வியாழன், 2 ஜூலை, 2015

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அழகி !

அவர் ஒரு டீ மற்றும் பல காரமாஸ்டர். அந்த டீ கடையில், வடை, போண்டா போடுவது அவரது வேலை. முதலாளி வெளியே போகும் போது டீ மாஸ்டர் அவதாரமும் எடுப்பார்.என்னுடைய கடையில்தான் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள், காலையில் பொருளை வாங்கி விட்டு இரவு கடை அடைக்கும் போது கணக்கு முடிப்பார்கள். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்த பின் ஒரு வயதிலிருந்து 12 வயது வரையிலான சின்ன குழந்தைகளை கூட்டி வந்து தீனி வாங்கித் தருவார்கள் அவரும் அவரது மனைவியும். எப்போது கேட்டாலும் எம்புள்ளைங்க என்றே இருவரும் பதில் சொல்வார்கள். நமக்குத் தான் குழப்பமாக இருக்கும். எத்தனை குழந்தைக ?
பிரிதொரு நாள் என் கேள்விக்கு மாஸ்டர் பதில் சொன்னார்.
"நான் கூட்டி வருவது எல்லாமே அனாதைக் குழந்தைகள் 'குப்பை தொட்டியில் போடப்படுவது, முறை தவறி பிறந்தது என்று எல்லா குழந்தைகளையும் அப்பா, அம்மாவாக இருந்து நாங்கள் வளர்க்கிறோம்.!
5 வயசுக்கு மேல் அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுவோம்.'பரிட்சை லீவுல எல்லா பிள்ளைகளும் என் வீட்டுக்கு வந்துவிடும். கடன் வாங்கியாவது அவர்களை சந்தோஷமாக பாத்துக்குவேன். நாங்க அப்பா, அம்மான்னா அவங்கெல்லாம் அக்கா, தம்பி, தங்கச்சியா பழகுராங்க.' "
" எப்படி மாஸ்டர் இப்படி ஒரு மனசு வந்துச்சி ?"

" என் மனைவிதான் காரணம். எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பொறக்காதுன்னு தெரிஞ்ச பின்னாடி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்காம இத்தனை குழந்தைகள வளர்க்கிற முடிவை அவள் தான் எடுத்தாள்! மனுசனா பொறந்தா வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும். அவளும் அனாதை, நானும் அனாதை. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா இந்த குழந்தைகளும், நாங்களும் இன்னைக்கு அனாதை இல்லியே ? எனக்கு குழந்தைக தான் அடையாளம். குழந்தைகளுக்கு நாங்க தான் அடையாளம் "

என்னைப் பொருத்தவரை அவரது மனைவிதான் உலகிலேயே அழகான பெண். உடலாலும், மனதாலும்.

1 கருத்து:

  1. நல்ல உள்ளம் படைத்தவர்களைப் பற்றிப் படிப்பதும்கூட பாஸிட்டிவ் எனர்ஜியை விதைக்கிறது!

    பதிலளிநீக்கு