வியாழன், 22 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 34

பேயின் அதிர்ஷ்டம்

இரவு வெகு வேகமாக பூமியை நெருங்கி கொண்டிருந்தது. கடலில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நின்று கொண்டிருந்தது முத்தழகி கப்பல். அதன் தலைவனான நஞ்சுண்டன் ஆயுதங்களை விற்பதற்காக ரகசிய தீவிற்கு சென்று ஒரு வாரமாகிவிட்டது.

அவனிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் கப்பலில் இருந்தவர்களுக்கு வந்து சேரவில்லை. தான் ஒரு வார காலத்திற்குள் ஆயுதங்களை வாங்க கூடிய சிகப்பு முகமூடியை சந்தித்து விட்டு வருவதாக அவன் ஏற்கனவே தன்னுடைய சகாக்களிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தான். அவன் திரும்ப வரும் வரை கப்பலை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பை துணை மீகாமகனாகிய முத்துவேலனிடம் ஓப்படைத்து விட்டு சென்றிருந்தான்.

இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட முத்து வேலன் கடந்த ஓரு வாரமாக நெருப்பாற்றில் நீந்தி கொண்டிருந்தான். நஞ்சுண்டன் தலைவனாக இருந்தவரை அவனுக்கு பணிந்து நடந்து கொண்டிருந்த அனைவரும் தங்களில் ஒருவனான முத்து வேலன் தலைவரான தை விரும்பவேயில்லை. அதனால் யாரும் அவனுக்கு கட்டுப்பட மறுத்து அவரவர் இஷ்டத்திற்கு தறிகெட்டு காரியங்களை செய்து கொண்டிருந்தனர். எந்த வேலையும் இல்லாமல் சோம்பிகிடந்தவர்களுக்கு விளையாட்டு மட்டுமே ஒரே பொழுது போக்காக இருந்தது.

இலக்கு இல்லாத இந்த தங்குதலும் வெறுமையும், வீட்டை பிரிந்த விரக்தியும் அவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கிவிட்டிருந்தது. சாதாரண வாய் வார்த்தைகள் கூட வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் தலையிட்டு தடுத்து அவர்களிடையே ஓற்றுமையை ஏற்படுத்த படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான் முத்துவேலன்.

அவனது திறமை முழுவதும் ஆட்களை சமாதானம் செய்வதிலேயே கழிந்து கொண்டிருந்தது. எப்போதடா நஞ்சுண்டன் திரும்ப கப்பலுக்கு வந்து சேர்வான் என்று அனைவரும் காத்து கொண்டிருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது கப்பலில் இருந்த சரக்கை விற்று நஞ்சுண்டன் வாங்கி வைத்திருந்த பொற்காசுகள். அவற்றை அவன் எங்கே பதுக்கி வைத்திருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. அதை நஞ்சுண்டன் வந்து தான் பிரித்து அவரவர் பங்கை கொடுக்க வேண்டும். பலே திருடனான நஞ்சுண்டன் அதை கப்பலில் வைத்து விட்டு சென்றால் தான் நீலனை ஏமாற்றி முத்தழகியை கிளப்பிக்கொண்டு வந்தது போல் தன்னுடைய ஆட்களில் யாராவது தன்னை ஏமாற்றி விட்டு கப்பலை கிளப்பிக்கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்று அது இருக்கும் இடத்தை ரகசியமாக வைத்திருந்தான். திறமை குறைவான குள்ள நரி தந்திரங்கள் தெரியாத முத்துவேலனை அதனால் தான் தனக்கு பின்னாலான தலைவராக நியமித்து வைத்திருந்தான்.

கப்பலில் இருந்த ஓவ்வொருவருமே அடுத்த நபருக்கு தெரியாமல் அந்த பொற்காசுகளை தேடிக் கொண்டிருந்தனர். எல்லோருமே கப்பலை அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு தேடியும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு கனமுள்ள மூட்டையை நஞ்சுண்டன் யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றிருக்க முடியாது. அது கண்டிப்பாக கப்பலில் தான் இருக்க வேண்டும். ஆனால் அது எங்கே என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.

ஆறாம் நாள் இரவு கப்பல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. நிலவு உச்சிக்கு வந்து ஜொலித்து கொண்டிருந்தது. கப்பலில் தூங்குபவர்களின் குறட்டை ஒலியை அலைகளின் ஓசை அமுக்கி கொண்டிருந்தது.

முத்து வேலன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனது மனம் ஏனோ தன்னுடைய பழைய எஜமானன் நீலனை நினைத்து ஏங்கி கொண்டிருந்தது. குடிபழக்கத்தை தவிர நீலனிடம் வேறு எந்த குறைகளும் இல்லை. நல்ல மனிதன் தான். கடலில் எத்தகைய இக்கட்டு வந்தாலும் சமாளிக்கும் திறமை பெற்றவன். பணத்திற்கு ஆசைப்பட்டு நஞ்சுண்டனுடன் சேர்ந்து கொண்டு நீலனுக்கு துரோகம் செய்து விட்டோமோ என்று அவன் மனதிற்குள் குமுறி கொண்டிருந்தான்.

நீலன் கல்லறைதீவில் பசியால் வாடி எப்போதோ இறந்து போயிருப்பான். இனி அவனை நினைத்து பரிதாபப் பட்டோ வருத்தப்பட்டோ பயன் எதுவும் இல்லை என்றது அவனது மனசாட்சி.

புரண்டு படுத்த முத்துவேலனின் நாசியில் திடிரென்று மல்லிகை பூ வாடை அடிக்க ஆரம்பித்தது. இந்த நள்ளிரவு நேரத்தில் எப்படி மல்லிகைமணம்வீசுகிறது என்று நினைத்தவன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

தன் கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்தவனின் காதில் தெளிவாக விழுந்தது அந்த கொலுசு சத்தம்.

ஜல்! ஜல்! என்று சீரான தாளகதியில் கேட்க ஆரம்பித்தது அந்த கொலுசு சத்தம். யாரோ மேல் தளத்தில் நடமாடுவதை உணர்ந்த முத்து வேலன் அருகில் இருந்த தீப்பந்தத்தை கையில் எடுத்து கொண்டு மேல் தளத்தை நோக்கி நடந்தான்.

அவன் மேல் தளத்தை அடைந்த போது அங்கே அடர்ந்த இருள் தான் அவனை வரவேற்றது.

மேல் தளத்தில் யாரையும் காணாமல் ஏமாற்றத்துடன் விழித்தான் அவன்.

தீப்பந்த வெளிச்சத்தில் அவனது பின்புறம் ஒரு நிழல் வேகமாக கடந்து செல்வதை அவனால் உணர முடிந்தது. அவன் மனதை பயம் ஆக்ரமிக்க ஆரம்பித்தது.மெல்லிய வியர்வை கோடு ஓன்று அவனது நெற்றியில் உற்பத்தியானது.

" யார்? யாரது?" என்றான் முத்து வேலன் பலவீனமான குரலில். அவன் குரல் அவனது காதுகளையே எட்டவில்லை.

"நான் தான் " என்றது ஒரு கரகரத்த குரல்.

அந்த குரல் அவனுக்கு ஏற்கனவே பரிச்சயமான குரல். அவன் மீது ஆதிக்கம் செலுத்திய அதிகாரம் காட்டிய குரல். அவனால் அந்த குரலை மறக்க முடியாது. ஆனால் இப்போது அந்த குரல் தன்னுடைய கப்பலிலேயே கேட்பதை அவனால் நம்ப முடியவில்லை. அந்த குரல் நீலனுடையது.

"யார் அது? நீலனா?" என்றான் முத்து வேலன் எச்சிலை முழுங்கியபடி.

"ஆம். நானே தான்" என்றது அதே குரல்.

அதே நேரம் முத்துவேலனின் கையில் இருந்த தீப்பந்தத்தின் மீது தன் வாயில் வைத்திருந்த எண்ணெயை ஊதினான். திடிரென்று ஓரு பெரும் தீப்பிழம்பு அதிலிருந்து உண்டானது. அந்த தீப்பிழம்பு மறைந்த போது அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான் நீலன்.

அவனது உடையலங்காரம் வெகு வினோதமாக இருந்தது. முகத்தில் கருப்பு நிற கோடுகளை வரைந்து உதட்டின் ஓரத்தில் வெள்ளை நிறத்தில் இரண்டு கோரை பற்களை வரைந்து வைத்திருந்தான். இப்படி ஓரு கர்ண கொடுர தோற்றத்துடன் இரவில் ஒருவன் எதிரே வந்து நின்றால் மனத்துணிவு கொண்டவன் கூட சில நொடிகள் பேயோ என்று நினைத்துஆடிப்போய்விடுவான்.முத்துவேலன் உண்மையிலேயே இறந்து போன நீலன் திரும்ப பழி வாங்க வந்து விட்டதாக நினைத்து ஆடிப்போய்விட்டான்.

"யார் அது? நீலனா?" என்றான் மீண்டும் ஒருமுறை நடுங்கும் குரலோடு.

"நானே தான். பழைய கணக்கை நேர் செய்யகல்லறைதீவிலிருந்து வந்திருக்கிறேன். அந்த துரோகி நஞ்சுண்டனுக்கு துணை போன அனைவரையும் பழி தீர்க்க வந்திருக்கிறேன். கணக்கை உன்னிடமிருந்து தொடங்குகிறேன்" என்று சொல்லிவிட்டு ஓங்காரமாக சிரித்தான் நீலன்.

"என்னை மன்னித்து விடு நீலா. உனக்கு ஆதரவாக நான் பேசியிருந்தால் என்னையும் உனக்கு துணையாக கல்லறைதீவில் இறக்கி விட்டிருப்பர்ன் அந்த நஞ்சுண்டன் .என் உயிரை காப்பாற்றி கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் வேறு வழியின்றி நான் அவனது முடிவுக்கு கட்டுப்பட்டேன்" என்று கதற ஆரம்பித்தான் முத்துவேலன்.

"நன்றாக கதை சொல்கிறாய். ஆனால் என் மனம் அதை நம்ப மறுக்கிறது. நீ போய் அனைவரையும் இங்கே அழைத்து வா! நாம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் நீலன்.

"இதோ!பத்தே நிமிடங்களில் அனைவரையும் மேல் தளத்திற்கு அழைத்து வருகிறேன். என் மீது கோபப்பட்டு என்னை எதுவும் செய்து விடாதே" என்று கதறினான் முத்துவேலன்.

"அனைவரையும் ஆயுதங்களின்றி இங்கே வரச் சொல். நீ தாமதிக்கும் ஓவ்வொரு நொடியும் என் கோபம் அதிகரிக்கும் "

"இல்லை. இப்போதே அனைவரையும் அழைத்து வருகிறேன்" என்றபடி பந்தத்துடன் கீழ் தளத்திற்கு ஓடினான் அவன்.

கீழே மெய்மறந்து தூங்கி கொண்டிருந்த தன்னுடைய சகாக்களை எழுப்ப ஆரம்பித்தான் அவன்.

தூக்கம் கலைந்து எழந்தவர்கள் அவன் சொன்ன விசயத்தை கொஞ்சமும் நம்பவில்லை.

"கனவு ஏதாவது கண்டாயா? இறந்து போன நீலன் எப்படி உயிருடன் வர முடியும்? சரி. அவனது கால்களை பார்த்தாயா? அவை பூமியை தொட்டு கொண்டிருந்தனவா?" என்றான் ஒருவன்.

" என் கால்களே ஆடிக்கொண்டிருந்ததால் நான் அவன் கால்களை கவனிக்கவில்லை" என்றான் முத்துவேலன்.

ஒருவன் மட்டும் யோசித்து விட்டு கூறினான். "நரன். ஆம் அது தான் அவனது புனைபெயர் அவ்வளவு எளிதில் அவன் சாவுக்கு தன்னை ஒப்பு கொடுத்திருக்க மாட்டான். அவன் தன்னுடைய திறமையால் அந்த கல்லறைதீவிலிருந்து தப்பித்து வந்திருக்க வேண்டும். வாருங்கள் மேலே சென்று பார்ப்போம்"

அனைவரும் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்த போது கருணாகரன் தன் ஆட்களோடு காத்திருந்தான்.முத்தழகியை அவனுடைய சிறிய படகுகள் சுற்றி வளைத்திருந்தன.
சிரித்தபடி நின்றிருந்த நீலன்" வணக்கம் என் முன்னாள் நண்பர்களே!ம்யாரும் தேவையில்லா சாகசங்களை நிகழ்த்தி உயிரை இழந்து விட வேண்டாம். இந்த கப்பல் இந்த நொடியிலிருந்து என்னுடையது.கருணாகரா! இந்த துரோகிகளை கைது செய்ய உத்தரவிடு." என்றான் நீலன் கருணாகரனை பார்த்து.

"ம்" என்றான் கருணாகரன். அவனுடைய ஆட்கள் பம்பரமாக செயல்பட்டு அனைவரையும் கைது செய்தனர்.

"துரோகம் ஒரு நாளும் வென்றதில்லைநண்பர்களே!எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள்" என்ற நீலன்" நங்கூரத்தை உயர்த்துங்கள். கப்பல் கிளம்ப ட்டும் " என்றான்.

நங்கூரம் கப்பலின் மேல் தளத்திற்கு இழுக்கப் பட்ட போது அதனுடன் பிணைக்கப்பட்டிருந்த மூட்டை ஒன்றும் மேலே வந்தது. அது நஞ்சுண்டன் யார் கண்ணிலும் படாமல் ஓளித்து வைத்திருந்த பொன் மூட்டை . கப்பல் முழுக்க தேடியவர்களுக்கு நங்கூரத்தை உயர்த்தி பார்க்க தோன்றவில்லை என்பது தான் விதி.

நீலனின் முகம் மகிழ்ச்சியால் பூரித்தது.

அவன் இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக