வெள்ளி, 8 ஜூலை, 2022

ரகசிய தீவு

சிகப்பின் வருகை

பெண் பித்தனான மதிமாறன் அந்த ஆடழலகியை நோக்கி நடந்த போது அவனது கால்களுக்கு அருகே பாய்ந்த அம்பு அவனது மகிழ்ச்சியை குலைத்தது. அடுத்ததாக எழுந்த எச்சரிக்கை குரலால் எரிச்சலடைந்தவன் அம்பு வந்த திசையை ஏறிட்டு பார்த்தான்.

அங்கிருந்து ஐம்பதடி தூரத்தில் ஒரு மாளிகையின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தை முழுதாக பார்க்க விடாமல் ஒரு சிகப்பு நிற துணி கண்களுக்கு கீழாக கட்டப்பட்டிருந்தது. அவனது தோளின் பின்புறம் வில்லும் அம்பு கூடும் இருந்தன. அவனது தோள்களுக்கு பின்புறமாக ஒரு கருப்பு அங்கி ஓன்று தொங்கியது. அவன் தன்னுடைய கால்களில் ஓன்றைமொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரின் மீது வைத்திருந்தான்.

"நீயா?" என்றான் மதி மாறன் அதிர்ச்சியுடன் .

"ஆம். நானே தான்." என்றபடி அவன் சிரிப்பது முகமூடி அசைவ திலிருந்து தெரிந்தது. அவனது வலது கையில் இருந்த குறுவாள் மதி மாறனை குறி பார்த்து கொண்டிருந்தது.

"அந்த பெண்ணை விட்டு விடு. இல்லையென்றால் இந்த முறை என்னுடைய குறி தவறாது " என்றான் சிகப்பு முகமூடி.

"உன்னை இங்கே நான் எதிர்பார்க்கவில்லை" என்றான் கோபத்துடன் மதி மாறன் .

"நீ எதை செய்தாலும் அதை எதிர்க்க நான் வருவேன் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். நீ நல்லது எதையுமே செய்ய போவதில்லை என்று எனக்கு மட்டும் தான் தெரியும்." என்றான் அவன்.

"உன்னை நான் அன்றே முழுதாக கொன்றிருக்க வேண்டும். எப்படியோ தப்பி பிழைத்து விட்டாய்"

" நீ எதைத்தான் முழுதாக செய்து முடித்தாய்.? நீ செய்வதெல்லாம் அறைகுறையான விசயங்கள் தானே?"

" கருணாகரா! ஏன் இன்னமும் வாளாவிருக்கிறாய்? கண் எதிரே நிற்கும் இவனை உன்னால் எதுவும் செய்ய முடியாதா?" என்று கருணாகரனை பார்த்து உறுமினான்மதிமாறன்.

" எதையாவது செய்து தான் பாருங்களேன்" என்ற முகமூடி தன்னுடைய குறுவாளை மேலும் கீழமாக அசைத்து வீசப் போவது போல் சைகை செய்தான்.

"அமைதியாக இருங்கள். ஏடாகூடமாக பேசி அவன் கோபத்தை அதிகரித்து உங்கள் உயிருக்கு உலை வைத்து கொள்ளாதீர்கள். இப்போது அவன் கை ஓங்கியிருக்கிறது. நாம் பொறுத்துதான் போக வேண்டும்" என்றான் கருணாகரன் பல்லை கடித்து கொண்டு.

" புத்திசாலிநீ! நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு விட்டாய்" என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தான் முகமூடி.

"இப்போது உனக்கு என்ன வேண்டும்?" என்று கடுகடுத்த முகத்தோடு கேட்டான் மதி மாறன் .

"நீ இப்போதைக்கு இந்த பெண்ணை விட்டு விலக வேண்டும். இந்த பதவியை விட்டு விட்டு மலைநாட்டுக்கே நீ திரும்ப ஓட வேண்டும்"

"எனக்கு பிறகு வருபவன் என்னை விட மோசமானவனாக இருந்தால் நீ என்ன செய்வாய்?"

"உன்னை விட கடைந்தெடுத்த அயோக்கியன் உலகத்திலேயே கிடையாது. நீ சொல்வது போல் அடுத்து வருபவனும் உன்னை போலவே இருந்து விட்டால் என்ற கேள்வி எனக்குள்ளும் வந்திருக்கிறது. அதனால் தான் இந்த தீவின் அதிகாரத்தை நானே கைப்பற்ற தீர்மானித்து விட்டேன்"

"அது ஒரு போதும் நடக்காது. விரைவிலேயே எனக்கு ஆயுத உதவி வந்து சேரப்போகிறது. அதன் பிறகு நீ ஓடி ஒளிய இங்கே இடமே இருக்கப் போவதில்லை. இந்த தீவில் நீ எங்கே சென்று பதுங்கினாலும் உன்னை தேடிக் கண்டு பிடிப்பேன்." என்ற மதிமாறன் தன்னுடைய நாக்கை கடித்து கொண்டான்.

உணர்ச்சி வேகத்தில் ஓரு அரசியல் ரகசியத்தை சபை நடுவே சிதறு தேங்காய் போல போட்டு உடைத்து விட்டு வாயடைத்து போய் நின்றான் மதி மாறன் .

முகமூடியின் புருவங்கள் முடிச்சிட்டன.மதிமாறன் இப்படி ரகசியமாக ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருப்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் சுதாரித்து கொண்டு முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படியான ஒரு தகவல் அவனுக்கு கிடைத்துவிட்டிருந்தது.

என்ன பேசுவதென்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றான் முகமூடி.

"உன்னுடைய கதை விரைவிலேயே முடிந்துவிடும். அல் பாயுளில் மடியாமல் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டு என்னிடம் சரணடைந்து உயிர் பிச்சை கேள். உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன். இந்த தீவை விட்டு அகன்று வேறு எங்காவது சென்று பிழைத்து கொள். இது நான் உனக்கு தரும் கடைசி சலுகை." என்று உறுமினான்மதிமாறன்.

" உன் உயிரே இப்போது இந்த கத்தி முனையில் தான் இருக்கிறது. அதை உணராமல் நீ எனக்கு உயிர் பிச்சை தருவதாக பேசுவது தான் வேடிக்கை" என்ற முகமூடி வினோதமான சீழ்க்கை ஒலி ஓன்றை எழுப்பினான்.

சற்று நேரத்தில் ஒரு சாரட் வண்டி ஒன்று கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து நின்றது.

அதை ஓட்டி வந்தவனும் ஒரு முகமூடி அணிந்து தன்னுடைய முகத்தை மறைத்திருந்தான்.

"பெண்ணே! உன் பெயர் என்ன?" என்றான் சிகப்பு முகமூடி.

அவள்" என்னுடைய பெயர் சந்திரவதனா " என்றாள்.

"பயப்படாதேசந்திரவதனா! நீ இப்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறாய். இந்த கயவன் உன் கற்போடு விளையாட தீர்மானித்து விட்டான். உன்னை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் அதை வண்டியில் ஏறிக் கொள். அவர்கள் என்னுடைய ஆட்கள்தான். அவர்களின் நிழல் கூட உன் மீது படாது. என்னை நம்பு பெண்ணே" என்றான் சிகப்பு முகமூடி.

அவள் தப்பித்தால் போதும் என்று வண்டியில் ஏறினாள். வண்டி மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது.

வண்டி கண் மறையும் வரை பார்த்து கொண்டிருந்தான் முகமூடி. வண்டியை யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன்" உன்னிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றி விட்டேன். அது போதும் எனக்கு" என்றான்.

காவலர்கள் புடைசூழ நின்று கொண்டிருந்த நீலனின் கண்கள் கூட்டத்தின் நடுவே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டனின் மீது நிலைத்தன.

முத்தழகியின் வடிவத்தையும் பெயரையும் மாற்றிய நஞ்சுண்டன் ரகசிய தீவின் துறைமுகத்திற்கு கப்பலை கொண்டு வர வே இல்லை. சிறிய படகுகள் மூலமாக ரகசிய தீவின் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய சரக்கை இறக்கி விற்று காசாக்கிவிட்டான்.முத்தழகியை பற்றி விசாரித்தவர்களிடம் அது பழுதாகி கடலில் நின்று விட்டதாக பொய் கூறி சமாளித்து விட்டான்.முத்தழகியில் இருந்த பணியாளர்கள் ஓருவர் கூட ரகசிய தீவில் கால் பதிக்காமல் பார்த்து கொண்டு விட்டான் நஞ்சுண்டன் .ஆனால் இரண்டு நாட்களாக அலைந்து திரிந்தும் அவனால் சிகப்பு முகமூடியை பற்றிய சிறு விவரத்தை கூட அறிய முடியவில்லை. ஆயுதங்களை விற்று செல்வத்தை ஈட்டும் தன்னுடைய திட்டம் தோல்வியை தழுவிவிடுமோ என்ற அச்சம் கூட அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

இரண்டாவது நாளாக தீவில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன், சிகப்பு முகமூடியை பற்றி நஞ்சுண்டன் நைசாக விசாரித்து கொண்டிருப்பதை பார்த்த ஒருவன் "தம்பி! இப்படியே அவனைப் பற்றி நீ விசாரித்து கொண்டிருப்பதை ஒற்றர்கள் கவனித்தால் முதலில் உன்னைத்தான் சிறையில் தள்ளுவார்கள்" என்று எச்சரித்தான்.

நஞ்சுண்டன் அவனது எச்சரிக்கையில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டான். ஓரு தேடப்படும் குற்றவாளியை பற்றி விசாரிப்பது எவ்வளவு பெரிய பிசகு என்று உணர்ந்து கொண்டவனாக துறைமுகத்திற்கு திரும்பி கொண்டிரு ந்தான்.

திரும்பும் வழியில் தான் அவன் இந்த கலை கூத்தாடிகளை பார்த்தான். அதன் பிறகு நடந்த களேபரங்களை அவன் எதிர்பார்க்கவில்லை.குறிப்பாக கல்லறைதீவில் தனியாக தவிக்க விட்டு விட்டு வந்த நீலன் உயிரோடு இங்கே இருப்பது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நரன். உண்மையிலேயே திறமைசாலி தான் .இந்த முறையும் எப்படியோ உயிருடன் தப்பி வந்து விட்டான். அவனது கண்ணில் பட்டு விட்டால் நம் கதி அதோ கதிதான்." என்று நினைத்தவன் அவன் பார்வையில் படாமல் மறைந்து கொண்டான்.

நீலனை கைது செய்ய சொல்லி மதிமாறன் உத்தரவிட்டதும் அதை கேட்டு மகிழ்ந்த முதல் ஆள் நஞ்சுண்டன்தான். அப்பாடி தலைக்கு வந்த ஆபத்து தலை பாகையோடு போயிற்று என்று அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். தன்னை மறைத்து கொள்ளும் முயற்சியை அவன் கைவிட்டான்.

ஆடழலகியின் மீது மதிமாறனின் கண் பட்டதும் அதற்கு இடையூராக சிகப்பு முகமூடி வந்ததும் அவன் எதிர்பாராத நிகழ்ச்சிகள். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல எவனை தேடி இரண்டு நாட்களாக நஞ்சுண்டன் அலைந்து கொண்டிருந்தானோ அவனே கண் முன்னால் பிரதட்யண்யமாகி விட்டான்.

இனி வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று நினைத்த நஞ்சுண்டன் கூட்டத்திலிருந்து முன்னால் வந்தான். அவனை பார்த்து விட்ட நீலனின் இரத்த ஓட்டமும் கோபமும் எகிறியது.

"துரோகி. நீ இங்கு தான் இருக்கிறாயா?" என்றபடி காவலுக்கு இருந்த வீரர்களை தள்ளி விட்டு விட்டு நஞ்சுண்டனை நோக்கி ஓடினான்.

"அவனை பிடியுங்கள்" என்றான் மதி மாறன் .

காவலர்களால் வழிமறித்து குண்டு கட்டாக தூக்கப்பட்டான் நீலன்.மதிமாறன் நிமிர்ந்து பார்த்த போது மொட்டை மாடியில் நின்றிருந்த சிகப்பு முகமூடி காணாமல் போயிருந்தான்.

" அவன் இங்கிருந்து வெகுதூரம் சென்றிருக்க முடியாது. அவனை தேடிப் பிடியுங்கள்" என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான் கருணாகரன்.

இந்த கலவரத்தில் நஞ்சுண்டன் கூட்டத்தில் நழுவினான்.

"நான் சொல்வதை கேளுங்கள். அவனை உடனே பிடியுங்கள். முட்டாள்களே! ஏன் தப்பு தப்பாக காரியம் செய்கிறீர்கள்" என்று கதறினான் நீலன்.

"வாயை மூடு முட்டாளே! என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் " என்றான் கருணாகரன்.

" நீலா! எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?" என்றான் ஆதித்தன்.

"அந்த விரியன் இங்கு தான் இருக்கிறான். அவனை நான் பார்த்தேன்" என்றான் நீலன்.

"நஞ்சுண்டனையா?"

"ஆமாம்"

" இவர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள், " என்று உத்தரவிட்டான் கருணாகரன்.

கலை கூத்தாடிகளின் குழவும், நண்பர்களும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அழைத்து செல்லப்படுவதை மறைந்து நின்று ரசித்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் .

"அப்பாடா!தொல்லை விட்டது.இனி நிம்மதியாக நம்முடைய வேலையை பார்க்கலாம்" என்று மகிழ்ந்தான் நஞ்சுண்டன் .

இருளில் நடந்த வன்முச்சந்தியில் நால்வரால் மடக்கப்பட்டான்.

அதில் மையமாக நின்றவன் நஞ்சுண்டனின் கழுத்தில் வாளை வைத்தான்.

"நான் சொன்னதை கேட்டால் உன் தலை தப்பும். இல்லையென்றால் "

"புரிகிறது." என்றான் நஞ்சுண்டன்

" வில்லங்கமாக எதையும் செய்ய நினைக்காமல் என்னோடு நட " என்று கட்டளையிட்டான் அவன்.

நஞ்சுண்டனின் கண்கள் துணியால் கட்டப்பட்டன. அந்த கார இருள் அவனை சூழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக