ரகசிய தீவு
அத்தியாயம் 33
தர்மத்தின் விளக்கம்
வள நாட்டின் அரசன் அங்குலி மாலன் தனக்கு எதிராக நின்று கொண்டிருந்த அமைச்சர் அம்பலவாணரை பார்த்தான்.
தன் கையில் இருந்த ஓலையை தடவிப் பார்த்த அம்பலவாணர் "நம்முடைய ஒற்றன் திருமூர்த்தியிடம் இருந்து நமக்கு ஒரு ஓலை வந்திருக்கிறது. அவனிடம் இருந்து நமக்கு வரும் இரண்டாவது ஓலை இது " என்றார் அம்பலவாணர்.
" இவ்வளவு விரைவாக நமக்கு இரண்டாவது ஓலையை அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் அவன் தன் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டி விட்டான் போல் தெரிகிறதே?" என்றான் அங்குலி மாலன் குரலில் வியப்பை காட்டி.
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. போன முறை அவன் அனுப்பிய ஓலை பறவை மூலம் நமக்கு வந்து சேர்ந்தது. இந்த முறை வந்த ஓலை நம்முடைய நாட்டிற்கு வந்த கப்பல் மூலமாக வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய ஒற்றன் கப்பல் மாலுமி மூலமாக ஓலையை கொடுத்து அனுப்பியிருக்கிறான்."
"அப்படியானால் அவன் இன்னமும் உயிரோடு ரகசிய தீவில் இருப்பது உறுதியாகிறது. மார்க்கதரிசியின் புதையல் எங்கிருக்கிறது என்று அவன் கண்டுபிடித்திருக்க வேண்டும்"
"ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன்" என்றார் அம்பலவாணர்.
"சரி. நம்முடைய ஒற்றன் அனுப்பி வைத்த ஓலையை படியுங்கள் கேட்போம்" என்றான் அங்குலி மாலன்.
"இதோ படிக்கிறேன் மன்னா" என்ற அமைச்சர் அம்பலவாணர் தீப்பந்தத்திற்கு அருகே சென்று ஓலையை விரித்துப் பிடித்தார். அவரது கண்கள் ஓலையில் இருந்த எழுத்துகள் மீது ஓட ஆரம்பித்தது.
" மாட்சிமை தாங்கிய மன்னர் சமூகத்திற்கு!
தங்கள் ராஜ்ஜிய பரிபாலனத்திற்கு உட்பட்ட கடை நிலை ஊழியன் எழுதும் கடிதம் இது. தாங்கள் என்னை அனுப்பிய காரியம் ஜெயமாகும் நிலையை நெருங்கி விட்டேன். கனமான பு தையல்களை ஏற்றி வர ஒரு கப்பலையும் ஓரு மாலுமியையும் சம்பாதித்து விட்டேன். இன்னும் சில தினங்களில் நான் இங்கிருந்து புதையலோடு கிளம்பி விடுவேன். அப்படியான தருணத்தில் இங்கே என்ன வேண்டுமானாலும் நடந்து நிலைமை நமக்கு பாதகமாக மாறலாம். அப்படியான தருணத்தில் எனக்கு உதவி செய்ய ஒரு கப்பலை அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நான் ஏற்பாடு செய்திருக்கும் கப்பலின் பெயர் முத்தழகி. ஆனால் அந்தப் பெயரில் அந்த கப்பல் இப்போது இல்லை. தோற்றத்தில் சற்று மாறி காணப்படும் இந்த கப்பல் பிரசித்தி பெற்றது.இதனை அடையாளம் கண்டு கொள்வதும் எளிது.இதில் தான் புதையலை எடுத்து வர தீர்மானித்திருக்கிறேன். அப்படி எடுத்து வரும் போது கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க நீங்கள் அனுப்பும் கப்பல் உதவி செய்தால் போதும் " இப்படிக்கு தங்கள் பணிவுள்ள அடிமை திருமூர்த்தி" என்று ஓலையை படித்து முடித்தார் அம்பலவாணர்.
"நாம் அனுப்பிய ஆள் வேலையை முக்கால்வாசி முடித்துவிட்டான் போல் தெரிகிறது" என்றான் அங்குலி மாலன்.
"ஆமாம். அப்படித்தான் தெரிகிறது" என்றார் அம்பலவாணர்.
"இவனது உதவிக்கு ஓரு கப்பல் தேவை. நாம் யாரை அனுப்புவது?"
"கவலைப்படாதீர்கள் மன்னா! நம் நாட்டின் மிக திறமையான மாலுமியை நான் இதற்காக தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் சம்மதித்தால் அவன் சற்று நேரத்தில் இங்கிருந்து கிளம்பி விடுவான்"
"மிக திறமையான கடலோடியா?"
"திறமைசாலி மட்டுமல்ல. குள்ள நரித்தந்திரத்திற்கு பெயர் போனவன்"
" அவன் பெயர்?"
"தர்மபாலன்.தங்கள் அனுமதிக்காக வெளியே காத்து நிற்கிறான்"
" எல்லாவற்றையும் தயார் செய்து விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. அவனை வரச் சொல்லுங்கள்" என்றான் அங்குலி மாலன்.
"அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது தானே அமைச்சராக என்னுடைய வேலை" என்ற அம்பலவாணர் தன் கைகளை தட்டி ஒலி எழுப்பினார்.
"தர்மபாலா! வெளியே காத்திருந்தது போதும். உள்ளே வா.மன்னர் உன்னை காண விரும்புகிறார்" என்றார் அம்பலவாணர்.
"அது என்னுடைய பாக்கியம் அமைச்சரே.!" என்றபடி அறைக்குள் நுழைந்தான் தர்மபாலன்.
ஆறடி உயரத்தில் அஜான பாகு வாக இருந்தான் அவன். அவனது கண்களில் நயவஞ்சகம் மின்னியது. அவனது முகத்தில் கொடுரம் நிரந்தரமாக தங்கியிருந்தது.
உள்ளே நுழைந்தவன் அங்குலி மாலனை பார்த்து வணங்கி மரியாதை செய்தான்.
"நீங்கள் சொன்ன ஆசாமி இவன் தானா?" என்றான் அங்குலி மாலன் அமைச்சர் அம்பலவாணரை பார்த்து.
"ஆமாம்.இவன் தான் நான் தேர்ந்தெடுத்த ஆசாமி .பெயர்தர்மபாலன்"
"தர்மபாலன்.? பெயரில் இருக்கும் தர்மம் இவனது செயலில் இருந்து விட்டால் நமது திட்டம் நிறைவேறாதுஅமைச்சரே!" என்றான் அங்குலி மாலன்.
"குறுக்கிட்டு பேசுவதற்கு மன்னிக்க வேண்டும் மன்னா . என்னுடைய பெயரில் மட்டுமே தர்மம் இருக்கிறது. என்னுடைய செயலில் தர்மம் கிடையாது. தர்மம் என்றால் என்ன? எது தேவையோ அதுவே தர்மம் என்கிறான் சாணக்கியன். கொலை, கொள்ளை இவையெல்லாம் எனக்கு தேவை என்பதால் என்னை பொறுத்தவரை இவையெல்லாம் தர்மங்களே" என்றான் தர்மபாலன்.
"நல்ல விளக்கம். உன்னுடைய விளக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த ராஜ்ஜியத்திற்கு உன்னுடைய சேவை தேவைப்படுகிறது"
உதவ தயாராக இருக்கிறேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உயிரை விடவும் நான் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடுங்கள். உடனே செய்து முடிக்கிறேன். இப்படி ஒரு வேலைக்கு என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தது என்னுடைய பாக்கியம்" என்று உணர்ச்சி பொங்க பேசினான் தர்மபாலன்.
" நல்லது. இந்த காரியத்தை செய்ய நீதான் சரியான ஆள் என்று அமைச்சர் கூறியதால் தான் உன்னை தேர்ந்தெடுத்தோம். நீ நன்றி கூற வேண்டுமானால் அவருக்குத்தான் நன்றி கூற வேண்டும்" என்றான் அங்குலி மாலன்.
"இப்படி ஒரு வாய்ப்பை என்னை நம்பி சிபாரிசு செய்ததற்கு நன்றி அமைச்சரே" என்றான் தர்மபாலன் அமைச்சரை பார்த்து.
அதை தலையசைத்து ஏற்று கொண்ட அமைச்சர் அம்பலவாணர் " காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு உனக்கு பரிந்துரை செய்த என் பெயரை காப்பாற்றுதர்மபாலா " என்றார்.
"என்னால் உங்கள் பெயருக்கு ஓரு இழுக்கும் ஏற்படாது அமைச்சரே . காரியம் என்னவென்று சொல்லுங்கள் களம் காண்கிறேன்" என்றான் அவன்.
"நீ முத்தழகி என்ற கப்பலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அமைச்சர் .
" கேள்விப்பட்டிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அதை பார்த்தும் இருக்கிறேன். உலகத்தில் அது பயணப்படாத கடல் வழிகளே இல்லை. அதனுடைய மாலுமி நீலன் என்பவன். வயதான கிழவன், குடிகாரன். ஆனால் அனுபவம் அதிகம் உள்ளவன். மிகுந்த சாமர்த்தியம் உள்ளவன். தண்ணீரிலும் தடம் கண்டு நடக்கும் ஆற்றல் கொண்டவன். அவன் உயிர் பிழைக்க தன் நண்பர்களையே கொன்று தின்றதால் நரன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான். அவனை நான் பல முறை சந்தித்திருக்கிறேன்."
"உனக்கு அந்த கப்பலை பற்றி அதிகமாகவே விவரங்கள் தெரிந்திருக்கிறது. மிகவும் பாராட்ட வேண்டிய விசயம்தான். ஆனால் அந்த கப்பல் இப்போது ரகசிய தீவில் இருக்கிறது. அதன் பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதன் தோற்றத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்கள். அதை உன்னால் அடையாளம் காண முடியுமா?"
"கொஞ்சம் சிரமம் தான். ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடித்து விடலாம். அது ஒரு பெரிய விசயம் இல்லை"
"அந்த கப்பலில் விலை மதிப்பு மிக்க ஒரு பொருள் வருகிறது. அதை கடல் கொள்ளையர்கள் திருட திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.அப்படி யாரும் அதை கொள்ளையடிக்க விடாமல் அந்த கப்பலுக்கு துணையாக .இருந்து அதை இங்கே கொண்டு வர வேண்டும். உனக்கு இருக்கும் ஒரே சிக்கல் இதற்கு சூத்ரதாரியாக இருக்கும் நம் ஓற்றனை அடையாளம் காண முடியாதது தான். அவனை நாம் கடிதம் மூலமாக தொடர்பு கொள்ள முடியாது. நீ நாங்கள் அனுப்பிய ஆள் என்று அவன் எப்படி அடையாளம் கண்டு கொள்வான்?"
அதற்கு ஒரு வழி இருக்கிறது. மன்னரின் முத்திரை மோதிரம். அது என் கையில் இருந்தால் அந்த ஓற்றன் என்னை அடையாளம் கண்டு கொள்வான் இல்லையா?" என்றான் தர்மபாலன்.
"நல்ல யோசனையை கூறினாய். நீ அவனை அடையாளம் கண்டுகொள்ளாவிட்டாலும் என் முத்திரை மோதிரத்தால் அவன் உன்னை அடையாளம் கண்டு கொள்வான். இதோ என்னுடைய முத்திரை மோதிரம் " என்ற அங்குலி மாலன் தன்னுடைய மோதிரத்தை கழற்றிகொடுத்தான்.
அதை பணிவுடன் வாங்கி கொண்ட தர்மபாலன்" மிகவும் நன்றி அரசே ! என்னுடைய ஆலோசனையை ஏற்றதற்கு " என்றான்.
" நல்லது. நீ இப்போதே ரகசிய தீவிற்கு பயணமாகலாம். வெற்றியுடன் திரும்பி வா." என்றான் அங்குலி மாலன்.
" என் பெயரை கெடுத்து விடாதே!" என்றார் அமைச்சர் அம்பலவாணர்.
"என்னை நம்புங்கள். நான் வெற்றியுடன் திரும்ப வருவேன்" என்ற தர்மபாலன் முத்திரை மோதிரத்துடன் கிளம்பினான்.
அன்று இரவு தர்மபாலனின் கப்பல் வள நாட்டிலிருந்து ரகசிய தீவை நோக்கி கிளம்பியது.
காட்டில்.!
" என்ன சொல்கிறாய்? இப்படி உணவை சமைத்து இங்கே அனுப்புவது மர்ம யோகியா?" என்றான் யவனன்.
அவனது கைப் பிடியில் சிக்கி கசங்கி கொண்டிருந்தான் உணவு பொருள்கள் கொண்டு வந்த குழவில் இருந்த ஒருவன்.
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். அவரது ஆசிரமத்திலிருந்து தான் இந்த உணவுகள் தினமும் அனுப்பப்படுகின்றன"
"யார் அந்த மர்மயோகி ?" என்றான் ஆதித்தன்.
" ஒரு ஆன்மீக பெரியவர். அவர் இப்படி செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை" என்றான் யவனன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக