ரகசிய தீவு
அத்தியாயம் 32
பேசாதவன் பேசுகிறான்.
வில்லவனின் பணியாளான வாய் பேச இயலாத ஆதி நர மாமிசம் உண்ணும் தெற்கே உள்ள காட்டு பகுதிக்கு வர தயாராக இருப்பதாக தன் கையை உயர்த்தி காட்டியது அங்கிருந்த அனைவருக்கும் வியப்பை தந்தது.
மற்ற அனைவரும் உயிருக்கு பயந்து அந்த காட்டிற்குள் நுழைய தயங்கிய போது இவன் மட்டும் ஏன் தைரியமாக தன் கைகளை உயர்த்தினான் என்று பார்த்திபனுக்கு குழப்பமாக இருந்தது. அவனது தைரியத்தை மனதிற்குள் பாராட்டி கொண்டவன் அவனை வைத்தே தன் ஆட்களை தைரியப்படுத்த முனைந்தான்.
"இவன் உன்னுடைய பணியாள் தானே?" என்றான் பார்த்திபன் வில்லவனை பார்த்து.அது ஏற்கனவே அவனுக்கு தெரிந்த விசயம் என்ற போதும் புதிதாக கேட்பது போல் அவனது தோரணை இருந்தது.
"ஆமாம். இவன் என்னுடைய ஆள்தான். பாவம் வாய் பேச முடியாதவன். யாருக்கும் தெரியாத நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளாத ஓரு செய்தியை நான் இப்போது சொல்ல போகிறேன்.இவன் அந்த காட்டில் பிறந்து வளர்ந்தவன் தான் .இவனது பால்யம் அந்த காட்டில் கழிந்ததால் அந்த காட்டின் அத்துணை வழிகளும் இவனுக்கு தெரிந்திருக்கலாம் என்பது நமக்கு சாதகமான அம்சம் " என்றான் வில்லவன்.
"பாருங்கள் தோழர்களே! ஒரு சிறுவன் பால்யத்தை கடந்து இளமை பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒருவன் தைரியமாக அந்த காட்டில் நுழைய விரும்புகிறான். அது அவனது சொந்த இடம். அதை மீண்டும் காண அவன் மனம் ஆசைப்படுகிறது. நம் நாடு விடுதலை பெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் அதற்காக உயிரை விட தயங்குகிறோம். இப்படி கோழைத்தனமாக இருந்தால் நம்மால் எப்படி வெற்றி பெற முடியும்?"
"நீ சொல்வது சரிதான் பார்த்திபா!அங்கே இருப்பவர்கள் இவனது உறவுக்காரர்கள். இவனை நம் இனத்தவன் என்று அவர்கள் அடையாளம் கண்டுபிடித்து விட்டால் இவனை உயிரோடு விட்டு விடுவார்கள். ஆனால் நம்மை அப்படி உயிரோடு விட்டு வைப்பர்களா?" என்றான் ஓருவன்.
"நல்ல கேள்வி தான். நாம் அவனை மட்டும் காட்டுக்குள் அனுப்பி வைப்போம். அவன் தனது ஆட்களிடம் பேசி சமாதானம் செய்து விட்டு பிறகு நம்மை உள்ளே அழைக்கட்டும் "
"நீ சொல்வது சரிதான். ஆனால் அவனுக்கு பேச தெரிய வேண்டுமே? அவனோ பேச முடியாத ஊமை. அவனால் தன்னுடைய கருத்தை எப்படி பேசி புரிய வைக்க முடியும்?" என்றான் இன்னொருவன்.
அவனது இக்கட்டான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான் பார்த்திபன்.
"என்னால் பேச முடியாதென்று யார் சொன்னது?" என்று ஓலித்தது ஒரு கம்பீர குரல் எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தனர். அங்கே உட்கார்ந்திருந்த ஆதி இப்போது கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.
"நான் ஊமையல்ல.என்னால் பேச முடியும்' அழுத்தம் திருத்தமாக பேசினான் அவன்.
இதுவரை பேச முடியாத ஊமை என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த ஒருவன் திடிரென்று பேசியதில் மொத்த கூட்டமும் திகைத்து நின்றது.
வில்லவனால் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.
"ஆதி ! நீயா பேசியது?" என்றான் திகைப்புடன்.
"ஆமாம் அண்ணா. நான் தான் பேசினேன். இதுவரை இரவில் மட்டுமே பேசி பழகிக் கொண்டிருந்த நான் முதன்முதலாக பகலில் இப்போது தான் பேசுகிறேன். இதுவரை வாய் பேச முடியாதவனாக நடித்து உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா." என்றான் ஆதி.
வில்லவன் வீட்டில் தங்கியிருந்த போது நள்ளிரவில் ஏற்பட்ட பேச்சு சத்தத்தின் அர்த்தம் பார்த்திபனுக்கு இப்போது தான் விளங்கியது.
"உன்னை என்னுடைய சகோதரனை போல நடத்தி வந்தேனே ஆதி? என்னிடம் ஏன் உண்மையை மறைத்து ஊமை போல் நடித்தாய்?" என்றான் வில்லவன் சற்று கோபத்துடன் .
"என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா. என்னால் நகரவாசிகளை முழுதாக நம்ப முடியவில்லை. மரண தறுவாயில் என் தந்தை என்னிடம் வாங்கிய சத்தியமும் ஒரு காரணம் " என்றான் ஆதி.
"ஊமையாக நடிக்க சொல்லி உன் தந்தை உன்னிடம் சத்தியம் வாங்கினாரா?" என்றான் வில்லவன்.
"ஆமாம். நீங்கள் என்னை பார்த்த முதல் நாளை நினைத்து பாருங்கள். நர மாமிசபட்சிணிகள் ஊருக்குள் வந்து விட்டார்கள் என்று மக்கள் எங்களை தாக்கி கொண்டி ருந்தபோது கருணாகரன் அங்கே வந்தான். அவன் தான் என் தந்தையை கொன்றான். அடுத்ததாக அவன் என்னையும் கொல்ல முயன்றான். அப்போதுதான் நீங்கள் தலையிட்டு என்னை காப்பாற்றினீர்கள். நான் வாய் திறந்து பேசுவேன் என்று கருணாகரனுக்கு தெரிந்தால் அவன் உங்கள் எதிர்ப்பையும் மீறி என்னை கொன்றிருப்பான். என்னை காப்பாற்ற மரண தறுவாயில் இருந்த என் தகப்பன் முயன்றான். வாய் பேச முடியாத ஊமையாக நடித்தால் மட்டுமே நீ உயிர் பிழைக்க முடியும். அதனால் நீ ஓரு வார்த்தை கூட பேச கூடாது. தகுந்த சந்தர்ப்பத்தில் நீ அவனை பழி வாங்க வேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கினார். அதற்கு கட்டுப்பட்டுத் தான் நான் இத்தனை நாட்களாக ஊமையாக நடித்தேன். நான் வாய் பேச முடியாத ஊமை என்பதால் தான் இத்தனை நாட்களாக கருணாகரன் என்னை உயிரோடு விட்டு வைத்தான் " என்றான் ஆதி.
"நீ ஊமையாக நடிப்பதற்கும் கருணாகரன் உன்னை கொல்லாமல் விட்டதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? நீ சொல்வது எனக்கு புரியவில்லை."
"நான் பேசினால் உண்மை வெளிவந்து விடும் அண்ணா. அதனால் தான் என்னை கொல்ல நினைத்தான் கருணாகரன் "
"அப்படி எந்த உண்மையை மறைக்க கருணாகரன் துடிக்கிறான்?"
" அவன் மறைக்க நினைப்பது மூன்று உண்மைகளை. முதலாவது அங்கே மனிதர்களை கொன்று தின்பது எங்கள் இனத்தவர்கள் இல்லை. ஏனென்றால் எங்கள் இனத்தவர் யாரும் அங்கே உயிருடன் இல்லை. எங்கள் இனத்தில் கடைசியாக மிஞ்சியிருப்பது நான் மட்டும் தான். இரண்டாவது உண்மை எங்கள் இனத்தவர்களை போல் வேடமிட்டு அங்கே வரும் மனிதர்களை கொன்று தின்பதாக நடித்து கொண்டிருப்பவர்கள் கடற்கொள்ளையன் மார்க்கதரிசியின் ஆட்கள் .மூன்றாவது உண்மை மார்க்கதரிசியின் புதையல் அங்கே தான் இருக்கிறது. அதை கண்டு பிடிக்காமல் இருக்கத்தான் இத்தனை நாடகங்களும்." என்றான் ஆதி.
"இவையெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் பார்த்திபன்.
"நடந்தவற்றை முழுதாக கூறினால் தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் " என்றான் வில்லவன்.
"நடந்தவற்றை நான் விளக்கமாகவே சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள். நகரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை போலவே அந்த மலை காட்டில் நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். என் அப்பா அம்மாவிற்கு நான் ஒரே பிள்ளை வேட்டையாடுவதும், தேன் எடுப்பதும், மீன்பிடிப்பதும் எங்கள் தொழில் பொழுது போக்கு. அந்த பால்ய வயதிற்கே உரிய குறும் போடுதான் என் சிறுவயது பிராயம் கழிந்தது. நகரத்தில் நடக்கும் எந்த விசயமும் அரசியல் உட்பட எதுவும் எங்களுக்கு தெரியாது. சில நபர்கள் மட்டும் நகரத்திலிருந்து வந்து எங்கள் பொருட்களை வாங்கி கொண்டு எங்களுக்கு தேவையானதை கொடுத்து செல்வார்கள். அதிகமாக ஆசைப்படாத மனம் எங்களுடையது என்பதால் வாழ்க்கை ஆனந்தமாக சென்றது. ஆனால் அது நிரந்தரமாக வில்லை என்பது தான் சோகம்.
ஓரு நாள் பலத்த புயல் ஓன்று வீசியது. எங்கள் இன மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் குடிசைகளுக்குள் முடங்கி கிடந்தனர். மறுநாள் காலை பருவ நிலைஇயல்புக்கு திரும்பியது. நான் கடற்கரையில் என் வயது தோழர்களோடு விளையாடி கொண்டிருந்த போது தான் அந்த கப்பலை பார்த்தேன். அது புயலில் சேதமடைந்து நீரில் பாதி மூழ்கிய நிலையில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்நிய மனிதர்களை பார்த்தறியாத நாங்கள் பயத்துடன் வீட்டிற்கு ஓடி விட்டோம்.
நான் மட்டும் ஆர்வமிகுதியால் ஓளிந்திருந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.
அவர்கள் மூழ்கிய கப்பலில் இருந்து பெரிய பெரிய பெட்டிகளை எடுத்து வந்து பூமியில் குழி தோண்டி புதைக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு உணவுக்காக காட்டில் அலைய ஆரம்பித்தனர். நாங்கள் கொடுத்த உணவை பணிவுடன் வாங்கி தின்றவர்கள் அதன் பிறகு உணவுக்காக எங்களை மிரட்ட ஆரம்பித்தனர். அவர்கள் நகரத்தை நோக்கி செல்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் கடல் கொள்ளையர்கள் நகரத்திற்குள் சென்றால் அவர்களை தூக்கில் போட்டு கொன்று விடுவார்கள் என்று அப்போது எங்களுக்கு தெரியாது. அந்த கூட்டத்தில் இருந்தவன் தான் கருணாகரன்.
அவன் தான் எங்கள் இனத்தை முற்றாக அழிக்க ஆலோசனை கூறியவன். அவனது திட்டப் படி புதையலை தேடி யாரும் வராமல் இருக்க இந்த காட்டை அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக மாற்ற விரும்பினான். அவர்கள் எங்கள் இன மக்களை விரட்டி விரட்டி கொன்றார்கள். ஆயுத பலமிக்க அவர்களிடம் போராட முடியாமல் எங்கள் மக்கள் இறந்தார்கள். அதில் நான் என் தாயை இழந்தேன். அந்த காட்டில் என் சொந்த வீட்டில் மறைந்து வாழ்ந்தோம். அவர்கள் எங்கள் வேடத்தை அணிந்து கொண்டார்கள்..பண்டமாற்றுக்காக நகரத்திலிருந்து வந்த நபர்களை கொன்று நரமாமிசபட்சிணிகள் வாழம் காடு என்ற பயத்தை உருவாக்கினார்கள். எங்களை முற்றாக அழித்த பின் அவர்கள் உணவுக்காக திண்டாட ஆரம்பித்தார்கள். கருணாகரன் மட்டும் அவ்வப்போது இரவு வேளையில் நகரத்திற்கு சென்று வருவான்.அப்போதுதான் மதி மாறன் இந்த தீவின் ராஜ பிரதிநிதியாக ஆளுநராக வந்து சேர்ந்திருந்தான்.
உணவிற்காக தன் கூட்டம் திண்டாடுவதை பார்த்த கருணாகரன் ஒரு நாடகம் நடத்தி மதிமாறனின் நம்பிக்கையை பெற முயன்றான்.. கடல் கொள்ளையர்களான தன்னுடைய கூட்டத்தை சேர்ந்த நால்வர் மதி மாறனை கொல்ல தாக்குதல் நடத்தும் போது தான் மதி மாறனை காப்பாற்றுவது போல் நடித்து அவனது நன்மதிப்பை பெறுவது தான் திட்டம். அதில் நன்றாக தெரிந்த ஒரு கடல் கொள்ளையன் வேண்டும் என்று பேசி நால்வரில் ஒருவனாக மார்க்கதரிசியையும் பங்கேற்க செய்தான். அவர்களின் திட்டப் படியே மதிமாறனின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறுக்கிட்டு தடுக்க வந்த கருணாகரன் திட்டப் படி அவர்களை அடித்து விரட்டாமல் கொன்றே விட்டான். அவனது வீரத்தில் மகிழ்ந்த மதிமாறன் தன் உயிரை காப்பாற்றியவனுக்கு தளபதி பட்டத்தை கொடுத்து மகிழ்ந்தான். தலைவனான மார்க்கதரிசியை கொன்று அந்த கூட்டத்திற்கே தலைவனாகி விட்டான் கருணாகரன். இறந்து போன நால்வரை பற்றிய கேள்விக்கு நான்கு பங்கை குறைத்து விட்டேன் என்று சந்தோசப்படுங்கள் என்று கூறி தன் சகாக்களை சமாதானப்படுத்தி விட்டான்.மார்க்கதரிசி என்னும் கொள்ளையன் அடையாளம் தெரியாத பிணமாக அடக்கம் செய்யப்பட்டு விட்டான். காட்டுக்குள் தப்பி ஓளிந்து வாழ்ந்த என்னையும் என் தகப்பனையும் கொல்ல அவர்கள் பெரும் முயற்சி செய்தனர்.
நாங்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஒரு நாள் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே தான் மக்கள் எங்களை தாக்கினார்கள். அங்கே வந்த கருணாகரன் உண்மை வெளிவராது இருக்க என் தந்தையை கொன்றான். உயிரை காப்பாற்றி கொள்ள நான் நிரந்தர ஊமையானேன். இரவில் மட்டும் பேசி பழகுவேன்" என்று தன் கதையை சொல்லி முடித்தான் ஆதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக