செவ்வாய், 12 ஜூலை, 2022

ரகசியதீவு

பன்றி வைத்தியம்

நண்பர்களும் கலை கூத்தாடி கூட்டமும் கைது செய்யப்பட்டு வீரர்களால் அழைத்து செல்லப்பட்டனர்.

" இவர்களை என்ன செய்வது?" என்றான் கருணாகரன்.

கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் போனதை போல் கையருகே இருந்த அழகான பெண் சில நிமிடங்களில் தன் கைக்கு அகப்படாமல் நழுவி விட்டதை ஜீரணிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் மதி மாறன் . மக்களுக்கு நடுவே தன்னுடைய மதிப்பையும் அந்தஸ்தையும் சிதறடித்து விட்ட அந்த சிகப்பு முகமூடியை நினைத்து அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.

கருணாகரன் கேட்டது முதலில் அவன் காதில் தெளிவாக விழவில்லை. ஆனால் அவன் ஏதோ கேட்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவன்" என்ன கேட்டாய்?" என்று வினவினான்.

மதிமாறனின் கவனம் வேறு பக்கம் திரும்பி விட்டதை அவனது கேள்வி மூலம் புரிந்து கொண்டு விட்டவன்" உங்கள் கவனம் இங்கே இல்லை போலிருக்கிறதே?" என்றான் என்றான்.

"ஆமாம். என் கவனம் இங்கு இல்லைதான். அந்த கிளி என்னிடம் அகப்படாமல் பறந்து விட்டது" என்றான் மதி மாறன் .

" எல்லாம் அந்த முகமூடியால் !" என்று பல்லைக் கடித்தான் கருணாகரன்.

"இந்த சின்னஞ் சிறு தீவில் அவன் எங்கு பதுங்கி கிடக்கிறான் என்று நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. வெட்கம் " என்று குமுறினான்மதிமாறன்.

" அவனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் நம்மால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. அவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு பெரிய தொகையை பரிசாக அறிவித்தால் அவன் அகப்பட வாய்ப்பிருக்கிறது. அந்த தொகைக்கு ஆசைப்பட்டு அவனது ஆட்களில் யாராவது துரோகியாக மாறி அவனை காட்டி கொடுத்து விட்டால் நம்முடைய வேலை சுலபமாகிவிடும்" என்றான் கருணாகரன்.

"கருணாகரா! போன முறையும் இந்த சிகப்பு முகமூடியை நான் தான் உயிரோடு பிடித்து கொன்றேன். அது விசயமாக உனக்கு என் மீது வருத்தம் இருப்பதை நான் அறிவேன். அதனால் தான் இந்த முறை நீ இவனை பிடிக்க வேண்டும் என்று நான் வாளாவிருக்கிறேன். நான் கொன்ற அந்த கரிகாலன் எப்படி மீண்டும் உயிர் பெற்று எழுந்து வந்தான் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை." என்றான் மதி மாறன் .

"அதற்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. அவனை நீங்கள் முழுமையாக சொல்லாமல் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் அவன் இன்னமும் உயிரோடு திரிகிறான்."

" பயல் எப்படியோ உயிர் பிழைத்து விட்டான். அவனது மறுபிறப்பு எனக்குத் தான் பெரும் இன்னலை தருகிறது. மக்கள் வேறு அவனை சாகாவரம் பெற்ற மாயாவி என்று கொண்டாட துவங்கி விட்டார்கள்."

"கவலைப்படாதீர்கள்.இந்த சிறிய தீவில் அவன் எங்கே பதுங்கி இருக்க முடியும். விரைவில் அவன் பிடிபடுவான்"

"நான் வேறு கப்பலில் ஆயுதம் வருவதை உணர்ச்சி வேகத்தில் அவனிடம் உளறி கொட்டி விட்டேன். அவன் இனி எச்சரிக்கையாக இருப்பான்."

"இல்லை. நான் வேறு விதமாக நினைக்கிறேன். நமக்கு ஆயுதம் கிடைத்து விட்டால் அவனது ஆட்டம் முடிந்துவிடும் என்பதால் பயல் இனி நம்மிடம் வாலை ஆட்டமாட்டான்."

"அப்படியா சொல்கிறாய்? நீ சொன்னபடி நடந்தால் நல்லதுதான். அந்த கலை கூத்தாடிகளை தனியாக அடைத்து வை.நீலனை தனியாக அடைத்து வை. அவனுடைய கப்பலைப் பற்றி நாம் விசாரித்தாக வேண்டும்" என்றான் மதி மாறன் .

"உத்தரவு" என்றான் கருணாகரன்.

சற்று நேரத்தில் அந்த இடம் சந்தடி எதுவுமின்றி அமைதியாக இருந்தது.

சிறைகொட்டடியில் அடைபட்டு கிடந்தனர் நண்பர்களும் கலை கூத்தாடிகளும்.

" எல்லாம் இந்த கிழவனால் வந்தது.இவன் மட்டும் வாயை மூடிக் கொண்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் எந்த வில்லங்கமும் வந்து சேர்ந்திருக்காது" என்றான் கடோத்கஜன் கோபத்துடன் .

சுவற்றின் மூலையில் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான் நீலன்.

"என்னை மன்னித்து விடு தம்பி. இரண்டு நாட்களாக மது எதையும் அருந்தாததால் என்னுடைய மூளை சிந்திக்கும் திறனை இழந்து விட்டது. அதனால் தான் கன்னாபின்னா வைன்று உளறி கொட்டி விட்டேன்" என்றான் மெல்லிய குரலில் நீலன்.

"ஏன் பொய் சொல்கிறாய்? உன் மடியில் ஒரு மது புட்டி இருப்பதை நான் பார்த்தேன், என்றான் கடோத்கஜன் -

"அது ஒரு நினைவு சின்னம். ஒரு இக்கட்டிலிருந்து அந்த புட்டி என்னுடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது. அதனால் நன்றி உணர்வாக அதை எப்போதும் என் இடுப்பில் வைத்திருக்கிறேன். உங்களின் இந்த நிலைக்கு நான் தான் காரணம். உங்களை நானே விடுவிக்கிறேன்." என்ற நீலன் சிறிது நேரம் யோசித்தான்.

"மூளை சிந்திக்கிறதோ?" என்றான் யவனன்.

" அவனது யோசனையை முதலில் கேட்போம்." என்றான் ஆதித்தன். அவனது மனதில் வேறு ஒரு திட்டம் உருவாகி கொண்டிருந்தது.

" நம்மை எதற்காக கைது செய்து சிறையில் வைத்திருக்கிறார்கள் என்ற காரணத்தை நம்மிடம் அவர்கள் சொல்லவே இல்லை. ஆக நம் மீது எந்த குற்றசாட்டுகளும் இல்லை. நாம் நிரபராதிகள். அதனால் நாம் ஓன்றாக இணைந்து "குற்றம் என்ன செய்தோம்? நிரபராதிகளை விடுதலை செய்" என்று கோசமிடுவோம்" என்றான் நீலன்.

'அதை கேட்டு அவர்கள் நம்மை விடுதலை செய்து விடுவார்களா?" என்றான் யவனன்.

" விடுவிக்க மாட்டார்கள் தான். ஆனால் நம்மை கைது செய்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தை கூற வேண்டு மல்லவா? இங்கேதான் காரணம் எதுவும் இல்லையே?"என்றான் நீலன்.

"இதுவும் நல்ல யோசனைதான் " என்றான் யவனன்.

சற்று நேரத்தில் சிறைகொட்டடியில் இருந்து கோசம் எழும்பலாயிற்று.

"நிரபராதிகளை விடுதலை செய்.கைதுக்கு காரணம் கூறு" என்று கத்தி கொண்டிருந்தார்கள் அனைவரும்

சிறை காவலன்"ஏன் வீணாக கத்தி சக்தியை விரையம் செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவு தான் கத்தி கதறினாலும் இங்கே எதுவும் நடக்காது" என்றான்.

"அப்படியா ? இன்று இரவு முழுவதும் நாங்கள் இப்படியே கத்தி கொண்டிருக்க போகிறோம். நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்" என்றான் நீலன் மிரட்டும் தொனியில் .

"தளபதி வரட்டும். உனக்கு சரியான பதிலை அவர் தருவார்" என்றான் சிறை காவலன்.

அவன் தளபதி என்று கருணாகரனை குறிப்பிட்டான். 

சற்று நேரத்தில் தன்னுடைய குதிரையில் அங்கு வந்து சேர்த்தான் கருணாகரன். குதிரை ல கானை காவலன் கையில் கொடுத்தவன் "அங்கே என்ன சத்தம்?" என்றான் கோசம் வந்ததிக்கை பார்த்து.

வழக்கமாக அவனது வருகையை பார்த்தவுடன் சிறைக்குள் மயான அமைதி நிலவும். அதற்கு மாறாக இன்று எழும் கோசத்தை கண்டு அவனது முகம் மாறியது.

"இன்று கைது செய்யப்பட்ட அந்த கலை கூத்தாடிகள் தான் இப்படி சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.இன்று இரவு முழுவதும் இப்படியே சத்தம் போட்டு நம்முடைய தூக்கத்தை கெடுக்க போகிறார்களாம்"

" என்ன வேண்டுமாம் அவர்களுக்கு?"

"கைதுக்கு காரணம் வேண்டுமாம்"

" காரணம்? ஹா ஹா" என்று நகைத்த கருணாகரன் கலை கூத்தாடிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு வந்தான்.

"எதற்காக இப்படி கத்தி கூச்சல் போடுகிறீர்கள்?" என்றான் கருணாகரன் கடுகடுத்த முகத்தோடு.

"எங்கள் கைதுக்கு காரணம் தெரிய வேண்டும். இல்லையென்றால் இரவு முழுவதும் இப்படித்தான் கத்தி கூப்பாடு போடுவோம்" என்றான் நீலன்.

"ஓ! நீ தான் இவர்களின் புரட்சி தலைவனா ? உனக்கு காரணம் தேவை. அவ்வளவுதானே?"

"அவ்வளவுதான். எங்கே காரணத்தை கூறு பார்ப்போம்" என்றான் நீலன்.அவன் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

"ஓரு காரணம் வேண்டுமா? இல்லை இரண்டு காரணங்கள் வேண்டுமா?" என்றான் கருணாகரன் விசம சிரிப்புடன்.

"உனக்கு ஒரு காரணம் கிடைப்பதே கடினம்" என்றான் நீலன்.

"என்னிடம் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே அனுப்பி வைக்கிறேன்" என்று புதிர் போட்டான் கருணாகரன்

"இரண்டு காரணங்களை அனுப்பி வைக்கிறாயா?" என்று விழித்தான் நீலன்.

சிறை காவலனின் காதில் எதையோ கிசுகிசுத்தவன் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

"ஆதித்தா! அவனுடைய பேச்சு மிகவும் புதிராக இருக்கிறது" என்றான் நீலன்.

" அவன் நம்முடைய போராட்டத்தை அடக்க எதையோ செய்ய தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது." என்றான் ஆதித்தன்.

"இன்னும் சற்று நேரத்தில் அவன் என்ன செய்ய போகிறான் என்று தெரிந்துவிடும். பொறுமையாக இருங்கள்" என்றான் யவனன்.

சற்று நேரத்தில் கருணாகரன் இரண்டு காவலர்களுடன் திரும்ப வந்தான்.

"அதை உள்ளே விடுங்கள்" என்றான் கருணாகரன் அடுத்த நிமிடம் சிறை கதவு திறக்கப்பட்டு இரண்டு பன்றிகள் உள்ளே வீசப்பட்டன.

அவை மனிதர்களை பார்த்து அஞ்சி அங்கேயும் இங்கேயும் ஓட ஆரம்பித்தன.

அவர்கள் காலுக்கு அடியில் ஓடும் பன்றிகளை பார்த்து அருவறுத்து சிறைக்குள் ஓட துவங்கினர்.

"என்ன இது? காரணம் என்று சொல்லிவிட்டு பன்றிகளை கொண்டு வந்து விட்டிருக்கிறாய்?" என்று கத்தினான் நீலன்.

அதை கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்தான் கருணாகரன். அரை மணி நேரத்தில் கோசம் எழுந்தது. "பன்றிகளை வெளியேற்று."

கருணாகரன் சிரித்து கொண்டான். தவறே செய்யாத நிரபராதிகள் கூட இப்போது பன்றிகள் இல்லாத சிறை சுகமாக இருப்பதை உணர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் குற்றத்தை மறந்து பன்றியை இடையூராக நினைக்க தொடங்கி விட்டார்கள். கருணாகரன் இப்படியான வழிமுறைகள் மூலமாகத்தான் பலரை சிறை வாசத்துக்கு உள்ளாக்கி இருந்தான்.

"அந்த பன்றிகளை இப்போது வெளியில் எடுத்து விடுங்கள்" என்று உத்தரவிட்டான் கருணாகரன்.

"சிறையிலிருந்து சிறு ஓசை எழுந்தாலும் அடுத்த நிமிடமே சிறைக்குள் பாம்புகளை விடுவேன் என்று அந்த கிழவனிடம் சொல்லுங்கள். அப்படியே அவனை தனி சிறைக்கு மாற்றுங்கள்" என்றான் அவன்.

அவனது உத்தரவை கேட்ட அனைவரும் சப்த நாடியும் ஓடுங்கி போய் அமர்ந்தனர்.நீலனை மட்டும் வேறு சிறைக்கு மாற்றிய போது யவனன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"பாம்பை விட இவனது குறட்டை ஓலிமோசமானது. நாம் அனைவரும் அதிலிருந்து தப்பித்தோம் " என்றான் யவனன்.

அதே நேரம் தனது மாளிகையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்மதிமாறன். அவனது நாற்காலிக்கு பின்னால் சப்தமின்றி வந்து நின்றது அந்த நிழலுருவம்.

" உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். என் முன்னால் வா" என்றான் மதி மாறன் .

தன் வருகையை முன்பே உணர்ந்து கொண்டு விட்ட மதி மாறனை நினைத்து திக் பிரமை பிடித்து நின்றது அந்த உருவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக