றிக் கொண்டு அரபு தேசத்திலிருந்து
கிளம்பிய பின் எங்கள் பயணத்தில் எந்த இடர்பாடுகளும் நேர வில்லை.நிர்மலமான வானமும்,மெல்லிய காற்றும் எங்கள் பயணத்திற்கு உதவி செய்தன. இயற்கை இடர்பாடுகள் சில சமயம் ஏற்பட்ட போது என்னுடைய மாலுமிகள் அதை திறமையாக சமாளித்து கலத்தை செலுத்தினர்.
அப்படி ஒரு நாள் எங்கள் பயணம் நடந்து கொண்டிருந்த போது எங்கள் கப்பலின் மீகாமன் தொலைதூரத்தில் ஒரு கப்பல் நின்று கொண்டிருப்பதை தொலைநோக்கி மூலமாகப் பார்த்தான். முதலில் அது கடல் கொள்ளையர்களின் கப்பல் என்று தான் நினைத்தோம். ஆனால் என் கப்பலின் மாலுமி மட்டும் அந்த கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நடுக்கடலில் நிற்பதாக கூறினான். நாங்கள் தொலைநோக்கியில் பார்த்து அந்த கப்பலில் நங்கூரம் இல்லாததை உறுதி செய்து கொண்டோம். ஒரு வேளை நடுகடலில் கப்பலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு பழுதாகி நிற்க கூடுமோ என்று சந்தேகித்தோம். அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நாங்கள் அந்த கப்பலை நெருங்கினோம். அந்த கப்பலில் இருந்தவர்கள் எங்களின் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு ஓவ்வொருவரும் வெவ்வேறு பதில்களை கூறினார்கள். அவர்களின் பேச்சும், போக்கும் விசித்திரமாக இருந்தது. அவர்களின் பேச்சிலிருந்து அந்த கப்பலுக்கு மீகாமன் இல்லை என்று தெரிந்தது. கட்டுப்படுத்த யாரும் இல்லாத செம்மறியாட்டு கூட்டம் போல் அந்த கப்பல் இருந்தது. எங்கள் உதவி தேவையில்லை என்று அவர்கள் உதாசீனம் செய்ததால் நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அவர்கள் யார் எங்களிடம் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று எனக்கு புரியவில்லை" என்றான் முகமது.
கருணாகரனுக்கு அந்த கப்பல் யாருடையது என்று தெளிவாக தெரிந்து விட்டது. அந்த கப்பல் நீலனிடமிருந்து நஞ்சுண்டன் கடத்தி சென்ற முத்தழகி தான் என்பது அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரிந்து விட்டது.
அவன் மனம் மகிழ்ச்சியில் குதித்து கூத்தாடியது. முகமதை கட்டியணைத்தவன்"நல்ல செய்தி சொன்னாய் முகமது. அந்த கப்பலை நீ எங்கே பார்த்தாய் என்ற அடையாளத்தை கூறு. அந்த கப்பலைத் தான் நான் இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றான் கருணாகரன்.
முகமது அந்த இடத்தின் அடையாளத்தை எடுத்து கூறினான். அவன் பேசி முடிப்பதற்கும் வசந்த மாளிகை தங்குவதற்கு தயாரான செய்தியும் ஓரே நேரத்தில் வந்து சேர்ந்தது.
" முகமது. நீ இன்று வசந்த மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து கொள். நாம் நாளை சந்திப்போம்" என்றான் கருணாகரன்.
முகமது விடைபெற்று கிளம்பினான்.
துடிக்கும் இதயத்தோடு நீலனிடம் இந்த செய்தியை உடனே சொல்லியாக வேண்டும் என்ற துடிப்போடு கிளம்பினான் கருணாகரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக