திங்கள், 4 ஜூலை, 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 11

வாய்த் துடுக்கால் ஏற்பட்ட விபரீதம்  

ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகளின் நடுவே தத்தளித்து கொண்டிருக்கும் போது நீலன் தன்னுடைய துடுக்குத் தனமான பேச்சால் வேறு ஒரு புது பிரச்சனையை கொண்டு வந்து விட்டான். அவனை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த யவனனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவன் தன்னுடைய கோபத்தை மிகுந்த முயற்சியின் பேரில் கட்டுப்படுத்திக் கொண்டான்.

" வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் வீண் பேச்சு எதற்கு நண்பா ?'' என்றான் நீலனை கண்டிக்கும் வகையில் .

கடோத்கஜன் தன்னுடைய நண்பனை காப்பாற்ற முனையும் யவனனை உற்று பார்த்தான். அவன் முகம் மக்களின் கேலி சிரிப்பால் கன்றி சிவந்திருந்தது.
"அந்நியனே.! இந்த பிரச்சனை எனக்கும் இவனுக்கும் நடுவிலானது. இதில் நீ மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்" என்றவன் "நீ சொன்னதை மீண்டும் ஒருமுறை திரும்ப சொல் " என்று நீலனை அதட்டினான்.

"ஏன் நான் பேசுவது உன் காதில் விழவில்லையா? பாவம் காது கேளாதவனா நீ? உன் நிலைக்கு நான் பரிதாபப்படுகிறேன்" என்றான் நீலன்.அவன் இப்படி கம்பியை வளைப்பவன் தன் மென்னியை திருகுவான் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நிலைமையை இயல்பாக்க நினைத்து மேலும் மேலும் பிரச்சனையை அதிகமாக்கி கொண்டிருந்தான்.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஆதித்தன் "நண்பா! என் நண்பன் பேசுவதை மனதில் வைத்து கொள்ளாதே! அவன் சற்று வாய் துடுக்காக பேசக் கூடியவன்தான். அவனது பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உன் அபார திறமையை பாராட்டி இதோ இந்த பொற்காசை என் அன்பளிப்பாக தருகிறேன். பெற்று கொள். " என்ற ஆதித்தன் அவனது கையில் ஒரு பொற்காசை திணித்தான்.

"இது ஒரு கொல்லனுக்கு தர வேண்டிய நியாயமான கூலி தான் " என்றான் நீலன்.கடந்த இரண்டு நாட்களாக மதுவருந்தாத எரிச்சலில் சூழ்நிலை புரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான் அவன்.

கடோத்கஜன் மின்னலாக திரும்பி சென்று ஒரு இரும்பு கம்பியை எடுத்து வந்து நீலனின் கழுத்தில் வைத்து வட்ட வடிவமாக இறுக்கினான்.

" கிழவா! உன்னுடைய உளறுவாயை மூட எனக்கு இதைவிட சிறந்த வழி தெரியவில்லை." என்றான் கடோத்கஜன்.

யவனனும் ஆதித்தனும் ஆளுக்கொரு பக்கமாக கம்பியை பிடித்து இழுத்து நீலனை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

"இங்கே என்ன சத்தம்?" என்ற கணீர் குரல் அங்கே எதிரொலித்தது. அந்த குரல் எதிரொலித்து முடிக்கும் முன்பாகவே அங்கே பரபரப்பு அடங்கி ஆழ்ந்த அமைதி நிலவியது. மூவரும் யார் அந்த மனிதன் என்று அவனை கவனிக்க தொடங்கினர்.

அந்த மனிதன் ஆறடிக்கும் குறையாத உயரத்தையும் கட்டுமஸ்தான தேகத்தையும் கொண்டிருந்தான். அவனது சிறிய கண்களின் கூர்மையான பார்வை யாரையும் குத்தி கிழித்து விடும் வல்லமையை பெற்றிருந்தன. அவன் முகத்தின் குறுக்காக ஒரு வெட்டு தழும்புவிழுந்து அவன் முகத்தை கொடுரமாக காட்டியது.அவனது இடையில் நீண்ட வாள் ஓன்று தொங்கி கொண்டிருந்தது.

"யார் நீங்கள்? போக்குவரத்திற்கு இடையூராக பாதையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றான் மீண்டும் கணீர் குரலில்.

கடோத்கஜன் தன் உடம்புக்கு சற்றும் பொருந்தாத வகையில் அவனைப் பார்த்து வணங்கினான்.

"நாங்கள் கலை கூத்தாடிகள். நாடோடிகளாக அலைவதே எங்கள் வாழ்க்கை.இங்கேயும் மக்களை மகிழ்வித்து பொருள் ஈட்ட வே வந்திருக்கிறோம். பிரபுவின் தயவு எங்களுக்கு தேவை " என்றான் கடோத்கஜன்.
.
"நீதான் இந்த குழவிற்கு தலைவனா ? " என்றான் நெடிய மனிதன்.

"இல்லை. எங்களின் தலைவர் நாளை தான் இங்கே வருவார்."

"பொது இடத்தில் வித்தை காட்ட அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று உனக்கு தெரியாதா? மற்ற இடங்களில் இப்படித்தான் தான்தோன்றி தனமாக வித்தை காட்டி கொண்டிருந்தீர்களா?"

" மன்னிக்க வேண்டும் பிரபுவே! நாங்கள் செய்தது தவறுதான். பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும்"

"விசாரிப்பது தான் என்னுடைய வேலை. மன்னிப்பதெல்லாம் என் அதிகாரத்தில் வராது. அதை ராஜ பிரதிநிதியும் ஆளுநருமான மதிமாறன் தான் முடிவு செய்ய வேண்டும்"

"நான் அவர்களை மன்னித்து விட்டேன் கருணாகரா!" என்றது மற்றொரு குரல்.

கூட்டத்தை பிளந்து கொண்டு முன்னேறி வந்தது ஒரு புரவி .அதன் மீது ஆரோகணித்திருந்தான்மதிமாறன். தன் குதிரையை விட்டு குதித்து இறங்கிய மதிமாறன் " இந்த தீவில் பொழுதுபோக எதுவுமே இல்லை. அந்த குறையை போக்க நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.இந்த தீவின் சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன். உங்களின் சில திறமைகளை வெளிகாட்டுங்கள். அதை பார்க்கும் மக்கள் வாய் வழியாக
விளம்பரம் செய்வார்கள். நானும் உங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி தருவதா வேண்டாமா என்று ஒரு முடிவுக்கு வர இந்த சிறு நிகழ்ச்சி உதவி செய்ய கூடும்" என்றான் மதி மாறன் .

"உங்கள் நிகழ்ச்சி தொடங்கட்டும்" என்று உத்தரவு கொடுத்தான் கருணாகரன்.கருணாகரன் மதி மாறனின் வலது கை.ரகசிய தீவின் தளபதி. அவனுக்கு தெரியாமல் ஓரு ஈ எறும்பு கூட தீவிற்குள் நுழைய முடியாது. மதி மாறனை கொல்ல முயன்ற ஒரு கூட்டத்திடமிருந்து அவனை காப்பாற்றி அவனது நன்மதிப்பை பெற்று தளபதியாக இருப்பவன் கருணாகரன். மார்க்கதரிசியின் தங்க புதையலை தேடிக் கொண்டிருப்பவனும் இவன்தான். சிகப்பு முகமூடியை தேடுபவனும் இவன் தான்.மதிமாறன் சொல்லும் வேலைகளை உடனடியாக செய்து முடிப்பவனும் அவன் தான்.

கருணா கரனின் உத்தரவால் கடோத்கஜனின் முகம் மலர்ந்தது. மதிமாறனிடம் தன்னுடைய செல்வாக்கை ஸ்தாபிதம் செய்து கொள்ள விரும்பியவன்" உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி பிரபு. இதோ இங்கே ஒருவன் எங்கள் நிகழ்ச்சிக்கு இடையூறு செல்கிறான். உங்களை மகிழ்விக்கும் எங்களின் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தாலும் அவன் இடையூறு செய்யக் கூடும்" என்றான்.

"யார் அவன்? உங்கள் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்பவன்?" என்றான் மதி மாறன் கோபத்துடன் .

"அதோ அந்த கிழவன் தான் " என்று நீலனை நோக்கி கையை நீட்டினான்கடோத்கஜன்.

யார் கண்ணில் பட்டு விடக் கூடாது என்று நினைத்தார்களோஅந்த மதிமாறனின் கண்களிலேயே பட்டு விட்டார்கள் மூவரும்.

"யார் அந்த கிழவன் ? அட நம்முடைய நீலன்?" என்றான் கருணாகரன் வியப்புடன்.

"யாரது? முத்தழகியின் நீலனா? தலை பாகை இல்லாததால் எனக்கு அவனை அடையாளம் தெரியவில்லை." என்றான் மதிமாறன்.

" கப்பலை துறைமுகத்தில் காணவில்லை. ஆனால் கப்பலின் மீகாமன் மட்டும் தனியாக வந்திருப்பது தான் விந்தையாக இருக்கிறது." என்றான் கருணாகரன்.

" என்ன? துறைமுகத்தில் கப்பல் இல்லையா?" என்ற மதிமாறனின் முகம் மாறியது. ஆயுதம் இல்லாமல் வெறும் கையோடு வந்து நிற்கும் அவன் மீது கோபம் கொந்தளித்தது. மக்களுக்கு நடுவே ஆயுதங்களை பற்றி விசாரித்தால் உளவாளிகள் மூலம் சிகப்பு முகமூடிக்கு தகவல் போய்விடும் என்பதால் அவன் வேறு விதமாக யோசித்தான்.

கருணாகரனைப் பார்த்து கண்களை காட்டிய மதிமாறன் "அரசாங்க விருந்தாளிக்கு உரிய மரியாதையை தருவது நம்முடைய கடமை. கருணாகரா! நீலனை நன்றாக கவனித்து கொள்ள ஆட்களை அனுப்பு" என்று சொல்லி விட்டு விசமத்தனமாக சிரித்தான்.

அவனது சிரிப்பை புரிந்து கொண்ட கருணாகரன் கைகளை தட்டினான். அடுத்த விநாடி நீலனை சில காவலர்கள் சூழ்ந்து கொண்டனர்.

யவனன் மகேந்திரனின் கட்டளையை நினைத்து கொண்டான் .ஒரு நொடி கூட நீலனை பிரிந்து விடக் கூடாது என்று மகேந்திரன் கட்டளையிட்டிருப்பதால் அவன் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினான்.

"அவனை தொடாதீர்கள்" என்று நீலனுக்கு முன்னால் வந்து நின்றான் யவனன்.

"இவன் யார்?, என்றான் மதி மாறன் .

" மோகினி தீவில் ஒரு யவனன் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது இவன் தான் என்று நினைக்கிறேன்" என்றான் கருணாகரன்.

"அது நான் தான் " என்றான் இப்பாலஸ்.

" நல்லது. அவனையும் அரசாங்க விருந்தாளியாக மாற்றுங்கள். அவனை நாம் பிறகு விசாரிப்போம். வேறு யாருக்காவது அரசு விருந்தினராக வேண்டும் என்ற ஆசை இருந்தால் முன்னால் வரலாம்"

"ஆதித்தா! எங்களை யாரென்று காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இரு" என்றான் நீலன் கிசுகிசுப்பான குரலில்.

ஆதித்தன் தன் காலடியை முன்னால் வைத்தான்.

"நீ யார்?" என்றான் கருணாகரன்.

" இவர்களின் நண்பன்" என்றான் ஆதித்தன்.

"இவன் மேலும் ஒரு கண் வையுங்கள்" என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்ட கருணாகரன் " ஏன் பிரமை பிடித்தது போல் நிற்கிறாய்? உன் நிகழ்ச்சியை ஆரம்பி. பாவம் அவர்களும் அதை கண்டு களிக்கட்டும் " என்று கடோத்கஜனுக்கு உத்தரவிட்டான்.

"உத்தரவு" என்ற கடோத்கஜன் தன் ஆட்களுக்கு சைகை செய்தான். அடுத்த நிமிடம் இசை முழங்க நிகழ்ச்சிகள் அரங்கேற துவங்கின.

எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்த மதிமாறனின் கண்கள் கம்பி மேல் நடக்கும் வித்தையை செய்யும் பெண்ணைப் பார்த்ததும் தன் கண்களை மூட மறந்தான். இந்த தீவில் இப்படியொரு அழகான பெண்ணா என்று திகைத்தவன் கருணாகரனை அழைத்து "அந்தப் பெண் ? " என்று இழுத்தான்.

அவனது பெண்ணாசையைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த கருணாகரன் விசமமாக சிரித்தான். "இன்று இரவு .அவள் உங்களின் உறவு" என்று சிரித்தான் கருணாகரன்.

நிகழ்ச்சிகள் வெகு சீக்கிரத்திலேயே நிறைவு பெற்றன. " நிகழ்ச்சி முடிந்து விட்டது. விரைவாக கலைந்து செல்லுங்கள்" என்று மக்களுக்கு உத்தரவிட்டான் கருணாகரன் .

"உங்கள் அனுமதிக்கு நன்றி.உங்கள் உதவியை மறக்கவே மாட்டோம்" என்றான் கடோத்கஜன்.

"நன்றி இருக்கட்டும். இன்று இரவு எங்கே தங்க போகிறீர்கள்?"

"சத்திரத்தில் தான் "

" நல்லது. அங்கே உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் என்னுடைய பெயரை சொல்லுங்கள்.உங்களுக்கு வேண்டியது கிடைக்கும்."

"சந்தோஷம் பிரபுவே! நாங்கள் கிளம்புகிறோம்"

"தாராளமாக கிளம்பலாம் அந்த பெண்ணை மட்டும் விட்டு விட்டு "

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"இன்னுமா புரியவில்லை உனக்கு. அந்த பெண் வேண்டும் எனக்கு " என்றான் மதி மாறன் ..

"நாங்கள் கலை கூத்தாடிகள் தான். ஆனால் மானத்தை விற்று பிழைப்பவர்கள் இல்லை. அவள் என் தங்கையை போன்றவள்!" என்று குமுறினான்கடோத்கஜன்.

" அவனிடம் என்ன பேச்சு ?அவளை தூக்கி வாருங்கள்" என்றான் மதி மாறன் .

கருணாகரனின் வாள் கடோத்கஜனின் கழுத்தில் பதிந்து அவனை தடுத்து நிறுத்தியது.

ஆதித்தனும் அவனது நண்பர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மதிமாறன் ஆடல் அழகியை நெருங்கினான். அவள் மருளும் விழிகளோடு அவனை திகைப்புடன் பார்த்தாள்.

விகாரமாக சிரித்தபடி அவளை நெருங்கினான் மதி மாறன் . அதே நேரம் அவனது காலடியில் பாய்ந்து நின்றது ஒரு அம்பு.

" அப்படியே நில்! அடுத்த அடி எடுத்து வைத்தால் உன் உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும்" என்றது ஒரு கணீர் குரல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக