வியாழன், 2 ஜூலை, 2015

முளை விட்ட கொலைத் திட்டம்'

நான் கொடூரமான எட்மண்ட் பிரபுவின் வேலைக்காரன். அப்படி சொல்வது கூட தவறு .அடிமை  என்றுதான் சொல்ல வேண்டும். அதை விடவும் இழிந்த விலங்கினும் கீழான ஒரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். தவறு. வாழும் படி எட்மண்ட் பிரபுவினால் நிர்பந்திக்கப் பட்டிருந்தேன். பேய், பிசாசின் மீதான பயத்தை விட பண்ணை அடிமைகளுக்கு எட்மண்ட் பிரபுவின் மீதான பயம் அதிகம். பேய், பிசாசுகளே பரவாயில்லை என்று தான் என்னைக் கேட்டால் சொல்லியிருப்பேன்.

அன்று எனக்கொரு மோசமான விடியலாகத் தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் பிரபு முகச்சவரம் செய்யும் பெல்ஜியக் கண்ணாடி என் கை பட்டா உடைய வேண்டும் .
விளைவு அவரது அலங்கார கைத்தடி என்னை விளாசியதில் உடைந்தது. வயது அதிகமாகி விட்டதால் நான் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தேன்.
கண் விழித்த போது அரசாங்கத்தின் இலவச மருத்துவ விடுதியில் இருந்தேன். பிரபு அந்த வகையில் கருணையுள்ளவன்தான்.குணமாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற அவனது சுயநலமும், கருணைக்கு  காரணமாக இருந்திருக்க வேண்டும்.
பக்கத்து  படுக்கையில் இருந்தவனை பார்த்த போது பேரதிர்ச்சியாக இருந்தது. அவன் அச்சு அசலாக எட்மண்ட் பிரபுவைப் போலவே இருந்தான். அவன் பெயர் சைமன் . யாருமற்ற அனாதை என்பது அவனிடம் பேசும் போது தெரிந்தது.
என்னுடைய மூளை கிறுகிறுவென வேலை செய்தது. எப்படியாவது எட்மண்ட் பிரபுவை கொன்று விட்டு அந்த இடத்தில் சைமனை கொண்டு வந்தால் நான் அடிமை சங்கிலியிலிருந்து விடுபடுவதுடன் , ஆயுள் முழுவதும் எட்மண்ட்டாக இருக்கும் சைமனை மிரட்டி பணத்தை கறக்கலாம் என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் என் மண்டையில் உதித்தது.
வறுமையில் வாடிக் கொண்டிருந்த சைமனும் என் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டான். நான் குணமாகி பண்ணைக்கு திரும்பியதும் ஒதுக்குப் புற கேபினில் சைமனை தங்க வைத்து எட்மண்ட் பிரபுவின் நடை .உடை, பாவனைகளை பயிற்றுவித்து வந்தேன். இருவருமே பிரபுவை கொல்லும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது'

3 கருத்துகள்: