வெள்ளி, 2 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு 

அத்தியாயம் 28

இறந்தவன் கடிதம்

வள நாட்டின் அரசன் அங்குலி மாலன் தனக்கு எதிரே நின்றிருந்த அமைச்சர் அம்பலவாணனையே உற்று பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த அம்பலவாணரின் முகம் சிந்தனை வசப்பட்டிருந்தது. அவரது சிந்தனைக்கு காரணம் அவர் கையிலிருந்த ஓலை.

"அந்த ஓலையை முழுதாக படித்து முடித்து விட்டீர்களா?" என்றான் அங்குலி மாலன்.

"படித்து விட்டேன். இந்த ஓலை எப்போது வந்தது? எங்கிருந்து வந்தது?" என்றார் அம்பலவாணர்.

"சற்று முன் தான் இந்த ஓலை புறா மூலம் இங்கு வந்து சேர்ந்தது. இதிலிருக்கும் தகவலைப் பற்றி விவாதிக்கத்தான் நான் உங்களை உடனடியாக அழைத்து வரச் சொன்னேன்."

"இந்த ஓலையை எழுதிய நபர் இறந்து ஐந்து வருடங்களாகி விட்டது.இறந்தவனிடமிருந்து ஓலை வந்திருப்பது எனக்கு விசித்திரமாக தோன்றுகிறது "

"எனக்கும் தான். இந்த ஓலையை எழுதிய நபர் யார்? அவனைப் பற்றி எனக்கு எந்த நினைவும் இல்லை.உ ளவும், ஓற்றும் உங்கள் கண்காணிப்பின் கீழ் வருகிறது. அதனால் இவனைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவனைப் பற்றிய முழு விவரங்களையும் எனக்கு கூறுங்கள்"

" கூறுகிறேன். அதற்கு முன்னால் இந்த ஓலையை மீண்டும் ஒருமுறை சத்தமாக வாசிக்கிறேன். கவனமாக கேளுங்கள்" என்ற அம்பலவாணர் கையில் இருந்த ஓலையை பிரித்து அதை சத்தமாக வாசிக்க துவங்கினார்.

"வள நாட்டின் மன்னருக்கு!
தங்களின் விசுவாசமான குடிமகன் ரகசிய தீவிலிருந்து எழுதுவது. நான் அந்த மார்க்கதரிசியின் தங்க புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன். அதை தாயகம் கொண்டு வருவதற்கான முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் வெற்றி செய்தியுடனும் தங்கப்புதையலுடனும் தங்களை சந்திப்பேன்.

நான் யார் என்று அடையாளம் புரியாவிட்டால் ஒற்றர் படை தலைவரான அமைச்சர்அம்பலவாணரிடம் இந்த லிகிதத்தை காட்டவும். அவருக்கு இந்த கடிதத்தின் சராம்சம் முழுதாக புரியும். ஏனென்றால் வள நாட்டை பொறுத்தவரை நான் இறந்து போனவன். ஆனால் ஆண்டவன் அருளால் நான் சாகவில்லை என்பது தான் உண்மை. விரைவில் தாயகம் திரும்ப காத்திருக்கிறேன்

இப்படிக்கு

கடிதத்தின் இறுதியில் கையெழுத்திற்கு பதில் ஒரு திரிசூலம் வரையப்பட்டிருந்தது.

ஓலையை சுருட்டி வைத்த அம்பலவாணர் அங்குலி மாலனை நிமிர்ந்து பார்த்தார்.

" அவன் தன் பெயரை வெளியே தெரிவிக்க விரும்பவில்லை போல " என்றான் அங்குலி மாலன்.

"நாம் எதிரி நாட்டுக்குள் நுழைந்து உளவறிவது போல எதிரிகளும் நம் நாட்டிற்குள் ஊடுருவி உளவு வேலையில் ஈடுபடலாம். அவர்கள் நம் ஆட்களை இனம் காணாதிருக்க நம் ஆட்களின் உண்மை பெயரை மறைத்து விடுவோம். வேறு பொய்யான பெயரை அவனுக்கு சூட்டி விடுவோம். கடிதம் எழுதும் போது சூசகமான சின்னங்களை கையெழுத்திற்கு பதிலாக எழுதுவது நம் வழக்கம்."

"அந்த திரிசூல சின்னத்தை வைத்து அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா?"

" கண்டுபிடித்து விட்டேன். இந்த சின்னம் நம்முடைய ஆளுடையது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. அவனுடைய பெயர் திருமூர்த்தி .நம் ஓற்றர் படையில் இருக்கும் வெகு திறமையான ஆட்களில் அவனும் ஒருவன்."

" அவனுக்கு கடைசியாக என்ன பணி கொடுக்கப்பட்டது?" என்றான் அங்குலி மாலன்.

"உங்களுக்கே நன்றாக தெரியும். மார்க்கதரிசி என்னும் கடல் கொள்ளையன் நம் நாட்டு வணிக கப்பல்களையும், மலைநாட்டு வணிக கப்பல்களையும் கொள்ளையடித்து வந்தது. அவனை பிடிக்கவும் அவனிடம் இருக்கும் தங்கத்தை கைப்பற்றவும் நம்மால் நியமிக்கப்பட்டவன் தான் இந்த திருமூர்த்தி என்கிற ஒற் றன். இவனை இந்த பணியில் ஈடுபடுத்த பிரத்யேகமான காரணம் ஓன்று உண்டு. அவனது தகப்பன் ஒரு கடலோடி .அதனால் கடலைப் பற்றிய அனுபவம் அவனுக்கு அதிகம் உண்டு. அதனால் இந்த பணிக்கு இவன் தான் சரியான ஆள் என்று இவனை நியமித்தேன்.

இவனும் எப்படியோ மார்க்கதரிசியின் கூட்டத்தில் ஊடுருவி விட்டான்.வெகு விரைவிலேயே தன்னுடைய அனுபவம் வாய்ந்த அறிவால் மார்க்கதரிசியின் நம்பிக்கையை பெற்று விட்டான். தன்னுடைய நடவடிக்கைகளை பற்றி மாதம் ஒரு முறை ஓலை அனுப்பி எனக்கு தகவல் தெரிவிப்பான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவனிடமிருந்து ஓலை வருவது திடிரென்று நின்று விட்டது. நான் விசாரித்த போது புயலில் சிக்கிய மார்க்கதரிசியின் கப்பல் கடலில் மூழ்கி விட்டதாகவும் அப்போது தப்பிபிழைத்தவர்கள் ரகசிய தீவில் எங்கோ ஓரு இடத்தில் புதையலை புதைத்து வைத்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். தப்பி பிழைத்தவர்களில் நம்முடைய ஆளும் இருந்தால் கண்டிப்பாக எனக்கு கடிதம் எழுதுவான் என்று நினைத்தேன். ஆனால் அவனிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை. அதனால் அவன் இறந்திருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இன்று இறந்தவனிடமிருந்து கடிதம் வந்திருப்பது தான் புதிராக இருக்கிறது"

"இந்த கடிதம் அவன் எழுதியது தான் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இல்லையே?"

"ஏன் அப்படி கேட்கிறீர்கள்?"

" என் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஐந்து வருடங்களாக நம்மை தொடர்பு கொள்ளாமல் இருக்க என்ன காரணம் இருக்க முடியும்?"

" காரணம் இல்லாமல் அவன் இப்படி செய்ய மாட்டான். ஒரு வேளை காரியம் ஜெயமான பின்பு நம்மை தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம். என்ன காரணம் என்பது அவனை கேட்டால் தான் தெரியும்."

" நல்லது. இப்போது நாம் என்ன செய்வது?"

"வேறு என்ன செய்ய முடியும்? அடுத்த ஓலைவரும் வரை காத்திருக்க வேண்டியது தான் " என்றார் அம்பலவாணர்.

" காத்திருப்போம். களவு போனவள நாட்டின் செல்வங்களை திரும்ப பெற நான் காத்து கொண்டிருக்கிறேன்" என்றான் அங்குலி மாலன்.

ரகசிய தீவில்!

ஆதித்தனும், யவனனும், கடோத்கஜனும் மறைந்து நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்தனர்.

பெரிய பெரிய பாத்திரங்களை சுமந்து கொண்டு வாகனங்கள் மெதுவாக வந்து கொண்டிருந்தன.

"மனிதர்களை கொன்று தின்னும் நர மாமிசபட்சினிகன் வசிக்கும் காட்டிற்குள் இந்த வாகனங்கள் போவது போல் தெரிகிறது" என்றான் யவனன்.

"இது இன்று மட்டும் நடப்பதல்ல. வாடிக்கையாக தினமும் நடக்கும் சம்பவம் " என்றான் ஆதித்தன் அமைதியாக .

"iஉனக்கு எப்படி இது தெரியும்?" என்றான் கடோத்கஜன்.

" வண்டி வரும் பாதையை கவனியுங்கள். வண்டி அடிக்கடி இதில் பயணமாவதால் வண்டி சக்கரம் தரையில் படும் இடங்களில் புற்கள் வளராமல் இருக்கின்றன. இன்று மட்டும் வண்டிகள் வருவதாக இருந்தால் அந்த இடங்களில் புற்கள் வளர்ந்திருக்கும் "

" புத்திசாலி தான் நீ " என்றான் யவனன்.

"இன்னொன்றையும் கூறுகிறேன். கேட்டு விட்டு மொத்தமாக பாராட்டு. இந்த வண்டி குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணமாகி இருக்க வேண்டும். வண்டிக்குபின்னால் நடந்து வரும் ஆட்கள் அடிக்கடி வேர்வையை துடைத்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலையிலேயே நடை பயிற்சியில் ஈடுபட்டதால் வருவது தான் அந்த வியர்வை . மாடுகளின் வாயில் நுரை தள்ளுவதை வைத்து பார்த்தால் உணவு சமைக்கும் இடம் ஒரு மணி நேர பயண தூரத்தில் தான் இருக்க வேண்டும்."

"ஆஹா "

"மூன்று வேளைக்கு மான உணவு தான் இங்கு வந்திருக்கிறது. இது வாடிக்கையாக நடக்கும் சம்பவம் போல் தெரிகிறது."

"எனக்கு பயங்கரமாக பசிக்கிறது. நம் ஆட்களும் பசியில் வாடுகிறார்கள். நாம் அந்த உணவை கைப்பற்றினால் என்ன?" என்றான் கடோத்கஜன்

"நானும் அதைத்தான் நினைத்தேன். வாடிக்கையாக உணவு போகும் இடத்திற்கு போகாவிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்க விரும்புகிறேன்" என்றான் ஆதித்தன்.

"சரி. பேசியது போதும். நாம் விரைவாகச் சென்று அந்த வண்டிகளை கைப்பற்றுவோம்." என்றான் யவனன்.

" அப்படியே வண்டிகாரர்களை விசாரிப்போம்" என்றான் கடோத்கஜன்.

"உணவு ேபாக வேண்டியவர்களுக்கு போகாது. உணவு கொண்டு போனவர்களும் திரும்பி வரவில்லை. இரண்டு பக்கமும் இன்று குழப்பமான நிலைமை ஏற்பட போகிறது " என்று சிரித்தான் ஆதித்தன்

"நான் அந்த திசையில் யோசிக்கவேயில்லை. இப்போது என்ன செய்வது?"

"நம் திட்டப் படிவண்டிகளை மறிப்போம். வாருங்கள் போகலாம்" என்றான் ஆதித்தன்.

மூவரும் பு தர்களை கடந்து மரங்களின் மறைவில் முன்னேறினர். கடோத்கஜன் எதையோ மிதித்து விட சடக் என்று எழுந்தது சத்தம்.

சத்தம் வந்த திசையில் பார்த்தான் யவனன். அங்கே ஒரு எலும்பு கூடு கிடந்தது.

"அந்த காட்டுவாசிகள் மனிதர்களை தின்று விட்டு எலும்பை இங்கே எறிந்திருக்கிறார்கள்" என்றான் கடோத்கஜன்.

அந்த எலும்பு கூட்டை உற்று பார்த்த ஆதித்தன் "உங்கள் நினைப்பு தவறு. பொதுவாக காட்டுவாசிகள் மனித உடலை பகுதி பகுதியாக பிய்த்துத்தான் தின்பார்கள். இப்படி முழுதாக விட்டு வைக்க மாட்டார்கள். இதோ. இந்த எலும்பு கூட்டின் நெஞ்செலும்பை பாருங்கள். உடைந்திருக்கிறது. யாரோ இவனது மார்பில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். அதில் தான் இவனது நெஞ்செலும்பு உடைந்திருக்கிறது. இவனது மண்டையோட்டின் பின் பகுதி சேதமடைந்திருக்கிறது. இவனை யாரோ கல்லால் பின்னால் இருந்து தாக்கியிருக்க வேண்டும். காயப்பட்டு விழுந்தவனின் மார்பில் குறுவாளைபாய்ச்சி கொன்றிருக்கிறார்கள்" என்றான் ஆதித்தன்.

"நீ சொல்வதை வைத்து பார்த்தால் காட்டிற்குள் இருப்பது?" என்றான் யவனன்.

" காட்டுவாசிகள் இல்லை" என்று சிரித்தான் ஆதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக