ரகசிய தீவு
அத்தியாயம் 35
இரண்டு உளவாளிகள்
ஆதித்தன் யவ னனை கூர்மையாக பார்த்தான். "யோகி என்பவர் யார்?" அவனிடமிருந்து புறப்பட்டது கேள்வி ஓன்று.
"நான் அந்த ஆசாமியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ரகசிய தீவில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தரும் ஆன்மீகப் பெரியவர் என்று கேள்வி.ஆனால் அவர் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. என்னை பொறுத்தவரை அவர் அரசின் எந்த அதிகார மட்டத்திற்கும் அணுக்கமாக இருந்தது கிடையாது" என்றான் யவனன்யோசனையுடன் .
"எங்கள் குழுவும் கூட அவரது ஆசிரமத்தில் ஓரு கலை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். எங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சன்மானத்தை அள்ளி கொடுத்திருக்கிறார். மக்கள் மத்தியில் அவருக்கு மிகவும் நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அவர் ஏன் இந்த காட்டுவாசிகளுக்கு உணவு கொடுத்து போஷிக்க வேண்டும் என்பது தான் புரியவில்லை" என்றான் கடோத்கஜன்.
"அவரின் நடத்தை எனக்கு புதிராக இருக்கிறது. நாம் முதலில் இவர்களை கட்டிப் போடுவோம். பசியோடு இருக்கும் நம் ஆட்களுக்கு முதலில் உணவு கொடுப்போம். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்போம்" என்றான் ஆதித்தன்.
" அப்படியே செய்யலாம் .இவர்களை நாம் எங்கே அடைத்து வைப்பது?" என்றான் யவனன்.
"அதை நான் சொல்கிறேன். இங்கே உணவு கொண்டு வந்தவர்களில் யார் யாருக்கெல்லாம் கடலில் படகு செலுத்தும் கலை தெரியும்?" என்று அடுத்த கேள்வியை வீசினான் ஆதித்தன். அவர்கள் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டு உதடுகளை பிதுக்கினார்கள்.
"எங்களில் யாருக்கும் கலம் செலுத்தும் அனுபவம் இல்லை.கலத்தில் பயணம் செய்த அனுபவம் மட்டுமே சிலருக்கு இருக்கிறது" என்றான் தலைவன்.
" நல்லது. அப்படியானால் நாம் இவர்களை நம் கப்பலான கழுகில் அடைத்து வைப்போம். அது நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிற்பதால் இவர்களால் அதை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட முடியாது" என்றான் ஆதித்தன்.
ஆதித்தனின் யோசனை உடனடியாக அமல்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் காலியாக இருந்த கழுகினுள் ஏற்றப்பட்டு அதன் உள்ளறையில் அடைக்கப்பட்டனர்.
"சரி நாம் கிளம்பலாம்.இந்த வண்டிகளை ஆளுக்கு ஓன்றாக எடுத்து கொண்டு நாம் நம் தோழர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம். நாம் கிளம்பி வந்து வெகு நேரமாகிவிட்டது. அவர்கள் பசியோடு நமக்காக காத்திருப்பார்கள்" என்றான் யவனன்.
"நாம் புறப்படலாம்" என்றான் ஆதித்தன்.
மூவரும் ஆளுக்கு ஓரு வண்டியில் ஏறிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவற்றில் பூட்டப்பட்டிருந்த கால்நடைகள் தங்களை புதிய மனிதர்கள் வழி நடத்துவதை பார்த்து முதலில் மிரண்டாலும் போகப் போக அவர்களின் கட்டளைக்கு அடிபணிய துவங்கி விட்டன.
கையில் ஆயுதங்களுடன் கிளம்பி சென்ற மூவரும் திரும்பி வரும்போது வாகனங்களில் உணவு பொருட்களுடன் வருவதைப் பார்த்த மற்ற நண்பர்கள் ஆச்சர்யமும், வியப்பும் அடைந்தனர். இந்த அடர்ந்த வனத்தில் இவர்களுக்கு எப்படி இவ்வளவு சமைக்கப்பட்ட உணவு பொருட்களும் வண்டிகளும் கிடைத்தன என்று தங்களுக்குள் கிசுகிசுப்பாக பேசி கொள்ள துவங்கினர்.
அவர்களின் வியப்பையும், திகைப்பையும் புரிந்து கொண்டு விட்ட ஆதித்தன் தாங்கள் உணவு தேடி கிளம்பிய விநாடியிலிருந்து நடந்த சம்பவங்களை விரிவாக எடுத்து கூறினான்.
"நண்பர்களே! நீங்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் இருப்பீர்கள். முதலில் நாங்கள் கொண்டு வந்த உணவினை உண்ணுங்கள். பிறகு என்ன செய்யலாம் என்பதை யோசிப்போம்!" என்றான் கடோத்கஜன்.
அவர்கள் கும்பலாக அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ண தொடங்கினர். ஆதித்தன் மட்டும் அவர்களுடன் அமராமல் நின்று கொண்டிருந்தான்.
"ஆதித்தா! நீ மட்டும் ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்?வா வந்து சாப்பிடு" என்றான் யவனன்.
" உன் அழைப்பிற்கு நன்றி நண்பா. உணவு போக வேண்டிய இடத்திற்கு போய் சேராததால் நம்முடைய நண்பர்கள் பசி தாங்க இயலாமல் உணவைதேடி இந்நேரம் கிளம்பி இருப்பார்கள். அதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்"
"நல்ல எண்ணம்தான். ஆனால் அதற்கு எந்த தேவையும் இங்கே இல்லை. என்னுடைய ஹேர்குலஸ் இந்த பகுதியை சுற்றி வட்டமிட்டு பறந்து கொண்டிருக்கிறது. அதன் கூரிய பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது.அப்படி ஏதாவது சிறு அசைவு ஏற்பட்டாலும் ஹேர்குலஸ் நம்மை எச்சரிக்கை செய்து விடும்" என்று சிரித்தான் யவனன்.
"அதுவும் சரிதான்." என்ற ஆதித்தன் உணவருந்த உட்கார்ந்தான்.
அனைவரும் உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் ஆதித்தன்.
அவனது சிந்தனையை கலைத்தது ேஹர்குல சின் கீச்சொலி.
அதுவரை வானத்தில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த அந்த பறவை திடிரென்று வழக்கத்திற்கு மாறாக தரையில் வந்தமர்ந்தது.
அதை பார்த்த யவனனின் முகம் மாறியது.
" நம்மை ஆபத்து நெருங்கி விட்டது" என்றான் யவனன். கடோத்கஜன் குழவினரை எச்சரிக்கை செய்தான்.
அவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு எதிரிகளை வரவேற்க தயாரானார்கள்.
அவர்களை சுற்றி இருந்த காட்டு பகுதியில் மண்டியிருந்த புதர் செடிகளின் நடுவே அசைவு ஏற்பட ஆரம்பித்தது.
அனைவரும் விழிப்புடன் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.
xxxx
தன்னுடைய முத்தழகி கப்பல் தனக்கு திரும்ப கிடைத்து விட்டதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் நீலன்.அதற்கு உதவி செய்த கருணாகரனை கட்டி தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்த நீலன் அடுத்ததாக ஓடிச் சென்றது கப்பலின் சுக்கானை பார்த்து தான். நீண்ட நாள்களுக்கு பிறகு தனக்கு பழக்கமான சுக்கானை தொட்டு தடவினான் நீலன்.அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தான் அவன்.
முத்தழகியின் வடிவமைப்பை மாற்றியமைத்திருந்த நஞ்சுண்டனின் வேலையை மனதார சபித்த அவன் "பொறுகண்ணே! விரைவிலேயே உன்னுடைய அழகான தோற்றத்தை நான் உனக்கு திரும்ப பெற்று தருகிறேன். அந்த அசிங்கம் பிடித்த பயல் உன்னுடைய அழகை கெடுத்து விட்டான். விரைவிலேயே அவன் அதற்கான தண்டனையை பெறுவான். அவன் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை தேடிப் பிடித்து மென்னியை உடைக்காமல் விடமாட்டேன்" என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டான்.
தனக்கு துரோகம் செய்து விட்டு நஞ்சுண்டனுடன் இணைந்து கொண்ட தன்னுடைய முன்னாள் நண்பர்களை பார்த்து கோபத்துடன் பேசவும் அவன் மறக்கவில்லை.
"எனக்கு துரோகம் செய்த நண்பர்களே! சீ உங்களை போன்ற துரோகிகளை நண்பர்கள் என்று சொல்வதே பெரும் தவறு. தனிமை தீவில் செத்து ஒழிந்து போவான் இந்த நீலன் என்று நினைத்தீர்களோ? நான் நீலன். நான் உயிரோடு இருக்க யாரையும் கொன்று தின்ன தயங்காத நரன். அவ்வளவு எளிதில் நான் மரணத்திற்கு என்னை ஓப்புக் கொடுத்து விட மாட்டேன். எனக்கு துரோகம் செய்து விட்டு நஞ்சுண்டனுடன் சேர்ந்து கொண்டு நீங்கள் அடைந்த பலன் என்ன ?இதோ இந்த கப்பல் கரையை அடைந்ததும் நீங்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட போகிறீர்கள். துரோகம் வீழ்ந்தது தான் வரலாறு. நீங்கள் துரோகம் செய்து தனியாக விடப்பட்ட நான் இப்போது நன்றாகத்தான் இருக்கிறேன். இதோ நான் இழந்த என் கப்பல் திரும்ப கிடைத்து விட்டது. கடவுளின் அனுக்கிரகத்தால் நஞ்சுண்டன் உங்களை ஏமாற்றி ஓளித்து வைத்த செல்வம் உங்கள் யாருக்கும் கிடைக்காமல் எனக்கு கிடைத்த போதே உங்களுக்கு தெரிய வேண்டாமா கடவுளின் ஆசியை முழுமையாக பெற்றவன் நான் என்று " என்று கோபத்தில் இறைந்தான் நீலன்.
"எங்களை மன்னித்து விடு நீலா.நஞ்சுண்டனுடன் சேர்ந்து கொண்டு நாங்கள் உனக்கு துரோகம் செய்தது தவறு தான் " என்றான் அவனது முன்னாள் சகாக்களில் ஒருவன்.
"நீங்கள் அனைவரும் சாவகாசமாக வருந்த நீண்ட சிறைவாசம் காத்திருக்கிறது. அதில் உங்களுடன் கலந்து கொள்ள விரைவிலேயே நஞ்சுண்டனும் வந்து சேருவான். கவலைப்படாதீர்கள்" என்றான் நீலன் குரோதத்துடன் .
நீலனின் மகிழ்ச்சியையும், கோபத்தையும் கவனித்து கொண்டிருந்த கருணாகரன் "கவலைப்படாதே நீலா.! உன்னுடைய கனவை நான் நிறைவேற்றி வைத்துவிட்டேன். கை மாறாக நீ என்னுடைய கனவை நீ நிறைவேற்ற வேண்டும்."
" என்ன செய்ய வேண்டும் கருணாகரா. என் கையை விட்டு போனவற்றை திரும்ப என்னிடம் கொண்டு வந்து சேர்த்தவன் நீ. உன் கனவு என்னவென்று சொல் அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீலன்.
"எனக்கு மார்க்க தரிசியின் தங்கம் தேவை "
"என் கப்பல் தான் எனக்கு திரும்ப கிடைத்து விட்டதே? இனியும் ஏன் தாமதிக்க வேண்டும்? அந்த தங்கம் எங்கிருக்கிறது என்று சொல். அதை எடுப்போம்."
அது இருக்கும் இடம் ரகசியமானது. எனக்கு மட்டும் தான் அந்த இடம் தெரியும். நீ கப்பலை ரகசிய தீவை நோக்கி செலுத்து. அங்கே இருந்து நாம் மார்க்கதரிசியின் தங்கத்தை எடுப்போம்"
"சரி. உன் திட்டத்திற்கு நான் சம்மதிக்கிேறன். நீ ரகசிய தீவின் பிரதான தளபதி. அந்த தங்கத்தை மதி மாறனிடம் ஓப்படைத்து நல்ல பெயர் எடுக்காமல் அதை எடுத்து கொண்டு தப்பி ஓட திட்டமிடுகிறாய். அப்படி எங்கே தான் அந்த புதையலை கொண்டு சேர்க்க விரும்புகிறாய்?"
" என் தாய் நாட்டிற்கு அதை கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றான் கருணாகரன் கண்களின் கனவுடன் .
"உன்னுடைய தாய் நாடா? அப்படியானால் ரகசிய தீவு உன்னுடைய தாய் நாடு இல்லையா?"
"இல்லை"
"அப்படியானால் உன்னுடைய தாய் நாடு?"
"வள நாடு. அந்த தங்கத்தை நான் அங்கு தான் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றான் கருணாகரன்
" காரணம்?"
"நான் அந்த நாட்டின் ஒற்றன்" என்றான் கருணாகரன்
மலைநாட்டு ஓற்றனான நீலனும் வள நாட்டின் ஒற்றனான நீலனும் எதிரெதிராக நின்று கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக