ரகசிய தீவு
அத்தியாயம் 18
தப்பிக்கும் படலம்
நிலவு நடு வானத்திற்கு வந்து தன்னுடைய வெண்மையான ஓளியை பூமி பந்து எங்கும் கசிய விட்டு கொண்டிருந்த இரண்டாம் சாமம் தொடங்கியிருந்தது. சிறை கூடத்திற்குள் இருந்த ஆழ்ந்த அமைதியைசில்வண்டுகளின் ரீங்கார ஓலியும், தூக்கத்தில் ஆழ்ந்து விட்ட காவலர்களின் மெல்லிய குறட்டை ஒலியும் குலைத்து கொண்டிருந்தன. ஆதித்தன் இருள் ந்த சிறைகூடம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது.
கலை கூத்தாடி குழுவினர் ஆதித்தனின் திட்டம் என்னவென்று தெரியாமல் ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டிருந்தனர். யவனன் ஆதித்தனை பார்த்து இதுதான் சரியான சமயம் பேசு என்று சைகை செய்தான். ஆதித்தன் எழுந்து நின்று எல்லோரையும் ஒரு முறை கூர்மையாக பார்த்தான். அவன் எழுந்து நின்றதை பார்த்ததும் அவன் எதையோ பேசப் போகிறான் என்று ஊகித்து கொண்டவர்கள் அவனையே அமைதியாக பார்க்க தொடங்கினர். தன் தொண்டையைகனைத்து கொண்ட ஆதித்தன் மெல்லிய குரலில் பேச தொடங்கினான். அவனது குரலில் அதீதமான எச்சரிக்கையும் கவனமும் இருந்தது. அவர்கள் இருந்த சிறைகூடத்திற்குள் மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலில் அவன் பேச ஆரம்பித்தான்.
"நண்பர்களே.!நாம் தெரிந்தோ தெரியாமலோ மதிமாறனின் கோபத்திற்கு ஆளாகி சிறைபட்டு விட்டோம். சிறைவாசம் நம்மை நண்பர்களாக்கி விட்டது. நாம் அனைவரும் இங்கிருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும்"
"இங்கேயிருந்து நாம் எப்படி தப்பிப்பது?" என்றான் கடோத்கஜன்.
"அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை போல் நீங்கள் நடந்தால் நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்"
"சரி. நீ சொல்வது போல் நாம் இங்கிருந்து தப்புகிறோம் என்றே வைத்து கொள். அப்படி தப்பிய நாம் எங்கே செல்வது? இது ஒரு தீவு . இங்கிருந்து தப்பி செல்ல கடலை தவிர வேறு மார்க்கமில்லை. கடலை கடக்க படகு தேவை. அந்த படகுகளும், கப்பல்களும் துறைமுகத்தில் தான் இருக்கின்றன. நாம் தப்பித்து செல்ல வேண்டுமென்றால் துறைமுகத்திற்குத் தான் செல்ல வேண்டும். அங்கே நாம் செல்வது கசாப்பு கடையை தேடி ஆடு தானாக வலியசெல்வதை போன்றது. நாம் தப்பித்து செல்வது வீண் வேலை என்றுதான் தோன்றுகிறது" என்றான் கலை குழுவில் ஓருவன்.
"அதற்காக பேசாமல் சிறையிலேயே இருந்து இறந்து விடுவோமா? அடுத்த நொடி என்ன அதிசயம் நடக்கும் என்று தெரியாதது தான் வாழ்வின் சுவாரஸ்யம். நாம் தப்பித்த பின் நம்முடைய வாழ்விலும் எதாவது அதிசயம் நிகழும் என்று நம்புவோம். அந்த அதிசயம் நம்முடைய வாழ்வில் நடக்க வேண்டுமானால் முதலில் நாம் இங்கிருந்து தப்பித்து செல்ல வேண்டும்" என்றான் யவனன் கோபத்துடன் .
"நீ சொல்வதும் சரிதான். தப்பித்து செல்ல நமக்கு வேறு ஏதாவது வழிகள் கிடைக்கலாம். முதலில் நாம் இங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்வோம்." என்றான் கடோத்கஜன்.
" பாருங்கள் நண்பர்களே! நாளை உங்கள் கலை குழுவின் தலைவன் இங்கே வருகை தரப் போகிறான். நாம் இன்று இரவு இங்கிருந்து தப்பித்து சென்று விட்டால் மதிமாறனின் கோபம் அதிகரிக்கும். செங்கோடன் அவனிடம் அகப்பட்டு விட்டால் அவனுடைய நிலைமை பரிதாபகரமாகி விடும். தனிமை சிறையில் இருக்கும் எங்கள் நண்பன் நீலனை வேறு நாங்கள் மீட்டாக வேண்டும். அந்த முகமூடி வேறு உங்கள் குழுவை சார்ந்த பெண்ணை கடத்தி சென்று விட்டான். அவளை வேறு நாம் மீட்க வேண்டும். இப்போதைக்கு இந்த தீவில் மாயாவி போல் மறைந்து திரிபவன் அந்த முகமூடி ஓருவன்தான். அவனை கண்டுபிடித்து விட்டால் அவன் நம்மை மறைத்து வைத்து காப்பாற்றுவான். அந்த பெண் சந்திரவதனாவும் நமக்கு திரும்ப கிடைப்பாள். நாம் தப்பி செல்ல அந்த முகமூடியே ஏதாவது ஏற்பாட்டை செய்து தரலாம்"
"நீ சொல்வது சரிதான். இப்போது இங்கிருந்து தப்பி செல்லும் நாம் எங்கே சென்று பதுங்குவது? இருள் விலகி பகல் வந்ததும் நாம் எளிதில் பிடிபட்டு விடுவோம். பகலில் நாம் எங்கே மறைந்து இருப்பது?"
"முதலில் நாம் தப்பி செல்வோம். பிறகு அதைப் பற்றி யோசிப்போம்" என்றான் ஆதித்தன்.
"ஆதித்தன் சொல்வது தான் சரி. நாம் முதலில் இங்கிருந்து தப்பித்து செல்வோம். பிறகு நம்முடைய அதிர்ஷ்டத்தை பரிசோதனை செய்து பார்ப்போம். சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதை விட எதையாவது செய்து கொண்டிருப்பது மேல் " என்றான் கடோத்கஜன்.
"நண்பர்களே! நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். நமக்கு சிறையில் தரப்பட்ட படுக்கை விரிப்புகளை பிரித்து பாருங்கள். அதில் இருக்கும் தேங்காய் நார்களை பயன்படுத்தி நாம் உடனடியாக ஒரு கயிறை தயார் செய்ய வேண்டும்" என்றான் ஆதித்தன்.
" செய்து விடலாம். ஆனால் அது எத்தனை அடி நீளம் இருக்க வேண்டும் என்று நீ குறிப்பிடவில்லையே? " என்றான் கடோத்கஜன்.
" சொல்கிறேன். இந்த சிறைகூடத்தில் இருக்கும் ஓரே ஒரு சன்னல் இது தான் " என்ற ஆதித்தன் நான்கடி அகல உயரத்தில் இருந்த இரும்பு கம்பிகள் நிறைந்த சன்னலை சுட்டி காட்டினான்.
"நம்முடைய அதிர்ஷ்டம் இந்த சிறைகூடம் கடலை ஓட்டியே அமைந்திருக்கிறது. அந்த சன்னலிலிருந்து இருபதடி தொலைவில் ஒரு பாறை இருக்கிறது. அந்த பாறைக்கு செல்லும் தூரம் வரை நமக்கு கயிறு தேவை."
"அதாவது இருபதடி நீளத்திற்கு கயிறு தேவை என்கிறாய்?"
"ஆமாம்"
"தயார் செய்து விடுவோம்" குழுவினர் அவசரமாக களத்தில் இறங்கினர். சிறையில் இருந்த படுக்கைகள் பிரிக்கப்பட்டு அதிலிருந்த தேங்காய் நார்கள் கயிறுகளாக திரிக்கப்பட்டன. கைகள் வலித்த போது தொடைகளை பயன்படுத்தி வெகு வேகமாக கயிறு தயாரானது. அதன் உறுதியையும் நீளத்தையும் சோதித்து பார்த்து திருப்தியடைந்த ஆதித்தன்" முதல் கட்டம் தயாராகி விட்டது.இனி இரண்டாவது கட்டத்தை நோக்கி செல்வோம்." என்றவன்" இப்போது உன்னுடைய முறை" என்றான் கடோத்கஜனன பார்த்து.
"நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான் கடோத்கஜன் குழப்பத்துடன்
"இந்த நான்கடி சன்னலில் இருக்கும் சில இரும்பு கம்பிகளை உன் பலத்தை பயன்படுத்தி நீ உடைத்து எடுக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.
"அதற்கென்ன செய்து விட்டால் போயிற்று" என்றபடி சன்னலை நோக்கி நகர்ந்த கடோத்கஜனை இடை யிட்டு தடுத்தான் யவனன்.
" என்ன?" என்றான் கேள்விக்குறியோடு கடோத்கஜன்.
"இந்த கம்பிகளை வளைக்க ரசிகர்களின் கை தட்டலும், ஆரவாரமும் தேவை என்று நீ சொல்லிவிடுவாயோ என்று ஒரு நிமிடம் நான் ஆடிப்போய்விட்டேன்" என்றான் குறுஞ் சிரிப்புடன் யவனன்.
அனைவரிடமும் ஒரு மெல்லிய சிரிப்பலை எழுந்தது.
"நீ தவறாக சொல்கிறாய். நான் கம்பிகளை வளைத்து முடித்த பின் தான் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரமும் கை தட்டலையும் செய்வார்கள்." என்றான் கடோத்கஜன்.
"உன்னுடைய ரசிகர்கள் இங்கே காத்திருக்கிறோம். அதே ஆரவாரத்தை தர முடியாத சூழல். எங்கே உன் திறமையை காட்டு பார்ப்போம்" என்றான் யவனன் குறும்பு புன்னகையுடன் .
"இதோ காட்டுகிறேன் பார் என்னுடைய திறமையை" என்ற கடோத்கஜன் தன் பலத்தை பிரயோகித்து கம்பியை வளைக்க ஆரம்பித்தான்.
கம்பிக்கும் அவனுக்குமான மல்லுக்கட்டு துவங்கியது. அவனுடைய புஜம் வழக்கத்திற்கு மாறாக நரம்புகளால் புடைத்தது. வெகு விரைவிலேயே அவனுடைய வலிமையை தாங்க முடியாமல் கம்பிகள் வளைந்து உடைந்து கையோடு வந்து விட்டன. சில நிமிடங்களிலேயே அந்த சன்னலில் ஆள் நுழையும் அளவிற்கு இடம் கிடைத்து விட்டது.
"இப்போது இந்த இருபதடி நீளம் உள்ள கயிற்றை அந்த பாறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னால் சன்னல் கம்பிகளில் ஓன்றை கொக்கி போல் வளைத் தாக வேண்டும்"
" வளைத்தாகி விட்டது" என்றான் கடோத்கஜன் கம்பி ஓன்றை எடுத்து வளைத்தபடி.
கடோத்கஜன் கொடுத்த கொக்கியின் ஓரு முனையில் கயிற்றை இறுக்கி கட்டினான் ஆதித்தன்.
" இதை அந்த பாறையை நோக்கி தூக்கி எறிந்து அது அங்கிருக்கும் ஏதாவது பாறை பிளவில் மாட்டிக் கொள்ள நூற்றில் ஒரு பங்கு தான் வாய்ப்பு இருக்கிறது"
"இல்லை. நான் அப்படி முயற்சி செய்ய போவதில்லை. இதை அந்த பாறைக்கு கொண்டு செல்ல நம்முடைய நண்பன் ஒருவன் உதவ காத்திருக்கிறான்"
"யார் அது?"
"ஹேர்குலஸ்.யவனனின் வளர்ப்பு பறவை" என்றான் ஆதித்தன்.
யவனன் விசித்திரமான சீழ்க்கை ஒலி ஒன்றை எழுப்பியதும் இருட்டிலிருந்து பறந்து வந்து சிறைக்குள் பிரவேசித்தது ஹேர்குலஸ்.
அதன் காதில் எதையோ சொன்ன யவனன் கொக்கி கட்டப்பட்ட கயிற்றை அதன் வாயில் வைத்தான். அடுத்த நிமிடம் அந்த விசுவாசமான பறவை பாறையை நோக்கி சிறகை விரித்தது. சிறைக்குள் இருந்தவர்கள் லாவகமாக கயிறை விட விட அந்த பறவை கயிற்றை சுமந்து கொண்டு பாறையை நோக்கி முன்னேறியது.
பாறையில் வந்தமர்ந்த ஹேர்குலஸ் கொக்கியை கீழே போட்டது. அவர்கள் கயிற்றை இழுக்க ஆரம்பித்தனர். ஒன்றிரண்டு முயற்சிகளுக்கு பிறகு கொக்கி ஒரு பாறை பிளவில் வசமாக சிக்கி கொண்டது.
"நாம் சாதித்து விட்டோம்" என்று குதூகலித்தான் யவனன்.
"ஆமாம். நாம் சாதித்து விட்டோம். சன்னல் மேட்டு பகுதியில் இருந்திருந்தால் கொக்கி ஓன்றை தயார் செய்து கயிற்றில் மாட்டி ஒவ்வொருவராக அதில் தொங்கியபடி பயணம் செய்து பாறையை அடைந்திருக்கலாம். ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. இரண்டும் சம உயரத்தில் இருக்கின்றன. கயிற்றின் மீது நடந்து தான் போக முடியும் " என்றான் ஆதித்தன்.
"கலைகுழுவினர் நாங்கள். யாருக்காவது உடல் நிலை சரியில்லையென்றால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் உடம்பு சரியில்லாதவனின் வித்தையையும் நாங்களே செய்வோம். எல்லோருக்கும் எல்லா வித்தையும் தெரியும். அதனால் கயிற்றின் மீது நடந்து செல்வது பெரிய விசயமல்ல "என்றான் கலை குழுவில் ஒருவன்.
" என்னுடைய கம்பி வளைக்கும் வித்தையை மட்டும் யாரும் கற்று கொள்ள முன்வர மாட்டார்கள். ஆனால் அது தான் இப்போது தப்பிக்க உதவி செய்கிறது " என்றான் கடோத்கஜன்.
"அந்த மிதப்பில் தான் நீயும் கயிறு மீது நடக்கும் வித்தையை கற்று கொள்ளாமல் அசட்டையாக இருக்கிறாய். இப்போது நீ எப்படி தப்பிப்பாய்?" என்றான் அவன்.
"உனக்கு கயிறு மீது நடக்க தெரியாதா?" என்றான் ஆதித்தன்.
"ம்ஹ்ம். உங்களுக்கும் தான் அந்த வித்தை தெரியாது." என்றான் கடோத்கஜன்.
"அப்படியானால் நாம் மூவரும் வேறு வழியாகத்தான் தப்பித்தாக வேண்டும். முதலில் சன்னலில் கயிற்றை இறுக்கிகட்டுங்கள். அதன் மீது நடந்து செல்லும் கடைசி நபர் கொக்கியின் முனையில் இருக்கும் கயிற்றை அவிழ்த்து விட்டு விடுங்கள். நாங்கள் மூவரும் அதன் வழியாக இறங்கி துறைமுகத்திற்கு சென்று கழுகை ஓட்டி வருகிறோம். எரி அம்புகள் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுங்கள். அனைவரும் படகில் தப்பி சென்று விடலாம்" என்றான் ஆதித்தன்.
" கடோத்கஜா! நீ சிறை கதவில் இருக்கும் கம்பிகளை அகற்று. நாம் அந்த குடிகாரக் கிழவனை சிறையிலிருந்து மீட்டு செல்வோம்." என்றான் யவனன்.
கலை குழுவினர் கயிற்றின் மீதாக நடந்து தப்பி செல்லும் போது கடோத்கஜன் கதவின் கம்பிகளை அகற்றினான்.
மூவரும் சிறையிலிருந்து வெளியேறி நீலனை தேடி நடந்தனர். வழியில் இருந்த தீப்பந்தத்தை எடுத்து கொண்ட ஆதித்தன் நீலன் இருந்த சிறையை நெருங்கினான்.
தீப்பந்த வெளிச்சத்தில் நன்றாக தேடிய போது அந்த அறையில் நீலன் இல்லை. கதவுக் கருகே ஒருவன் விழுந்து கிடப்பதை பார்த்த ஆதித்தன் " இவன் யார்?"
என்றான்.
தீப்பந்த வெளிச்சத்தில் இறந்து கிடந்தவனின் முகத்தை பார்த்த கடோத்கஜன் "இது எங்கள் தலைவர் செங்கோடன். யாரோ அவரை கொன்று விட்டார்கள்" என்று கதறினான்.
"நீலன் எங்கே போயிருப்பான்?" என்றான் யவனன்.
"தெரியவில்லை" என்றான் ஆதித்தன் குழப்பத்துடன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக